தாமரை லிங்கம் சோமநாதர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோவில் உள்ளது. புராணபெயர் சதூர்வேதி மங்கலம் பெருமூள்ளுர் பேரூர். மூலவர் ஸ்ரீசோமநாதர். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்க பாணத்துடன் இறைவன் அருளுகின்றார். அம்பாள் சுந்தராம்பிகை குந்தளாம்பிகை. நின்ற கோலத்தில் அருள் காட்சி கொடுக்கின்றாள். தலவிருட்சம் செந்தாமரை கொடி. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.

இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது சிவனது தலையிலிருந்து  விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் அரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தை தன் தவத்தினால் லிங்கமாக உருவாக்கி வழிபட எண்ணம் கொண்டார். தன் எண்ணத்தின் படி பூலோகத்தில் இக்கோவிலின் தீர்த்தத்தில் இருந்து எடுத்த தாமரை மலரை தன் தவ வலிமையால் லிங்கமாக உருவாக்கி பிரதிஸ்டை செய்து வழிபட்டார். பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல் வேறு எங்கும் காண இயலாது.

கிழக்கு நோக்கிய திருவாயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் பைரவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன் மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே  பூலோகம் பூவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர் இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லும் போது ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.

பல யுகங்களாக இருந்த இந்த சிவலிங்கம் இந்த யுகத்தில் வெள்ளத்தின் காரணமாக குளத்திற்குள் மூழ்கியது. பிற்காலத்தில் இந்த குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழ மன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித் தழுவிய போது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து வைரம் வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.