மகாமுனிவரான துர்வாசர் ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்ற போது திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார். திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில் பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்து கொள்ள விரும்பினார்.
மன்னரின் மகளை தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார். குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர். தேவர்களும் முனிவர்களும் சித்த புருஷர்களும் கலந்து கொண்ட திருமண விழாவில் மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும் அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன. எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கலகம் ஏற்படுத்தும் நாரதர் தன் பணியை ஆரம்பித்தார்.
தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர் பத்மாவதித் தாயாரிடம் சென்று திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவ்வளவுதான் திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும் கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.
இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும் திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும் பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.