பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #37
ஆகவே மாதவா உறவினர்களான திருதராஷ்டிர கூட்டத்தாரை கொல்வது நமக்குத் தகாது. நம் குடும்பத்தினரைக் கொன்று நாம் எப்படி சுகமுள்ளவர்களாக இருப்போம்?
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மாதவா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?
கிருஷ்ணர் 1000 ஆண்டுகள் தவம் செய்ததினால் மாதவன் என்ற பெயரைப் பெற்றார். இந்த யுத்தம் வேண்டாம். இந்த யுத்தத்தினால் கிடைக்கும் ராஜ்யம் செல்வம் சுகபோகங்கள் அனைத்தும் வேண்டாம். அனைத்தையும் உதறி விட்டு தபஸ்வி போல் கானகத்திற்கு சென்று தவம் செய்யப் போகிறேன் என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் தெரிவிக்க மாதவா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #38
அரச பதவி மீது உள்ள பேராசையினால் அறிவிழந்த இவர்களின் மனம் பகுத்தறியும் தன்மையை இழந்து விட்டது. இதனால் தமது குலம் அழிந்து விடும் என்பதையோ நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கெடுதல் செய்வதினால் உண்டாகும் பாவத்தையோ இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
இந்த சுலோகம் சொல்லும் கருத்து என்ன?
பேராசை வந்தால் மனம் அறிவிழந்து பகுத்தறியும் தன்மையையும் இழந்து விடும்.