அனுமனை பிடித்த சனீஸ்வரர்

ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி ராமரை வணங்கி அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அது போல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால் அனுமனை பிடித்து பாருங்கள் என்றார் ராமர். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி அனுமனே நான் சனீஸ்வரன் இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க உன் உடலில் ஓர் இடம் கொடு என்றார்.
சனீஸ்வரா ராவணனின் சிறையில் இருக்கும் சீதையை மீட்க நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபால பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும் நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம். அனுமனே காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல் உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம் என்று கேட்டான்.

ராம வேலையில் என் கைகள் ஈடுபட்டுள்ளன. அதனால் அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால் அது உங்களுக்கு நான் தரும் அவமரியாதையாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சனிஸ்வரரை தலை வணங்கி நின்றார் அனுமன். அவரின் தலை மீது அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன். இதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன் சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலை மீது வைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால் சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா என்று சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல் அவரது தலையில் இருந்து கீழே குதித்தார். சனீஸ்வரா ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன் உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால் நானும் பாறைகளை சுமந்து சேது பாலப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். சிவனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று வெற்றி பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனீஸ்வரன். அதற்கு அனுமன் இல்லை இல்லை இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் என்றார் அனுமன். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன் அனுமனே உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள் என்றார். ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும் என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார். ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பத்தில் இருந்த நம்மை காத்துக் கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.