குளிகை

ராவணனின் மனைவியான மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும் மிகுந்த அழகும் நிறைந்த அறிவும் கொண்ட மகன் தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கான வழிமுறைகளையும் அவரிடம் கேட்டான். அதற்கு சுக்கிராச்சாரியார் கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை கூறினார். உடனடியாக நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து ஒன்றாக அடைத்து விட்டான் ராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் தவித்துப் போனார்கள். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப் போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும் அதற்கும் தாங்கள் தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் ஒன்பது பேரைத் தவிர நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் ராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம் என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன் ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் (மாந்தன் எனவும் அழைப்பர்) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன் முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்ததால் குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.