இலங்கையில் உள்ள வானரப் படைகள் ராவண வதம் முடித்ததும் அங்கிருந்து புறப்படத் தயாராயின. அப்போது வானரப் படைவீரர்கள் அனைவரும் இருக்கிறார்களா என்று சரிபார்க்கும் படி சேனாதிபதியிடம் உத்தரவிட்டார் ராமர். கணக்கெடுப்பு பணி முடிந்தது. வசந்தன் என்ற வானரம் காணாமல் போனது தெரிந்தது. சுவாமி வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லையே என்றார் சேனாதிபதி. அனுமனை அழைத்து காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடித்து அழைத்து வா என்று கட்டளையிட்டார் ராமர்.
அனுமன் வசந்தனை இலங்கை முழுவதும் தேடினார். எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது. எமலோகம் சென்ற அனுமன் வசந்தன் இங்கே எப்படி வந்தான்? என்று எமதர்மரிடம் கேட்டார். அதற்கு எமதர்மர் சுவாமி கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால் என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் வசந்தனை வரவழைத்து உமது பெருமைகளைக் கேட்டு மகிழ்ந்தேன் என்றான். அதன்பின் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்தார் அனுமன். அவர்களின் வருகையைக் கண்ட வானரங்கள் துள்ளிக் குதித்தன.
மண்டோதரி இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள் எனப் பொருள். மண்டோதரி மிகவும் அழகானவள். தூய பக்தியுடையவள் நேர்மையானவள். இலங்கைக்குச் சென்ற அனுமன் முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இவளது அழகும் குணமும் தன்மையும் இருந்தது. சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடுபட்டாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன் தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.
கஷ்யப்ப முனிவரின் மகன் மாயாசுரன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த மாயாசுரனின் வளர்ப்பு மகள் மண்டோதரி ஆவாள். மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன் மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியை திருமணம் புரிய விரும்பி வேதமுறைபடி அக்கினியை ஏழுமுறை வலம் வந்து திருமணம் புரிந்து கொண்டான்.
இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம் மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக பாவித்து வருகிறார்கள். இங்கு இராவணனுக்கு ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது. சீதையை அபகரித்து வந்த இராவணன் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை முயன்றான். எனினும் சீதை ஒரு போதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து இராவணனைத் தடுத்தாள். ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும் கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும் உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும் என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விட்டான்.
மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம் தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும் அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தாலும் ஒரு போதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதி வரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.
ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல் எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும் அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கணவன் அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும். அனைவரும் நேர்மையின் உருவமாக திகழ்ந்து நேர்மையாக நடக்க வேண்டும் என்று உணர்த்தினாள். இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.
இந்தியாவில் வால்மீகி, கம்பர், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் இந்தியாவில் இருப்பதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த ராமாயணங்களில் சில நூலில் கதைகள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கைகேயி மற்றும் ஊர்மிளையின் தியாகம் பற்றி ஒரு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
ராவண வதம் முடிந்து சீதை லட்சுமணன் வானரங்கள் மற்றும் ராமருக்கு உதவிய ராட்சசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் அழைப்பை ஏற்று அவருக்கு வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்கள். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும் சத்ருக்னனும் அக்னிப் பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி தான் வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ராமரால் அனுப்பப்பட்டார். அவரும் நந்தி கிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு பரதனிடம் அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். பரதனும் ராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். ராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லட்சுமணனையும் என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர் எனக் காட்டினான் பரதன். அவளை வணங்கிய பின்னரும் வெளிப்படையாக உன்னைப் பெற்ற தியாகி அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார் அனுமன். துணுக்குற்ற பரதன் அவள் மகாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்? எனக் கேட்டான். அப்போது அனுமன் கூறினார்.
பரதா உன் தாயைப் பற்றிய சில உண்மைகளை நீ தெரிந்துகொள். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளை உணரும் தன்மை கொண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவனாய் தசரதன் உத்யான வனத்தில் திரிந்த போது தளதளவென்று பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி அந்த தளிரின் உணர்ச்சியை கண்டாள். தன் குழந்தையான தளிரைப் பிரிந்து தாய் கொடியான தான் எப்படி கண்ணீர் வடிக்கிறினோ அது போலவே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய் என்று தசரதனுக்கு சாபமிட்டாள் அந்த தாய்க் கொடி. பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷி குமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால் உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய் என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
தசரதர் ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி குறித்த முகூர்த்தத்தின் பின் விளைவுகளை பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி. அந்த முகூர்த்தப்படி ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால் ராஜ்யத்தில் ராமர் அன்று அரசராக அமர்ந்திருந்தால் அதுவே அவரது ஆயுளை முடிந்திருக்கும். புத்ர சோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ர சோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும் போது அது ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு பாவி என்ற பட்டமும் கொடுமைக்காரி என்ற பட்டமும் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை. அந்தக் கணத்தில் ராஜ்யத்தின் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பான் என்று ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.
ராமர் 14 நாட்கள் வன வாசம் செல்ல வேண்டும் என்று தசரதரிடம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் வாய் தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகி விட்டது. எந்தப் பெண் தன் மங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? ராமரிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் நீ அரசாள வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். ஒருக்கால் நீ பதவி ஏற்றால் ராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மகா தியாகி. அவள் பதினான்கு வருடங்கள் என்று வாய் தவறி கேட்டதினால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ராமனின் தரிசனம் கிட்டியது. ராவணன் முதல் பல ராட்சசர்கள் வரை ராமரால் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது. தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத் துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்பட்டது.
ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லட்சுமணரும் கிளம்பி விட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினை அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போக மாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா? நீ வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்றாள் சிரித்துக் கொண்டே ஊர்மிளை. அப்படியே ஆகட்டும் எனக் கூறிச் சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது. ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.
ஆதிசங்கரரின் உபதேசம் நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு. யார் நல்ல மனிதர்கள் பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் சிறிது நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிகிறது. முதலில் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் எப்படி தெரிந்து கொள்வது. நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவன் நம்மிடம் எதிர்பார்க்கக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.
ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.
அனுமனிடம் ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. காரணம் சொன்னார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.
மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா. அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஒன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன் மனைவியிடம் கொடுத்தார். ஐனகர் ராஜரிஷி. அந்த செய்தி அவர் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஓலையை வாங்கி வாசித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனை எத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்ற போது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேய, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள். சில ஆண்டுகளுக்கு பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண் மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை அயோத்தி வராமல் காட்டிற்குள்ளேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது. லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள். இதெல்லாம் முடிந்ததே இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை. ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள். சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா. இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாகத்தான் இனி வாழ வேண்டும்.
ராமனும் பரதனும் சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சி வசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள் தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம் எனப் புறப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி அயோத்தி மாநகரை வந்தடைந்தது. அயோத்தி வீதிகளில் மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன. மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்க வேண்டும். தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர். தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் குதிரைகள் பறந்தன. நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம். \
ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியின் கரையில் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன் சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத் தொடங்கியது. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டதை உணர்ந்த மக்கள் ராமா ராமா என கோசம் எழுப்பினார்கள். ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.
ராமர் நம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாரே இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே உங்களுக்கு வருத்தமாக இல்லையா? ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது. சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா? என அவள் ஏங்கினாள். மாண்டவி சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்க பேச ஆரம்பித்தார்.
மனித உடல் என்பது உறை. ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான். வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்து விட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம் என்றார்.
சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா? என்று கேட்டாள். அதற்கு ஐனகர் ஆமாம் ஒன்றை யோசி அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும் என்றார். அதற்கு சுனயனா இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா? என்று கேட்டாள்.
ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் என்று ஜனகர் ஒரு கட்டளை போல் கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கணத்தில் ஆதிசேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக மாறி திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.
ராமரைக் கண்ட மக்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ஜெய் ஸ்ரீராம் என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன. ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்று அறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ராம ராம என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.
ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.
வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.
ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.
லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.
ராமன் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமன் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.
ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமன் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமன். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமன். அனுமனும் ராமனும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமன் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.
ராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி ஞானம் வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.
ராமாயண யுத்தத்தில் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரர் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில் முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார்.
அனுமன் ஏரியில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். உங்களால் கொல்லப்பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன் முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் திட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேசராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.