சுலோகம் -20

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #20

அனுமன் கொடியை கொண்ட தேரில் நின்றிருந்த அர்ஜூனன் திருதராஷ்டிரரின் சேனைகள் அணிவகுத்து நிற்பதையும் அவர்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்க தயாராக இருப்பதையும் கண்டான். உடனே தனது காண்டீபம் என்ற வில்லை கையில் எடுத்து கிருஷ்ணரிடம் பேசத் துவங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அனுமன் கொடியில் இருக்கிறார் என்று சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் குறிப்பிட்டு ஏன் சொல்கிறார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது பீமனுக்கு அனுமன் வரம் ஒன்று கொடுத்தார். அதன்படி அனுமன் யுத்தத்தில் பாண்டவர்களுக்கு துணையாக அர்ஜூனனின் கொடியில் அமர்ந்திருப்பேன் என்றும் பீமன் யுத்தம் செய்யும் போது கர்ஜனை செய்யும் போதெல்லாம் தன்னுடைய கர்ஜனை சத்தமும் சேர்ந்து கொள்ளும் இதனால் பாண்டவர்களின் சேனையில் பலம் அதிகரித்து கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். பாண்டவர்களின் பக்கம் அனுமன் இருப்பதினால் அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சஞ்சயன் மறைமுகமாக திருதராஷ்டிரரிடம் குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனன் வைத்திருக்கும் காண்டிபம் வில் யாருடையது அது அவனுக்கு எப்படி கிடைத்தது?

கண்வ ரிஷியின் கடும் தவத்தால் அவர் தவம் செய்த இடம் புற்று சூழ்ந்தது. அந்த புற்றிலிருந்து கந்தி எனும் ஒரு மூங்கில் மரம் வளர்ந்தது. அது தவத்தின் மகிமையால் வளந்த மரம் ஆகையால் அதித சக்தி பெற்றது. எனவே இதை வீணடிக்க விரும்பாத பிரம்மதேவர் அதனை கொண்டு தீயவர்களை அழிக்க காண்டீவ வில்லை உருவாக்கினார். அவர் அதனை 1000 ஆண்டுகள் வைத்திருந்தார். பின் சிவன் 1000 ஆண்டுகளும் பிரஜாபதி 503 ஆண்டுகளும் பின்பு தேவேந்திரன் 580 ஆண்டுகளும் சந்திரன் 500 ஆண்டுகளும் அவருக்கு பின் நீர் கடவுளான வருணன் 100 ஆண்டுகளும் வைத்திருந்தார். காந்தவ காட்டை அழிப்பதற்காக அக்னி தேவனின் வேண்டுகோளின் படி வருணன் இக்காண்டீபத்தை அர்ஜூனனுக்கு வழங்கினார். பிரகாசமாக இருக்கும் இந்த திவ்யமான வில் இடியின் முழக்கத்தை உண்டாக்கும். இந்த வில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் வீரர்களையும் (தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் உள்ளிட்ட) போரிட்டு அழிக்கும் திறன் கொண்டது. அனைவராலும் வணங்கப்பட்ட இந்த வில் நூற்றி எட்டு நாண்களை கொண்டது. 108 நாண்களையும் ஒன்றினைத்தால் மட்டுமே அவ்வில்லை பயன்படுத்த இயலும். இதன் கடைசி நாணை எவராலும் அறுக்க இயலாது.

காண்டீப வில்லை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.