கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.

கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 356

கேள்வி: அன்பர்கள் அனைவரும் மனிதர்களை பார்க்காமல் செயலை மட்டும் பார்க்கும்படி அருள வேண்டும்:

ஓரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது இரசவாதத்தைவிட கடினமானதப்பா. செம்பை தங்கமாக்குவது இரும்பை தங்கமாக்குவது என்பதை இரசவாதம் என்கிறார்கள். ஆனால் மனிதனை மனிதனாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள். இயல்பாக ஒரு மனிதனிடம் பக்குவம் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் வார்த்தைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஒருவன் கோபப்பட்டாலோ மனம் தளர்ந்து போனாலோ அவனால் ஆன்மீகத்தில் எப்படி மேலேறி வரமுடியும்? என்பதை அவனவனேதான் சிந்தித்து உணர வேண்டும். அப்படி வருவதற்கு வேண்டிய பிரார்த்தனைகளை அனைவரும் செய்ய நன்மை உண்டு.

சிவபார்வதி

அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது பிரம்மதேவ்ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா என்ற இரண்டு சகோதரர்கள் ஹேமதபந்தி பாணியில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயரால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 355

கேள்வி: சஞ்சித கர்மா குருநாதரால்தான் தீர்க்கப்படும் என்பது குறித்து:

ஆகாமியம் பிராரப்தம் சஞ்சிதம் குறித்து தனியாகவே விளக்கங்கள் தர வேண்டும். எதுவாக இருந்தாலும் தர்மத்தில் அடிபட்டுப் போய் விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

(தர்மம் செய்ய செய்ய எந்த கர்மாவாக இருந்தாலும் அடிபட்டுப் போய் விடும்)

விஷ்ணு துர்க்கை

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.

இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 354

கேள்வி: யாகத்தில் அன்னை காட்சி தரவேண்டும்?

பிரகலாதனின் பக்தி வந்து விட்டால் இராவணனின் பக்தி வந்து விட்டால் (இதுபோல் அத்தனை அசுரர்களின் கதையை எடுத்துப் பார்) அந்த பக்தி வந்து விட்டால் நாயன்மார்களின் ஆழ்வார்களின் மன உறுதி மனத்தெளிவு வந்து விட்டால் சித்தர்களின் பற்றற்ற தன்மை வந்து விட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும். பல்வேறு வேலைகளில் இறைவனை வணங்குவது ஒரு வேலை என்றிருப்பது மனிதனின் இயல்பு. உலகியலுக்கு முக்கியத்துவம் தரும்வரை இறை இரண்டாம் பட்சமாகத்தான் மனிதனுக்கு இருக்கிறது. அடுத்து இந்த உலகியல் வாழ்வை நன்றாக வாழ வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்பதற்காக இறையை நோக்கி செல்லும்வரை இறை அதை வேண்டுமானாலும் தரலாம். இறை வேண்டும் என்று இது வரை யாரும் வேண்டவில்லை. அதுபோல் தின்மையும் உறுதியும் வரும் பொழுது கட்டாயம் இறை காட்சி கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 353

கேள்வி: சத்ருசம்ஹார யாகத்தை எப்படி செய்வது ?

பொதுவாக சம்ஹார யாகத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்குவது சிறப்பு. ஆனால் இதற்கு ஆலயத்து விதிமுறைகள் இடம் தராது என்பதை யாம் அறிவோம். எனவே அதிகாலை துவங்கினாலும் சாயரட்சை வரையாவது செய்வது நல்லது. இடையிலே அவசியம் ஏற்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதலில் வழக்கம் போல் மூத்தோனுக்கு யாகம் செய்துவிட்டு பிறகு தொடர்ந்து சத்ருசம்ஹார யாகத்தை செய்யலாம். கடைசியாக ஒரே பூரணாகுதியை தந்துவிட்டால் போதும். இதிலே கால அவகாசத்திற்கு ஏற்ப மந்திரங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிப்பில் பிழையின்றி சொல்வதும் எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஏதோ கடமைக்கு அக்னியில் வார்ப்பது போல் இல்லாமல் பொருள்களை பயபக்தியோடு பவ்யமாக நிதானமாக பொறுமையாக பயன்படுத்துதல் சிறப்பை தரும். 300 மந்திரங்கள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் மனிதர்களை அமரவைத்து உரத்த குரலிலே உச்சரிப்பு பிழையின்றி ஆத்மார்த்தமாக உச்சரித்து உச்சரித்து ஒவ்வொன்றிற்கும் பூர்த்தி முடிவிலே பொருள்களை யாகத்தீயில் வார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

நம்பிக்கை

பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.

சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 352

கேள்வி: என் மனைவியிடம் ஆன்மீக விஷயங்களில் பொய் சொல்லி ஈடுபட வேண்டியிருக்கிறது:

உன் போன்ற பலருக்கும் இதே நிலைதான். அப்படியே செய் என்று ஊக்குவிப்பதும் கூறுவதும் ஒரு மகானுக்கு அழகல்ல. அல்லது உண்மையைக் கூறி இல்லத்திலே குழப்பத்தை ஏற்படுத்துவதும் மகான்களுக்கு அழகல்ல. எம் போன்ற ஞானி உலகியல் ரீதியாக இது குறித்து ஒரு யோசனையைக் கூறினாலும் அது ஞான நிலைக்கு ஏற்புடையதாக இராது. ஞானப் பார்வையிலே ஒரு யோசனையைக் கூறினால் உன் போன்ற மனிதனுக்கு அது ஏற்புடையதாக இராது. இரண்டையும் அனுசரித்து கூறுவது என்னவென்றால் எல்லா இல்லங்களிலும் தாயோ தாரமோ இது போன்ற ஆன்மீக அமைப்புகளை விரும்பாததின் காரணம் இதனால் குடும்ப நடைமுறை செலவினங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான். எனவே குடும்பத்தை பாதிக்காமல் உன் போன்ற ஒருவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாங்கள் அதை வரவேற்கிறோம். அல்லது இயல்பாகவே உன் மனம் முதிர்வடைந்து இந்த அளவில் குடும்பத்திற்கு செய்தால் போதும் இதனை தாண்டி செய்வதெல்லாம் வீண் விரயம்தான். அவற்றையெல்லாம் புண்ணியமாக மாற்றி வைத்துக் கொண்டால் அது குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு உதவும் என்ற எண்ணம் அழுத்தந்திருத்தமாக உன் மனதிலே வந்து விட்டால் அவர்கள் விரும்புவதைப் போல ஒரு சொல்லாடலை பயன்படுத்திவிட்டு உன் விருப்பம் போல் செய்யலாம். எனவே இந்த இடத்தில் உண்மையைக் கூறினால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் உண்மையைக் கூற வேண்டிய அவசியமில்லை. பொய்யைக் கூறு என்று ஜீவ நாடியில் ஞானிகளே கூறிவிட்டார்கள் என்ற அபவாதத்திற்கு ஆளாகவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே மௌனத்தைக் கடைபிடி. அதே தருணம் தாரத்தின் நிலையில் என்ன குழப்பம் ஏற்படும்? என்றால் கணவன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழாத அளவிற்கு அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உன் போக்கில் நீ செல்லலாம்.