ஓடக்காரன்

ராமர் லட்சுமணனை தனது யாகத்தை பாதுகாக்க அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் பல இடங்களுக்கு ராமரை அழைத்துச் சென்றார். கல்லாக இருந்த அகலிகையை ராமரின் பாதத்தில் படச்செய்து அவளுக்கு விமோசனம் அளித்தார். ஒரு நதியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டி ராமர் லட்சுமணர் விஸ்வாமித்திரர் மூவரும் நதிக்கரையில் இருக்கும் ஓடக்காரனிடம் சென்றார்கள். ஓடக்காரனிடம் சென்ற விஸ்வாமித்ரர் நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். நீ ஓடம் செலுத்துபவனா? இந்த ஓடத்தில் இப்போது நாம் அக்கரைக்கு செல்லலாமா? இந்த ஓடத்தில் எத்தனை பேர் செல்லலாம் எனக் கேட்டார். அதற்கு ஓடக்காரன் நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். இந்த ஓடத்தில் அறுபது நபர்கள் போகலாம் என்றான். நாங்கள் மூவர் தான் வந்து இருக்கிறோம். அப்பயென்றால் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று கேட்டார் விஸ்வாமித்திரர். அதற்கு ஓடக்காரன் நீங்கள் இந்த உலகத்தை காக்கும் தெய்வம். உங்களை நான் ஒரு போதும் காக்க வைக்கமாட்டேன். ஓடத்தில் ஏறுங்கள் வாருங்கள் போகலாம் என்றான். விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார்.

ராமர் ஓடத்தில் ஏறும் பொழுது ஓடக்காரன் பச்சை பச்சை ஓடத்தில் ஏறாதே என்றான் இதனை கேட்ட ராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். லட்சுமணருக்கு பெரும் கோபம் உண்டானது. லட்சுமணனின் கோபத்தை கண்ட ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். பச்சையாக இருக்கும் என்னைப் பச்சை என்று அழைத்ததால் ஒன்றும் பிரச்சணை இல்லை. இந்த ஓடம் அவனுக்கு சொந்தமானது. அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்லுவதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று லட்சுமணனை சமாதானப் படுத்தினார். பின்பு ஓடக்காரனை பார்த்து நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்று கேட்டார். அதற்கு ஓடக்காரன் என் மேல் கோபத்தில் இருக்கும் உங்களது தம்பியை கூட நான் அழைத்துச் செல்வேன் ஆனால் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்றான். அதற்கு லட்சுமணன் நாங்கள் அயோத்தியை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள் ராமர் லட்சுமணன் என்றான். இதைக்கேட்டவுடன் ஓடக்காரன் கண்ணீர் மல்க வணங்கி என்னை மன்னித்தருள வேண்டும். தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு உணவும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம் என்றான்.

ராமர் ஏன் நான் ஏறக்கூடாது சரியான காரணத்தை சொல் தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்றார். அதற்கு ஓடக்காரம் நாங்கள் இளமையில் ஒரு பாறையில் சருக்கி விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் தாங்கள் கால் வைத்தவுடன் இந்த ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் என்னுடைய பிழைப்புக்கு நான் என்ன செய்வது அதனால் உங்களை ஏற்றிக் கொள்ள மறுக்கிறேன் என்றான். இதனைக் கண்டு சிரித்த ராமர் நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது என்றார். அதற்கு ஓடக்காரன் தாங்கள் சொல்வது உண்மை என்றால் உங்களை ஏற்றிக் கொள்கிறன் ஆனால் தாங்கள் நதியில் இறங்கி உங்களின் கால்களை சுத்தமாக கழுவிவிட்டு ஏறுங்கள் என்றான். ராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். அப்போது ஓடக்காரன் கால் கழுவும் பணியை எனக்கு கொடுங்கள். நான் சுத்தமாய் தேய்த்து விடுகிறேன் என்று கூறி ராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து ராம ராம என்று அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான். உங்களின் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க தவம் செய்யாத இந்த அடியேனுக்கு பாத பூஜை கிடைத்தது என்று துதி பாடி வழிபாடு செய்தான். உங்களது பாதத்தை சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் நீர் பட்ட கற்களெல்லாம் பெண்களாகி விடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.

ராமர் அவனது செய்கையை லட்சுமணனிடம் காட்டி என்னுடைய பாத பூஜைக்காக தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான் என்றார். பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியபடியே ஓடத்தை செலுத்தினான். மூவரும் ஓடத்தை விட்டு இறங்கிய பின் ராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். நீங்களும் ஓடக்காரன் நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் எதுவும் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி ராமரின் முன்பாக வீழ்ந்து வணங்கினான். ஓடக்காரனின் அன்பைக் கண்டு ராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.

One thought on “ஓடக்காரன்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.