ஸ்ரீமன் நாராயணர்

அந்தணர் ஒருவர் கலகை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். கலகை அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார். இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். இதனால் வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா எங்கே போகிறீர்? ஒருவர் என்று கேட்டார். மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள். அன்பரே நான் சொல்லும்படி கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த அந்தணர் வீட்டுக்குச் சென்று கலகை இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார். சாப்பிடு என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். ஒருநாள் அந்தணர் மனைவியிடம் கலகை நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். அந்தணர் கோபத்தில் எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே இது எவ்வளவு பெரிய பாவம் கலகை. அதனால் கலகை என பெயர் பெற்ற நீ அலகையாகப் (பேய்) போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

தர்மாங்கதர் என்ற ஓர் முனிவர் கங்கைக்கரையில் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை செபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
கங்கைக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை ஓம் நமோ நாராயணாய என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது தர்மாங்கதரே நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால் அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தேன் என்று அழுதாள். அதற்கு தர்மாங்கத முனிவர் அழாதே. நான் தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதி உனக்கு தருகிறேன் இதன் பலனாக இனி நீ பல இன்பங்களை அனுபவிப்பாய் என்று அருளினார். உடனே வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து நீங்கள் பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்வீர்களாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். கலகை நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற பெயருடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. சமயம் வரும்பொழுது ராவண வதத்திற்காக என்னைக் கானகம் போகச் செய்வாய் என்றார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும் சங்கு சத்துருக்கனாகவும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பிறக்குமாறு ஸ்ரீமன் நாராயணர் கட்டளை இட்டருளினார்.

One thought on “ஸ்ரீமன் நாராயணர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.