கேள்வி: பித்ரு கடன் கொடுப்பது எப்படி?
வழக்கமான பூஜை வழிபாடுகளோடு நிறைய ஏழைகளைத் தேடித் சென்று தர்மம் செய்வதுதான் பித்ரு வகை தோஷங்களையும் கடனையும் நிவர்த்தி செய்யும். கால பைரவருக்கு நெய் தீபம் நிறைய ஏழைகளுக்கு வயிறார உணவு வேறு உதவிகள் விலங்கினங்களுக்கு உணவு வேறு உதவிகள் இதோடு மாதம் ஒருமுறை ராமேஸ்வரம் போன்ற ஜோதிர் லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று முறையான வழிபாடு அன்ன சேவை போன்றவை. அதோடு மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தில யாகத்தை உட்பிரிவுகளோடு குறைந்தபட்சம் 2000 மந்திர ஜெபத்தோடு செய்வது நல்லது. அதோடு பசுமாடுகள் தொடர்பான தர்மங்களை செய்வது பித்ரு கடனை குறைக்கும்.
கேள்வி: சாந்தி அடையாமல் அலையும் ஆத்மாக்களுக்கு பசி தாகம் உண்டா?
ஆத்மாவிற்கு உடலுக்கு உண்டான உணர்வுகள் உண்டே தவிர அந்த உணர்வுகளுக்கு உண்டான தேவைகள் இல்லை. பசிக்கும் ஆனால் உண்ண முடியாது. வலிக்கும் ஆனால் வலியை வெளிப்படுத்த முடியாது. கரங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் கரங்கள் இருப்பது போன்ற ஒரு பிரம்மை இருக்கும். உறவுகளை பார்க்கும் பேசும். ஆனால் அதை உணரும் சக்தி அதன் உறவுகளுக்கு இருக்காது. எனவே இது ஒருவகையான அவஸ்தை. இயற்கையான மரணமோ அல்லது மாறான மரணமோ வாழும் போது மனிதனாக வாழ வேண்டும். பாவத்தை மூட்டை மேல் மூட்டை கட்டி கொண்டவனுக்கு தான் செய்ததெல்லாம் பாவம் என்ற உணர்வு வரும்வரை அதற்குண்டான துன்பமும் அதை திருத்தும் வண்ணம்தான் இறைவன் அவ்வாறு அமைத்திருக்கிறான். யாரையும் தண்டிப்பதோ வேதனைப்படுத்துவதோ அல்ல விதியின் வேலை. உணர்ந்து திருத்தப்பட வேண்டும் என்பதுதான்.