மகாபாரதம் 1. ஆதிபருவம் பகுதி -49

அர்ஜூனன் அந்த முதியவரைப் பார்த்து நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் செய்கின்றோம் என்றான். அதற்கு அந்த முதியவர் நீங்கள் இருவரும் பண்டைய காலத்து ரிஷிகளாகிய நரனும் நாராயணனும் ஆவீர்கள். இந்த யுகத்தில் நீங்கள் இருவரும் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்து இருக்கின்றீர்கள். இந்த வனத்தை எரித்து சாம்பலாக்க நீங்கள் இருவரும் எனக்கு துணை புரிய வேண்டும் என்று கூறினார். பயங்கர பிராணிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த வனத்தை அழிப்பதன் அவசியத்தை கிருஷ்ணர் அர்ஜூனனிடம் கூறினார். அர்ஜுனன் அந்த முதியவரைப் பார்த்து தாங்கள் இந்த வனத்தை எரித்து அழிக்கும் போது இந்திரன் கொடுக்கும் மழையை தடுக்க எங்களால் இயலும். ஆனால் அதற்கேற்ற ஆயுதங்கள் எங்களிடம் தற்போது இல்லை. எங்களுக்கெற்ற ஆயுதங்களை நீங்கள் தேடி தாருங்கள். மழையை நாங்கள் தடுத்து வைத்து இருக்கும் போது நீங்கள் காண்டவ வனத்தை எரித்து தங்கள் பசியை தீர்த்துக்கொள்ளலாம் என்றான்.

அக்னி தேவன் சமுத்திர தேவனை வரவழைத்து அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை கொடுக்குமாறு கேட்க சமுத்திர தேவனும் ஆயுதங்களை அக்கணமே கொடுத்தான். அர்ஜுனனுக்கு பிரசித்தி பெற்ற காண்டீப வில்லும் அதனோடு எவ்வளவு எடுத்தாலும் குறையாத அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணிகள் இரண்டும் கிடைத்தது. ஊக்கம் ததும்பும் நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டிய மேலான ரதம் ஒன்று வந்தது. அந்த ரதத்திலே வானரக்கொடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணனுக்கு சுதர்சனம் எனும் சக்கராயுதம் ஒன்றும் கௌமோதகீ என்னும் கதாயுதம் ஒன்றும் கிடைத்தது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு மூர்த்திகளும் அப்பாழடைந்த வனம் தீக்கிரையான பொழுது மழை பொழியாதபடி பார்த்துக் கொண்டனர். அந்த வானமும் அதிலிருந்த ஐந்துக்களும் அடியோடு அழிந்து போயின.

மாயன் என்னும் அசுரன் ஒருவன் தீக்கு இறையாகும் நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அர்ஜுனனை வேண்டினான். அதன் விளைவாக அவன் ஒருவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். அந்த இரண்டு மூர்த்திகள் பழுது பட்டுப் போன காட்டை அளிப்பதற்கு புரிந்த உதவியை முன்னிட்டு அக்னிதேவன் அகமகிழ்ச்சி அடைந்தான்.

ஆதிபருவம் பகுதி இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்தது சபா பருவம்.

மகாபாரதம் 1. ஆதிபருவம் பகுதி -48

துறவி வேடத்தில் இருந்த அர்ஜுனன் சுபத்திரை முன்பாக தனது துறவி வேடத்தை கலைத்தான். சுபத்திரைக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனென்றால் எந்த ஆடவனை மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலோ அதே ஆடவன் இங்கு துறவி வேடத்தில் வந்துள்ளார். அர்ஜுனன் சுபத்திரையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டான். சுபத்திரையும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். இருவரும் கிருஷ்ணனின் ரதத்தில் ஏறி சென்று கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட விருஷ்ணி வம்சத்தினர் சுபத்திரையை துறவி வேடத்தில் வந்தவன் தூக்கிச் செல்கிறான் என்று எண்ணிக் கொண்டு இந்த ரதத்தை பின்தொடர்ந்து துரத்தினார்கள். ரதத்தின் அருகே வந்து பார்த்தவர்கள் சுபத்திரை ரதத்தை ஓட்டிச் செல்வதையும் அர்ஜூனன் பின்னால் அமர்ந்து இருப்பதையும் பார்த்து அவர்களுக்கு குழப்பம் உண்டாகியது. கிருஷ்ணன் தனது விருஷ்ணி வம்சத்தினரை சமாதானப்படுத்த முயன்றார் நிகழ்ந்ததில் கேடு ஏதும் இல்லை என்று கூறி நடந்தவைகள் அனைத்தையும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினான். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட பலராமன் தன்னிடம் கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை என்று அவன் மீது சிறிது கோபம் கொண்டான்.

பலராமன் மற்றும் விருஷ்ணி வம்சத்தவர்கள் அர்ஜுனன் சுபத்திரை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். இந்திரப் பிரஸ்தம் நாட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருட காலம் முடிந்தபின் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் இந்திரப் பிரஸ்தத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த விருஷ்ணி வம்சத்தினர் அனைவரும் துவாரகைக்கு திரும்பினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் சிறிது காலம் அர்ஜுனனோடு வசித்திருந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு சுபத்திரை அபிமன்யு என்னும் மகனைப் பெற்றெடுத்தாள்.

கோடைப் பருவத்தில் தோன்றிய வெக்கை மிக புழுக்கமாக இருந்தது. அதை முன்னிட்டு கிருஷ்ணனும் அர்ஜுனனும் யமுனா நதி தீர்த்தத்தில் நீராடி ஒரு நாளைக் கழிக்க எண்ணினர். யுதிஷ்டிரனிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். உற்றார் உறவினர் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். கூட்டத்தார் அனைவரும் நதியிலும் நிலத்திலும் உல்லாசமாக பொழுது போக்கி கொண்டிருந்தனர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. பெரியவர் ஒருவர் அவர்கள் முன்பு தோன்றி தனக்கு மிகவும் பசி எடுக்கிறது என்றும் ஆதாரம் தேவை என்றும் கூறினார். அதற்கு அருஜூனன் உங்களுக்கு எத்தகைய ஆகாரம் தேவை என்று கேட்டான். அதற்கு அவர் நான் மானிடன் இல்லை நான் அக்னிதேவதை. இந்த காண்டவ வனம் மிகவும் பழுதுபட்டு விட்டது. இதில் பயங்கரமான விலங்குகளும் விஷம் நிறைந்த சற்பங்களும் ஏனைய ஐந்துக்களும் பெருகி இருக்கின்றன. ஆகையால் இதை பொசுக்கித்தள்ளி பசியாற பல தடவை முயன்றேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது எனது கோட்பாடு. ஒவ்வொரு முறையும் இந்திரன் என்னுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மழையைக் கொட்டித் தள்ளுகின்றான். இதன் காரணமாக நான் பசிப்பிணியால் வருந்துகிறேன் என்றார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -47

ஒருநாள் யுதிஷ்டிரனும் திரௌபதியும் தங்கள் மண்டபத்தில் இனிது உரையாடிக் கொண்டிருந்தனர். ஓர் அவசர நெருக்கடியை முன்னிட்டு அர்ஜுனன் தன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுக்க யுதிஷ்டிரனும் திரௌபதியும் இருக்கும் மண்டபத்தின் வழியாக அவர்கள் இருப்பதை அறியாமல் மற்றொரு அறைக்கு விரைந்து சென்று சென்றான். வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்த பிறகு அவர்கள் இருப்பதை அறிந்தான். சகோதரர்கள் தங்களுக்குள் செய்த உடன்படிக்கையை அர்ஜூனன் மீறிய படியால் ஓராண்டுக்கு நாட்டை விட்டு வெளியேற கடமைப்பட்டவான் ஆனான். அதன் பொருட்டு 4 சகோதரர்களிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தான்.

யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம் நீ உன்னுடைய கடமையை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாய். நீ அந்த மண்டபத்தின் வழியாக சென்றது எனக்கும் திரௌபதிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. நீ எங்கள் முன்னிலையில் சென்றதை நாங்கள் ஆட்சேபம் ஏதும் செய்யவில்லை. எனவே நாட்டை விட்டு ஒரு வருட காலம் வெளியே செல்ல வேண்டாம் என்றான். அதற்கு அர்ஜுனன் நமக்கிடையில் நாம் வைத்துக் கொண்டிருக்கும் சட்டதிட்டங்களை ஏதோ ஒரு சிறிய காரணத்தைச் சொல்லி மீறல் ஆகாது. நாம் தர்மத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். ஆகையால் நான் அதை யாத்திரை செல்கிறேன் என்று புறப்பட்டுச் சென்றான். நாடெங்கும் தீர்த்த யாத்திரை செய்தான். தென்பகுதியில் உள்ள காவிரியில் நீராடினான். தென் குமரியை அடைந்து மேற்குக் கரையோரமாக வடதிசை நோக்கி அவன் சென்றான். பிரபாஸா என்னும் இடத்தைச் சென்று அடைந்து அங்கு சந்நியாசி போல் மாறு வேஷம் பூண்டு கொண்டு ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணன் அர்ஜூனன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அந்த சந்நியாசியை சந்திக்க அங்கு வந்து சேர்ந்தான்.

சுபத்திரா இன்னும் கன்னிகை கிருஷ்ணனுடைய சகோதரி ஆவாள். அவளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அர்ஜுனனுடைய விருப்பமாக இருந்தது. சுபத்திரையும் அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள விருப்பத்துடன் இருந்தாள். இவர்கள் இருவருடைய மனப்பாங்குகள் கிருஷ்ணன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அவர்களுடைய எண்ணத்தை நிறைவேறுவதற்கான திட்டம் ஒன்றை கிருஷ்ணன் வகுத்தான். முதலில் விஷயத்தை குந்திதேவியிடமும் யுதிஷ்டிரனிடமும் சொல்லி அவர்களுடைய சம்மதத்தை வாங்கிக்கொண்டான். அதன் பிறகு சந்நியாசி வேடம் அணிந்த அர்ஜூனனை தனது நாட்டிற்கு அழைத்துச் சென்றான். கிருஷ்ணனின் மூத்தவனாகிய பலராமன் அர்ஜூனனை ஒரு துறவி என்று நம்பினான். சந்நியாசி தங்குவதற்கு பலராமன் ஏற்பாடு செய்தான். சந்நியாசிக்கு பணிவிடைகள் செய்ய தனது தங்கை சுபத்திரையை நியமித்தான். பொருத்தமான சூழ்நிலை தானாக அமைந்ததை எண்ணி கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -46

பாண்டவர்களும் அவர்களுடன் கிருஷ்ணனும் அஸ்தினாபுரம் வருகின்றார்கள் என்ற செய்தி அஸ்தினாபுரம் மக்களை சென்றடைந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அஸ்தினாபுரத்தை மிகவும் அலங்கரித்தார்கள். தங்கள் அன்புக்குரிய இளவரசர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது அனந்தத்துடன் வரவேற்றனர். திரும்பி வந்த பாண்டவர்கள் பாட்டனாராகிய பீஷ்மர் பெரியப்பாவாகிய திருதராஷ்டிரரிடமும் வீழ்ந்து வணங்கினர். அவர்களும் அந்த இளைஞர்களை அன்புடன் வரவேற்றனர். ஒரு நல்ல நாளன்று துதிஷ்டிரனுக்கு பொருத்தமான முறையில் பட்டாபிஷேகம் இனிதாக நிறைவேறியது.

திருதராஷ்டிரன் தன்னுடைய தம்பியின் மைந்தனாகிய பாண்டவர்களை குரு வம்சத்து முன்னோர்களின் தலைமைப்பட்டனமாய் இருந்த காண்டவப் பிரஸ்தம் என்னும் நகருக்கு அனுப்பி வைத்தான். காண்டவப் பிரஸ்தம் இப்போது மிகவும் பழுதடைந்து இருந்தது. அதை புதுப்பித்து பாண்டவர்களின் புதிய தலைமை பட்டிணமாக வைத்துக் கொள்ளும்படி யுதிஷ்டிரனிடம் ஆணை பிறப்பித்தான். அவன் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டான். இனி பாண்டவர் கௌரவர்களுக்கு எந்தவிதமான சச்சரவும் நேராது என்பது பெரியவர்களுடைய நோக்கமாய் இருந்தது. பாகம் பிரித்தது பாண்டவர்களுக்கு பிரதிகூலமான முறையிலேயே இருந்தது. கிருஷ்ணரும் இதற்கு சம்மதம் கொடுத்தார்.

காண்டவப் பிரஸ்தம் நகரத்தை புதுப்பிக்கும் இந்த பெரிய திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் படி இந்திரன் விஸ்வகர்மாவை நியமித்தான். அதிவிரைவில் அழகான பட்டணம் ஒன்று உருவாக்கப்பட்டது காண்டவப் பிரஸ்தம் என்ற பெயர் இப்போது இந்திரப்பிரஸ்தம் என்று புதிய பெயர் பெற்றது. புதிய பட்டணத்திலே ஆட்சிமுறை ஒழுங்காக அமைக்கப்பட கிருஷ்ணர் அனைத்து பணிகளையும் செய்தார். புதிய நகருக்கு அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி விட்ட பிறகு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு துவாரகைக்கு புறப்பட்டுச் செல்ல கிருஷ்ணன் தயாரானன். குந்திதேவியிடம் விடைபெற வந்தபொழுது கிருஷ்ணனிடம் குந்திதேவி வேண்டுதல் ஒன்று வைத்தாள். எப்பொழுதும் பாண்டவர்களுக்கு அனுக்கிரகமாக இருக்க வேண்டும் என்று அவள் வேண்டினாள். கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்து புறப்பட்டுச் சென்றார்.

திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி இந்த புதிய நகரத்தை பார்வையிடவும் பாண்டவர்களை விசாரிக்கவும் அங்கே வந்தார். ஐந்து சகோதரர்களும் முறையாக அவருக்கு வரவேற்பையும் வழிபாடுகளையும் செய்தார்கள். திரௌபதி பணிவுடன் அவரை வணங்கி வரவேற்றாள்.. திரௌபதி அந்தப்புரத்திற்கு சென்றதும் பாண்டவர்கள் ஐவருக்கும் நாரத மகரிஷி எச்சரிக்கை ஒன்று செய்தார். முற்றிலும் ஒட்டி உறவாடும் உங்களுக்கு இடையில் பிளவு உண்டாவதற்கு காரணமாயிருப்பது திரௌபதி மட்டுமே. இந்த கடினமான பிரச்னையை முன்னிட்டு உங்களுக்கிடையில் மன வேற்றுமை இல்லாது இருந்தால் மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடி எதிர்த்தாலும் உங்களை யாராலும் வெற்றி பெற இயலாது என்று புத்திமதி புகட்டிய பிறகு நாரத மகரிஷி அங்கிருந்து புறப்பட்டுப் சென்றார். அதன் பிறகு சகோதரர்கள் வியாசர் முன்பு கூறிய அறிவுறைப்படி ஐவரும் தங்களுக்கிடையில் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டனர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருவர் என்ற முறைப்படி திரௌபதியோடு வாழ்ந்திருத்தல் வேண்டும். இந்த உடன்படிக்கையை மீறுபவர்கள் ஒரு வருடம் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -45

திருதரஷ்டிரரிடம் துரியோதனன் பாண்டவர்களை அழிக்க பல வகையான சூழ்ச்சிகளை எடுத்துரைத்தான். ஆனால் கர்ணன் அதற்கு ஆமோதிக்கவில்லை. துரியோதனின் திட்டங்கள் பயந்தாங்கோல்லி தனமானது என்றும் வேறு சில சூழ்ச்சிகள் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்றும் அவன் அனைத்து திட்டங்களையும் ஒதுக்கித் தள்ளினான். க்ஷத்திரியனுக்கு உகந்தது படையெடுப்பு. அதிவிரைவில் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்து போக வேண்டும் என்று கர்ணன் கூறினான். வீரம் நிறைந்த போர் நடவடிக்கை திட்டம் திருதரஷ்டிர மன்னனால் அங்கீகரிக்கப்பட்டது. பாஞ்சால நாட்டை கௌரவ சேனைகள் படையெடுத்துப் போய் தாக்கினார்கள் ஆனால் அந்நாடு எதற்கும் அசையவில்லை. பாஞ்சால நாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள் தோல்வியடைந்து ஓடினார்கள்.

பாஞ்சால நாட்டின் மீது கௌரவர்கள் படைகள் போருக்கு வந்த செய்தியைக் கேட்ட கிருஷ்ணன் அந்த நாட்டை பாதுகாக்க தன் சேனையுடன் விரைந்து சென்றான். கிருஷ்ணன் அங்கு போகும் முன்பே போர் முடிந்து அமைதி நிலவியது. ஆயினும் சிறிது காலம் கிருஷ்ணன் அங்கு தங்கியிருந்தார்.

அஸ்தினாபுரத்தில் பீஷ்மரும் துரோணரும் விதுரரும் திருதராஷ்டிர மன்னனுக்கு நல்ல அறிவுரைகளை புகட்டினார்கள். திருதராஷ்டிரரின் மகன்கள் செய்த கொடுமைகள் அனைத்துக்கும் பரிகாரம் தேடும் படி தெரிவித்தார்கள். பாண்டவர்களும் அவர்களின் தாய் குந்திதேவியும் அரக்கு மாளிகை தீயில் அழிந்து போகவில்லை. அவர்கள் அந்த அக்னியில் கொளுத்தப்பட்டு மாண்டு போய் இருந்தால் அந்த கொடிய பாவம் காலமெல்லாம் உங்களுக்கே உரியதாகும். துஷ்டனாகிய அமைச்சர் புரோச்சனன் அச்செயலுக்கு அனைத்து காரியங்களையும் செய்திருந்தாலும் உங்கள் அனுமதியின் பேரில் செய்ததால் அவனுக்கு பாவம் சேராது. உங்களுக்கே சேரும். கெட்ட காரியங்கள் செய்ய அனுமதிப்பதை விட செத்து மடிவதே மேல். பாண்டவர்களை தாங்கள் வரவழைத்து தம் பிள்ளைகள் போல் அவர்களை பாராட்டுங்கள். அவர்களுக்கு இவ்வளவு நாள் செய்துள்ள தீமைகளுக்கு விமோசனம் இது ஒன்று தான். நிலவுலகில் நெடுங்காலம் நிலை பெற்று இருக்கும் குரு வம்ச அரசாங்கத்திற்கு முற்றிலும் உரிமையாளர்களாக இருப்பவர்கள் பாண்டவர்களே. கௌரவர்கள் அல்லர். ஆயினும் அரசாங்கத்தை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விடுங்கள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே அமைதியும் ஒற்றுமையும் இன்பமும் நிலவும். இந்த அறிவுரையை கேட்ட திருதராஷ்டிரன் திருந்தியவன் போல் தென்பட்டான்.

பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு திருப்பி அழைத்து வர பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்க அனைவரும் தீர்மானித்தார்கள். பொறுப்பு விதுரரிடம் ஒப்படைக்கப்பட்டது. துருபத மன்னனுக்கு குருவம்சத்தின் அன்பையும் பாராட்டுகளையும் விதுரர் தெரிவித்துக் கொண்டார். துருபத மன்னனும் தன்னுடைய அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டான். இத்தருணத்தில் கிருஷ்ணன் பாஞ்சால நாட்டில் தங்கியிருந்த காரணத்தில் இத்தகைய ஒற்றுமையை மிக எளிதில் நிறைவேற்றப்பட்டது. நெடுநாளைக்கு பிறகு பாண்டவர்கள் நலமுடன் இருப்பதை பார்த்து விதுரர் அகமகிழ்ந்தார். பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்கு திரும்பி போக வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர் கிருஷ்ணனும் அவர்களுடன் அஸ்தினாபுரம் சென்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -44

திரௌபதியின் திருமணத்திற்குப் பிறகு துருபத மன்னன் முற்றிலும் திருப்தி அடைந்தவனாய் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஏனெனில் தான் எண்ணியிருந்த எண்ணம் முழுவதும் திரௌபதியின் திருமணத்தின் மூலம் நிறைவேறும் என்ற எண்ணமே அதற்கு காரணமாய் இருந்தது.. தன்னுடைய மருமகன்களான பாண்டவர்களிடம் துருபதன் முக்கியமான விஷயம் ஒன்றை கூறினார். தன் குடும்பத்திற்கும் பாண்டவர்கள் குடும்பத்திற்கும் இடையில் எந்தவிதமான வேற்றுமையும் இருக்கக்கூடாது. இரண்டு குடும்பத்தையும் ஒரே குடும்பமாக கருத வேண்டும் என்று கூறினான். தனக்கு சொந்தமாய் இருந்த பாஞ்சால நாடு தங்களுக்கும் சொந்தம் என்றே கருத வேண்டும் என்று கூறினான். திருமணத்தின் வழியாக இந்த புதிய உறவு பாண்டவர்களுக்கு புதிய வல்லமையும் தகுதியையும் தருவதாய் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஏதும் இல்லாத நாடோடிகள் இல்லை. அவர்களுக்கு பலம் வாய்ந்த பின்பலம் அமைந்தது. கிருஷ்ணனும் பலராமனும் அவர்களுடைய உறவினர்களும் பாண்டவர்களுக்கு நெருங்கிய சொந்தங்கள் ஆயினர்.

சினத்தையும் பொறாமையையும் தட்டி எழுப்புகின்ற செய்தி ஒன்று அஸ்தினாபுரத்தில் கௌரவர்களுக்கு எட்டியது. பாண்டவர்கள் மடிந்து போகவில்லை. பாஞ்சால நாட்டில் பிராமணர்களாக வந்து திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்கள் பாண்டவர்கள் தான். இப்பொழுது அவர்கள் பாஞ்சால நாட்டில் உறுதியான இடம் பிடித்திருக்கின்றனர் என்ற செய்தியை கேட்டு அவர்களுடைய உள்ளம் குழம்பியது. விதுரர் தனது போக்கில் இந்த செய்தியை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அரசனாகிய திருதராஷ்டிரனிடம் விரைந்து ஓடிச் சென்று திரௌபதி அஸ்தினாபுரத்திற்கு மருமகளாய் வந்திருக்கிறாள். குரு வம்சம் ஓங்குக என்று கூறினார். இதைக்கேட்ட திருதராஷ்டிரன் துரியோதனன் சுயம்வரத்தில் வென்று திரௌபதியை அழைத்து வருகின்றான் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் துரியோதனனையும் திரௌபதியையும் ஏன் உன்னோடு இங்கு அழைத்து வரவில்லை. நான் அவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறேன் என்று கூறினார். உடனே விதுரர் அண்ணா பாண்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். சுயம்வரத்தில் திரௌபதியை அவர்களே பெற்றிருக்கிறார்கள். பாஞ்சால ராஜ்ஜியத்தில் அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்றார். திருதராஷ்டிரனுக்கு இச்செய்தி காதில் இடி விழுந்தது போல் இருந்தது. உள்ளத்தில் சீறி எழுந்த சினத்தை மறைத்து வைத்துக் கொண்டு தன் தம்பியின் பிள்ளைகளிடத்தில் அன்பு வைத்திருந்ததாக அவன் பாசாங்கு செய்தான். நான் மகிழ்ச்சி அடைகிறேன் கடைசியாக மாண்டுபோன என் தம்பியின் மைந்தர்கள் உயிரோடு இருக்கிறார்கள். பாஞ்சால நாட்டில் அவர்கள் சௌபாக்கியத்துடன் இருக்கட்டும் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விதுரரிடம் கூறினார்.

மண்டபத்துக்கு வெளியில் துரியோதனனும் கர்ணனும் ஒதுங்கி நின்று கொண்டு உள்ளே நிகழ்ந்த உரையாடல்களை கேட்டு கொண்டிருந்தனர். விதுரர் சென்ற பின் அவர்கள் இருவரும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். துரியோதனன் பதைபதைப்புடன் தந்தையே நான் விரும்பாத பாண்டவர்களிடம் தாங்கள் அன்பு இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு திருதராஷ்டிரன் நீ கவலைப்படுவதை விட அதிகமாக நான் கவலைப்படுகிறேன். ஆனால் என் மனதில் இருப்பதை நான் விதுரரிடம் வெளிப்படுத்த முடியாது. பாண்டவர்கள் நலனில் விதுரர் அக்கறை மிக வைத்திருக்கின்றான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே எனக்கு எடுத்து விளக்கு என்றார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -43

துருபத மன்னனின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் துருபத மன்னனின் அரண்மனைக்கு விருந்தினராக வந்தார்கள். அரண்மனைக்கு வந்த பாண்டவர்கள் ராஜ மாளிகையின் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவர்கள் போன்று செயல்பட்டனர். ராஜரீதியுடன் அவர்கள் உணவு உண்பதையும் அவர்களின் செயல்கள் அனைத்தும் ராஜா ரீதியிலேயே இருப்பதையும் துருபத மன்னன் கவனித்தான். அரண்மனையில் இருந்த வெவ்வேறு மண்டபங்களில் உள்ள இடங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. யுத்த தளவாடங்கள் நிறைந்திருந்த மண்டபமே விருந்தினராக வந்திருந்த பாண்டவர்களின் கவனத்தில் பெரிதும் கவர்ந்தது. இவை அனைத்தையும் கூர்மையாக கவனித்து வந்த துருபத மன்னன் வந்தவர்கள் பாண்டவர்களே என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தனது மகன் திருஷ்டத்யும்னன் கூறியது உண்மை தான் என்று எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைந்து பாண்டவர்களிடம் சென்று தங்களுடைய வரலாற்றையும் நீங்கள் யார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டினான்.

பாண்டவர்கள் தங்களது வரலாற்றை உள்ளது உள்ளபடி எடுத்து விளக்கினார். அதைக் கேட்ட துருபதன் அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். வாரணவாதத்திற்கு போனது முதற்கொண்டு அவர்கள் அடைந்த அனுபவங்கள் அனைத்தையும் முழு கவனத்துடன் துருபதன் கேட்டான். அர்ஜூனனுக்கும் திரௌபதிக்கும் விவாகம் அதிவிரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று துருபத மன்னன் கூறினான். ஆனால் அதற்கு நேர்மாறான மற்றொரு கருத்தை யுதிஷ்டிரன் தெரிவித்தான். பாண்டவர்களாகிய நாங்கள் ஐவரும் திரௌபதியை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதைக் கேட்ட மன்னன் திகைத்து போனான். இது எங்குமே கேள்விப்படாத ஒன்றாக உள்ளது எங்கும் கேள்விப்படாத போக்காக இருக்கிறது தர்மம் இதற்கு இடம் தராது. ஐதீகம் இதற்கு மாறானது. ஆடவன் ஒருவன் பல தடவை மணந்து கொள்ளலாம். சேர்ந்தார் போல் அவனுக்கு மனைவிமார்கள் பலர் இருக்கலாம். ஆனால் பெண் ஒருத்தி ஒரு தடவை தான் மணந்து கொள்கிறாள். அவளுக்கு கணவன் ஒருவனே. இக்கோட்பாடுகளை கூறி பாண்டவ சகோதரர்கள் கொண்டிருந்த கருத்தை துருபத மன்னன் முற்றிலும் நிராகரித்தான்.

அப்பொழுது திடீரென்று வியாச பகவான் அங்கு பிரசன்னமானார். அவரது வரவை குறித்து இரு தரப்பினரும் அகமகிழ்வு கொண்டனர். தக்க முறையில் அவர் பக்திபூர்வமாக வரவேற்கப்பட்டார். பிறகு தனக்கு நேர்ந்த நெருக்கடியை துருபதன் வியாசரிடம் தெரிவித்தான். வியாசர் முன்பு பாண்டவர்களிடம் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் துருபதனிடம் கூறினார். அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டது என்று விளக்கிக் கூறினார். துருபதன் அறிவு களஞ்சியமாகிய வியாசரிடம் அளவு கடந்த விசுவாசம் வைத்திருந்தான். அனைத்தும் இறைவனது திட்டம் என்று எண்ணி அவன் திருமணத்திற்கு சம்மதித்து முழுமனதுடன் திரௌபதியை பாண்டவர்கள் ஐவருக்கும் கன்னிகாதானம் செய்து வைத்தான்.
திரௌபதி வியாசர் கூறியபடி நடந்து கொண்டு தனது புனிதத்தை காப்பாற்றி வந்தாள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -42

குந்தி தேவி தன் வாழ்க்கையில் உண்மைக்கு மாறானது எதையும் சொன்னது இல்லை. அவர் வார்த்தையும் காப்பாற்றப்படவேண்டும். திரோபதியின் கர்மபலன் தீர வேண்டும். எனவே நீங்கள் ஐவரும் திரோபதியை திருமணம் செய்து கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருவருடன் மனைவியாய் திரொபதி இருப்பாள். ஒரு வருடம் முடிந்ததும் மீண்டும் கன்னியாவாள். அவள் சிவனிடம் பெற்ற வரத்தின் மகிமையே அதற்கு காரணம். கணவன்மார்கள் ஐவருக்கும் திரோபதி பொதுவாய் இருந்தாலும் அவளுடைய கற்பு ஒரு நாளும் பட்டுப்போகாது. அவளுடைய கற்பு அலாதியாக அவளுக்கே உரியதாகும். எனவே இத்திருமணத்திற்கு அனுமதி கொடுக்கலாம். இவர்களின் கர்மபலன் தீருவதற்கு நாம் அனைவரும் துணையிருப்போம் என்று வியாசர் கூறினார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். வியாசர் விடைபெற்றுச் சென்றார்.

அந்தி வேலை வந்தது. அன்று பகல் முழுவதும் நிகழ்ந்த செயல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து அமைதி நிலவியது. அப்போது அங்கு கிருஷ்ணரும் அவருடைய தமையன் பலராமனும் அவர்களுடைய அத்தை குந்திதேவியை தரிசித்து தங்களுடைய வணக்கத்தை செலுத்துவதற்கு குடிசைக்கு வந்தனர். குந்திதேவி தன் மைந்தர்களாகிய பாண்டவர்களை அவ்விருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அப்போது தான் அவர்கள் பரஸ்பரம் முதல் தடவை ஒருவரை ஒருவர் பார்க்கின்றார்கள். வயதை அனுசரித்து முறையாக அவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கி கொண்டனர். அப்போது தொடங்கிய உறவு எப்பொழுதும் நிலைத்து இருப்பதற்கு ஏற்றவாறு அமைந்தது. மாறுவேடத்தில் வாழ்ந்து வரும் பாண்டவர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரப்போகிறது என்றும் அது வரையில் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தெய்வீக சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் தங்களுடைய மாளிகைக்கு திரும்பிச் சென்றனர்.

பிராமணர்களாக வேடம் தரித்து திரௌபதியை அழைத்து வந்த பாண்டவர்களை பின்தொடர்ந்து வந்த திருஷ்டத்யும்னன் அங்கு நடந்தது அனைத்தையும் முற்றிலும் கவனித்தான். அவர்கள் பாண்டவர்கள் என்றும் அவர்கள் தாய் குந்திதேவி என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு விரைந்து ஓடிச் சென்று தன் தந்தையிடம் தான் அறிந்து கொண்ட விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தான். வேந்தனாகிய துருபத மன்னன் சுயவரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை குறித்து கவலையுடன் இருந்தான். அவனுக்கு திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி மிகவும் அமைதியை அளித்தது. மகன் கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். திருஷ்டத்யும்னன் கூறியது அனைத்தும் உண்மையாக இருந்தால் தன் வாழ்க்கையில் கொண்டிருந்த திட்டங்கள் யாவும் நிறைவேறும் என்று அம்மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு வாய்த்த புதிய உறவினர்களுக்கு துருபத மன்னன் விலை உயர்ந்த ஆடைகளை அனுப்பி வைத்தான். அவர்கள் அனைவரும் விருந்துக்கு அரண்மனைக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -41

பாண்டவர்கள் ஐந்து சகோதரர்களும் மணமகள் திரௌபதியை தங்களுடன் அழைத்துக் கொண்டு தாங்கள் குடியிருந்த குடிசைக்கு அழைத்து வந்தனர். இவர்களின் பின்னே பாண்டவர்களுக்கு தெரியாமல் இந்த பிராமணன் யார் என்று அறிந்து கொள்ள திரௌபதியின் அண்ணன் திருஷ்டத்யும்னன் பின் தொடர்ந்து வந்தான். குடிசைக்கு வெளியே இருந்து அவர்கள் உரத்த குரலில் அம்மா என்று நாங்கள் ஒரு நூதானமான பிட்சை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். வீட்டுக்குள் இருந்த குந்திதேவி என்ன பிட்சை கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று பார்க்காமல் ஐந்து பேரும் உங்களுக்குள் பங்கிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்த்தார். அர்ஜூனனுடன் திரௌபதி நின்று கொண்டு இருந்தார். நடந்தவைகள் அனைத்தையும் யுதிஷ்டிரன் குந்திதேவியிடம் விளக்கமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட குந்திதேவி குழம்பிப்போனாள்.

குந்திதேவி தன் குழப்பத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் திரௌபதியை கட்டித் தழுவிக் கொண்டாள். திரௌபதியும் தனக்கு புதிதாக வாய்த்த மாமியார் குந்திதேவி பாதங்களைத் தொட்டு வணங்கினாள். பிறகு மூத்தவனாகிய யுதிஷ்டிரனிடம் குந்திதேவி தனது மனக் கவலையை வெளியிட்டார். உண்மைக்கு மாறானது எதையும் என் வாழ்நாளில் நான் சொன்னது கிடையாது. நீங்கள் கொண்டு வந்த பிட்சையை ஐந்து பேரும் பங்கீட்டு கொள்ளுங்கள் என்று எண்ணிப் பார்க்காது நான் சொல்லிவிட்டேன். திரௌபதி தான் அந்த பிட்சை என்பது இப்போது எனக்கு விளங்குகின்றது. நான் அப்படி சொல்லியபடியால் என்ன நிகழப்போகிறது என்று தெரியவில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள். சிறிது நேரம் தாயும் பிள்ளைகளும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர் அதன் பிறகு யுதிஷ்டிரன் தாயே தாங்கள் தயங்க வேண்டாம். பொல்லாங்கு ஏதும் நிகழாது என்று சொல்லிவிட்டு அர்ஜுனா நீ திரௌபதியை மணந்து கொள் என்று கூறினான் அதற்கு அர்ஜுனன் மூத்தவர் தாங்கள் இருக்கும் போது தங்களுக்கு திருமணம் ஆகாமல் நான் எப்படித் திருமணம் செய்து கொள்வது இது பொருந்தாது. தங்களின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான்.

பாண்டவர்களும் குந்திதேவியும் இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது வியாசபகவான் இங்கு தோன்றினார். உங்களிடம் இருந்த குழப்பத்தை ஞானதிருஷ்டியில் அறிந்தேன். ஆகவே தர்மத்தின் போக்கை தெளிவுபடுத்த இங்கு வந்தேன் என்றார். பாண்டவர்களும் குந்திதேவியும் திரௌபதியும் வியாசபகவானை வரவேற்று வணங்கினார்கள். வியாசபகவான் அனைவரிடமும்
திரௌபதி பூர்வ ஜென்மத்தில் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளுக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான் என்ற வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு திரௌபதி தர்மத்தை கடைபிடிக்கும் நல்ல கணவன் வேண்டும் என்று இறைவனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஐந்து முறை மீண்டும் மீண்டும் கூறினாள். ஆகையால் இறைவனின் வரத்தின் படி அவளின் வினைபயனால் ஐந்து தர்மத்தை கடைபிடிக்கும் கணவன்மார்கள் அமைந்தாக வேண்டும். அந்த அமைப்பு பாண்டவர்களாகிய உங்களைக் கொண்டு நிகழ்கிறது. ஏனெனில் உங்கள் ஐவருக்கும் எதைக்கொண்டும் கருத்து வேறுபாடு கிடையாது. திரௌபதியின் வினைப்பயன் தங்கள் தாயின் சொல்வழியாக ஐவரும் திருமணம் செய்ய தூண்டுகிறது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -40

கர்ணன் தனது சந்தேகம் தீர பிராமண வேடம் அணிந்த அருஜூனனிடம் சென்று நம்மில் யார் வில்வித்தையில் சிறந்தவர் என்று நமது திறமையை வெளிப்படுத்தும் பாங்கில் போட்டி போடலாம் என்று கர்ணன் கூப்பிட்டான். பிராமண வாலிபனும் அதற்கு சம்மதித்தான். இருவரும் அவரவர் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதிவிரைவில் பிராமண வாலிபன் கர்ணனை விட வில்வித்தையில் சிறந்தவனாக தனது திறமையை காட்டினான். கர்ணன் பிராமண வாலிபன் வில்லித்தையில் சிறந்தவன் ஒத்துக்கொண்டு அர்ஜுனன் உயிரோடு இருந்தபோது அவன் கிட்டத்தட்ட என் தரத்தை ஒத்திருந்தான். இப்பொழுது பிராமணனாகிய நீயோ என்னை வென்று விட்டாய் பார்க்கவர் எனக்கு குரு ஆவார் உனக்கு குரு யார் என்று கேட்டான். அதற்கு பிராமண வேடத்தில் இருந்த அர்ஜூனன் என் குருவும் ஒரு பிராமணர் என்றான். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மன்னர்களுக்கு இடையில் ஓர் குழப்பம் உண்டாயிற்று.

துருபத மன்னனுடைய அரண்மனையில் சுயம்வரம் வெற்றிகரமாக நடந்து விட்டது. ஆனால் அங்கு வந்திருந்த வேந்தர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். அரசர்களிடம் க்ஷத்திரியன் பிராமணன் பற்றிய எண்ணமே அதற்குக் காரணமாய் இருந்தது. துருபதன் தன்னுடைய மகளை நாடோடி பிராமணன் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அதன் வாயிலாக நம்மை வேண்டுமென்றே இங்கு வரவழைத்து அவமானப்படுத்தியுள்ளார். பொருத்தமான ராஜகுமாரன் ஒருவன் கிடைக்கவில்லை என்றால் துரோபதி தற்கொலை செய்து கொள்வதே சரியானதாகும். நாடோடி ஒருவனுக்கு மாலை சூட்டியது பெரும் தவறாகும். துருபதன் ஆயுள்காலம் முழுவதும் மறக்க முடியாத பாடம் ஒன்றை அவனுக்கு புகட்டவேண்டும் என்று வேந்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி துருபத மன்னனை தாக்கத் துவங்கினர்.

இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது துருபதனுக்கு விளங்கவில்லை. பரிதாபத்துடன் நாலா பக்கமும் பார்த்தான். அதேவேளையில் சுயம்வரத்தில் வெற்றி அடைத்திருந்த பிராமண வாலிபன் கர்ணனிடம் பேச்சை நிறுத்திவிட்டு மாமனாரான துருபத மன்னனை காப்பாற்றும் பொருட்டு அங்கு விரைந்தான். மேலும் பிராமண வேடம் அணிந்த அவனது யுதிஷ்டிரன் தவிர்த்து மூன்று சகோதரர்களும் நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்ட துருபதன் மன்னனைக் காப்பாற்ற விரைந்தனர். பிராமணர் அபிமானத்தை முன்னிட்டு மேலும் பல பிராமணர்கள் அங்கு குவிந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்கும்படி பணிவுடன் பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒரு சிறிய போர் போல மல்லுக்கட்டே நிகழ்ந்தது. அங்கு குழுமியிருந்த அரசர்கள் அனைவரையும் இந்த நான்கு பிராமணர்களும் வெற்றிகரமாக சமாளித்தனர். இந்த நால்வரும் யார் என்பது கிருஷ்ணனுக்கு தெரியும். ஆகையால் மகிழ்வுடன் அவன் அதை வேடிக்கைப் பார்த்தார். பிறகு மன்னர்களை சமாதானப்படுத்த கிருஷ்ணன் முயன்றார். அங்கு இருந்த அரசர்களிடம் இங்கு நிகழ்ந்ததில் குறை ஏதும் இல்லை. க்ஷத்திரிய ஐதிகத்துக்கு உட்பட்டே துருபதன் அனைத்தையும் செய்திருக்கின்றான். துருபதன் தவறு எதும் செய்யவில்லை என்று கிருஷ்ணன் தெளிவாக விளக்கினார். குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.