ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 44

கேள்வி: தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?

இறைவனின் கருணையைக் கொண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும் பொழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது. பொதுவாக கூறுகிறோம். தர்மம் செய்ய செய்யத்தான் தர்மத்தின் அனைத்து நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும். இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களின் தேவையறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல் திதி பார்க்காமல் நட்சத்திரம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் கிழமை பார்க்காமல் தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை தேவைப்படும் தருணத்தில் தரலாம். யாருக்கு தந்தாலும் நன்மைதான். இருந்தாலும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாயக் கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டோம். இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைதான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறோம். அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை தர்மத்தை செய்யும் பொழுது அவன் அதனை முறைக்கேடாக பயன்படுத்துகிறான். எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் கொள்வது? என்றால் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு இது ஏற்புடையது இல்லை என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து கொண்டே போனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது.

இறைவன் இவ்வாறு பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஔி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒரு பொழுதும் சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்ரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.