பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #46
இந்தப் போரில் ஆயுதம் ஏந்தாமல் எதிர்த்துப் போரிடாமல் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.
இந்த சுலோகத்தில் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?
இந்த யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நான் போரிடப் போவதில்லை. அப்போது கௌரவர்களின் தரப்பில் யார் என்னை கொன்றாலும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வேன். அப்படி நான் கொல்லப்பட்டால் மேலே சொல்லப்பட்ட சில சுலோகங்களில் உள்ள பாவங்கள் நடைபெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். ஆகையால் என்னை அவர்கள் கொல்வது எனக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #47
சஞ்சயன் சொல்கிறான். இப்படியாக சொல்லிய அர்ஜூனன் போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனதுடன் தன்னுடைய அம்புகளையும் ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு தேரில் அமர்ந்து விட்டான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். அர்ஜூனன் தர்மத்திற்கு பயப்படுகிறான். தன் குருக்கள் உறவினர்கள் நண்பர்கள் மீது வைத்திருந்த கருணையினாலும் அன்பினாலும் பாசத்தினாலும் மனக்கலக்கத்தினாலும் அர்ஜூனன் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கவலையுடன் தேரில் அமர்ந்து விட்டான்.