ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 376

கிருஷ்ணனின் பால்ய நண்பரான குசேலர் அக்ஷய திருதியை அன்று அவல் முடிப்பை தந்து திருவருள் பெற்றது அனைவருக்கும் நியாபகம் வந்து இருக்கும்.

அதுபோல் வறுமையில் வாடினாரே குசேலன் அவர் கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க செல்கிறார். எப்படி செல்கிறார்? பல நாள் பட்டினியால் வாடிய வயிறு தேகம் இளைத்து இருக்கிறது. களைத்து இருக்கிறது. உச்சி கதிரவன் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அன்றோ அக்னி நட்சத்திரம் தகித்து கொண்டிருக்கிறது. பாதை ஓரங்களில் நல்ல நிழல் தரும் விருட்சங்கள் இருக்கின்றன. ஆனால் குசேலர் ஓரமாக செல்லாமல் தன் பாதங்கள் புண்பட கடும் வெயிலில் நடந்து செல்கிறார். ஒருவர் கேட்கிறார் குசேலரிடம் அப்பனே உன் உடலோ வறுமையால் வாடியிருக்கிறது. உன் உள்ளமோ வேதனையில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது. இந்த நிலையிலும் உன் உடலை சூரிய ஒளியில் நடந்து ஏன் வாட்டுகிறாய்? அதுதான் சாலை ஓரங்களில் நிறைய விருட்சங்களை மன்னர்கள் வைத்திருக்கிறார்களே? எல்லோரும் அப்படித்தானே செல்கிறார்கள். நீயும் அதில் இளைப்பாறி ஓரமாகவே செல்லலாமே? என்று கேட்கிறார். உண்மைதான் பெரியவரே அப்படியே நடந்து செல்லலாம். என் உடலும் களைப்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த அனல் தாங்காமல் சிறிய சிறிய உயிரினங்கள் எல்லாம் அந்த மரங்களின் அடியில் இருக்கும். என் கண்ணுக்குத் தெரியாமல் அவை அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த உயிரினங்களின் வாழ்க்கையை முடித்து விடக்கூடாதல்லவா நான் நடக்க நடக்க என் பாதங்கள் பட்டு அந்த உயிரினங்கள் எல்லாம் இறந்து விடக்கூடாதல்லவா? கட்டாயம் இந்த கடும் வெயிலில் எந்த உயிரினமும் இராது. எனவேதான் நான் பயமின்றி எந்த பாவமும் சேர்ந்து விடுமோ? என்ற அச்சமும் இன்றி நடந்து செல்கிறேன் என்று நடந்து செல்கிறார்.

உடனே நமது மனது சிந்திக்கும் இது சாத்தியமா? இப்படி நடந்து கொள்ள முடியுமா என்று. காலையிலிருந்து எங்கள் பிரச்சினைகளே பெரிதாக இருக்க எறும்பு எங்கே இருக்கிறது? சிறிய பூச்சி எங்கே இருக்கிறது? பாதங்களில் என்ன மிதிபடுகிறது? என்றெல்லாம் பார்க்க முடியுமா முடியாதுதான் ஒத்துக் கொள்கிறோம். அதற்குதான் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று புண்ணியத்தின் பலனை அதிகரித்துக் கொண்டால் இந்த புண்ணியத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து அப்படி புண்ணியவானின் பாதங்கள் பட்டு இறந்து போன உயிர்களுக்கு இறைவன் மோட்சத்தை தந்துவிடுவார். வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் உயிர்க் கொலை செய்யக் கூடிய நிலை வந்து விட்டால் அந்த உயிர்களுக்கு யார் அப்படி செய்தார்களோ அவர்களின் கணக்கிலிருந்து புண்ணியத்தை எடுத்து அந்த உயிர்கள் நன்றாக இருப்பதற்குண்டான ஒரு சூழலை தருகிறார். இல்லையென்றால் மனித பிறப்பைத் தருகிறார். இல்லையென்றால் மாண்பாக வாழக்கூடிய ஒரு பிறப்பைத் தருகிறார்.

இன்னும் சில சூட்சுமங்கள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தையெல்லாம் புண்ணியம் என்று தர்மம் செய்து விட்டால் தாரம் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? என்றெல்லாம் வறட்டு வாதமும் வீண் விவாதமும் செய்தால் நல்ல பலன்களை இழக்கப் போவது மனிதன்தான். புண்ணியத்தை முறையாக சேர்த்திருந்தால் எதற்கப்பா மருத்துவ சிகிச்சை வருகிறது? மருத்துவ சிகிச்சை வருகிறது என்றாலே செய்த புண்ணியங்கள் போதவில்லை இன்னும் பாவங்கள் இருக்கிறதுதான் என்று பொருள். வீண் விரயங்கள் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது? என்றால் விதி அவன் கணக்கிலிருந்து எத்தனை தனத்தைப் பிடுங்க வேண்டும் என்று இருக்கிறதோ அத்தனை தனத்தை பிடுங்கித்தான் ஆகவேண்டும். தனத்தை இறுக்கிப்பிடிக்கின்ற மனிதனிடமிருந்து விதி தனத்தை பிடுங்குகின்ற விதமே வேறு. தவறான மனிதர்கள் மூலம் அவனிடம் உள்ள செல்வத்தை மறைமுகமாகப் பிடுங்கிக் கொள்ளும். மனமார ஒருவனுக்கு உதவி செய்தால் மனதிற்கும் ஆறுதல் புண்ணியத்திற்கும் புண்ணியம். அப்படி செய்ய இயலாதவர்கள் தர்மத்தை மறந்தவர்கள் அல்லது தர்மத்தை மறுத்தவர்கள் பிறருக்கு உதவி செய்தால் அவன் சோம்பேறியாக மாறிவிடுவான். ஒரு சோம்பேறிக் கூட்டத்தை எதற்கு நாம் உருவாக்க வேண்டும்? என்றெல்லாம் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் எல்லாம் இப்படித்தான். சோம்பேறி கூட்டம் உருவாகினாலும் பாதகமில்லை. ஒரு திருட்டுக் கூட்டத்தையே இவர்கள் எல்லாம் உருவாக்கி விடுவார்கள்.

ஒரு வளமான மனிதனை சுற்றி பல வறுமையான மனிதர்கள் இருந்தால் அவர்களின் குறைந்த பட்ச தேவைகளை அந்த வளமான மனிதன் நிறைவேற்றா விட்டால் எதாவது ஒரு காலகட்டத்தில் அந்த வறுமையான கூட்டம் அந்த வளமான மனிதனைத் தாக்கத்தான் செய்யும். இது மனித இனத்தின் மாற்ற முடியாத விதியாகும். ஆகுமே இரைந்து கேட்கும் போது தராத மனிதன் அடித்துக் கேட்டால்தான் தருவான் என்ற நிலை வந்துவிட்டால் அவன் அடிக்கத்தான் செய்வான். அவன் அடிக்கிறானே அவன் தவறு செய்கிறானே என்று வருத்தப்படுவதை விட அவனை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினோம்? என்று இந்த சமுதாயமும் ஒட்டு மொத்த மனித சமூகமும் சிந்திக்க வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததின் காரணம் மற்ற பிள்ளைகள் வறுமையில் வாடும்பொழுது கொடுத்து உதவுகிறானா? என்று சோதித்து பார்க்கத்தான். ஒருக்கால் அவன் உதவவில்லை என்றால் பிறகு அவன் மீண்டும் பிறவி எடுக்கும் போது வறுமையில்தான் வாட வேண்டும். இத்தனைக்கும் நடுவிலே சிலர் மட்டும் செல்வ செழிப்பிலே இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? தர்மம் செய்ததால்தான். ஆனால் ஒன்று. தர்மம் செய்து அப்படி செல்வத்தை பெற்ற பிறகு மாயையால் இந்த செல்வத்தை மீண்டும் புண்ணியமாக மாற்ற வேண்டும் என்ற கருத்து உதிக்கவில்லை என்றால் இந்தப் பிறவியில் மட்டும் செல்வம் இருக்கும் நிலை ஏற்படும்.

குசேலர் உயர்ந்த பண்புடனும் தர்ம சிந்தனையுடன் நடந்த பொழுது வறுமை அவரை வாட்டிய பொழுது கிருஷ்ண பரமாத்மாவின் கருணையினால் வறுமை நீங்கி வளமை வந்தது. ஒரு மாபெரும் சக்ரவர்த்திக்கு ஈடான செல்வம் அவரிடம் சேர்ந்தது. வறுமையில் இருந்த போது அவர்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். செம்மையாக வாழ்ந்தார்கள். நேர்மையை தர்மத்தை கடை பிடித்தார்கள். தாம் பட்டினியாகக் கிடந்தாலும் வருகின்ற அதிதிக்கு உணவு தந்தார்கள். செல்வம் செல்வம் செல்வம் ருணம் ருணம் ருணம் என்றெல்லாம் எம்முன்னே அரட்டுகிறீர்களே? எளிய வழி மகாலட்சுமியை வணங்குங்கள் வணங்காமல் இருங்கள். புண்ணியம் வரும் என்ற எண்ணமில்லாமல் தர்மத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல்லாம் தேவைகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நேரிய வழியில் பொருளை ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வந்து கொண்டே இருக்கும். இதனை சோதனை மார்க்கமாக செய்து விட்டு பிறகு தர்மம் செய்யலாமா? வேண்டாமா? என்ற முடிவிற்குக்கூட நீங்கள் வரலாம். ஏனென்றால் வழக்கம் போல் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பிறவியிலும் செல்வந்தர்கள் குறைவு வறுமையாளர்கள் அதிகம். காரணம் செல்வந்தர்கள் தாராளமாக தர்மம் செய்வதில்லை. தாராளமாக தர்மம் செய்தவர்கள் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வீழ்ந்தாலும் இறைவன் அவர்களைக் கைவிடுவதில்லை. அப்படியொரு விதியிருந்தாலும்கூட பாதகமில்லை. கொடுத்து கொடுத்து வறுமை வந்தால் அதுதான் உச்சக்கட்ட வளமை. கொடுத்ததால் ஒருவன் வறுமைக்கு வந்துவிட்டான் என்றால் அவன் இறைக்கு பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள் ஆகும். எனவே இந்த கருத்தை மனதிலே வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித் தேடி உதவி செய்வதை லட்சியமாகக் கொண்டு விட்டால் அவர்களுக்கு எம் அருளாசி என்றும் தொடரும். சுபம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.