கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது
மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.
புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.