சீதையின் ஆசிர்வாதம் பெற்ற ஆலமரம்

ராமர் வன வாசம் செய்த போது பித்ருக்களுக்கான சிரார்த்த தினம் வந்தது. உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எடுக்க லட்சுமணர் காட்டிற்குள் சென்றான். லட்சுமணன் வருவதற்கு வெகு நேரமானது. ராமர் லட்சுமணனைத் தேடி காட்டிற்குள் கிளம்பினார். சிரார்த்த காலம் நெருங்கி விட்டது சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பித்ருக்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். அருகில் கிடைத்த சில பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். சீதை பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம் என்றார்கள். உங்கள் வம்சத்தினர் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா என்று சீதை தயங்கினாள் நின்றாள். சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். எனவே சாட்சி வைத்துக் கொண்டு கொடு தவறில்லை என்றார்கள் பித்ருக்கள். சரி என்று சீதையும் அங்கிருந்த பல்குனிநதி ஒரு பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தார்கள். ராம லட்சுமணர்கள் சிறிது நேரத்தில் தானியங்களோடு வந்தார்கள். சீதை சீக்கிரம் சமையல் செய்’ என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் சாஸ்திரமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை’ என்றார். நான் உண்மையைத் தான் சொல்கிறேன் பல்குனி நதி பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றாள் சீதை.

ராமர் சீதை சொல்வது போல் பிதுர்க்கள் நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா என்று கேட்டார். ஆலமரம் தவிர மற்றவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டன. ராமர் வருவதற்குள் சீதை சிரார்த்த காரியத்தை முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ என அவைகள் பயந்து தெரியாது என்று சொல்லி விட்டன. ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலை முடி நாங்கள் நீராடி வருகிறோம் என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும் போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. ராமா ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம் என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். அதன் பின் சாட்சி சொல்லாதவர்களை பார்த்த சீதை பல்குனி நதியே உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது. தண்ணீர் வற்றியே காணப்படும் என்றாள். பசுவே உன் முகத்தில் வாசம் செய்த நான் இன்று முதல் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றாள். இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்ற சீதை சாட்சி சொல்லாதவர்களுக்கு சாபமிட்டாள். ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி யுக முடிவின் போது பிரளயத்தின் போது உனது இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் ஆலமரத்தின் அடியில் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் சிரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் என்றும் ஆசிர்வதித்தாள். இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.