ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 351

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறையருளின் துணைகொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறையருளின் துணையின்றி எது நிகழும் எக்கணமும்? இறையருளை பெறத்தானே மாந்தர்கள் விடாமுயற்சி செய்யவேண்டும். இறையருளைத் தவிர வேறு எதைப் பெற்றாலும் பலனில்லை என்பதை உணரவேண்டும். இதுபோல் இறையருளை பெறுகிறேன் என்று இறை வணக்கம் செய்கிறேன் என்று இறை தங்கியிருக்கும் பிற உயிர்களை வருத்துதல் கூடாதப்பா. இதுபோல் வாழ்விலும் வாழ்விற்கு பிறகும் உடன் வருவது கர்மங்கள் என்பதை புரிந்து இதுபோல் கர்ம பாவத்தின் அடிப்படையிலே மனித வாழ்வு அமைகிறது என்பதையும் புரிந்துகொண்டு இயம்புங்கால் கணத்திற்கு கணம் (ஒவ்வொரு வினாடியும்) விழிப்போடு வாழ பழக வேண்டும். இதுபோல் பொறுமை விடாமுயற்சி பெருந்தன்மை சகிப்புத்தன்மை இரக்கம் கருணை அன்பு என்ற குணங்களை வளர்த்துக் கொண்டே செல்ல செல்ல இறையருள் தேடி வந்து கொண்டே இருக்கும்.

இதுபோல் தொடர்ந்து இறையருளை பெறவேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதன் முதலில் விடவேண்டியது ஆளுமை குணத்தை. தான் எண்ணுவதை தான் நினைப்பதை பிறர் செய்ய வேண்டும். தான் எதை ஆசைப் படுகிறோமோ அதன்படி தன்னை சுற்றியுள்ளவர்கள் நடக்க வேண்டும் என்ற தன்முனைப்போடு இருக்கக் கூடிய அந்த ஆளுமை குணத்தை ஒரு மனிதன் விட்டொழித்தால்தான் இறையருளை நோக்கி அவன் மனம் பயணம் செய்ய துவங்கும். இந்த ஆளுமை குணம்தான் பல மனிதர்களை அதள பாதாளத்திற்குள் தள்ளுகிறது. வேண்டுமானால் ஒருவரிடம் இருக்கக் கூடிய தனத்திற்காகவோ பதவிக்காகவோ மற்றவர்கள் அடிபணிவதுபோல் பாவனை செய்யலாமே ஒழிய உண்மையான அடிபணிதல் என்பது இராது. எனவேதான் பிற மனிதர்களை அன்பால் கருணையால். உதவி செய்து அடிமையாக்கலாம். ஆனால் அதிகாரத்தால் அடிமையாக்குதல் என்பது எக்காலமும் நீடிக்காது அது இறையருளையும் பெற்றுத் தராது. இறை தான் படைத்த உயிர்கள் ஒன்றுக்கொன்று சமாதானத்துடனும் சத்தியத்துடனும் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனும்தான் படைத்திருக்கிறது. ஆனாலும்கூட அவ்வாறெல்லாம் நிகழ்வதில்லை. காரணம் இந்த ஆளுமை குணமும் தன்முனைப்பும் ஒரு மனிதனை வெறிகொண்டு எழச்செய்து அதனாலே பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தி காலகாலம் தொடர்ந்து அந்த ஆத்மாவை பாவப் படுகுழியிலே வீழ்த்திவிடுகிறது. எனவேதான் இந்த தன்முனைப்போடு கூடிய ஆளுமை குணம் அது ஆணோ பெண்ணோ அது யாரிடமும் இல்லாமல் இருப்பதே இறைவனின் அருளைப் பெறுவதற்கு மிகப்பெரிய வழிமுறையாகும்.

ஆகுமப்பா அதுபோல் ஒருவேளை ஒருவன் அள்ளியள்ளி தர்மங்கள் செய்யலாம். அனேக ஸ்தலங்கள் சென்று தரிசனம் செய்யலாம். அனேக பாழ்பட்ட ஆலயங்களை எழுப்புவிக்கலாம். ஆனாலும் கூட எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் தேவையற்ற ஒரு தீக்குணம் இருந்து விட்டால் அது ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் போல. முன்னமே யாம் உதாரணம் இயம்பியதுபோல வித்தையிலே பல்வேறு பாடப்பிரிவுகள் இக்காலத்திலே இருக்கிறது. அது மொத்தம் ஐந்து என்றால் நான்கிலே தேர்ச்சி பெற்று ஒன்றிலே தேர்ச்சி பெறவில்லையென்றால் தகுதிச் சான்றிதழை வித்தைக் கூடம் தராது. ஐந்திலேயும் தேர்ச்சி பெறவேண்டும். அதைப் போலத்தான் இறை வழியில் வரக்கூடியவர்கள் நான் நித்தமும் பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரம் சொல்லி பூஜை செய்கிறேன். நித்தமும் எதாவது ஒரு ஆலயம் செய்கிறேன் என்றெல்லாம் கூறினாலும் கூட இதைத் தாண்டி மனித நேயத்துடன் நடந்து கொள்கிறானா? என்றுதான் இறை பார்க்கும். எனவே இதுபோல் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோட இறையருளை பெறுவதற்கு இந்த சிந்தனை உதவி செய்யும்.

One thought on “ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 351

  1. வடிவேல் சண்முகம் Reply

    சிவாய நம
    🙏🕉️🌹🔥☸️
    மிகவும் அற்புதமான கருத்து “நான்” “என்னால்” “எனது” என்ற எண்ணம் நம்மை விட்டு வெளியேறினால் சகலமும் நலம் பயக்கும்.
    சிவா திருச்சிற்றம்பலம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.