சகுனி குரு குலத்தை அழிக்கும் காரியங்கள் ஏன் செய்தான்

காந்தார மன்னன் சுலபனின் மகன் சகுனி. மகள் தான் காந்தாரி. காந்தார நாட்டு இளவரசி அழகும் இளமையும் நற்பண்புகளும் மட்டுமல்லாமல் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றவள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறன் கொண்டவள். அழகும் அறிவும் நிரம்பி இளமையின் பூரிப்பில் மதர்ந்திருந்த காந்தாரிக்கும் எல்லா பெண்களையும் போலவே திருமணத்தைப் பற்றியும் தன் மணாளனைப் பற்றியும் கனவுகளும் கற்பனைகளும் மனது முழுக்க நிறைந்திருந்தது. சிவபெருமானிடம் தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவள். அவளின் ஜாதக தோஷத்தின் படி அவளை திருமணம் செய்யும் முதல் கணவன் இறந்துவிடுவான் என்ற விதி இருந்தது. இது தெரிந்தால் எந்த மன்னனும் தன் மகளை மணம் புரியத் துணிய மாட்டானே என்ற கவலை காந்தார மன்னனை பெரிதும் வாட்டியது.

அதே சமயத்தில் பீஷ்மர் தன் குலம் தழைக்க குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக் கொண்டிருந்தார். திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க காந்தாரியை பெண் கேட்டு வந்த பீஷ்மரின் தூதை காந்தார நாட்டு மன்னன் உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகள் ஒரு கண் தெரியாதவனுக்கு மனைவியாவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன் பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வை அற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனால் மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் ஒரு உபாயம் செய்கிறான். தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கிடாவை அவளுக்கு திருமணம் செய்து வைத்து பின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன் படி காந்தாரி தன் முதல் கணவனான ஆட்டுக்கிடாவை இழந்துவிட்ட விதவை. திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற கணக்கு சரியாகிவிடுகிறது.

திருதராஷ்டிரன் தான் தன் கணவன் என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்திருப்பதை அறிந்த காந்தாரி மறுவார்த்தை கூறாமல் சம்மதம் தெரிவித்தாள். கண் தெரியாதவனாய் இருந்தாலும் தன் கணவன் குருகுலத்தில் மூத்தவன் அரச குமாரன் என்ற காரணங்களால் மனம் தேற்றிக் கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும் பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனி. அங்கு காந்தாரியும் சகுனியும் சகல மரியாதைகளோடு வரவேற்கப்படுகின்றனர். திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வை அற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால் தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டுவிட்டாள் காந்தாரி.

காந்தாரி திருமணத்திற்கு முன் தனக்கிருந்த தோஷத்தால் ஆட்டுக் கிடாயை மணம் செய்து கொண்டதும் அதன் பின் அதை பலி கொடுத்து முதல் கணவன் இறந்தான் எனும்படி தோஷ பரிகாரம் செய்ததும் பீஷ்மருக்கு தாமதமாக ஒற்றர்கள் மூலம் கிடைக்க தன் குலத்திற்கு விதவை மருமகள் ஆவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணினார். இந்த விஷயத்தை மறைத்து திருமணம் செய்த சுபலன் மற்றும் அவனது நாட்டை நிர்மூலமாக்க பீஷ்மர் எண்ணினார். காந்தார நாட்டுக்கு படையெடுத்துச் சென்று எல்லோரையும் சிறைப் பிடித்தார். அப்போதும் பீஷ்மரை சமாதானப்படுத்திய சுபலன் மற்றும் அவரது உறவினர்கள் பீஷமருக்கு விஷம் வைத்துக் கொல்ல திட்டம் போட்டனர். இதையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட பீஷ்மர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். ஒட்டுமொத்த சுபலன் கூட்டத்தை பாதாள அறைக்குள் சிறையில் வைத்தார். ஒட்டுமொத்த குடும்பத்தை நிர்மூலமாக்குவது பாவம் என ஆலோசகர்கள் சொன்னதால் ஒருநாளைக்கு இரண்டு பிடி உணவும் ஒரு சுரைக்காய் குடுவை அளவு நீரும் மட்டுமே அவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

தன் உடன் பிறந்தவர்களையும் உற்றாரையும் நோக்கிய சகுனி இந்த உணவை வைத்துக்கொண்டு ஒரே ஒருவர் உயிர் வாழ முடியும் மற்றவர்கள் ஒருவருக்காக உயிர்த்தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அனைவரும் அழிந்து போவோம். யார் உயிர் வாழவேண்டிய நபர் என்று நமக்குள் முடிவு செய்யுங்கள் என்றான். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு சகுனியின் தந்தை சுபலன் அறிவில் சிறந்த சகுனியே உயிர் பிழைக்க வேண்டும். சகுனி தன் உயிரை பீஷ்மாரின் குலத்தை ஒழிக்கவே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படியே ஒவ்வொரு நாளின் உணவும் சகுனிக்கு அளிக்கப்பட்டது. அவன் கண்ணெதிரே ஒவ்வொருவராக பசியால் செத்து விழுந்தார்கள். தந்தை சுபலன் மரண அவஸ்தையில் இருந்தபோது சகுனியை அழைத்து அவனின் வலது காலை அடித்து உடைத்தார். சகுனி வலியால் துடித்தபோது உன் ஒவ்வொரு அசைவின் போதும் இந்த மரணங்களை மறக்கக் கூடாது பழி பழி என்று அலைய வேண்டும் என்றார் தந்தை. மேலும் அவரது வலக்கையை ஒடித்துக் கொடுத்து இதில் இருக்கும் எலும்பைக் கொண்டு தாயக்கட்டைகளை உருவாக்கி கொள். சூதாட்டத்தில் சிறந்த உனக்கு இந்த தாயக்கட்டைகளே வேண்டிய எண்ணைக் கொடுக்கும். இதைக் கொண்டே குருவம்சத்தை அழித்து விடு என்றார். அதன்படியே அத்தனை உறவுகளையும் இழந்தான்.

பல வருடங்களுக்கு பின்னர் அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான். துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். அன்பு மருமகனே நீ எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கின்றாய். இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து காந்தார நாட்டின் பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு இந்தக் கொடியவர்களை ஒழித்து காந்தார நாட்டை முழுவதும் எனக்கு உரிமையாக்கி விட்டாய். இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பி விடுதலை செய்தான். சகுனி தன்னந்தனியாக சூதே உருவாக வெளியே வந்தான். மனமெங்கும் கோபமும் பழி வாங்கும் உணர்வும் மேலோங்கியது. குரு குலத்தை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். தீமையின் வடிவான துரியோதனனின் ஆலோசகன் ஆனான். வீணான மோதலை உருவாக்கி கௌரவ பாண்டவ யுத்தத்தை உருவாக்கி தனது சபதத்தை நிறைவேற்ற இறுதிவரை போராடினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.