வினாயகரின் எலி வாகனம்

கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன் இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண் ஒருத்தி அவன் கண்ணில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கய அவன் அவளை எப்படியாவது திருமணம் செய்து தன்னுடன் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமென்று எண்ணினான். வானிலிருந்து கீழிறங்கி வந்த அவன் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி பெண்ணே தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்தப் பெண் கந்தர்வனே நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் மேல் நீ கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கிருந்து சென்றுவிடு என்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் அழகு கந்தர்வனை மதிமயங்கச் செய்தது. நீ ஒரு முனிவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பணிப் பெண்ணைப் போல் வாழ்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். அதைக் கேட்டுக் கோபமடைந்த அவள் நான் இன்னொருவரின் மனைவி என்று சொல்லியும் அதைக் கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா? என்றாள். முனிவருடன் இருப்பதை விட என்னைப் போன்ற கந்தர்வனுடன் இருப்பதில் தான் இன்பம் அதிகம். இந்த முனிவரைக் கைவிட்டு என்னுடன் வந்தால் உன்னைத் தேவலோகம் அழைத்துச் செல்கிறேன். அங்கு நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான் கந்தர்வன்.

முனிவரின் மனைவி சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கந்தர்வனே முனிவரின் மனைவியாக நான் இன்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் தேவையில்லாமல் பேசி உன் நேரத்தை வீணடிக்காமல் இங்கிருந்து செல். இல்லையென்றால் பெருந்துன்பமடைய நேரிடும் என்றாள். இதனால் கோபமடைந்த கந்தர்வன் அவளைக் கவர்ந்து போய் விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவன் எண்ணத்தை அறிந்த அவள் அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள். பின் தொடர்ந்து வந்த கந்தர்வன் ஆசிரமத்துக்குள் நுழைந்த மனோரமையின் கையைப் பிடித்து நிறுத்தினான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அவள் சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டாள். மனைவியின் சத்தத்தைக் கேட்டு ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்தார் சவுபரி முனிவர். நிலைமயை உடனடியாக புரிந்து கொண்ட முனிவர் கந்தர்வனே என் மனைவியை விட்டு இங்கிருந்து போய்விடு. இல்லையெனில் என் கோபத்துக்கு ஆளாவாய் என்றார். மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு அவரது குரல் காதில் விழவில்லை. அவன் மனோரமையை கவர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் கோபமடைந்த முனிவர் கந்தர்வனே என் மனைவியை கவர்ந்து செல்ல நினைத்த நீ மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய் என்று சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன் தன்னுடைய செயலுக்காக வருந்தினான். முனிவரே அடுத்தவரின் மனைவியை அடைய நினைத்த எனக்கு தாங்கள் கொடுத்த சாபம் சரியானது தான். நான் நீங்கள் கொடுத்த சாபத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எனது தவறைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்றான். இதனால் மனமிரங்கிய முனிவர் கந்தர்வனே தவறு செய்வது அனைவரின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தேவலோகத்தைச் சேர்ந்த உனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருக்கவே கூடாது. நீ தவறை உணர்ந்து நான் கொடுத்த சாபத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நான் உன்னை மன்னிக்கிறேன். பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும் என்றார்.

கந்தர்வன் மிகப்பெரிய எலியாக மாறினான். அந்த எலி காட்டிற்குள் சென்று பல இடங்களையும் தோண்டி நாசப் படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்ற எலி காட்டிற்குள் இருந்த பராசர முனிவரின் ஆசிரமப் பகுதிக்குள் சென்றது. அந்த இடம் எலிக்கு பிடித்துப் போனதால் அங்கேயே ஒரு வளை தோண்டித் தங்கிக் கொண்டது. அந்த எலி ஆசிரமப் பகுதிக்குள் இருந்த மரங்களின் வேர்களைக் கடித்து மரங்களைக் கீழே விழச் செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மேலும் ஆசிரமத்தின் பல பகுதிகளிலும் வளை தோண்டி சேதப்படுத்தியது.

அபினந்தன் எனும் அரசன் இந்த நேரத்தில் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்த முடிவு செய்து முனிவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்தான். வேள்விக்கான பணிகளையும் அவனே முன்னின்று செய்து வந்தான். காலநேமி என்ற அசுரன் அபினந்தன் செய்து வந்த வேள்விகளை எல்லாம் அழித்தான். அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அவனை அழித்து உதவும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். என் மகன் விநாயகன் அவனை அழிப்பதற்காகப் பூலோகத்தில் தோன்ற இருக்கிறான். அவன் அரக்கன் காலநேமியை அழித்து வேள்விப் பணிகள் தொடர உதவி செய்வான் என்று அருளினார். சில காலத்தில் யானை முகமும் மனித உருவமுமாக விநாயகப் பெருமான் அந்நாட்டில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்தான். இருப்பினும் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த அந்த குளத்தில் நீராட வந்த பராசர முனிவர் குழந்தையை கண்டெடுத்து தன் ஆசிர மத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.

விநாயகர் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த போது அங்கிருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவார். அதேபோல் ஒரு மரத்தில் ஏறி விநாயகர் விளையாடிய போது மரத்தின் அடியில் இருந்த எலியானது வேர்களைக் கடித்து மரத்தைச் சரித்தது. மரத்தின் அடியில் வளை தோண்டி வசித்த பெரிய எலிதான் மரம் கீழே விழுவதற்கு காரணம் என்று விநாயகருக்கு தெரிய வந்தது. அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார் விநாயகர். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. பரசு ஆயுதம் எலியை விடாமல் துரத்தியது. வளை தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலி சோர்வடைந்தது. அதற்குமேல் செல்ல முடியாமல் பூமியின் மேற்புறத்தை நோக்கி ஓடி வந்தது. பரசு ஆயுதம் எலியை விநாயகரின் முன்பாக கொண்டு போய் நிறுத்தியது. விநாயகப் பெருமான் உருவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும் சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது .தன் தவறை மன்னிக்கும்படி வினாயகரிடம் வேண்டியது. மனமிரங்கிய விநாயகர் கவலைப்படாதே உனக்குச் சாபம் கொடுத்த முனிவரிடம் நீ சாபத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டபடியால் உனக்கு என்னால் சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்த போது என் மேல் அதிக பக்தி கொண்டிருந்தாய். எனவே நான் உன்னை என் வாகனமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும் என்று அருளினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த எலி விநாயகரை வணங்கி நின்றது. விநாயகப் பெருமானும் மூசிகனை வாகனமாகக் கொண்டு ஆயுதங்களுடன் சென்று அசுரன் காலநேமியை அழித்தார்.

கைலாசமலையை தூக்கிய ராவணன்

சிவனும் பார்வதியும் கைலாச மலையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த கைலாச மலையை ராவணன் தனது அகங்காரத்தினால் தூக்க முயற்சிக்கிறார். சிவபெருமான் தன்கால் கட்டை விரலால் லேசாக அழுத்த மலைக்கு அடியில் ராவணன் சிக்கி துன்பப்படுகிறான். இறுதியில் தன்னுடைய அகங்காரம் சென்றவுடன் இறைவனை புகழ்ந்து பாடல்கள் பாட இறைவன் அவருக்கு ஒரு வெல்ல முடியாத வாள் மற்றும் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தை வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வரலாறு கர்நாடாக மாநிலம் ஹொய்சளேஸ்வரர் கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

சொர்ணத்து மனை

சொர்ணத்து மனை

ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லி மரம் ஒன்று இருந்தது.) ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும் உதவி செய்ய இயலாத போது பரிதாபப்படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை காலம் மாதிரி இவர்களைத் தகிக்கிறது. ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாட்ச மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா என்கிறார் இந்தச் சுலோகத்தில். அவர் பாடிய பாடல் கனகதாரா தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் பாடல் பாடி முடித்த உடனே அவள் வீட்டு வாசலின் முன்பாக தங்க நெல்லி மழை போல் பெய்தது. வீடு முழுவதும் தங்கக் கனிகள் குவிந்தன.

காலடி என்ற இடத்தில் இருக்கும் அந்த தங்க மழை பெய்த வீடு சொர்ணத்து மனை என இன்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. ஆதிசங்கரரின் அருள் பெற்ற இந்த ஏழை தம்பதியர்களின் பரம்பரையினர் இன்றும் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டிக்கு நாலுகெட்டு என்று பெயர். தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த சொர்ணத்து மனை முதலில் ஒரு சாதாரண ஓட்டு வீடாகத் தான் இருந்தது. இந்த வீடானது சொர்ணத்து மனை பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. மகாலட்சுமி அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியான சங்கரரின் கருணைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளது இந்த வீடு. இந்த சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32 ஆம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள் வெள்ளி நெல்லிக்கனிகள் ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள். இந்த வீட்டிற்கு யார் வந்தாலும் வெளியே திண்ணையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படித்துவிட்டு அமைதியாக செல்லலாம். மற்றபடி வீட்டுக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை.

திருவிடைமருதூர் பாவை விளக்கின் வரலாறு

தமிழகத்தின் கலையழகு மிக்க கோயில்களில் திருவிடைமருதூருக்கு சிறப்பிடம் உள்ளது. இங்கிருக்கும் மகாலிங்கேசுவரர் சன்னதி முன்பு இருக்கும் பாவை விளக்கின் நேர்த்தி அளவிட முடியாத அழகுடையது. சிறந்த வேலைப்பாடுகள் உடைய புடவையுடுத்தி சந்திர பிரபை சூரிய பிரபை நெற்றிச்சுட்டி நாகசடை வில்லை தோள்வளை பூமுகம் முத்தாரம் காரை அட்டிகை கைவளை கடகம் இடுப்பணி கால் கொலுசு மெட்டி என்று தலை முதல் கால் வரை மங்கல ஆபரணங்கள் பூட்டி முகம் கனிந்த சிரிப்புடன் நின்றிருக்கும் பாவை விளக்கின் அழகு கண் கொள்ளாதது. அவ்விளக்கிலிருக்கும் பாவை பற்றிய குறிப்புகள் அப்பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய அரசு குலத்தை சேர்ந்த அம்முனு பாய் என்பவர் தான் இந்த பாவை விளக்குப் பெண்மணி. பிரதாப சிம்மன் என்னும் தஞ்சை அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசனின் மாமன் மகளாகிய அம்முனு லட்ச தீபம் ஏற்றி மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாக அதில் குறிப்புள்ளது. இதன் மூலம் அம்முனு தான் விரும்பிய மாமன் மகனை திருமணம் செய்துக் கொண்டு தன் வேண்டுதல் வழி தன்னையே பாவை விளக்காக சிலை செய்து இறைவனுக்கு சமர்பித்ததாக யூகங்கள் இருந்தன. ஆனால் உண்மை கதை வேறு. குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருந்த குறிப்புகள் துணைக் கொண்டு திருவிடைமருதூர் அரச குடும்பம் குறித்த ஏடுகள் மற்றும் தஞ்சை மராட்டியர் நூலகத்தில் கிடைத்த ஏடுகள் மூலம் அறிந்த உண்மை கதையை தனது ஆய்வின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். அமரசிம்மன் என்னும் மராட்டிய அரசனின் மகன் பிரதாப சிம்மன். அவர்கள் தஞ்சையில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து திருவிடைமருதூர் மாளிகையில் வசிக்கின்றார்கள். முன்னரே மணமாகி குழந்தை இல்லாத பிரதாபசிம்மன் தன் மாமன் மகள் அம்முனு பாய் மீது காதல் கொள்கிறான். அம்முனுவும் பிரதாப சிம்மனை உயிருக்குயிராய் நேசிக்கிறாள். இவர்கள் அன்பு உற்றார்களால் அங்கீகரிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதாப சிம்மன் இறக்கிறான். பிரதாப சிம்மனை தன் மனதில் கணவராக எண்ணியிருந்த அம்முனு துறவு கொள்கிறார். தன் மனம் விரும்பியவனின் ஆத்ம மோட்சத்திற்காக மகாலிங்கேஸ்ரர் சன்னதியில் லட்ச தீபம் ஏற்றி அதில் ஒரு விளக்காக தன் மங்கல கோலத்தை வார்க்க செய்து வழிப்படுகிறாள் அம்முனு அம்மிணி. பின் தன் ஆயுள் வரை மகாலிங்கேஸ்வரர் ஆலய பணியில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பாவை விளக்குகள் உள்ளன. அவற்றிற்கு பின் இன்னும் எத்தனையோ கதைகள் அறியப்படாமல் இருக்கிறது.

கண்ணனை கட்டி வைத்த உரல்

மணிகிரீவன் மற்றும் நலகுபேரன் ஆகியோர் குபேரனின் மகன்கள். யமுனா நதிக்கரையில் இரட்டை அர்ஜுனா மரங்களாக மாற அவர்கள் மோசமான நடத்தைக்காக நாரத முனியால் சபிக்கப்பட்டனர். அவர்கள் இரட்டை மரங்களாக 100 ஆண்டுகள் கோகுலத்தில் நின்றனர். கண்ணனின் தாய் யசோதா கண்ணனை அரைக்கும் உரலில் கட்டி வைத்தார். கல்லால் ஆன அரைக்கும் உரலில் கட்டப்பட்டிருந்த கண்ணன் மரங்களுக்கு இடையில் தன்னை அழுத்தி மரத்தை பிடுங்கி இருவரையும் விடுவித்தார். அந்த உரல் இதுதான். மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம் (ஆயர்பாடி) பிருந்தாவனம் கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களுக்கும் சேர்ந்து கிருஷ்ண ஜென்மபூமி அல்லது விரஜபூமி என்று பெயர். விரஜ பூமி பிருந்தாவனத்தில் தற்போது உள்ளது.

புல் சாப்பிட்ட கல்நந்தி

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை அறியாமலும் தெரியாமலும் ஒரு பசுக்கன்றின் மீது போட்டு விட்டார். அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால் அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அவரின் வீட்டுக்குள் நுழைந்தபோது வாசல்படி தலையில் இடித்து சிவ சிவா என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர் தேவசர்மா பற்றியும் அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் நீ சிவ என்று சொன்னதுமே பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். இதனால் வருத்தப்பட்ட தேவசர்மா ஹரதத்தரிடம் முறையிட்டான்.

ஹரதத்தர் கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும் அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர் தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து நீ சிவ சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார். கல் நந்தி எப்படி புல் சாப்பிடும் என்று கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில் இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால் கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று மனமுருக வேண்டினார். தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும் பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி கும்பகோணம் அருகே கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது.

அகலிகை வரலாறு

தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகையை மிக அழகுடன் படைத்தார். இவள் பிரம்மனின் மானசீக மகளாவாள் இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்று பொருள். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். அகலிகையை மணக்க சுயவர போட்டி நடந்தது. யார் முதலில் முன்பும் பின்பும் தலை உள்ள பசுவை மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் கோரிக்கை வைத்தார்கள். மூன்று உலகத்தையும் யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே அகலிகை என்று இரண்டாவது போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெருக்கின்றார்களோ அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.

இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்

பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.

கங்கையின் வரலாறு

ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். சகரர் அசுவமேதயாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சிய இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

துளசி வரலாறு

துளசித்தாய் பூமியில் பிருந்தை என்ற பெயரில் பிறந்து ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு சென்று கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்ய முடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான். உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலை மீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து மீண்டும் அனல் கக்கும் தீப்பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.

கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற வரம் இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார். பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.

தன்னுடன் இருப்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள். இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த இடம் திருவிற்குடி என்றத் திருத்தலமாகும்.