பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #35
மதுசூதனா இவர்கள் என்னைக் கொல்வதற்கு விருப்பம் கொண்டாலும் எனக்கு இவர்களை கொல்ல விருப்பம் இல்லை. மூன்று உலகங்களை ஆளும் பதவியை கொடுத்தாலும் இவர்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இப்படி இருக்கும் போது இந்த ராஜ்யத்திற்காகவா இவர்களை நான் கொல்வேன்?
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மதுசூதனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?
மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர் பெற்றார். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு சொல்லப்பட்ட விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 73 வதாக மதுசூதனன் பெயர் வரும். தவறு செய்த அரக்கனை அழித்து மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கிருஷ்ணரிடம் தவறு செய்து கொண்டிருக்கும் கௌரவர்களை கொல்ல நான் விரும்பவில்லை என்று சொல்வதற்காக மதுசூததன் என்ற வார்த்தையை அர்ஜூனன் பயன்படுத்தினான்.