குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் கோவில். மூலவர் உன்னி கிருஷ்ணன். சிறுவனானக இருக்கும் இவருக்கு கண்ணன் உண்ணிக் கண்ணன் (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் மற்றும் குருவாயூரப்பன் என்று இவருக்கு பல பெயர்கள் உள்ளது. நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் கிருஷ்ணர். மேலிரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் கீழிரண்டு கரங்களில் கதையும் தாமரையும் கொண்டு துளசி முத்து மாலைகள் கழுத்தில் தவழ கிரீடம் மகர குண்டலம் கேயூரம் கங்கணம் உதர பந்தனம் பூண்டு வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும் வைஜயந்தி மாலையும் கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார். கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பது போல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகள் மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி காலம் 1427 ம் ஆண்டு அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு எதிரில் கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசக் கோவில்களில் இக்கோவில் இல்லை என்றாலும் திருமாலை வணங்குபவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வருகிறது இத்திருக்கோயில். கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தரிசனம் கொடுத்துள்ளார் கிருஷ்ணர். இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. குரு பகவானும் வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு + வாயு = குருவாயூர். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இந்த கிருஷ்ணரின் சிலை. இந்த சிலையை கிருஷ்ணரே செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. கோவிலில் கிழக்கு வாசல் மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும் கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் உள்ளது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே கிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன.

கிருஷ்ணர் அவதார காரியம் முடிந்ததும் வைகுந்தம் ஏகுவதற்கு ஆயத்தமானார். அப்போது அவருடைய நண்பரும் சீடருமான உத்தவர் கிருஷ்ணா நீங்கள் இல்லாத உலகைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே என்றார். அதற்கு கிருஷ்ணர் உத்தவா அவதார காரியம் பூர்த்தியானது என் இருப்பிடம் திரும்புவதுதானே முறை? என்றார். உடனே உத்தவர் இருந்தாலும் நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்? என்று கவலையுடன் கிருஷ்ணரிடம் வேண்டினார். கவலையை விடு உத்தவா நான் இல்லாத குறையை இதோ இந்த விக்கிரகம் தீர்த்து வைக்கும் என்று தன்னைத் தானே சிலையாக வடித்த கிருஷ்ணர் இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கொடுத்தார். எனது அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடலில் மூழ்கி விடும். அப்போது இந்த விக்கிரகம் கடலில் மிதந்து உன்னிடம் வந்து சேரும். அதனை தேவ குரு பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார். கிருஷ்ணர் சொன்னது போலவே அனைத்தும் நடந்தது. வாயு பகவான் புயலாய் மாறினார் மழை கொட்டினார். கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்து உத்தவரிடம் வந்து சேர்ந்தது. அவர் அதனை குரு பகவானிடம் ஒப்படைக்க குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் இவ்விதம் கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த ஊர் குருவாயூர் என பெயர் பெற்றது.

மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால் பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள். தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரே இந்த கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள். அப்போது சிவபெருமான் இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் சேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார். அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள். கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.

பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார். நோய் முற்றிலும் நீங்கிய ஜனமேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார்.

மேப்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்திரிக்கு வந்திருந்த கடுமையான வாத நோயைக் குணப்படுத்தினார் குருவாயூரப்பன். பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடலையும் எழுதி முடிந்தவுடன் பட்டத்திரி குருவாயூரப்பனிடம் இப்படி லீலை செய்தாயா? என்று கேட்பார். அதற்கு குருவாயூரப்பன் தலை அசைத்துச் சம்மதம் தெரிவிப்பார். ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல்.

பட்டத்ரி: நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?
குருவாயூரப்பன்: நெய்ப் பாயசம்.
பட்டத்ரி: ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: அவலும் வெல்லமும் போதுமே.
பட்டத்ரி: அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?
குருவாயூரப்பன்: வெண்ணெய் வாழைப்பழம் பால் தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.
பட்டத்ரி: மன்னிக்க வேண்டும் பகவானே இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.
பட்டத்ரி: அதுவும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.

குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்ட போது அங்குள்ள மரச்சுவர்கள் தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸன்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி. அந்த தூணை வைக்க தீர்மானித்திருந்து இடத்தில் ஒரு நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள் என்றான். அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி திரும்பிப் பார்த்த போது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள் அலங்காரங்கள் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது. ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம். கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர். விளக்கு ஏற்றுவது அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது மலர் மாலைகளை எடுத்துத் தருவது நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிகள்தான்.

குருவாயூரை கிபி 1766 ஆண்டில் மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோவிலை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10000 பானம்ஸ் பணம் அபராதமாக கேட்டார். இந்த அபராதத் தொகை கட்டப்பட்டு மீட்கப்பட்டது. ஆனால் அப்பொழுது நிலவிய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது. மீண்டும் கிபி 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். கோவிலை அழிவிலிருந்து காப்பாற்ற மூலவர் கிருஷ்ணர் விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான். ஆனால் இறைவன் அருளால் சரியான வேளையில் மழை பொழிந்து தீ அணைக்கப்பட்டு கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் கிபி 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான். ஆகையால் செப்டம்பர் 17 ம் தேதி 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உள்ளநாடு பணிக்கர்மார்கள் 1825 முதல் 1900 வரை சுமார் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள். செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும் சொத்து மற்றும் சேவைகள் புரிவது அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1859 முதல் 1892 வரை சிற்றம்பலம் விளக்குமடம் கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில் கொந்தி மேனன் என்ற அதிகாரி கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான புராண நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து அதை நன்கு செய்வதற்கும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் கூலக் களஞ்சியம் என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில் குருவாயூர் கோவிலின் நிர்வாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது. கொடிக்கம்பம் 1952 ஆம் ஆண்டில் தங்கத்தால் போர்த்தப்பட்டது.

ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை நூல் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் என்ற பகுதியில் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம் வில்வமங்களன் மானதேவன் குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். 14 ஆம் நூற்றாண்டின் கோகசந்தேசம் என்ற தமிழ் வரலாற்று படைப்பில் குருவாயூரைப் பற்றிய வரலாற்று செய்திகள் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.