தியான நிலையில் உள்ள சிவன்

ஹாவேரியில் உள்ள சித்தேசுவரன் கோவிலின் ஷிகாராவில் 11ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கிய சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தியான நிலையில் உள்ள சிவன். இடம் சித்தேசுவரன் கோவில். ஆவேரி மாவட்டம். கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 405

கேள்வி: கர்மயோகம் பற்றி கர்மயோகி எப்படி இருப்பார்:

அவனவனுக்கு உகந்த கடமைகளை நல்விதமாக செய்து அவனவன் உணர்ந்து கொண்ட நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டே ஒரு நன்மையை ஒரு நற்காரியத்தை செய்ய ஆற்றலிருந்தும் செய்ய வாய்ப்பிருந்தும் வசதியிருந்தும் சூழலிருந்தும் செய்யாமல் போகாமல் கட்டாயம் செய்வதும் செய்ய முடியாத நிலையிலும் நற்காரியங்களை செய்வதும்தான் எம்மை பொறுத்தவரை நல்ல கடமையாளி நல்ல கர்மயோகியாகும்.

அனுமன்

ராம தூதுவனாக ராவணனிடம் சென்ற அனுமன் தனது வாலை ஆசனமாக உருவாக்கி ராவணனுக்கு சரி சமமாக அமர்ந்திருக்கும் காட்சி. இடம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயில்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 404

கேள்வி: அம்மையப்பன்தான் உலகம் என்று மூத்தோன் ஜெயித்தார் இளையவர் தோற்றார் இது பற்றி:

இறைவன் அருளாலே பரம்பொருள் தோற்பதுமில்லை ஜெயிப்பதுமில்லை அதுதான் உண்மை. எமக்கு தெரிந்த வரையில் மகான்கள் பார்வையில் பரம்பொருள் தோற்ற ஒரே இடம் மனிதனை படைத்ததால்தான். மனிதனை படைத்து பலவிதமான நீதி போதனைகளை கொடுத்து இதை செய் இதை செய்யாதே உனக்கு சிந்திக்கின்ற ஆற்றலை தந்திருக்கிறேன். சிலவற்றை நீயாக சிந்தித்து முடிவெடு என்று சுதந்திரம் கொடுத்தால் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்கிறான். எதை செய்ய வேண்டுமோ அதை செய்வதில்லை. உடனடியான லாபம் என்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறான். அதனால் பிறருக்கு எத்தனை தீங்கு வந்தாலும் பாதகமில்லை என எண்ணுகிறான். எனவே இதுபோல் நிலையிலே அவையனைத்தும் இறைவனின் லீலை விளையாட்டு. அந்த அளவில் பார்க்கப் பழகு போதும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 403

கேள்வி: மனித சக்திக்கு அப்பாற்பட்ட கண்ணுக்கு புலப்படாத விஷயங்கள் குறித்து பின்னர் உரைக்கிறோம் என்று சொல்லியிருந்தீர்கள். இப்பொழுது உரையுங்கள் குருநாதா குறிப்பாக இச்சாதாரி பாம்புகள் குறித்து உரையுங்கள்:

பலவிதமான வினாக்களுக்கு யாங்கள் பின்னர் உரைக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம். காரணம் ஒன்று இறை அனுமதிக்க வேண்டும். அல்லது கேட்கின்ற மனிதனின் கிரக நிலை அதற்கு இடம் தரவேண்டும். எல்லாவற்றையும்விட நாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனோபாவம் அவனுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் சில வாக்குகளை யாங்கள் கூற இயலும். எல்லாவற்றையும்விட எந்தெந்த கிரக நிலையில் எந்த வாக்கை கூற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதுபோல் நிலையிலே மனித சக்திக்கு மேற்பட்ட பல்வேறு விஷயங்கள் மனிதனுக்கு புரிவதில்லை என்பது இருக்கட்டும். மனித சக்திக்கு உட்பட்ட பல விஷயங்களே மனிதர்களுக்கு புரிவதில்லையே? ஓரே காலம் இதே நூற்றாண்டு இதே தேசம் இங்குள்ள மனிதர்களிலேயே எத்தனை வேறுபாடுகள்? ஒரு மனிதனிடம் இருக்கும் திறமை இன்னொரு மனிதனிடம் இல்லை. ஒரு மனித கூட்டத்திடம் இருக்கும் ஆற்றல் இன்னொரு மனித கூட்டத்திடம் இல்லை.

புதிதாக ஒன்றை அவன் கண்டுணர வேண்டாம். ஏற்கனவே யாரோ கண்டு பிடித்ததைக் கூட அதை பார்த்து பிரதியெடுக்க தெரியாமல்தானே மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த பாரத பூமியில் தன்னுடைய ஆற்றலையே உணர முடியாமல்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே மனிதர்கள் தன்னை நன்றாக புரிந்து கொண்டால்தான் தனக்கு மீறிய ஆற்றலை புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும். நாங்கள் ஆயிரம் வார்த்தைகளில் கூறினாலும் அது புரிவது கொஞ்சம் கடினம்தான்.

இச்சாதாரி பாம்பு இருக்கிறது என்றால் அடுத்த வார்த்தை அது எங்கே இருக்கிறது? யாங்கள் புறக்கண்ணால் பார்க்க முடியுமா? என்றெல்லாம் கேட்பான். அவன் கண்ணால் பார்த்தால்தான் அவன் நம்பக்கூடிய நிலை வரும். அப்படி கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் அந்தக் கண்ணுக்கென்று சில ஆற்றல்கள் வேண்டும். சில விஷயங்கள் மனிதனின் புறக்கண்ணுக்கு தெரிவதில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடுகிறது. எத்தனையோ விதமான கதிரியக்கங்கள் மனிதனை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோல் அக சிகப்பு கதிர்கள் புற ஊதா கதிர்கள் இவைகள் மனிதனின் கண்ணுக்குத் தெரியாது. தெரியாது என்பதால் இவைகள் இல்லை என்று ஆகிவிடாது. எனவே மனிதர்கள் தனக்கு மேற்பட்ட சக்தியையோ அல்லது வேறு விஷயத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற ஆற்றலை அல்லது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு விஷயமும் புரியும். தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றையும் இறையாற்றலோடு தொடர்புபடுத்தி பார்க்க பழகிவிட்டாலே ஒவ்வொன்றிலும் அற்புதம் இருப்பதும் புரியும். மனித சக்திக்கு மேம்பட்ட விஷயம் இருப்பதும் புரியும். எனவே தன்னைத்தான் உயர்த்திக் கொண்டு தன்னிடம் பாவ கர்மா இல்லாத நிலையில்தான் இவைகள் எல்லாம் சொன்னாலும் புரியும் புரிந்து கொள்ளவும் இயலும் நேரில் பார்க்கவும் இயலும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 402

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இங்கு அமர்ந்துள்ள சேய்கள் அனைவருக்கும் இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயும்புகிறோம் காலகாலம் நல்விதமாய் உயிர்கள் வாழ எண்ணுகின்றன. அதிலும் மனித உடம்பெடுத்த ஆத்மாக்கள் முற்றிலும் நலமாய் சுகமாய் சாந்தியாய் வாழ எண்ணுகின்றன. ஆயினும் காலகாலம் பெரும்பாலும் யாரும் அப்படி வாழ்ந்ததாக ஒரு சூழல் இல்லை. வாழ்கின்றதாகவும் சூழல் இல்லை. இனி வாழக்கூடுமோ? என்ற ஐயம்தான் உயிர்களுக்குள் எழுகிறது. காரணம் யாது? உயிர்களை படைத்த இறைவன் உயிர்கள் துன்பப்பட்டு வாழவேண்டும் என எண்ணியா படைத்திருக்கிறார்? இன்பமாய் மகிழ்வாய் சாந்தியாய் வாழவேண்டும் என்றுதான் எண்ணி ஏகனாய் இருந்த பரம்பொருள் அநேகனாய் பரந்து விரிந்து இங்கு பல்வாறாய் மாறியிருக்கிறது என்று கொள்ளலாம். ஆயினும் கூட தன்னிலிருந்து பிரிந்து வேறாய் சென்றுவிட்ட உயிர் தன்னில் ஒரு பகுதிதான் என்று என்று உணருகிறதோ? அன்றுதான் அதற்கு நிரந்தர சாந்தியும் நிம்மதியான மகிழ்வும் உண்டு என்பது மெய்யிலும் மெய்யாகும்.

ஆகுமப்பா இதுபோல் நல்விதமாய் அன்னையவள் சேயவனை அழைத்து அங்காடிவரை சென்று இன்ன இன்ன பொருட்களை வாங்கி வா என்று பணித்தால் சேயவனோ அன்னை தந்த அதுபோல் பட்டியலை வைத்துக் கொண்டு அன்னை தந்த தனத்தையும் வைத்துக்கொண்டு நேராக அன்னை கூறிய அங்காடிக்கு சென்று அதுபோல் பட்டியல்படி பொருள்களை வாங்கி நேராக இல்லம் திரும்பினால் எல்லாம் நேராகவே இருக்கும். ஆனால் அன்னை தந்த பட்டியலை தனத்தை வைத்துக் கொண்டு நேராக அன்னை சொன்ன அங்காடிக்கு செல்லாமல் வழியில் உள்ள வேறு வேறு காட்சிபொருளை நோக்கி சேயவன் சென்று ஒவ்வொரு காட்சியாக பார்த்து லயித்து வந்த நோக்கத்தை மறந்திருக்கும் பட்சத்திலே அன்னை சொன்னது மறந்தே போய் விடுகிறது. கொடுத்த தனமும் செலவழிந்தே போய்விடுகிறது.

இதுபோலத்தான் பரம்பொருளாகிய அன்னை சொன்னதை மறந்த ஆத்மாக்கள் வந்த நோக்கத்தை விட்டுவிட்டு மாயையில் சிக்கி வேறு வேறு திசை நோக்கி செல்வதால்தான் இத்தனை துன்பமும் இத்தனை துயரமும் இத்தனை மன உளைச்சலும். எனவேதான் எமை நாடும் சேய்களுக்கு யாங்கள் கூறுவது கடமைகளை செய்து கொண்டே இல்லறத்தில் இருந்து கொண்டே இந்த உலக வாழ்வை வாழ்ந்து கொண்டே பற்றற்ற நிலையில் அன்னைக்குரிய அங்காடியின் முகவரியை மறந்து விடாமல் அதை நோக்கி சென்று கொண்டே இருத்தல் அவசியம் என்று கூறிக் கொண்டே இருக்கிறோம். அது எங்ஙனம் சாத்தியம்? என்று ஐயம் எழலாம். பரந்துபட்ட உலகத்திலே பலவிதமான காட்சிகளை இறைவன் படைத்துவிட்டு அதற்குள் உயிர்களை விளையாடவிட்டு இந்த காட்சிகள் எல்லாம் இருக்கும். நீ கண்கொண்டு பார்த்தாலும் மனம் அதிலே லயிக்காமல் உறுதிகொண்டு என்னை நோக்கி வா என்றால் எங்ஙனம் வருவது? என்ற ஐயம் எழலாம். வரவேண்டும் என்ற உறுதி வேண்டும். அங்ஙனம் உறுதியிருந்தால் வந்துவிடலாம்.

நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் வேண்டுமென்றால் வரலாம். இதுபோல் கூறுங்கால் நல்விதமாய் நாவாய் என்னும் கப்பல் செல்ல நீர் வேண்டும். நீர் வழியாகத்தான் கப்பல் செல்லும் என்றாலும் நீர் வழியாக செல்லுகின்ற கப்பலுக்கு நீர்தான் ஆதாரம் என்று கூறுகின்ற அதே தருணத்திலே நல்விதமாய் அதுபோல் அத்தனை சிறப்புமிக்க நீர் இல்லையென்றால் நாவாய் எங்ஙனம் செல்லும்? என்று எண்ணி அந்த நாவாய் எனும் கப்பல் அந்த நீருக்கு நன்றி கூறும் விதமாக நீரே நீரே நீ இல்லையென்றால் நான் பயணம் செல்வது எங்ஙனம்? உனக்கு நன்றி பாராட்டுகிறேன். நீ எனக்குள் வா என்று அந்த நீரை அழைத்தால் கப்பலின் நிலை என்னவாகும்? அதைப்போலதான் உலகாயத விஷயங்களுக்குள் இருந்து கொண்டே பயணித்துக் கொண்டே அதற்குள் ஆழ்ந்து விடாமல் மனிதன் இறை நோக்கி செல்ல முயற்சி எடுத்தல் அவசியமாகும்.

இதுபோல் நல்விதமான அந்த முயற்சியை எடுப்பதும் எவ்வாறு எடுப்பது? இடையிடையே இடையூறுகள் வந்தால் எவ்வாறு எதிர்கொள்வது? என்றெல்லாம் காலகாலம் மகான்களும் ஞானிகளும் பாடம் போதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள்தான் அதனை செவிமடுப்பதில்லை. செவிமடுத்தாலும் மனதில் பதிய விடுவதில்லை. மனதில் பதியவிட்டாலும் நடைமுறைப் படுத்துவதில்லை என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும். ஆகுமே இதுபோல் எம் வழி வருகின்ற சேய்கள் எமது வாக்கை சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்கின்ற சேய்கள் கட்டாயம் புரிந்து கொண்டு யாங்கள் கூறுகின்ற அதுபோல் வழிமுறைகளை சரியாக பின்பற்ற நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் தொடரும் என்பதே மெய்யாகும். இறையருளை பெறுவதற்கு உண்டான செயலை மட்டும் என்றுமே சிந்தித்து சிந்தித்து செய்து கொண்டே இருப்பதுதான் எமது வழி வரும் சேய்களுக்கு ஏக கடமையாகும்.

ஆகுமே நல்விதமாய் எமது வாக்கை பேசுவதும் எமது வாக்கை லயித்து லயித்து ரசிப்பதும் எமது வாக்கு குறித்து விவாதம் செய்வதும் இவையெல்லாம் இருந்தும் கூட அவற்றில் உள்ள பல பல நல்ல நுண்ணிய விஷயங்களை மனதிலே புரிந்து கொண்டு பதிய வைத்து செயல்படுத்த தவறினால் அதனால் மனித உயிருக்கு எவ்வித லாபமும் இல்லை. ஒன்று மனிதன் தனக்கு தெரிந்தவரையில் வாழ்ந்து கர்மாக்களை சேர்த்து பிறவி சுழலில் உழன்று கொண்டே இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற வாய்ப்பு சில ஆத்மாக்களுக்கு இறைவன் அருளாலே கிட்டும் பொழுது சரியாக அதனை பிடித்துக் கொண்டிட வேண்டும். அதற்குத்தான் இத்தனை போதனைகளும் இத்தனை விதமான பாடங்களும் உபதேசங்களும் யாம் இறைவன் அருளால் கூறிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் அனைத்தையும் கேட்டு விட்டு வாழ்விலே இவ்வாறு துன்பம் இருக்கிறது. சித்தர்களை நம்பி வந்தோம். எந்த பிரச்சினையும் உடனடியாக தீரவில்லை.

சித்தர்கள் கூறிய வழிமுறைகளை எல்லாம் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும் மனதிற்கு நிம்மதியில்லை. திருப்திகரமான குடும்ப நிலையில்லை. மனம் விரும்புகின்ற உறவு அமையவில்லை. விருப்பம் போல் பணி அமையவில்லை. விருப்பம்போல் இதுபோல் பொருளாதார நிலை உயரவில்லை. விரும்பிய இடத்திலே பணி கிட்டவில்லை. விரும்பியவாறு இல்லம் அமையவில்லை. சேய்களுக்கும் ஏனைய அனைத்து உறவுகளுக்கும் விருப்பங்கள் ஏதும் நிறைவேறவில்லை. பெண் பிள்ளைகளுக்கும் அதுபோல் ஆண் பிள்ளைகளுக்கும் உரிய வயது வந்தும் திருமணம் ஆகவில்லை. திருமணம் நடந்தாலும் மனமொத்து வாழ்வதில்லை. மனமொத்து வாழ்ந்தாலும் பிள்ளைகள் பிறப்பதில்லை. பிள்ளைகள் பிறந்தாலும் ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆரோக்கியமாய் இருந்தாலும் அதுபோல் நன்றாய் கல்வி கற்பதில்லை. நன்றாய் கல்வி கற்றாலும் உரிய பணி கிட்டவில்லை. உரிய பணி கிட்டினாலும் ஈன்றோர் பேச்சை கேட்பதில்லை. ஈன்றோர் பேச்சைக் கேட்டு மணம் முடித்தாலும் மணம் முடித்தவள் ஈன்றோரை விட்டு வா என்று அழைத்து செல்கிறாள் என்றெல்லாம் எம்மிடம் மன வருத்தத்தோடு விசனத்தோடு வந்து கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கும் மனிதர்களிடம் யாங்கள் கூறவருவது இது இங்ஙனம்தான் இருக்கும்.

இவற்றை மாற்றவோ சரி செய்யவோ இறைவன் விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்தும் கர்ம வினைகளின் எதிரொலி. இந்த கர்ம வினைகளை ஒவ்வொரு மனிதனும் நுகர்ந்துதான் ஆகவேண்டும். அதற்குதான் நவகிரகங்கள். அந்த நவகிரகங்களை விதி என்னும் பிடிக்குள் வைத்து ஆட்டி வைப்பது இறைவன். எனவே இப்படித்தான் என்றால் எதற்கு நாங்கள் வாக்கினை கேட்க வேண்டும்? எதற்கு பரிகாரங்களை செய்ய வேண்டும்? நடப்பது நடந்துவிட்டு போகட்டுமே? என்ற எண்ணங்கள் தோன்றலாம் உண்மைதான். யாரும் அவ்வாறு நம்பி வந்தாலும் அல்லது எம்மை நோக்கி வராவிட்டாலும் விதி அங்ஙனம்தான். ஆனால் யாங்கள் என்ன கூறுகிறோம்? என்றால் இப்படி பலவகையான துன்பங்களை பாவத்தின் எதிரொலியாக நுகருகின்ற மனிதர்கள் அந்த துன்பங்களை நுகர்ந்து நுகர்ந்து பாவ கர்மாவை கழிக்கின்ற அதே தருணத்தில் மேலும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமலும் அதோடு புதிய புண்ணியங்களை சேர்த்து தாக்குகின்ற கர்ம வினைகளை தாங்கிக் கொள்ளக் கூடிய வலிமையை பெற வேண்டும் என்றுதான் இத்தனை விதமான வழி முறைகளையும் பரிகாரங்களையும் கூறுகிறோம்.

எனவே பரிகாரங்களை நல்விதமாய் நுணுக்கமாய் புரிந்து கொண்டு செய்வதும் புண்ணியங்களை சேர்த்துக் கொண்டே இருப்பதும் மட்டும்தான் ஒவ்வொரு மனிதனின் மெய்யான கடமையாக இருக்க இயலும். முழுக்க முழுக்க புண்ணியம் சேர்ந்த பிறகு முழுக்க முழுக்க பாவமற்ற நிலை வந்தபிறகுதான் நன்றாக கவனிக்க ஓரளவு நிம்மதியும் சந்தோஷமும் ஆத்மாவிற்கு கிட்டும் என்பது மெய்யிலும் மெய்யாகும். ஆகுமப்பா இதுபோல் நல்விதமாய் இதுபோல் கருத்தை நல்விதமாய் மீண்டும் கூறுகிறோம் சரியாக புரிந்து கொண்டு மனதிலே வைக்க அதுபோல் நல்விதமாய் வாழ்வு செல்லும் என்பதை கூறுகிறோம். இதுபோல் நல்விதமாய் சேய்களுக்கு கண்கண்ட தெய்வம் முதலாவது ஈன்றோராகும். அதுபோல் ஈன்றோருக்கு கண்கண்ட தெய்வம் சேய்களின் நற்குணம் முதலாவது. எனவே இதுபோல் முதலாவது அதுபோல் முதலாவதை முந்தும். அதுபோல் முதலாவது இதுபோல் முதலாவதை முந்தவேண்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். இறைவன் முதலாவது என்றாலும் அதுபோல் இறைவனை அடைய புண்ணியம் அதனினும் முதலாவது ஆகும். புண்ணியம் இறைவனைவிட முதலாவது என்றாலும் கூட திண்ணிய எண்ணம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே புண்ணியம் செய்யலாகும் என்பதால் திண்ணிய எண்ணம் புண்ணியத்தை விட முதலாவது ஆகும். எனவே இறைவன் முதலாவது இறைவனைவிட புண்ணியம் முதலாவது புண்ணியத்தைவிட திண்ணிய எண்ணம் முதலாவது. எனவே இதுபோல் முதலாவது எல்லாம் தாண்டி நிற்கக்கூடியது 108 ன் முதலாவது இதுபோல் அரங்கமாகும். இதுபோல் 108 ன் முதல் இது.

எனவே மனித உயிருக்கு முதல் இது. மனித ஆத்மாவிற்கு முதல் இது. எங்கும் சுற்றி ரங்கம் என்பார்கள். எனவேதான் இதுபோல் இந்த புண்ணிய சேத்திரம் ஆத்மாக்கள் கடைத்தேற மிக அற்புதமான சேத்திரமாகும். இதுபோல் பரந்துபட்ட பிரபஞ்சத்தின் இறைவன் படைப்பிலே எல்லாம் உயர்வே. ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்றில்லை. எனவே சரியாக புரிந்து கொள்ள யாங்கள் சில சமயம் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம். எனவே எல்லாம் உயர்வுதான். இருந்தாலும்கூட இதுபோல் அரங்கம் அரங்கத்தில் எல்லாம் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து கல்வி அரங்கத்திலும் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து ஆடலரங்கிலும் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து விளையாட்டு அரங்கிலும் முதலாவது. இதுபோல் அரங்கம் உலகில் உள்ள அனைத்து அரங்கங்களிலும் முதலாவது. அனைத்து அறமான அரங்கங்களிலும் முதலாவது இதுபோல் அரங்கம். அதுபோல் அனைத்து விதமான ஆடல் அரங்கங்களிலும் முதலாவது. எனவே இங்குள்ள பல்வேறு சூட்சுமம் பல்வேறு மனிதர்கள் அறியாதது. இதுபோல் அரங்கம் அதுபோல் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மட்டுமல்ல அதுபோல் பரம்பொருள் கால்தூக்கி ஆடுகிறதே தில்லை தில்லையின் சூட்சும ஆற்றல் இங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும். எனவே இதும் தில்லைதான். அதும் தில்லைதான். யாரும் கூற இயலாது. நான் போனதில்லை என்று. நான் போனதில்லை என்று கூறும்பொழுதே நான் போன தில்லை என்று வந்து விடுகிறது. நான் போனதில்லை என்று கூறும்பொழுதே அங்கே நான் போன தில்லை வந்துவிடுகிறது. நான் போனதில்லைதான். நான் போனதில்லைதான். எனவேதான் இதுபோல் தில்லையும் அதுபோல் தில்லையும் இல்லை என்றால் இதுபோல் உயிர்கள் ஏதும் இல்லை என்பது.

இதுபோல் சேய்கள் புரிந்து கொண்டு யாங்கள் கூறுகின்ற நுண்மான் வாக்கினை சரியாக புரிந்து கொள்ள நன்றாம். நன்றாம் இதுபோல் நலமாய் யாங்கள் கூறுகின்ற இவ்வாக்கிலே உள்ள தத்துவார்த்த விளக்கங்களை சரியாக புரிந்துகொள்ள அதுபோல் நன்றாம் நன்றாம் நன்றாம். இதுபோல் நன்றாய் சமகால அதுபோல் அலைபேசி கருவியிலே அனுப்ப இதுபோல் வாக்கின் தன்மை நீளமாய் இருப்பதால் அதுபோல் நீளத்தை குறைக்கும் வண்ணம் இதுபோல் சற்று சில மணித்துளிகள் அயர்வு யாங்கள் ஏற்படுத்துகிறோம். பிறகு இன்று என்னுடன் போகன் வந்துள்ளதால் அடுத்து போகனே வாக்குரைப்பான் பரிபூரண நல்லாசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 401

கேள்வி: இலையை கிள்ளுவதே பாவம் என்றால் சில சுப நிகழ்வுகளுக்காக வாழை மரத்தை வெட்ட வேண்டியுள்ளது இது பற்றி:

இதனை யாங்கள் ஏற்பதில்லை. அக்காலத்தில் என்ன வழக்கம் இருந்தது? என்றால் குறிப்பாக திருமணத்தின் பொழுது ஆணும் பெண்ணும் நிறைய செடிகளை நடும் பழக்கம் குறிப்பாக வாழைக் கன்றுகளை நடும் பழக்கம் இருந்தது. அந்த வாழை வாழையடி வாழையாக தழைப்பதுபோல இவர்களின் குலம் தழைக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிடுவதுபோல இந்த வாழை மர பழக்கமும் மாறிவிட்டது. வாழை மரத்தை வெட்டி முன்னால் கட்டுவது சுபம் அல்ல. ஒரு பச்சிளம் குழந்தையை கொன்று முன்னால் தொங்கவிட்டு உள்ளே சுப காரியம் நடத்துவதுபோல. இதுமட்டுமா மனிதன் செய்கிறான்? இன்னும் எத்தனையோ அனாச்சாரங்களை செய்கிறான். சொன்னால் விதண்டாவாதம் செய்வான். யாங்கள் ஒன்று கூறினால் வேறு ஒன்று கூறுவான். இதையெல்லாம் கொல்லாதே என்றால் பாம்பைக் கொன்று சாப்பிடும் பழக்கம் உள்ள தேசத்திலே நாகதோஷமே இல்லையே குருதேவா என்று கேட்பான்.

ஒன்றை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டிய ஆத்மாக்கள் பிறவிகள் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ பாவங்களை சேர்க்கவேண்டும் என்பது விதியாகும். அப்படி பாவங்களை சேர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பாவங்கள் செய்யும் பொழுது இறைவனோ நவகிரகங்களோ தலையிடாமல் ஒதுங்கி பாவங்களை இவன் சேர்க்கிறான். பலரின் கர்ம வினையை இவன் வாங்கிக் கொள்கிறான் என்று அமைதியாக இருப்பார்கள். அதனால் பாவங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே? என்று நல்லவர்கள் மனக்குழப்பம் அடையக் கூடாது. பாவங்களை குறைத்துக் கொள்ளக் கூடிய எண்ணம் உள்ளவர்கள் பாவங்களை குறைத்துக் கொள்ள பிறவியெடுத்தவர்கள் சில துன்பங்களையும் சில வேதனைகளையும் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்து ஒட்டுமொத்தமாக நரகில் விழுந்து பிறகு படிப்படியாக மேலேறி வரவேண்டும். எனவே அவர்களை பார்த்து நல்ல வழியில் செல்கின்ற மனிதர்கள் மனம் குழப்பம் அடைதல் ஆகாது.