ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 395

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் போகனை பணித்தால் அவன் ஒதுங்கி விடுகிறான் இவையெல்லாம் தன்னால் ஆகாது என்பதுபோல. இருப்பினும் சுவாசம் குறித்து கூறி சென்றிருக்கிறான். அதனை மீண்டும் மீண்டும் கேட்க பல்வேறு புதிய பொருள் சேய்களுக்கு புரியும். அது ஒருபுறமிருக்க சித்தன் வாக்கு என்றால் ஏதோ வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ளலாம். எங்கள் குடும்பத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வை தேடி வரலாம். எங்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடலாம் என்று வந்தால் ஒன்றும் புரியவில்லை. ஏதோ கூறுகிறார்கள். வெறும் தத்துவார்த்த விளக்கமாக இருக்கிறது. எமக்கு இவையெல்லாம் தேவையில்லை. என்று எங்கள் வாழ்வியல் பிரச்சினைகள் தீரும்? என்று எங்கள் பொருளாதார நெருக்கடி தீரும்? என்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு தீரும்? என்று எங்கள் சேய்கள் எங்கள் பேச்சைக் கேட்பார்கள்? என்று எங்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி மலரும்? என்று எண்ணுகின்ற எண்ணங்கள் இங்குள்ள சேய்களுக்கு அதிகம் அதிகம். எனவேதான் இதுபோல் தத்துவம் தாண்டி பக்திமார்க்க வழியை கூறுகிறோம்.

முன்பே அன்றொரு உபதேச பணி புரிகின்ற அன்னவன் இல்லத்தில் கூறினோம். அதுபோல் பரிகாரத்தை தொடர்ந்தே இதுபோல் மீண்டும் கூறுகிறோம். பல்வேறு தடம் சென்று வழிபட முடியாத அரங்கத்தில் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இருந்தாலும்கூட தூர தூர தேசம் சென்று தூர தூர ஸ்தலங்கள் செல்வதால் சில சூட்சும கர்மவினைகள் அலைச்சலாலும் மன உளைச்சலாலும் தன வியத்தாலும் தீரும் என்பதால்தான் சில ஸ்தலங்களை ஸ்தல பயணங்களை யாங்கள் அடிக்கடி சேய்களுக்கு அறிவுறுத்துகிறோம். இதனை நன்றாக புரிந்து கொள்ள நன்றாம். இதுபோல் ஆதிரை மீன் என்றாலும் அவன் அரவுக்கு சொந்தம் என்பதால் நன்றாக அரவின் (ராகு) பிடியில்தான் அனைவரும் இருக்கின்ற நேரமிது காலமிது. நன்றாய் சேய்கள் கடும் மன உளைச்சல் நீண்டகால துன்பம் தொடர்ந்து எத்தனை போராடினாலும் அறிவை பயன்படுத்தினாலும் துன்பத்திலிருந்து வர முடியவில்லை என எண்ணுகின்ற அனைத்து சேய்களுமே அரவு (நாக) தோஷ நிவர்த்தி ஆலயம் சென்று மனமார பிரார்த்தனை செய்ய நன்று. நன்றாய் அதனையும் தாண்டி கடும் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. எங்களின் நியாயமான தேவைகள்கூட நிறைவேறவில்லை என எண்ணக் கூடியவர்கள் தம் மனசாட்சியின்படி தனக்கு வந்துள்ள ருணம் (கடன்) நியாயம் என எண்ணக் கூடியவர்கள் தன்னுடைய அறிவைக் கொண்டு நியாயமாக அந்த ருணத்தை தீர்க்கலாம் என்ற வழிமுறையை பின்பற்றியும் தீர்க்க முடியாதவர்கள் நன்றாய் ஒவ்வொரு அரவு வேளையிலும் (ராகு காலத்திலும்) நன்றாக அன்னை துர்க்கையை மனமார பிரார்த்தனை செய்ய தொடர்ந்து நல்லதொரு மாற்றத்தை மெல்ல அறியலாம்.

கடும் தோஷம் உள்ளதால் குடும்பத்தில் ஒன்று மாற்றி ஒன்று பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறது அல்லது திடீர் திடீரென கடுமையான விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. வெறும் மருத்துவ வியமாகவே இருக்கிறது. எத்தனைதான் மாற்றி மாற்றி கவனமாக வாழ்ந்தாலும்கூட குடும்ப உறுப்பினர் யாராவது மருத்துவ செலவுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கடும் பிணி அல்லது இன்ன பிணி என்று கண்டுபிடிக்க முடியாமல் போராட வேண்டி இருக்கிறது என வருந்துகின்ற சேய்கள் அதே அரவு காலத்திலே பைரவரை நோக்கி சென்று நல்விதமாய் பரிபூரணமாய் பிரார்த்தனை செய்ய நன்றுதான். இதுபோல் நன்றாய் முன்பே கூறியபடி சேய்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பிராயச்சித்தங்களையும் செய்து விட்டோம். முடிந்தவரை அனைத்து ஸ்தலங்களும் சென்றுவிட்டோம். ஆத்மார்த்தமான தர்மங்களையும் செய்துவிட்டோம். இன்னும் திருப்திகரமாய் மணம் கூடவில்லை என வேதனையோடு இருக்கக் கூடிய ஈன்றோர்கள் அதே அரவு காலத்திலே நல்விதமாய் அன்னையின் ஸ்தலம் நோக்கி சென்று அதிலும் தெற்கு நோக்கி பிரதான வாயில் இருக்கக் கூடிய ஆலயமாக தேர்ந்தெடுத்து கீழ்திசை வாசல் இருந்தாலும் தெற்கு வாயிலை மாந்தர்கள் பிரதானமாக பயன்படுத்தும் ஆலயமாக தேர்ந்தெடுத்து அரவு காலத்திலே அன்னையை பரிபூரணமாக தொடர்ந்து வணங்கிவர நன்றுதான். தடைபட்ட மணமும் இதுபோல் பரிகாரத்தால் தீருமப்பா.

நல்விதமாய் நன்றாய் மணம் கூடினாலும் கூடியவர் கூடி வாழவில்லையே? என்ற ஏக்கம் இருக்கின்ற அனைவருமே அரவு காலத்திலே நன்றாய் ஜென்ம மீன் (ஜென்ம நட்சத்திரம்) ஓடும் காலத்திலோ அல்லது சுக்கிர வாரத்திலோ சேர்ந்து வாழ்கின்ற தன்மை பெறத்தானே இளையோன் முருகப்பெருமானின் திருவடியை நோக்கி சென்று நன்றாக பரிபூரண வழிபாட்டை செய்ய நன்மை உண்டாம். நன்றாய் தேகம் மிகவும் பிணியால் வாடிக்கொண்டே இருக்கிறது. தேகத்திலே ஒன்றுபோனால் ஒன்று குறை வந்து கொண்டே இருக்கிறது என எண்ணக் கூடிய சேய்களும் முடவன் வாரம் அதே அரவு காலத்திலே நன்றாய் முக்கண்ணனாகிய சிவனை நோக்கி சென்று பரிபூரண வழிபாட்டை செய்யவும் நன்றாம். எதையும் எங்களால் செய்ய இயலவில்லையே? இருந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் என எண்ணக் கூடியவர்கள் நன்றாய் மூத்தோனை வணங்கி ஒவ்வொரு தினமும் அரவு காலத்திலே வாய்ப்புள்ள ஆலயம் சென்று அந்தந்த மனிதனின் அகவை எனப்படும் வயதிற்கு ஏற்ப நவகிரகங்களை வலம் வந்து வலம் வந்து கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து நன்றாய் பிரார்த்தனை செய்து விட்டு வர படிப்படியாய் கர்மவினைகள் குறையும்.

நாங்கள் தனித்தனி சேய்களுக்கு தனித்தனி பரிகாரங்களை எத்தனையோ முறை கூறியிருக்கிறோம். எதையும் செய்ய முடியவில்லை அல்லது முயற்சி செய்தாலும் தடை வருகிறது என எண்ணக்கூடிய அனைவருமே இதுபோல் கூறிய இந்த ஆகமத்தையோ அல்லது அனைத்தையும் செய்ய முடியாதவர்கள் நவகிரக வழிபாட்டையோ தொடர்ந்து செய்ய நன்மை உண்டு. இதுபோல் எத்தனையோ வழிபாடுகளை செய்து விட்டோம். பெரிய பெரிய பூஜைகளை செய்துவிட்டோம் என்றெல்லாம் மனம் வெதும்பி இருக்கக்கூடிய சேய்கள் கட்டாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாவ வினைகளின் அளவு மலைபோல் இருக்க செய்கின்ற பூஜையோ தர்மமோ கடுகுபோல் இருந்தால் பலன் கிட்டாது. எனவே தொடர்ந்து மனம் தளரா பிரார்த்தனையையும் புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். இதுபோல் வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இல்லத்திலோ அல்லது வாய்ப்புள்ள ஆலயத்திலோ அனைத்து யாகங்களையும் செய்ய மேலும் தேக நலத்தோடு பாவ வினைகள் குறைந்து முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு.

இதோ இங்கு கூடியுள்ள சேய்களிலே மனக்குறை தீராத குறை அச்சம் எதை எண்ணியாவது குழப்பம் வேதனை இருக்கக் கூடிய அனைவருமே இதுபோல் அரவு காலத்திலே நன்றாய் சிகி எனப்படும் கேது பகவானுக்கு பரிபூரண பிரார்த்தனையும் வழிபாடும் செய்து கேதுவின் திருவடியை வணங்குவதோடு விநாயகப் பெருமானின் திருவடியையும் வணங்கி நன்றாக பிரார்த்தனை செய்ய கடும் மன உளைச்சலும் மன வேதனையும் இனம் தெரியாத அச்சமும் விலகும் என்று இத்தருணம் கூறுகிறோம். இதுபோல் கூறிய தத்துவார்த்த விளக்கத்தை நன்றாக புரிந்து கொள்ளவும். அது புரியாத சேய்கள் கூறிய வழிபாடுகளை நன்றாக ஆத்மார்த்தமாக பரிகாரங்களை செய்வதோடு முன்னரே கூறியபடி நவகிரக தோஷம் விலக செய்யக் கூடிய தர்ம காரியங்களையும் கேட்டறிந்து செய்ய நன்றான சூழல் வாழ்க்கையில் ஏற்படுவதோடு பாவ வினைகள் படிப்படியாய் குறையும் என்று கூறி சேய்கள் அனைவருக்கும் இறைவன் அருளால் பரிபூரண நல்லாசிகளை கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.