கைலாசநாதர் திருக்கோயில் 6

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்க வடிவில் சனிபகவானின் அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். இறைவி சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சி தருகிறாள். தீர்த்தம் தாமிரபரணி. தலவிருட்சம் இலுப்பை. சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. கோயில் இருக்கும் ஊரில் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. திருமாலும் திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதால் இவ்விடம் ஸ்ரீவைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. வைகுதல் என்றால் தங்குதல் என பொருள். இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும். ஊமையாகப் பிறந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.

கோயில் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே சென்றால் நந்தி கொடிமரம் பலிபீடம் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம் வேம்பு தென்னை வன்னி போன்ற மரங்களும் அரளி நந்தியாவட்டை திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி சூரியன் நால்வர் சுரதேவர் சப்தமாதர்கள் அறுபத்து மூவர் தட்சணாமூர்த்தி கன்னிமூலை கணபதி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மகாலட்சுமி துர்கை சண்டிகேஸ்வரர் சந்திரன் பைரவர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோர் காட்சி தருகிறார்கள். இத்தலத்திலுள்ள நடராஜர் சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார். நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர் மற்றும் நடராஜர் அக்னிபத்திரர் வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயில் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் நவ கைலாயங்களைப் பற்றிய செய்திகளும் படங்களும் மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி ஒரு கருங்கல் சுவர் அதன் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. மற்ற தென்னிந்தியக் கோயில்களைப் போலல்லாமல் பிரமிடு வடிவ நுழைவுக் கோபுரத்தைக் கொண்ட கோவிலானது தட்டையான நுழைவாயில் கோபுரத்தைக் கொண்டுள்ளது. இங்கு யானை மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் வாய்க்குள் உருளும் வகையில் உருளை வடிவிலான கல் பந்து ஒன்று உள்ளது. இந்தப் பந்தை நம் கைகளால் உருட்ட முடியும். ஆனால் அதன் வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது. இது பண்டைய காலத்து சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

கோயிலில் பூதநாதர் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். இச்சிலை மரத்தால் செய்யப்பட்டது. ஆகவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவப்படுகிறது. முற்காலத்தில் இக்கோயிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள் பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். சித்திரைத் திருவிழாவின் போது முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். இக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறது. 3ம் நாள் விழாவின் போது இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும் முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால் செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து ஆற்றில்  அடித்துக் கொண்டு வரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலி பூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஆறாவது இக்கோயில் ஆறாவது கிரகமான சனிபகவானுக்கு உரியது. சனிபகவான் தலம் என்றும் சனிஸ்வர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோயிலில் கல்வெட்டுகள் அதிக அளவில் உள்ளன. கோயிலின் தல வரலாறு கோயிலுக்குரிய இடங்கள் அதன் அமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இதில் இக்கோயிலை கட்டிய குலசேகரபாண்டிய மன்னனின் வரலாறு கோயில்களுக்கு மன்னர்கள் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் கோயிலின் விழாக் காலங்கள் முக்கிய திருவிழா போன்ற தகவல்கள் உள்ளது. இக்கோயில் முதலில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயிலின் விமானங்களையும் மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். கோயில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தினர் மற்றும் நாயக்கர்களால் அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்டது. மதுரை நாயக்கர் வம்சத்தின் ஆட்சியாளரான வீரப்ப நாயக்கர் கிபி 1609-23 யாகசாலை கொடிமரம் மற்றும் சந்தன சபாபதி மண்டபம் கட்டினார். கோவிலில் உள்ள பல சிற்பங்கள் பெரிய மொட்டை கோபுரம் ஆகியவற்றை திருமலை நாயக்கர் கட்டினார். வேள்விச்சாலை சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.