மண்

குருஷேத்திர களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர். பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். அருகிலேயே மரணதேவனும் பீஷ்மரின் அனுமதிக்கு காத்திருந்ததார். மனம் முழுதும் நிறைந்திருந்த பீஷ்மரை மண்ணை விட்டு அனுப்ப நான் காரணமாகிப் போனேனே என்று கிருஷ்ணரிடம் படபடத்தான் அர்ஜூனன். பீஷ்மர் மண்ணைவிட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா என்றார் கிருஷ்ணன். திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜூனன். மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால் அவரை தடுப்பார் எவருமில்லை. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவு இன்றி தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது. பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜூனா விருப்பு வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். கொண்ட கொள்கைக்காக தன்னைப்பற்றிய சிந்தனையே இன்றி தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம். பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல் தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ அவரே பீஷ்மர். அதற்காக அவர் கொண்ட தவம் தான் பிரம்மச்சர்யம். மண்ணிலிருந்து தன்னை ஒட்டாமல் விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும் என்றார் கிருஷ்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்று இம்மண். அதை விட்டு விலகி நின்றால் போதுமா என்று கேட்டான் அர்ஜூனன். நீர் நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி இருக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜூனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம். உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத விடவே இயலாத ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான். கருவில் இருக்கும்வரை மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும் தாய்மடியில் இருக்கும்வரை தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை. எப்போது குழந்தை என்ற ஓர் உயிர் மண்தொட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் படுத்திருக்கும் இடம் தன் இடம் என்று உள்நுழைகிறது ஆசை. பிறகு மண்ணில் புரள்கிறது குழந்தை. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின் முன்னோக்கி நகர்கிறது. தவழ்கிறது இடம் பிடிக்க அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டும் என்று எழ முயற்சித்து தொட நினைக்கிறது. எழுகிறது நடக்கிறது ஓடுகிறது இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. ஓடுகிறது. தேடுகிறது. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே உயிர்பிரிந்து போனபின்னே மண்ணால் வந்த மனிதனின் ஆசை மண்ணுக்குள்ளேயே புதைக்கவும் படுகிறது.

இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும் அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது. வாழும் காலத்திலேயே மண்ணாசையை மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர் என கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜூனன் திகைத்தான். அதனால்தான் மண்படாமல் பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னேன் அர்ஜூனா. பீஷ்மர் வாவென்றழைக்காமல் மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர் இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால் மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை மண் அவருக்குள் புகுத்திவிட்டால் பீஷ்மர் மண்ணாள ஆசை கொண்டுவிட்டால் உன்னால் என்னால் எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை அதிலிருக்கும் போதும் மண்தொட அவர் விரும்பினாலும் அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும். மண்தொட ஆசைப்பட்டால் வலிதான் மிஞ்சும் என்பதாலேயே மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல் விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். இத்தனையும் நான் அறிந்து கொண்டேனே மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா என்று ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜூனன். சிரித்தார் கிருஷ்ணர். நீ நிற்பதே மண் மீதுதான். விண் நோக்கிச் செல்ல உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின் மண்ணில் தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராட வேண்டும் என்றார் கிருஷ்ணர். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. எதை வெல்ல நினைத்தோமோ அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும் இந்த மண் தந்ததுதான். உறவுகளையும் உணர்வுகளையும் கொடுத்த மண்தான் அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது அர்ஜூனனுக்குப் புரிந்தது.

நான் என்பது யார் இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும் புரியாவிட்டாலும் தான் யார் என்பதை மண் புரிய வைத்துவிடும். இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே ஒவ்வொருவரும் அர்ஜூனரே. கிருஷ்ணன் எனும் சாரதி ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. வாழும்போதே அதை உணர வேண்டும்.

One thought on “மண்

  1. Rajasekaran Reply

    Excellent. I really like to read all your articles. Everyday, am eagerly awaiting to see your articles. Also, to spread your teachings, knowledge from these articles, without your permission, I share to my groups too. Everybody should learn. Sharing our knowledge is basic and possible help, we can provide.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.