ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 273

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதி வசம்தான் என்பது எம் போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல மெல்ல மேலேற்ற கடைத்தேற்ற கரையேற்ற இறைவழி அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இதுபோல் சராசரியாகவே வாழ்ந்து உண்டு உறங்கி ஏதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக் கொள்வோம். அதோடு உண்மையான ஞான வாழ்வையும் அறிந்து கொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை. அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் (சித்தர்களும்) எங்கள் நிலையிலிருந்து மிக மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான (பாவ ஆத்மா புண்ணிய ஆத்மா என்ற) கணக்கினையும் பார்க்காமல் இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த செய்கின்ற ஆத்மாக்களை விட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும் கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப் போலதான் நடந்து கொண்டிருக்கிறது.

இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக் கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்களை மேலும் நன்றாக படிக்க வைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக் கொண்டு இருக்கக் கூடிய கல்வி என்றாலே வெறுக்கக் கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும் கூட வழக்கம் போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாதோ அந்த இடத்தில் பயன் படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும் தன் முனைப்பும் ஆணவமும் கொண்டு அலைவதும் நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்து கொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும் ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கை கூட தராது தடுத்து விடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.