ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 236

கேள்வி: எந்த சூழ்நிலையிலேயும் மனதில் நினைத்து சொல்லக்கூடிய மந்திரம் எது?

இறைவனின் கருணையைக் கொண்டு இப்பொழுது பஞ்சாட்சரம் என்று யாம் உரைத்தால் ஒருவன் வினவுவான் (கேட்பான்). ஏன் அட்டாட்சக்ஷரத்தைக் கூறக் கூடாதா? என்று. அட்டாக்ஷரம் என்று நாங்கள் கூறினால் இன்னொருவன் வினவுவான் ஏன் சடாக்ஷரத்தைக் கூறக் கூடாதா? என்று. தேவாரத்தை ஓது என்று கூறினால் ஏன் திருவாசகத்தை ஓதக்கூடாதா? என்பான். இல்லை ஆழ்வார்களின் மொழியை ஓதக்கூடாதா? என்பான். எனவே இது அவனவன் மனப்பான்மையைப் பொறுத்தது. இன்னும் கூறப்போனால் இன்னும் சிலர் கேட்பார்கள் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்களே? என்று. எனவே மனம் செம்மையடைவதற்கு உண்டான மார்க்கம்தான் மந்திரம். வாய் மந்திரம் ஓத மனம் எதையோ எண்ணினால் அதனால் பலனேதும் இல்லை. கருவிகள் கூட இத்தருணம் இக்காலத்தில் மந்திரங்கள் ஓதுகிறது. அதற்காக கருவிகள் எல்லாம் முக்திக்கும் மோட்சத்திற்கும் சென்று விடுமா என்ன? எனவே மனதிலே ஒரு தெம்பும் மனதிலே குழப்பமற்ற நிலையும் மனதிலே பெருந்தன்மையும் எல்லா உயிர்களையும் நேசிக்கின்ற ஒரு தன்மையும் வளர்வதற்கு உதவுவதுதான் புராணங்களும் இது போன்ற மந்திர உபதேசங்களும். எனவே மந்திரம் என்பதை ஆதி நிலையில் உள்ளவர்கள் வாய்விட்டுக் கூறலாம். பிறகு நாள் செல்ல செல்ல மனதிற்குள் கூறுவது சிறப்பு. எது அவன் இஷ்டதெய்வமாக அதாவது பரம்பொருளின் எந்த வடிவம் அவனுக்குப் பிடித்திருக்கிறதோ அதை அவன் மானசீகமாக எந்த தருணத்திலும் எந்த இடத்திலும் உருவேற்றிக் கொண்டே இருக்கலாம். இது அவனுக்கு மட்டுமல்ல இந்த வாக்கு அனைவருக்குமே பொருந்தக்கூடிய வாக்கு ஆசிகள்.

கேள்வி: மறைந்த முன்னோர்களுக்காக என்ன விதமான பூஜைகள் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையாலே இந்த உடல் உகுந்த எந்த ஆத்மாவிற்காகவும் யார் வேண்டுமானாலும் எந்தவிதமான வழிபாடும் அவரவர்களால் இயன்றளவு செய்யலாம். அனைத்தையும் விட அந்தந்த ஆத்மாவின் நினைவாக இயன்றளவு தர்ம காரியங்களை செய்தால் அது மிகவும் உயர்வாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.