தர்மம்

மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப்பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் மூன்று வருடங்களாக தொடர்ந்து பதினைந்து வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்திருந்தது.

பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் ஒரு மகாபேரி என்ற மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை அறிந்த ஒரு முதிய பிராமணர் சிறிது பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்த அவர் யுதிஷ்டிரனின் அரண்மனையை இரவில் அடைந்தார். மிகுந்த ஆவலுடன் மேளத்தை அடிக்க ஆரம்பித்தார் பிராமணர். உறக்கம் கலைந்த யுதிஷ்டிரன் படுக்கையில் இருந்து எழுந்து யாரோ தனது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். மேளம் அடிப்பது எதற்காக என்று விசாரிக்க சில காவலர்களை அனுப்பினார். விரைவில் காவலர்கள் யுதிஷ்டிரரிடம் திரும்பி ஒரு முதியவர் தனிப்பட்ட தேவைக்காக செல்வத்தைப் பெற வந்திருப்பதாக கூறினார்கள். யுதிஷ்டிரர் அதிக தூக்கத்தில் இருந்ததால் நடுஇரவு ஆகி விட்டபடியால் காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று பிராமணரிடம் உறுதியளித்து காலையில் வரச் சொல்லி பிராமணரை திருப்பி அனுப்புமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

யுதிஷ்டிரரின் செய்தியைக் கேட்ட பிராமணர் ஏமாற்றமடைந்து பீமனின் அரண்மனை முன்பாக இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். பீமன் உடனே வெளியே வந்து அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யுதிஷ்டிரரின் அரண்மனை முன்பாக நடந்தவற்றை சொல்லி தனது கோரிக்கையை முன்வைத்தார் பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன் தற்போது இரவு வெகு நேரமாகி விட்டது. இப்போது கருவூலம் திறந்திருக்காது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற காலை வரை காத்திருக்க முடியாது. எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த தங்க காப்பை கழற்றி பிராமணரிடம் ஒப்படைத்தார். விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்தத் தங்கக் காப்பைக் கண்ட பிராமணன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

பீமசேனன் யுதிஷ்டிரனின் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு சென்றதும் இடைவிடாமல் மகாபேரி மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். விண்ணை முட்டும் அளவு சத்தத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக மேளம் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு பீமன் மேளத்தை அடிப்பதை பார்த்ததும் ஆச்சரியமடைந்து பீமனிடம் காரணத்தை கேட்டார். ஒரு முதிய பிராமணர் தங்களிடம் உதவி நாடி வந்தார். நாளை காலை திரும்பி வரும்படி கூறினீர்கள். அடுத்த நாள் உயிருடன் இருப்போம் என்று அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். தன் தர்மத்தையே ஒரு நாள் தள்ளிப் போட்டீர்கள். அப்படியானால் நீங்கள் நாளை வரை இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஞானத்தை பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதனால் நான் இந்த மேளத்தை அடிக்கிறேன் என்றான். காரணத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் குற்ற உணர்வில் ஆழ்ந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தார். பீமனை தழுவிக் கொண்டு நன்றி தெரிவித்ததோடு தர்ம காரியத்தைத் தள்ளிப் போடும் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். பீமன் தன் சகோதரனை ஆறுதல்படுத்தி எனது நோக்கம் உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் செய்யும் போது ​​ஒருபோதும் தாமதம் இருக்கக் கூடாது என்பதற்காக இதனை செய்தேன் என்று புன்னகை செய்தான். பீமனின் உபதேசத்தால் விழித்துக் கொண்ட யுதிஷ்டிரர் அன்றிலிருந்து தர்மப் பாதையிலிருந்து விலகாமல் இருந்து தர்மராஜா ஆனார்.

பீமனின் மானசீக பூஜை

அர்ஜூனன் இறைவனுக்கு பூஜைகளை தவறாமல் செய்பவன். தினமும் பூஜை செய்து முடியும் வரையில் சிறிது உணவையும் உண்ண மாட்டான். இதனால் உலகத்தில் தன்னை விடச் சிறந்த பக்தர் யாரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தான். பீமனைப் பார்க்கும் போதேல்லாம் இவன் பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எந்நேரமும் தூங்குவதிலும் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று எண்ணி நகைப்பான் அர்ஜூனன். இதனை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்த அகந்தை போக்க எண்ணி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பாரதப் போரில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அர்ஜுனன் அதற்கு வழி காட்டுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டான். சிவபெருமானை சந்தித்து அவரின் ஆசி பெற்று வரலாம் வா என்று அர்ஜூனனை கயிலை மலைக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப் பகுதியில் புல் பூண்டு கூட முளைப்பது இல்லை. ஆனால் அந்த வழியெங்கும் மலர்கள் குவிந்த வண்ணமே இருந்தன.

சிவ கணங்கள் குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்து கொண்டிருந்தது. மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் சிவகணங்கள். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால் மலர்கள் மலை போல் இங்கு குவிந்து கொண்டே இருக்கின்றன. மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?இக்காட்சி வியப்பாக உள்ளது. இது எப்படி என்று கேள்வி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இம்மலர்கள் இங்கு பூப்பவை அல்ல. பக்தன் ஒருவன் பூக்களை வைத்து இறைவனுக்கு பூஜிக்கிறான். அங்கு சமர்ப்பிக்கும் பூக்கள் அனைத்தும் இங்கு மலை போல் குவிக்கின்றன என்றார். அதற்கு அர்ஜூனன் ஒரு மனிதன் சில நிமிடங்களில் மலை போல் குவியும் இவ்வளவு பூக்களை எப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட இயலும். நானும் தினமும் பூஜை செய்கிறேன். யாராலும் இவ்வளவு பூக்களை வைத்து பூஜை செய்வது என்பது இயலாத காரியம் எப்படி இது சாத்தியம். யார் அந்த பக்தன் என்று மீண்டும் கேள்வி கேட்டான்.

பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்த மலர்கள் தான் இவை அனைத்தும். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய செய்ய இங்கு மலர்கள் குவிக்கின்றன என்றார் கிருஷ்ணர். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறானா? அவனுக்கு அர்ச்சனை செய்ய நேரம் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லை. அப்படியிருக்கும் போது அவன் எப்போது அர்ச்சனை செய்தான்? அப்படியே அர்ச்சனை செய்தாலும் அதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை யாருமே பார்த்தது இல்லை. இப்படியிருக்க நீ கூறுவதை எப்படி நம்புவது? என்றான் அர்ஜூனன்.

அர்ஜுனா பீமன் அர்ச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவன் உன்னைப் போல் மற்றவர்களைப் போல இறைவனின் உருவத்தை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதில்லை. அவன் செய்யும் பூஜைகள் அர்ச்சனைகள் அனைத்தும் மானசீகமானது. அவன் மனதிற்குள்ளேயே செய்கிறான். அவன் எங்காவது சென்று கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும் என்று மனத்தால் நினைப்பான். உடனே அந்த மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலை மலையாகக் குவிந்து விடும். மற்றவர்கள் நினைப்பது போல் பீமன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். ஆஞ்சனேயர் அம்சம். ஆஞ்சனேயரின் ராம பக்தி உலகறிந்தது. பக்தியில் பீமனோடு உன்னை ஒப்பிடும் போது நீ பக்தனே அல்ல. சிறந்த பக்தனான பீமனை நீ அடிக்கடி ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டு விடு. நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. இறை பக்திக்குப் பெரும் தடையாக இருப்பது உன்னுடைய அகந்தை. உன்னுடைய அகந்தையை விட்டுவிடு என்றார். கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜுனனிடம் இருந்த அகந்தை என்ற அரக்கன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அர்ஜூனன் அன்று முதல் பீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான்.

பீமனின் பக்தி

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் வாழ்ந்து வந்தார்கள். இக்காலத்தில் தியானம் ஜெபம் பூஜைகள் என்று பயனுள்ளதாக கழித்தார்கள். குந்திதேவி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதில் பீமன் மட்டும் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் இறுதியாகவே வந்து கலந்து கொள்வான். ஒரு நாள் நீ யானை போல் பலசாலிதான் ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று என்று கடிந்தார் தருமர். இதன் பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம் போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி நகுலனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார் தர்மர். நகுலன் திரும்பி வந்து நாளை கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு நாள் வருவதாக சொல்லிவிட்டார் என்று கூறினான். நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள் என்று கூறியவாறு அர்ஜூனன் நம்பிக்கையுடன் சென்றான். கிருஷ்ணரிடம் நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். நாளை எனக்கு வேறு வேலை இருக்கிறதே என்றார் கிருஷ்ணர். மனம் சோர்ந்தவனாக அர்ஜூனன் திரும்பினான். அர்ஜூனன் அழைத்தும் கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டாரே என்று அனைவரும் அடுத்த நாள் காலையில் பூஜையில் முக வாட்டத்துடன் இருந்தனர். வழக்கம் போல தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன் அனைவரின் முகமும் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்? என்று கேட்டான். அப்பொழுது தருமர் கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம். அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டார் என்றார். நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன் என்றான் பீமன்.

அப்போது அர்ஜூனன் நான் போய் அழைத்து வர முடியாத கிருஷ்ணர் நீ கூப்பிட்டதும் வந்து விடுவாரா? என்று கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும் போது பாஞ்சாலி நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை என்று கூறிவிட்டுச் சென்றான். சிறிது தூரம் போனபின் தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான். கிருஷ்ணா என்னுடைய பக்தி உண்மையாக இருந்தால் நீ விருந்துக்கு வர வரவேண்டும். வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து நான் என் உயிரை விடுவேன் என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி பீமனின் தலைக்கு மேலாக வந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக் கொண்டார். பீமனின் பக்தி அழைப்பினை ஏற்று அவனோடு விருந்திற்கு வர சம்மதித்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும் கேலி செய்தவர்கள் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆனது. பீமன் தனது பக்தியை தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அர்ஜூனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும் பீமனின் மனம் தூய்மையாகவும் தன்னலம் அற்றதாகவும் பக்தியுடனும் இருந்தது.

சௌகந்திகா மலர்

பாண்டவ சகோதரர்கள் அவர்களின் மனைவி திரௌபதியும் வன வாசத்தின் போது பத்ரிகாஷ்ரமத்திற்கு வந்தனர். ஐவரில் பலசாலியான பீமனும் திரௌபதியும் புனிதமான இடமாகக் கருதப்படும் பத்ரிகாஷ்ரம வனத்தில் நடமாடும் போது ​​திரௌபதியின் பாதங்களுக்கு அருகில் விண்ணுலகப் பூவான சௌகந்திகா என்ற அழகிய மணம் மிக்க மலர் விழுந்தது. அதன் அழகு மற்றும் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட திரௌபதி அந்த மலரை இன்னும் அதிகமாக விரும்பினாள். இதனால் பீமன் மலரைத் தேடிப் புறப்பட்டார். காட்டு மிருகங்கள் மற்றும் அசுரர்களுடன் பல சாகச நிகழ்வுகளுக்குப் பிறகு பீமன் கந்தமாதன மலையை வந்தடைந்தார். அங்கு சௌகந்திகா மலர் நிறைந்த குளத்தைக் கண்டார். அந்த தோட்டமும் குளமும் செல்வத்தின் அதிபதியான குபேரனுடையது. இதை மணிமான் மற்றும் க்ரோதவாஷா என்ற அரக்கர்கள் பாதுகாத்தனர். கடுமையான போருக்குப் பிறகு பீமன் காவலர்களை வெற்றி பெற்று சௌகந்திகா மலருடன் திரௌபதியிடம் திரும்புகிறான்.

ஹம்பியில் உள்ள பீமனின் நுழைவாயிலின் அடிவாரத்தில் திரௌபதி விரும்பிய விண்ணுலகப் பூவான சௌகந்திகாவுடன் பீமன் திரும்பும் சிற்பம் உள்ளது.

கர்ணனின் வில்வித்தை

கர்ணன் தனக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கும்படி துரோணாச்சாரியார் கேட்டுக் கொண்டான். துரோணாச்சாரியார் மறுத்துவிட கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலையில் செல்கிறான் கர்ணன். கர்ணனின் திறமையை சோதிக்க வானில் பறக்கும் ஒரு பறவையை குறி பார்த்து வீழ்த்தச் சொன்னர் கிருபாச்சார்யார்.

கர்ணன் அம்பை நாணில் பூட்டினான். ஒரு கணம் வானில் பறவையை குறி பார்த்தவன் அம்பை விடாமல் வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்டான். அதற்கான காரணத்தை கர்ணனிடம் கேட்டார் கிருபாச்சார்யார். அதற்கு கர்ணன் குருவே இது அதிகாலை நேரம் இந்நேரம் ஒரு பறவை வானில் பறக்கிறது என்றால் அது தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்கிறது என அர்த்தம். இப்போது எனது திறமையை காண்பிக்க அதை கொன்றுவிட்டால் நான் வீரனாவேன் ஆனால் அதன் குஞ்சுகள் அனாதையாகிவிடும் எனவே நான் அதை கொல்லமாட்டேன் என்றான். இதனைக் கேட்ட கிருபாச்சார்யார் கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம் என்றார்.

பணத்தாலும் பதவியாலும் பலத்தாலும் உயர்ந்தவர்கள் தன் பலத்தை பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும் அல்ல. சத்ரிய தர்மமும் அல்ல.

அர்ஜூனனின் ஆர்வம்

அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரர் துரோணாச்சாரியரை அழைத்தார். அவர் வந்ததும் எனக்கு ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தைக்களை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்? என்று திருதராஷ்டிரன் கேட்டார். ஆம் மன்னா பதிலளித்தார் துரோணர். தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மன்னா என்ன கூறுகிறீர்கள்? திடுக்கிட்டார் துரோணர். துரோணரே பாண்டவர்களையும் கௌரவர்களையும் தாங்கள் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் திருதராஷ்டிரர்.

பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட கௌரவர்கள் தன்னைப் பற்றி தவறாக ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டார் துரோணர். பிறகு அவர் மன்னிக்க வேண்டும் மன்னா நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம் முயற்சி உத்வேகம் தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணர் எண்ணினார். மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து துரோணரை வணங்கி நின்றனர். அவர்களிடம் துரோணர் சீடர்களே இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம் என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர் ஆற்று மணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள் என்றவர் அர்ஜுனனிடம் அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா என்றார். குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ? என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். கமண்டலத்துடன் திரும்பியவன் அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான். கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். குருவே என்னை மன்னியுங்கள் சற்றுத் தாமதமாகி விட்டது என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர் மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார் நல்லது சீடர்களே இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். குருவே நான் வருவதற்குள் பாடம் முடிந்து விட்டதா? என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன். ஆம் என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம் என்றார்.

கௌரவர்கள் நூறு பேர் பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அஸ்திரம் பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. என் உழைப்பு மொத்தமும் வீண் என்று கோபத்தில் கத்தினார் துரோணர். குருவே தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன் என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை என்று இகழ்ந்தனர். வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறான் என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் எங்கே எரித்துக் காட்டு. பார்க்கலாம் என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு. அர்ஜுனா மந்திர உபதேசம் செய்யும் போது நீ இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது? என்று துரோணர் கேட்டார். குருவே கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த போது அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன் படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன் அவ்வளவுதான் என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால் குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என்ற துரோணர் கௌரவர்களைப் பார்த்தார். வெட்கித் தலை குனிந்தனர் கௌரவர்கள்.

விதுரர்

ஆணி மாண்டவ்யர் மிகப் பெரிய ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.

அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.

நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார்.

வள்ளல் கர்ணன்

தர்மாத்மா என்று இந்த உலகத்தாரால் புகழப்படுகின்ற பாண்டவர்களின் மூத்த சகோதரர் தர்மர் யார் எதைக் கேட்டாலும் தந்து கொண்டே இருக்கிறார். அவரின் சகோதரர்களும் யார் என்ன கேட்டாலும் தானம் செய்கிறார்கள். இன்னும் கூறப் போனால் துரியோதனனும் யார் கேட்டாலும் எதை கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க அனைவரையும் விட கர்ணனைதான் பொதுமக்கள் அனைவரும் வள்ளல் என்று கூறுகிறார்கள். அனைவரையும் விட கர்ணன் எப்படி உயர்வாக இருக்க முடியும்? இன்னும் கூறப் போனால் துரியோதனனுக்கு உட்பட்ட ஒரு சிறு ராஜ்ஜியத்தைதான் கர்ணன் ஆண்டு கொண்டு இருக்கிறான். கர்ணனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் ஒரு வகையில் பார்த்தால் துரியோதனன் தந்ததுதான். கர்ணன் தருவதை எல்லாம் ஒரு வார்த்தைக்கு கொடை என்றாலும் துரியோதனனுக்குதான் அந்தப் புகழ் போய் சேர வேண்டும்? சராசரியான மனிதர்கள் வேண்டுமானால் இப்படி புரியாமல் பேசலாம். ஆனால் கிருஷ்ணரும் கர்ணனை வள்ளல் என்றே சொல்கிறார். ஏன் அப்படி என்று பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர் கர்ணனும் வள்ளல் மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை அனைவருக்கும் காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

கிருஷ்ணர் சில தினங்கள் கழித்து உடலெல்லாம் தளர்ந்த ஒரு வயோதிகராக துரியோதனன் சபைக்கு வந்து மன்னா துரியோதனா உன் புகழ் கேட்டு இருக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார். பெரியவரே தாராளமாக கேளுங்கள். எதை வேண்டுமானாலும் தருகிறேன். உலக நன்மைக்காக நான் மாபெரும் வேள்வி ஒன்று செய்ய இருக்கிறேன். அந்த வேள்விக்கு வேண்டிய விருக்ஷங்களை (மரங்களை) நீ தர வேண்டும். எத்தனை வேண்டுமானாலும் என் அரண்மனையில் இருந்தும் சேமிப்புக் கிடங்கில் இருந்தும் எனக்கு உட்பட்ட வனங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே என் வீரர்களை உம்மோடு அனுப்புகிறேன் என்றான் துரியோதனன். அதற்கு இப்பொழுது வேண்டாம். நாளை வேள்வி என்றால் அதற்கு இரு தினங்கள் முன்பாக வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி முதியவர் சென்று விட்டார். இதே பெரியவர் துரியோதனனை பார்த்த பிறகு தருமரை அர்ஜுனனை ஏனைய அரசர்களை பார்த்து கேட்கிறார். அனைவரும் உடனே தருவதாக கூறினாலும் தேவையான பொழுது நான் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார். இறுதியாக கர்ணனிடம் சென்று கேட்க கர்ணனும் உடனே தருவதாக கூற உடனே வேண்டாமப்பா. வேண்டும் பொழுது நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். அப்படி சென்று வந்த மறு தினத்தில் இருந்து தொடர்ந்து விடாமல் சில தினங்கள் வருணனின் பொழிவு நிகழ்ந்தது.

தேசம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக மாறியது. பிறகு ஒரு தினம் மழை நின்றது. ஆனால் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. பொது மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அந்தந்த தேச அரசர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த முதியவர் துரியோதனனிடம் சென்று துரியோதனா அன்று சொன்னேனே உலக நன்மைக்காக வேள்வி செய்யப் போகிறேன் என்று. ஆமாம் நாளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருக்ஷங்களைக் கொடு என்றார். துரியோதனனுக்கு சரியான சினம் வந்து விட்டது. பெரியவரே ஏதாவது சிந்தனை இருக்கிறதா உமக்கு? இத்தனை தினங்களாக எங்கே போயிருந்தீர்கள்? தேசத்தில் நடந்தது உமக்கு தெரியாதா? ஒரே மழை வெள்ளம். இப்பொழுது எல்லா மரங்களும் நனைந்து இருக்கும். எப்படி அவை வேள்விக்குப் பயன்படும்? அன்றே தருகிறேன் என்று சொன்னேனே. ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? இப்படி காலமில்லா காலத்தில் வந்து கேட்டு என்னை இடர் படுத்துகிறாயே? போ போ என்று சொல்லி விட்டார்.

ஏனைய அனைத்து அரசர்களும் இதே பதிலையே கூற இறுதியாக கர்ணனை பார்க்க வந்தார். அந்தப் பெரியவர் கர்ணனைப் பார்த்துக் கேட்ட பொழுது பெரியவரே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறீர்கள். தேசமெங்கும் வெள்ளமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் நீர் நிறைந்து மரங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அன்றே தந்திருப்பேன். நீங்களும் வேள்வி செய்திருக்கலாம். இறைவனின் சித்தம் அவ்வாறில்லை போல் இருக்கிறது. கொடுக்க முடியாத ஒரு சூழல் வந்து விட்டதே. என்ன செய்வது? இறைவா எனக்கு வழி காட்டு என்ற கர்ணனுக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. தன் சேவகர்களை எல்லாம் அழைத்து என் அரண்மனையில் உள்ள அனைத்து மரங்களையும் கதவுகளையும் (இடித்து பெயர்த்து) இந்தப் பெரியவருக்குத் தந்து விடுங்கள் என்று கூறிவிட்டான். அவ்வளவுதான். அந்த செய்தி பரவிய பிறகு அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். கர்ணா ஏன் உனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது? ஒருவர் என்னிடம் வந்து உதவி கேட்கிறார். அந்த உதவியை தரக் கூடிய வாய்ப்பு சாதாரண நிலையில் அமையவில்லை. ஆனால் வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இப்பொழுது வேள்விதான் முக்கியம். பெரியவருக்கு கொடுத்த வாக்குதான் முக்கியம். உலக நன்மைதான் முக்கியம். நான் என்ன அரண்மனையில் பிறந்தவனா? அரண்மனையில் வளர்ந்தவனா? இடையில் வந்ததுதானே இந்த வாழ்வு? நான் எங்கு வேண்டுமானாலும் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் வேள்வி குறிப்பிட்ட தினத்தில் நடந்தாக வேண்டும். எனவேதான் இந்த முடிவு என்று கூறி அரண்மனையை இடிக்க முற்பட்ட போது அந்தப் பெரியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக உருவெடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியம்.

கிருஷ்ணா நீங்கள்தான் முதியவராக வந்தவரா? ஆமாம். நான்தான் வந்தேன். இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்குமே? எதற்காக கர்ணனை வள்ளல் என்று உலகம் கூறுகிறது? நானும் ஏன் கூறுகிறேன்? என்று. எல்லோரும் தருகிறீர்கள். ஆனால் எந்த நிலையில் தருகிறீர்கள்? அவனவன் சுகமாக இருந்து கொண்டு தன்னுடைய நிலைமையை விட்டுக் கொடுக்காமல் தரத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் தன் வாழ்வே அஸ்தமித்தாலும் பாதகமில்லை. தான் இருக்கின்ற இல்லமே போனாலும் பாதகமில்லை. தருவது என்று வந்து விட்டால் உயிர் என்ன? உடல் என்ன? உடைமை என்ன? எதுவாக இருந்தால் என்ன? தரக்கூடிய வகையில் எது இருக்கிறது என்று பார்த்து அதை எத்தனை கடினம் என்றாலும் அதைத் தந்தால் எத்தனை துன்பம் வந்தாலும் தருவேன் என்று எவன் முடிவு எடுக்கிறானோ அவன்தான் வள்ளல். மற்றவர்களை எல்லாம் வேண்டுமானால் உதவி செய்பவர்கள் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூற இதையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

இப்படியொரு தர்மசங்கடமான சூழலில் எங்களையெல்லாம் ஆட்படுத்திவிட்டு மழையையும் பொழிய வைத்து (மரங்களை) கேட்டால் எப்படி கண்ணா? நாங்கள் என்ன தரக் கூடாது என்ற எண்ணத்திலா சொன்னோம்? மரங்கள் ஈரமாக இருக்கிறதே. எப்படி வேள்விக்குத் தருவது என்றுதானே சங்கடப்பட்டோம். தரக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்று கூற கண்ணபரமாத்மா எல்லோரும் பொறுமையோடு இருங்கள். மீண்டும் உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் கர்ணன்தான் வள்ளல் என்பதை என்று கூறிச் சென்று விட்டார். சில நாட்கள் சென்ற பிறகு இப்பொழுது வெளிப்படையாகவே அனைவரையும் அழைத்து இப்பொழுது ஒரு சோதனை செய்யப் போகிறேன். இந்த சோதனையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவனையே இனி நானும் வள்ளல் என்று அழைப்பேன். உலகமும் வள்ளல் என்று அழைக்கும் என்று கூற என்ன? என்று எல்லோரும் கேட்க இப்பொழுது இந்த பரந்த பாரத மண்ணிலே இருக்கின்ற இமய மலையைவிட உயரமான தங்க மலை ஒன்றை நான் தோற்றுவிக்கப் போகிறேன். இந்த தங்க மலையை பாண்டவர்களுக்கு ஒன்றும் கௌரவர்களுக்கு ஒன்றும் கர்ணனுக்கு என்று ஒன்றும் தந்து விடுகிறேன். நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் யார் முதலில் அதனை தானம் செய்து பூர்த்தி செய்கிறார்களோ அவன்தான் வள்ளல் என்று கூறி சென்று விட்டார். இப்பொழுது பாண்டவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கௌரவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கர்ணனுக்கு ஒரு மலை கிடைத்தது. சரி நாளை காலையில் இருந்து தானத்தை ஆரம்பிப்போம் என்று அனைவரும் சென்று விட்டார்கள்.

மறுநாள் மாலை நெருங்கும் பொழுது கண்ண பரமாத்மா முதலில் துரியோதனனை பார்க்க வருகிறார். அங்கே கால்வாசிதான் தானம் நடந்து இருந்தது. முக்கால் பாகம் அப்படியே இருந்தது. என்ன துரியோதனா? இன்னுமா முடியவில்லை? சூரியன் மறையப் போகிறதே? என்று கண்ணன் கேட்க நாங்கள் கொடுக்கவில்லை அல்லது மறுக்கிறோம் என்று எண்ணாதே. எங்களுக்கு அவகாசம் போதவில்லை. இன்னும் சில மாதங்கள் கொடு. எப்படியாவது தந்து விடுகிறோம் பார் ஆயிரக்கணக்கான ஆட்கள் மலையின் மீது அமர்ந்து வெட்டி வெட்டி வருகின்ற ஏழைகளுக்கு அள்ளி தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீயே பார்க்கிறாய் அல்லவா? என்றார் துரியோதனன். அவகாசம் எல்லாம் தர முடியாது துரியோதனா. இன்று சூரியன் மறைவதற்குள் நீ கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கண்ணன். இதற்குள் வாய்ப்பே இல்லை கண்ணா. நாங்கள் தோற்றதாகவே இருக்கட்டும். ஆனால் பாண்டவர்கள் நிலையை பார்க்க வேண்டும். அழைத்து போ என்று கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கும் இதே நிலைதான். கால் பாகம் கொடுத்து விட்டு முக்கால் பாகம் அப்படியே இருக்க என்ன தர்மா? அர்ஜுனா? இன்னும் தரவில்லையா? என்று கண்ணன் கேட்க தந்து கொண்டுதான் இருக்கிறோம் கண்ணா. ஆனால் அவகாசம்தான் போதவில்லை. ஓரிரு மாதங்கள் கொடுத்தால் நாங்கள் பூர்த்தி செய்து விடுவோம் என்றார்கள் பாண்டவர்கள். அதெல்லாம் முடியாது கொடுத்த அவகாசம்தான். சூரியன் மறைவதற்குள் கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்ணன் கூற எங்களால் முடியாது. ஆனால் கர்ணனின் நிலையை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூற கண்ண பரமாத்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்.

அங்கே கர்ணனுக்கென்று கொடுத்த மலை அப்படியே இருந்தது. நாங்களாவது கால் பாகம் கொடுத்து இருந்தோம். ஆனால் கர்ணனோ ஒன்றுமே கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? பொறுமையாக இருங்கள். கர்ணனிடமே கேட்போம் என்று கூறி கர்ணனை அழைத்து வர செய்து கர்ணா நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? என்ன செய்தேன்? கர்ணன். ஆளுக்கொரு தங்க மலை கொடுத்தேன் அல்லவா? கொடுத்தீர்கள். மற்றவர்கள் எல்லாம் அதில் கால் பாகமாவது கொடுத்து விட்டார்கள். ஆனால் உன் மலை அப்படியே இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார் கண்ணன். யார் மலையை கொடுத்தது? என்று கேட்டார் கர்ணன். நான் கொடுத்தேனே என்றார் கண்ணன். எப்பொழுது கொடுத்தீர்கள்? என்று கேட்டார் கர்ணன். நேற்று கொடுத்தேன் என்றார் கண்ணன். நீங்கள் கொடுத்த மறுகணம் ஒரு ஏழை வந்தார். இந்தா வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டேன். இப்பொழுது எப்படி அது என்னுடையது ஆகும் என்றார் கர்ணன். பார்த்தீர்களா இவன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். உங்கள் சிந்தனை எப்படி போனது? இவன் சிந்தனை எப்படி போனது? என்று கண்ணன் கூற உடனே அதையும் மறுத்தார்கள் சிலர்.

நாங்கள் பலருக்கும் பயனுள்ளதாக கொடுத்தோம். கர்ணனோ ஒருவனுக்குதானே கொடுத்தான் என்று பதில் கூற கர்ணா இதற்கு என்ன பதில் கூறுகிறாய்? என்று கண்ணன் கேட்க மிக மிக தூர தேசத்தில் இருந்து இந்த ஏழை வந்திருக்கிறான். அவன் தேசம் முழுவதும் வறுமை வாட்டுவதாக சொன்னான். உடனே இந்தா இதை வைத்துக் கொண்டு உன் வறுமையையும் உன் தேசத்தின் வறுமையையும் நீக்கிக் கொள் என்று அப்பொழுதே மலையை கொடுத்து விட்டு இந்த விஷயத்தையே மறந்து விட்டேன் என்று கர்ணன் கூற இப்பொழுது ஓரளவு அனைவருக்கும் புரிந்தது.

இந்த கதையின் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வள்ளல் தன்மை என்றால் என்ன? என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப் படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப் பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார். அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பு அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல். இதனை கர்ணன் கடைபிடிப்பதால் கர்ணனை அனைவரும் வள்ளல் என்று அழைக்கிறார்கள்.

திரௌபதியின் கர்வம்

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார். ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார். கிருஷ்ணரை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள். அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும் என்றாள். கிருஷ்ணரும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.

திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையில் தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது. நீண்ட நேரம் ஆகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை. கிருஷ்ணர் திரௌபதியிடம் மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. தீர்த்தமாட வெந்நீர் கொடுக்கிறேன் என்றாய் என்னாச்சு? என்று கேட்டார். அதற்கு திரௌபதி கண்கலங்கியவாறே அண்ணா என்ன சோதனையோ தெரியவில்லை. கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது என்றாள். கிருஷ்ணர் பீமனிடம் பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார் பீமனும் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்த்தார். கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது. கிருஷ்ணர் திரௌபதியிடம் தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்து கொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். கொப்பறை நீர் கொதிக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. கிருஷ்ணரிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது. அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

துரோணர் செய்த தவறு

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால் பெற்ற சாபத்தினால் மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. என் தந்தை சத்தியவான் செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தாலும் தன் கேள்விக்கு கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீயும் காரணமாக இருந்தாய் அவர் செய்த தவறு என்ன? என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்தபடியே செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். என் தந்தை என்ன பாவம் செய்தார் கேட்டான் அஸ்வத்தாமன். அதற்கு கிருஷ்ணன் உன் தந்தை அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். தனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன் உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில் வித்தை திறமை அர்ஜூனனுக்கு தெரிந்தது. அர்ஜூணன் துரோணரிடம் இதனை தெரிவித்தான்.

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தின் காரணமாக உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டார். ஏகலைவனை வரவலைத்த உனது தந்தை வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டு பெற்றுக் கொண்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார். ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும் அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தை தான் காரணம். மேலும் போர் களத்தில் யுத்த தர்மத்திற்கு எதிராக அபிமன்யுவை அநியாயமாக கொலை செய்தார்கள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் உனது தத்தை. இந்த பாவம் தான் உன் தந்தையை போர்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன்.