வள்ளல் கர்ணன்

தர்மாத்மா என்று இந்த உலகத்தாரால் புகழப்படுகின்ற பாண்டவர்களின் மூத்த சகோதரர் தர்மர் யார் எதைக் கேட்டாலும் தந்து கொண்டே இருக்கிறார். அவரின் சகோதரர்களும் யார் என்ன கேட்டாலும் தானம் செய்கிறார்கள். இன்னும் கூறப் போனால் துரியோதனனும் யார் கேட்டாலும் எதை கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க அனைவரையும் விட கர்ணனைதான் பொதுமக்கள் அனைவரும் வள்ளல் என்று கூறுகிறார்கள். அனைவரையும் விட கர்ணன் எப்படி உயர்வாக இருக்க முடியும்? இன்னும் கூறப் போனால் துரியோதனனுக்கு உட்பட்ட ஒரு சிறு ராஜ்ஜியத்தைதான் கர்ணன் ஆண்டு கொண்டு இருக்கிறான். கர்ணனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் ஒரு வகையில் பார்த்தால் துரியோதனன் தந்ததுதான். கர்ணன் தருவதை எல்லாம் ஒரு வார்த்தைக்கு கொடை என்றாலும் துரியோதனனுக்குதான் அந்தப் புகழ் போய் சேர வேண்டும்? சராசரியான மனிதர்கள் வேண்டுமானால் இப்படி புரியாமல் பேசலாம். ஆனால் கிருஷ்ணரும் கர்ணனை வள்ளல் என்றே சொல்கிறார். ஏன் அப்படி என்று பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர் கர்ணனும் வள்ளல் மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை அனைவருக்கும் காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

கிருஷ்ணர் சில தினங்கள் கழித்து உடலெல்லாம் தளர்ந்த ஒரு வயோதிகராக துரியோதனன் சபைக்கு வந்து மன்னா துரியோதனா உன் புகழ் கேட்டு இருக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார். பெரியவரே தாராளமாக கேளுங்கள். எதை வேண்டுமானாலும் தருகிறேன். உலக நன்மைக்காக நான் மாபெரும் வேள்வி ஒன்று செய்ய இருக்கிறேன். அந்த வேள்விக்கு வேண்டிய விருக்ஷங்களை (மரங்களை) நீ தர வேண்டும். எத்தனை வேண்டுமானாலும் என் அரண்மனையில் இருந்தும் சேமிப்புக் கிடங்கில் இருந்தும் எனக்கு உட்பட்ட வனங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே என் வீரர்களை உம்மோடு அனுப்புகிறேன் என்றான் துரியோதனன். அதற்கு இப்பொழுது வேண்டாம். நாளை வேள்வி என்றால் அதற்கு இரு தினங்கள் முன்பாக வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி முதியவர் சென்று விட்டார். இதே பெரியவர் துரியோதனனை பார்த்த பிறகு தருமரை அர்ஜுனனை ஏனைய அரசர்களை பார்த்து கேட்கிறார். அனைவரும் உடனே தருவதாக கூறினாலும் தேவையான பொழுது நான் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார். இறுதியாக கர்ணனிடம் சென்று கேட்க கர்ணனும் உடனே தருவதாக கூற உடனே வேண்டாமப்பா. வேண்டும் பொழுது நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். அப்படி சென்று வந்த மறு தினத்தில் இருந்து தொடர்ந்து விடாமல் சில தினங்கள் வருணனின் பொழிவு நிகழ்ந்தது.

தேசம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக மாறியது. பிறகு ஒரு தினம் மழை நின்றது. ஆனால் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. பொது மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அந்தந்த தேச அரசர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த முதியவர் துரியோதனனிடம் சென்று துரியோதனா அன்று சொன்னேனே உலக நன்மைக்காக வேள்வி செய்யப் போகிறேன் என்று. ஆமாம் நாளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருக்ஷங்களைக் கொடு என்றார். துரியோதனனுக்கு சரியான சினம் வந்து விட்டது. பெரியவரே ஏதாவது சிந்தனை இருக்கிறதா உமக்கு? இத்தனை தினங்களாக எங்கே போயிருந்தீர்கள்? தேசத்தில் நடந்தது உமக்கு தெரியாதா? ஒரே மழை வெள்ளம். இப்பொழுது எல்லா மரங்களும் நனைந்து இருக்கும். எப்படி அவை வேள்விக்குப் பயன்படும்? அன்றே தருகிறேன் என்று சொன்னேனே. ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? இப்படி காலமில்லா காலத்தில் வந்து கேட்டு என்னை இடர் படுத்துகிறாயே? போ போ என்று சொல்லி விட்டார்.

ஏனைய அனைத்து அரசர்களும் இதே பதிலையே கூற இறுதியாக கர்ணனை பார்க்க வந்தார். அந்தப் பெரியவர் கர்ணனைப் பார்த்துக் கேட்ட பொழுது பெரியவரே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறீர்கள். தேசமெங்கும் வெள்ளமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் நீர் நிறைந்து மரங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அன்றே தந்திருப்பேன். நீங்களும் வேள்வி செய்திருக்கலாம். இறைவனின் சித்தம் அவ்வாறில்லை போல் இருக்கிறது. கொடுக்க முடியாத ஒரு சூழல் வந்து விட்டதே. என்ன செய்வது? இறைவா எனக்கு வழி காட்டு என்ற கர்ணனுக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. தன் சேவகர்களை எல்லாம் அழைத்து என் அரண்மனையில் உள்ள அனைத்து மரங்களையும் கதவுகளையும் (இடித்து பெயர்த்து) இந்தப் பெரியவருக்குத் தந்து விடுங்கள் என்று கூறிவிட்டான். அவ்வளவுதான். அந்த செய்தி பரவிய பிறகு அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். கர்ணா ஏன் உனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது? ஒருவர் என்னிடம் வந்து உதவி கேட்கிறார். அந்த உதவியை தரக் கூடிய வாய்ப்பு சாதாரண நிலையில் அமையவில்லை. ஆனால் வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இப்பொழுது வேள்விதான் முக்கியம். பெரியவருக்கு கொடுத்த வாக்குதான் முக்கியம். உலக நன்மைதான் முக்கியம். நான் என்ன அரண்மனையில் பிறந்தவனா? அரண்மனையில் வளர்ந்தவனா? இடையில் வந்ததுதானே இந்த வாழ்வு? நான் எங்கு வேண்டுமானாலும் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் வேள்வி குறிப்பிட்ட தினத்தில் நடந்தாக வேண்டும். எனவேதான் இந்த முடிவு என்று கூறி அரண்மனையை இடிக்க முற்பட்ட போது அந்தப் பெரியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக உருவெடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியம்.

கிருஷ்ணா நீங்கள்தான் முதியவராக வந்தவரா? ஆமாம். நான்தான் வந்தேன். இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்குமே? எதற்காக கர்ணனை வள்ளல் என்று உலகம் கூறுகிறது? நானும் ஏன் கூறுகிறேன்? என்று. எல்லோரும் தருகிறீர்கள். ஆனால் எந்த நிலையில் தருகிறீர்கள்? அவனவன் சுகமாக இருந்து கொண்டு தன்னுடைய நிலைமையை விட்டுக் கொடுக்காமல் தரத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் தன் வாழ்வே அஸ்தமித்தாலும் பாதகமில்லை. தான் இருக்கின்ற இல்லமே போனாலும் பாதகமில்லை. தருவது என்று வந்து விட்டால் உயிர் என்ன? உடல் என்ன? உடைமை என்ன? எதுவாக இருந்தால் என்ன? தரக்கூடிய வகையில் எது இருக்கிறது என்று பார்த்து அதை எத்தனை கடினம் என்றாலும் அதைத் தந்தால் எத்தனை துன்பம் வந்தாலும் தருவேன் என்று எவன் முடிவு எடுக்கிறானோ அவன்தான் வள்ளல். மற்றவர்களை எல்லாம் வேண்டுமானால் உதவி செய்பவர்கள் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூற இதையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

இப்படியொரு தர்மசங்கடமான சூழலில் எங்களையெல்லாம் ஆட்படுத்திவிட்டு மழையையும் பொழிய வைத்து (மரங்களை) கேட்டால் எப்படி கண்ணா? நாங்கள் என்ன தரக் கூடாது என்ற எண்ணத்திலா சொன்னோம்? மரங்கள் ஈரமாக இருக்கிறதே. எப்படி வேள்விக்குத் தருவது என்றுதானே சங்கடப்பட்டோம். தரக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்று கூற கண்ணபரமாத்மா எல்லோரும் பொறுமையோடு இருங்கள். மீண்டும் உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் கர்ணன்தான் வள்ளல் என்பதை என்று கூறிச் சென்று விட்டார். சில நாட்கள் சென்ற பிறகு இப்பொழுது வெளிப்படையாகவே அனைவரையும் அழைத்து இப்பொழுது ஒரு சோதனை செய்யப் போகிறேன். இந்த சோதனையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவனையே இனி நானும் வள்ளல் என்று அழைப்பேன். உலகமும் வள்ளல் என்று அழைக்கும் என்று கூற என்ன? என்று எல்லோரும் கேட்க இப்பொழுது இந்த பரந்த பாரத மண்ணிலே இருக்கின்ற இமய மலையைவிட உயரமான தங்க மலை ஒன்றை நான் தோற்றுவிக்கப் போகிறேன். இந்த தங்க மலையை பாண்டவர்களுக்கு ஒன்றும் கௌரவர்களுக்கு ஒன்றும் கர்ணனுக்கு என்று ஒன்றும் தந்து விடுகிறேன். நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் யார் முதலில் அதனை தானம் செய்து பூர்த்தி செய்கிறார்களோ அவன்தான் வள்ளல் என்று கூறி சென்று விட்டார். இப்பொழுது பாண்டவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கௌரவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கர்ணனுக்கு ஒரு மலை கிடைத்தது. சரி நாளை காலையில் இருந்து தானத்தை ஆரம்பிப்போம் என்று அனைவரும் சென்று விட்டார்கள்.

மறுநாள் மாலை நெருங்கும் பொழுது கண்ண பரமாத்மா முதலில் துரியோதனனை பார்க்க வருகிறார். அங்கே கால்வாசிதான் தானம் நடந்து இருந்தது. முக்கால் பாகம் அப்படியே இருந்தது. என்ன துரியோதனா? இன்னுமா முடியவில்லை? சூரியன் மறையப் போகிறதே? என்று கண்ணன் கேட்க நாங்கள் கொடுக்கவில்லை அல்லது மறுக்கிறோம் என்று எண்ணாதே. எங்களுக்கு அவகாசம் போதவில்லை. இன்னும் சில மாதங்கள் கொடு. எப்படியாவது தந்து விடுகிறோம் பார் ஆயிரக்கணக்கான ஆட்கள் மலையின் மீது அமர்ந்து வெட்டி வெட்டி வருகின்ற ஏழைகளுக்கு அள்ளி தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீயே பார்க்கிறாய் அல்லவா? என்றார் துரியோதனன். அவகாசம் எல்லாம் தர முடியாது துரியோதனா. இன்று சூரியன் மறைவதற்குள் நீ கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கண்ணன். இதற்குள் வாய்ப்பே இல்லை கண்ணா. நாங்கள் தோற்றதாகவே இருக்கட்டும். ஆனால் பாண்டவர்கள் நிலையை பார்க்க வேண்டும். அழைத்து போ என்று கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கும் இதே நிலைதான். கால் பாகம் கொடுத்து விட்டு முக்கால் பாகம் அப்படியே இருக்க என்ன தர்மா? அர்ஜுனா? இன்னும் தரவில்லையா? என்று கண்ணன் கேட்க தந்து கொண்டுதான் இருக்கிறோம் கண்ணா. ஆனால் அவகாசம்தான் போதவில்லை. ஓரிரு மாதங்கள் கொடுத்தால் நாங்கள் பூர்த்தி செய்து விடுவோம் என்றார்கள் பாண்டவர்கள். அதெல்லாம் முடியாது கொடுத்த அவகாசம்தான். சூரியன் மறைவதற்குள் கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்ணன் கூற எங்களால் முடியாது. ஆனால் கர்ணனின் நிலையை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூற கண்ண பரமாத்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்.

அங்கே கர்ணனுக்கென்று கொடுத்த மலை அப்படியே இருந்தது. நாங்களாவது கால் பாகம் கொடுத்து இருந்தோம். ஆனால் கர்ணனோ ஒன்றுமே கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? பொறுமையாக இருங்கள். கர்ணனிடமே கேட்போம் என்று கூறி கர்ணனை அழைத்து வர செய்து கர்ணா நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? என்ன செய்தேன்? கர்ணன். ஆளுக்கொரு தங்க மலை கொடுத்தேன் அல்லவா? கொடுத்தீர்கள். மற்றவர்கள் எல்லாம் அதில் கால் பாகமாவது கொடுத்து விட்டார்கள். ஆனால் உன் மலை அப்படியே இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார் கண்ணன். யார் மலையை கொடுத்தது? என்று கேட்டார் கர்ணன். நான் கொடுத்தேனே என்றார் கண்ணன். எப்பொழுது கொடுத்தீர்கள்? என்று கேட்டார் கர்ணன். நேற்று கொடுத்தேன் என்றார் கண்ணன். நீங்கள் கொடுத்த மறுகணம் ஒரு ஏழை வந்தார். இந்தா வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டேன். இப்பொழுது எப்படி அது என்னுடையது ஆகும் என்றார் கர்ணன். பார்த்தீர்களா இவன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். உங்கள் சிந்தனை எப்படி போனது? இவன் சிந்தனை எப்படி போனது? என்று கண்ணன் கூற உடனே அதையும் மறுத்தார்கள் சிலர்.

நாங்கள் பலருக்கும் பயனுள்ளதாக கொடுத்தோம். கர்ணனோ ஒருவனுக்குதானே கொடுத்தான் என்று பதில் கூற கர்ணா இதற்கு என்ன பதில் கூறுகிறாய்? என்று கண்ணன் கேட்க மிக மிக தூர தேசத்தில் இருந்து இந்த ஏழை வந்திருக்கிறான். அவன் தேசம் முழுவதும் வறுமை வாட்டுவதாக சொன்னான். உடனே இந்தா இதை வைத்துக் கொண்டு உன் வறுமையையும் உன் தேசத்தின் வறுமையையும் நீக்கிக் கொள் என்று அப்பொழுதே மலையை கொடுத்து விட்டு இந்த விஷயத்தையே மறந்து விட்டேன் என்று கர்ணன் கூற இப்பொழுது ஓரளவு அனைவருக்கும் புரிந்தது.

இந்த கதையின் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வள்ளல் தன்மை என்றால் என்ன? என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப் படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப் பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார். அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பு அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல். இதனை கர்ணன் கடைபிடிப்பதால் கர்ணனை அனைவரும் வள்ளல் என்று அழைக்கிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.