கேள்வி கேட்டு அமைதல்

திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

புனுகீஸ்வரர்

மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியில் புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது. சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன. ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீஸ்வரர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களை இக்கோவில் பெற்றுள்ளது. மூலவர் புனுகீசுவரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் தாமரை மலரையும் தாங்கி கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தலவிருட்சம் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை வடக்கு உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது.

திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்துள்ளது. நேராக பலி பீடமும் உயந்த கொடிமரமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகப்பெருமான் உள்ளார். அருகில் சகஸ்ரலிங்கம் சந்நிதி உள்ளது. சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளார். தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன. வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான் லட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. தெற்கு நோக்கி நடராஜரின் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையின் வடக்கு மாடங்களில் துர்க்கை பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அதனருகில் சண்டேசர் சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர் சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார். உள்பிரகாரத்தின் தென்கிழக்கில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர் பிள்ளையார் உருவங்கள் உள்ளன. புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்து மூவரின் செப்புச் சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் அவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும் அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்ததினால் இறைவனால் இவருக்கு முக்தி கொடுக்கப்பட்டது என்று பெரியபுராணம் கூறுகிறது.

முற்காலத்தில் இந்த இடம் வனப்பகுதியாக தனியூர் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் புனுகுப்பூனையாக மாறும்படி சிவனாரால் சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டினான். சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன் சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டது. தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார். இதையறிந்து இறைவனின் கருணைத்திறன் கண்டு வியந்த பிரம்மா திருமால் உள்ளிட்ட தேவர்கள் அந்த இடத்துக்கு வந்து பவளமல்லி விருட்சத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனாரைப் போற்றி வழிபட்டனர். பிற்காலத்தில் இறைவனின் அற்புத லீலையை அறிந்த சோழ மன்னன் வனத்தில் இறைவனுக்கு அழகியதோர் ஆலயம் எழுப்பி இறைவனுக்கு புனுகீசர் என்று பெயரிட்டு வணங்கினான். நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்படிச் செய்தான். இதுகுறித்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய தனியூர்ப் புராணம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுலோகம் -46 # 47

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #46

இந்தப் போரில் ஆயுதம் ஏந்தாமல் எதிர்த்துப் போரிடாமல் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

இந்த யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நான் போரிடப் போவதில்லை. அப்போது கௌரவர்களின் தரப்பில் யார் என்னை கொன்றாலும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வேன். அப்படி நான் கொல்லப்பட்டால் மேலே சொல்லப்பட்ட சில சுலோகங்களில் உள்ள பாவங்கள் நடைபெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். ஆகையால் என்னை அவர்கள் கொல்வது எனக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #47

சஞ்சயன் சொல்கிறான். இப்படியாக சொல்லிய அர்ஜூனன் போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனதுடன் தன்னுடைய அம்புகளையும் ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு தேரில் அமர்ந்து விட்டான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். அர்ஜூனன் தர்மத்திற்கு பயப்படுகிறான். தன் குருக்கள் உறவினர்கள் நண்பர்கள் மீது வைத்திருந்த கருணையினாலும் அன்பினாலும் பாசத்தினாலும் மனக்கலக்கத்தினாலும் அர்ஜூனன் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கவலையுடன் தேரில் அமர்ந்து விட்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 70

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்.

இறைவனின் அருளைக் கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப்போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக்கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும்.

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக்கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேகவழி (உடல்வழி) தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

சுலோகம் -44 # 45

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #44

ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45

ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 69

கேள்வி: தமிழ் மொழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தோன்றிய முதல் மொழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?

உலகில் தோன்றிய முதல் மொழி குழந்தையின் அழுகுரல்தானப்பா. இந்த நிலையிலே தமிழ் ஒத்து பல்வேறு மொழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தோன்றிய மொழிகளுக்கு தோண்டாற்றக்கூடிய வாய்ப்பையும் பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.

கேள்வி: நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களோ நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?

இறைவனின் கருணையால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும். இந்த நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் கூடாது என்கிற விஷயத்தை வேண்டுமென்றே இன்னொருவன் பின்பற்றுகிறான். நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. இந்த இந்து மார்க்கத்திலேயே தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் கொண்ட ஒரு நிலை. நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறோம். ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்கோ சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. மனித மனம் வக்கிரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது. எம்மைப் பொருத்தவரை தனக்குள் பிரிவினையை வளர்த்துக் கொண்டு நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது மூடத்தனம். அந்த வகையில் பார்க்கும் பொழுது தொடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும் பெண் ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதொரு ஆரோக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.

சுலோகம் -43

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #43

இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால் தொன்று தொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: ஜாதி தர்மங்கள் என்று எதனை குறிப்பிடுகிறது?

சுலோகம் -41 இல் குறிப்பட்டுள்ள குலம் என்று அழைக்கப் படுபவர்களின் அனைத்து பிரிவுகளை இங்கு ஜாதி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மரவேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். நகை வேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். இருவரது குலம் வேறு வேறு என்றாலும் இருவரும் தச்சர் வேலை செய்பவர்களே இது போல் தச்சர் தொழில் செய்யும் பல பிரிவுகளில் இருப்பவர்களை மொத்தமாக குறிப்பிடும் போது ஜாதி என்ற வார்த்தை இங்கு வருகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணக் கலப்பு குற்றம் என்றும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்று சொல்வதன் காரணம் என்ன?

ஒருவர் தங்களது வர்ணத்தை விட்டு வேறு வர்ணத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது வர்ணக் கலப்பு ஏற்படுகிறது. இதில் பெண் ஆணின் குல தர்மத்தையோ அல்லது ஆண் பெண்ணின் குல தர்மத்தையோ தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இருவரில் ஒருவர் தங்களுடைய குல தர்மங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி ஆகிறது. இப்படி சில தலை முறைகள் சென்ற பிறகு பார்த்தால் ஒரு குலத்தின் தர்மங்கள் (குலத்தின் தர்மத்திற்கான விளக்கம் சுலோகம்- 40 இல் உள்ளது) அனைத்தும் அழிந்து போயிருக்கும் இதற்கு முக்கிய காராணமாக இருப்பது வர்ணக்கலப்பு ஆகும் இதனையே இந்த சுலோகம் சுட்டிக் காட்டுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 68

கேள்வி: ஆன்மா என்றால் என்ன?

என்ன? என்று எம்மை வினவுவதைவிட என்ன? என்பதை அறியுங்கால் அவனவன் மனதை வினவினால் ஆன்மா என்பது என்ன? என்பது புரியவரும். புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்து கொள்ள சுய ஆய்வும் பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம். அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால் ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக் கூறினாலும்கூட ஐயம் மேல் ஐயம் வந்து கொண்டுதான் இருக்கும்.

கேள்வி: அழியாத புண்ணியம் எது?

புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா. புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொறுத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா? என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால் அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய (உலக) ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால் அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.

சுலோகம் -42

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #42

இந்த குழப்பத்தால் அந்த குலத்தார்களும் அந்த குலத்தை அழித்தவர்களும் நரகம் செல்வார்கள். இவர்களின் பித்ருக்கள் பிதுர் பண்டங்களும் நீரும் இல்லாமல் வீழ்ச்சி பெறுவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து:

வர்ணங்கள் மாறி குலங்கள் மாறி திருமணம் செய்வதால் சில தலை முறைகளுக்கு பின் வருபவர்களுக்கு தங்களின் குலத்தின் பெயரும் அதன் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் தெரியாமல் போகின்றது. குலத்தில் ஒற்றுமை மறைந்து இறுதியில் அந்தக் குலமே இல்லாமல் போகின்றது. இதனால் அந்தக் குலத்தில் வழிவழியாக முதாதையர்களுக்கு கொடுத்த வந்த தர்ப்பத்தையும் பிதுர் கடனையும் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஒழுக்க முறைகள் மாறிவிடுகின்ற படியால் தர்மத்தின் படி நடக்க முடியாமல் போகின்றது. பித்ருக்கள் நீரும் பிதுர் பண்டங்களும் இல்லாமல் தங்கள் குலத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் அனைவரையும் அதர்மம் சூழ்ந்து பாவம் செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 67

கேள்வி: மார்கழி (2012-2013) மாதத்தில் மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?

இறைவன் அருளால் பிரளயம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய்? (சுனாமி போன்ற அழிவு)

ஒன்று தெரியுமா? ஒவ்வொரு இல்லத்திலும் இது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற பேரழிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போதைக்கு உலகம் என்பது சிறைச்சாலை ஆன்மாக்கள் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு எத்தனையோ சிறைச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த புவி உலகம். ஒட்டு மொத்தமாக இந்த சிறைச்சாலையை அழிக்கின்ற எண்ணம் இறைவனுக்கு இல்லை. பகுதி பகுதியாக அவ்வப் பொழுது சிறிய அழிவுகள் ஏற்படும். மற்றபடி இந்த சிறைச்சாலை அழிக்கப்பட வேண்டும் என்றால் இங்குள்ள அனைவருமே புனிதர்களாக மாற வேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் அத்தனை பேரும் புனிதர்களாக மாறிவிட்டால் வேண்டுமானால் இந்த சிறைச்சாலை தேவையில்லை என்று இறைவன் அழித்துவிடலாம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று மனிதன் கங்கணம் கட்டிக் கொண்டு புனிதம் ஏன் செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து எதற்காக இந்த உலகத்தை இழக்க வேண்டும்? என்று அவன் தவறு மேல் தவறு செய்து கொண்டிருப்பதால் நீ கூறுவது போல் இந்த மார்கழி அல்ல எந்த மார்கழி வந்தாலும் எந்த ஆண்டு வந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த உலகம் அழியப் போவதில்லை. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படுவது என்பது இயல்பு.

கேள்வி: எல்லோரின் சார்பாக கேட்கிறேன். தங்களை ஸ்தூல தேகமாக (உடல்) தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இறைவனை தரிசிக்க யாது செய்ய வேண்டும்? என்று எண்ணி யாங்கள் கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டே வந்தால் இறை தரிசனமே மிகப்பெரிய தரிசனம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதை நோக்கி சென்றாலே போதுமப்பா. அதற்கிடையே மகான்கள் தரிசனம் என்பது இயல்பாகவே நடக்கும்.