திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

ராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட பின்னர் ராமருடன் இருந்த ஆனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கினார்கள். அப்போது அங்கு வந்த நாரதர் யுத்தத்தில் வெற்றி பெற்ற ராமருக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி அவரிடன் பேச ஆரம்பித்தார். ராவணன் அழிந்த பின்னரும் ராட்சசர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து ரக்தராக்ஷகன் என்ற இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணனை போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர்கள். ஆகையால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு ராமர் தாங்கள் சொன்னபடி அந்த ராட்சசர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த ராட்சசர்களை அழிக்கும் ஆற்றலுடைய மாவீரன்அனுமனை அனுப்புகிறேன் என்றார்.

ராமரின் கட்டளையே பணிவுடன் அனுமன் ஏற்றுக் கொண்டார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அஷ்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான ராட்சசர்களை வெல்ல இது போதாது. எனவே திருமால் தன்னுடைய சங்கு சக்கரத்தையும் பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும் ஶ்ரீருத்ரன் தனது மழுவையும் அனுமனுக்கு அளித்தார்கள். ராமர் தனது வில்லையும் அம்பையும் வழங்கினார். அனைவரும் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கிய அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார். அதன்பின் வந்த கருடாழ்வார் தனது சிறகுகளை அளித்தார். சிவபெருமான் பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்து தன்னுடைய சிறப்புக்குரிய மூன்றாவது கணணை அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்) பத்து கைகளும் (தசபுஜம்) கொண்ட வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்த அனுமன் தனக்கு தரப்பட்ட கடமையை செய்து முடித்துவிட்டு ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் புறப்பட்டார். அனுமன் வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய ஒரு இடத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அவர் தங்கிய இடம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியே கோவிலின் முகப்பைப் பார்த்து சதுர்புஜத்துடன் ஒரு கையில் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமியின் சாட்டையையும் ஏந்தி காட்சி அளிக்கிறார். திருக்கடவூர் தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது.

One thought on “திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.