ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பழமையான புகழ் பெற்ற விஷ்ணு கோவில் ஆகும். இக்கோவில் சூளகிரி மலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள். ஏழு அடி உயரத்தில் மேற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். உத்ராயண காலத்தில் (ஜனவரி நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது. இதனால் இக்கோவில் அஸ்தகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தாயார் பெருந்தேவி மகாலட்சுமி. தனி சன்னதியில் மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் பெருமாளின் காவலனாக அனுமன் இருக்கிறார்.

ஏழு மலை ஏழு கோட்டை ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கற்பகிரக நிலை வாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும் காலப்போக்கில் வளர்ந்து மகா மண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் வரலாறு உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் துவாபர யுகத்தைச் சேர்ந்தது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்ற போது பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த சூளகிரி மலைப் பகுதிக்கு வந்தனர். அப்போது அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. இது பஞ்ச பாண்டவர்கள் ஐவரைக் கூறிக்கிறது. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது. அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள் மற்றும் பாளையக்காரர்கள் விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.