திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம். ஊர் திருப்பட்டூர். புராண பெயர் திருப்பிடவூர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் 15 16 17 ஆகிய நாட்களில் காலையில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது பட்டு வணங்குகிறது. அம்பாள் பிரம்ம நாயகி மற்றும் பிரம்ம சம்பத்கவுரி. அம்பாள் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் இந்த தீர்த்தத்தை பிரம்மா உருவாக்கினார். தலவிருட்சம மகிழ மரம். பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒருவரது தலை எழுத்தை மாற்றும். மேலும் ஒருவர் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தலையில் எழுதியிருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கோவில் தல புராணம் சொல்கிறது. இத்தலம் ஒரு சிவனுடைய தலமாக இருந்தாலும் இங்குள்ள பிரம்மாவின் சந்நிதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலவருக்கு வடக்கு பக்கத்தில் தனிச் சன்னதியில் ஆறேகால் அடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா. இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரம்மா இவர்தான்.

உலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்ற பிரம்மா சிவனைப் போலவே தனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தார். பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்க விரும்பிய சிவன் பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கொய்து விட்டார். பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் பறித்து விட்டார். பிரம்மா இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும் தகுந்த நேரம் வரும் போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார். பிரம்மாவும் இந்த உலகில் அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்து இத்தலத்தில் சாபவிமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிற்கு படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை வழங்கினார். மேலும் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும் ஆற்றலை பிரம்மனுக்கு சிவன் வழங்கினார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. கோவிலின் வெளி பிரகாரத்தில் தெற்க்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரம்மன் சன்னதி உள்ளது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1. பாதாள ஈஸ்வரர் 2. சுத்த ரத்தினேஸ்வரர் 3. தாயுமானவர் 4. கயிலாசநாதர் 5. ஜம்புகேஸ்வரர் 6. சப்தரிஷிஸ்வரர் 7. அண்ணாமலையார் 8. பழமலைநாதர் 9. பிரம்ம புரீஸ்வரர் 10. காளத்திநாதர் 11. ஏகாம்பரரேஸ்வரர் 12. மண்டூகநாதர் ஆகிய 12 லிங்கங்கள் சிறிய சன்னிதிகளில் உள்ளார்கள்.

சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார். இதனால் மகிழ்ந்த விஷ்ணு சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். அதன்படி மகாவிஷ்ணுவுக்கு இங்கு தனிக் கோவிலாக பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.

கோவில் சுமார் 5 ஏக்கர் நிரப்பலளவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. ஜோதிடக்கலையின் தந்தையும் பாம்பு உடலைப் பெற்றவருமான பதஞ்சலி முனிவர் பல இடங்களில் பல முறை உடலுடன் வந்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிராகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சந்நிதி அருகே பாதாள லிங்கம் சந்நிதி உள்ளது. அம்பாள் கோவிலுக்கு அடுத்துள்ள வடக்குப் பிராகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. எதிரே ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி உள்ளது. இந்த கைலாசநாதர் கோவிலைச் சுற்றி பல சிவலிங்க சந்நிதிகள் உள்ளன. கோவில் கருவறைக்கும் ராஜகோபுரத்திற்கும் இடையே சுமார் 300 மீட்டர் இடைவெளி உள்ளது. இடையில் 7 நிலைப்படிகள் உள்ளன. இந்த 7 வாசல்களையும் கடந்து இறைவன் கருவறையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் காணப்படுகிறது. எந்த விளக்கொளியும் இல்லாமலலேயே சிவலிங்கத்தைப் பளிச்சென்று தரிசிக்கலாம். இக்கோயிலிலுள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்று அழைக்கப்படுகிறார் வள்ளி தெய்வானையுடன் (கிரியா இச்சா சக்திகளாக) இக்கோயிலில் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்திருக்கோயிலில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன் பின்னர் படை திரட்டிச் சென்றார். இதனால் திருப்படையூர் எனப்பட்ட இத்திருக்கோயில் திருப்பிடவூர் என்று மருவி தற்போது திருப்பட்டூர் என அழைக்கப்படுகிறது. முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீசுவரர் என்ற பெயரில் உள்ளார். இக்கோவிலில் உள்ள நந்தியை தொட்டுப் பார்த்தால் உண்மையான காளையை தொட்டுப் பார்ப்பது போல் உணரலாம்.

சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்று அழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான். பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் அரங்கேற்றம் செய்த ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு காலகட்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டியிருக்கிறார்கள். பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். கால பைரவர் பொதுவாக அனைத்து சிவன் கோவிலிலும் வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி இருப்பார். ஆனால் இக்கோவிலில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. திருநாவுக்கரசர் திருஅதிகை வீரட்டானம் தலத்திற்குரிய பதிகத்தில் இக்கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுந்தரர் திருவாரூர் தலத்திற்குரிய பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.