ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 339

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

அன்று இன்று நாளும் என்று என்று வாழும் தொன்று தொட்டு இருக்கும் வினை வந்து செயல் முடிக்கும் உயிருக்கு காப்பாக இருந்து காக்கும். அது எது? எது அது? அது எது? என்று அதுவே படித்துக் கொண்டு அதுவே பார்த்துக் கொண்டு அதுவே கேட்டுக் கொண்டு அதுவே பேசிக் கொண்டு அதுவே இருந்து கொண்டு இருக்கிறதே? அது எது? அதுவா? அவனா? அவளா? அதுபோல் கூறுங்கால் அறிவை ஞானமாக்குதல் ஞானத்தை மெய் ஞானமாக்குதல் அப்படி ஆக்குகின்ற முயற்சியே அதற்கு செலவிடப்படும் நாழிகையே அருள் காலமாகும். அதுபோல் மாந்தன் (மனிதன்) தேகம் வேறு தேகத்தின் உள்ளே குடி இருக்கும் ஆத்மா வேறு. இரண்டும் ஒன்றல்ல என்ற உணர்வைப் புரிந்து கொண்டு எப்படி யாம் அடிக்கடி உரைக்கிறோமோ (அதாவது ஒரு லிகிதமானது (கடிதம்) பாதுகாப்பாக உரிய இடம் சென்று அடைவதற்கு ஒரு உறை போல) இந்த ஆத்மா வினைப் பயனை நுகர்ந்து தனக்குள்ளே மெய் ஞானத்தை உணர்ந்து இறை நோக்கிச் சென்று இறையின் திருவடியை அடையும் வரை தேகம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் தேகத்தையே நான் என்னும் அறியாமைதான். இத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆக இதுபோல் கருத்தைத்தான் நாம் அன்றுதொட்டு வலியுறுத்துகிறோம். அன்றுதொட்டு இன்றுதொட்டு தொன்றுதொட்டு வலியுறுத்தும் கருத்துக்களும் இதேதான். எனவே இதனை புரிந்தவர்கள் மேலும் புரிந்து கொள்ளலாம். என்ன நினைத்தும் புரியாதவர்கள் விட்டு விடலாம். காலமே அவர்களுக்கு புரிய வைக்கும். அதுபோல் வந்திருக்கும் சேய்கள் அனைவருக்கும் நல்லாசி.

இதுபோல் சேய்களும் (பிள்ளைகளும்) இதே தினம் இதே விண்மீன் (நட்சத்திரம்) இதே வாரம் இதுபோல் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னே அமர்ந்து இருந்தவர்கள்தான். அதே ஆத்மாதான். தேகம் மாறி இருக்கிறது. இந்த பூமியின் அமைப்பு மாறி இருக்கிறது. யாம் உற்று நோக்கும் போது பல வனாந்திரங்கள் நகரங்களாக மாறி இருக்கிறது. மனிதனின் ஆடைகள் மாறி இருக்கின்றன. மனிதன் கையாளும் கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று. மனிதன் அப்போது இருந்த மாதிரிதான் இன்றும் இருக்கிறான். அன்று போல்தான் இன்றும் இந்த உலக வாழ்க்கையில் அஞ்சிக் கொண்டே இருக்கிறான். சுயநலம் பேராசை தன்முனைப்பு தனம் இவற்றிலேயே சிக்கி மாய்கிறான். என்றாலும் இதுபோல் நிலையிலே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று எமக்கு நன்றாகத் தெரியும். எம் சேய்களிடம் இருக்கின்ற குற்றங்களை தவிர்த்து இப்பொழுது வினாக்களுக்கு அனுமதி தருகிறோம். எதற்கு இறை அனுமதி தருகிறதோ அதற்கு பதில் தருகிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.