ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 208

கேள்வி: தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள்:

இறைவன் அருளால் தண்டமும் அங்கே ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. அன்பை போதிக்கின்ற மகான்களும் ஞானிகளும் ஆயுதம் வைத்திருப்பார்களா? அப்படியிருக்க அன்பே வடிவான கருணையே வடிவான இறைவன் கையில் ஆயுதம் இருக்குமா? அப்படியல்ல. இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும் சூட்சுமமும் என்ன? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு. ஒரு காவலன் கையில் இருக்கின்ற ஆயுதம் மனிதனுக்கு அச்சத்தை தராது ஏன்? அது சமூகத்தைக் காப்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகாரம். நாட்டை பாதுகாக்க ரணகளத்தில் பணியாற்றுகின்ற மனிதரிடம் ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை யாரும் அச்சத்தோடு பார்ப்பதில்லை. ஆனால் ஒரு கள்வன் கையில் ஆயுதம் இருந்தால் அச்சத்தோடு பார்க்கிறார்கள். எனவே ஆயுதம் என்பது பொதுவாக பார்த்தால் அது அஃறிணை. ஆனால் யாரிடம் இருக்கிறது? என்பதை பொறுத்துதான் அதன் பலனும் பலாபலனும். ஆனாலும்கூட இறைவன் கையில் ஆயுதம் இருப்பது அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்து கொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும் (கைகளும்) சிரங்களும் (தலைகளும்) கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படிதான் இறைவன் இருக்கிறாரா? இல்லை. நினைத்தவர் தம் மனதிலே எப்படி நினைக்கிறார்களோ அப்படி காட்சி தரக்கூடிய நிலையில்தான் பரம் பொருள் இருக்கிறது.

எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம்? வேல் ஆயுதம். அந்த வேல் மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க முழுக்க ஞானத்தை தரக்கூடிய வேலாகும். இரத்தின வேல் என்று கூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைர வேலும் இருக்கிறது. சில வகை தோஷங்களை வைரம் போக்கும். சில வகை தோஷங்களை வைரம் தரும். வைர வேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சில வகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைர வேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே பாசத்திலிருந்து பந்தத்திலிருந்து உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்று இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.

ஆக மனிதனுக்கு யார் எதிரி? என்றால் புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக் கூடிய களைகள் பதர்கள் தேவையற்ற எண்ணங்கள் சபலங்கள் கீழான எண்ணங்கள் இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான். தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம் வேலாயுதம். இது போன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக் கொண்டு அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும் மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே பொறாமை எனும் அசுரன் காமம் எனும் அசுரன் சபலம் எனும் அசுரன் வேதனை எனும் அசுரன் விரக்தி எனும் அசுரன் கோபம் எனும் அசுரன் இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம் தண்டாயுதம். அந்த தண்டு முதுகிலே மையப் பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இது தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே பொதுவாக அதன் பொருள் மையம். அங்கே தண்டம் என்பது மனிதரிடம் இருக்கக் கூடிய எல்லா வகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால் சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக் கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும். நேர்படும் நிரல்படும் உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.