ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 13

கேள்வி: சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் பற்றி

இறைவன் அருளாலே ராகுவின் பிடியில் தற்சமயம் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. கூடவே சுக்ரனின் பிடியில் இருப்பதால்தான் இச்சமயம் உலகிலே பல்வேறு மருத்துவ முறைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா முறைகளும் சித்த முறையிலிருந்து புறப்பட்டது தான் என்பதால் நாங்கள் ஆங்கில முறைக்கு எதிரானவர்கள் அல்ல. எனவே சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக ஆங்கில மருத்துவத்தை பின்பற்றலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிணி வாழ்நாளில் ஒருமுறை வந்து விட்டால் முற்றிலும் அகற்றி விட முடியாது. ஆனால் உணவு பழக்கங்களினாலும் யோகாசனங்களினாலும் உடற்பயிற்சியினாலும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சிறுகுரிஞ்சானோடு நில வேம்போடு வெந்தயத்தையும் சேர்த்து அதிகாலையிலே ஏக (ஒரு) தினம் விட்டு ஏக தினம் மிகச்சிறிய அளவிலே உண்டு வந்தால் நன்மையைத் தரும். ஆனால் எத்தனை மருத்துவம் செய்தாலும் கூட இவற்றோடு மிக மிக மிக மிக உயர்வான முறையிலே இனிப்புகளை செய்து அவைகளை உண்ண முடியாத ஏழைகளுக்கு பாதிக்கப்பட்டவன் அவனவன் கையால் பவ்யமாக சென்று தொடர்ந்து தானமாக அளித்துக் கொண்டே வந்தால் இந்த நோய் கட்டுக்குள் இருக்கும். தரம் குறைந்த விலை மலிவான உணவுப் பொருள்களை அளிப்பதால் பாவங்கள் நீங்குவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்துவிடும் என்பதையும் ஏற்கனவே இருக்கின்ற புண்ணியங்கள் குறைந்துவிடும் என்பதையும் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 12

கேள்வி : நிம்மதி வேண்டும் வழிகாட்டுங்கள்

மதி படைத்த யாருக்காவது நிம்மதி இருக்கிறதா? மதி எனும் பொழுதே அங்கே விதி வந்து விடுகிறது.

விதி மதியை ஆட்சி செய்யும் பொழுது நிம்மதி இருக்காது. மதி விதியை ஆட்சி செய்தால் நிம்மதி வரும். மதி விதியை ஆட்சி செய்யட்டும். என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிந்து செய். எண்ணங்களற்ற நிலைக்கு மனதை கொண்டு போவதின் அடிப்படைதான் பூஜை பிராத்தனை மந்திரம் ஜபம். எண்ணங்கள் தான் ஒரு மனிதனுக்கு பாரமாகவும் சுமையாகவும் சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. எனவே மனதை வெறுமையாக்கு. வாயை மெளனமாக்கு. மனமும் மெளனமாக இருக்க வேண்டும். வாயும் மெளனமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பூரண அமைதி நிலவும். பூரண சாந்தி நிலவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 11

கேள்வி: குருவருள் கிடைக்க வழிகாட்டுங்கள்

குருவை தேடி அலைபவர்கள் குருவருள் வேண்டும் என்பவர்கள் ஒன்பது முக தீபத்தை குரு தட்சிணாமூர்த்திக்கு புனர்பூச நட்சத்திர நாளில் ஏற்றி அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

கேள்வி: பாம்பை அடித்தால் மட்டும் நாகதோஷம் ஏற்படுமா?

விஷம் என்றால் என்ன? பயம் என்ற ஒரு பொருள் உண்டு. பிறருக்கு நஞ்சை உணவிலே கலந்து கொடுப்பவனுக்கும் நஞ்சு கலந்த வார்த்தையை பேசி நயவஞ்சகமாக ஏமாற்றியவர்களுக்கும் ராகு கேது மூலம் சில கெடுபலன்கள் வர வேண்டும் என்பது தான் நாக தோஷமே ஒழிய வெறும் நாகத்தை அடித்தால் மட்டும் அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 10

கேள்வி: தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எவன் ஒருவன் பிறர் நித்திரையை (தூக்கம்) கலைக்கும் வண்ணம் குலைக்கும் வண்ணம் செயல்பட்டானோ அவனுக்கு பிறவி தோறும் நித்திரை சுகம் கிட்டாதப்பா. இதற்கு வழக்கமான பிராத்தனை, தர்மங்களோடு சயன பண்டங்கள் எனப்படும் பாய் போர்வை போன்றவற்றை ஏழை எளியோர்க்கு தானம் செய்வது ஏற்புடையது. பொதுவாக அட்டாமதிபதி பஞ்சத்தில் அமர்ந்தால் நித்திரை சுகம் கெடுமப்பா. விரையாதிபதி வலுத்தாலும் அது சுகாதிபதியோடு சம்பந்தப்படாமல் இருந்தாலும் கூட நித்திரை சுகம் கிட்டாதப்பா. எதன் மீது நித்திரை என்பதல்ல அது மனம் சார்ந்தது. கல்லிலும் மேட்டிலும் கூட ஒருவன் உறங்குவான். சயன பண்டங்கள் குளிர் சாதன வசதிகள் இருந்தும் கூட ஒருவனுக்கு உறக்கம் வராது. எனவே தனக்கு உறக்கம் வரவில்லையே என்பதை விட எத்தனை பேர் உறக்கத்தை நாம் எந்த பிறவியில் கெடுத்தோம் என்பதை உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டால் நித்திரை சுகம் அவனுக்கு கிட்டும். இது தர்ம வழி அற வழி.

மருத்துவ ரீதியாக தூய்மையான தேனை அருந்துவதும் அலோபதிலே அன்னம் ஏற்றுவிட்டு காலாற நடை பயிற்சி செய்வதும் கிழக்கு திசையிலும் மேற்கு திசையிலும் தலை வைத்துப் படுப்பதும் மிகச் சிறந்த வழிகளாகும். மருதோன்றி இலையை சிரசின் அருகே வைக்கலாம். குளிர்ந்த நீரிலே ஸ்நானம் செய்யலாம். எல்லாவற்றையும் விட எப்படி பாதரக்ஷையை (காலணி) வீட்டிற்கு வெளியே விட்டு உள்ளே வருகிறாயோ அப்படி எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் உறக்கம் வருமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 9

கேள்வி : கோவிலை வணங்கும் முறை பற்றி கூறுங்கள்

நீ பக்தி பூர்வமாக கேட்பதால் உரைக்கிறோம். மற்றபடி பாவனை பக்தியை தாண்டிய நிலைதான் இறை. பூரணமான அன்பிற்கும் பக்திக்கும் முன்னால் சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. விதி முறைகளே இறையை காட்டாது. விதிமுறைகளின் படியும் இறைவனை அடையலாம் என்பதை தெரிந்து கொள். முதலில் ஆலயம் சார்ந்த குளத்தில் ஸ்நானம் செய். ஆடவர்கள் (ஆண்கள்) கட்டாயம் மேல் ஆடை அணியக் கூடாது. திருநீறு அல்லது திருமண் அணிய வேண்டும். ஆடை தூய்மை ஆக இருக்க வேண்டும். கூடுமானவரை பருத்தி ஆடைகள் நல்லது. பிறகு ராஜ கோபுரத்தை நன்றாக தரிசித்து வணங்க வேண்டும். உள்ளே சென்று முதலில் த்வஜ ஸ்தம்பம் அதன் அடியில் உள்ள விநாயகனை வழிபட்டு விட்டு ரிஷபத்தை வழிபட்டு த்வார சக்திகளை வணங்கி மூல ஸ்தானம் செல்ல வேண்டும். பிறகு அந்தந்த பரிவார தேவதைகளை வணங்கி பிறகு அன்னையை வணங்கி கடைசியாக நவக்ரகங்களை வணங்கிவிட்டு மீண்டும் த்வஜ ஸ்தம்பத்தின் அடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்க வேண்டும். பிறகு ஏகாந்தமாய் (தனிமையாய்) ஒரு இடத்திலே அமர்ந்து மனம் ஒன்றி இறையை எண்ணி தியானம் செய்ய வேண்டும். பிறகு பதற்றமின்றி எழுந்து ஆலயத்தை அண்ணாந்து வணங்கி வெளியே வர வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 8

கேள்வி: பசுமாடு வளர்ப்பு பற்றி?

எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும் ஆ (பசு) இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து உயர்வான முறையிலே சத்துக்களை கொடுத்து அதனை நன்றாக பராமரித்து ஒரு பசு மாட்டை நல்ல விதமாக வளர்த்த பிறகு அதன் கடைசி காலத்தில் அதிலே இனி அதனால் எந்த வித பயனும் இல்லை என்று ஒதுக்கப்படுகின்ற பசு மாட்டை எல்லாம் கொலை களத்திற்கு அனுப்பாமல் எவன் ஒருவன் நன்றாக உண்மையாக ஆத்மார்த்தமாக தன்னுடைய குழந்தையை போல் பராமரிக்கின்றானோ அவனுக்கு இதுதே கடைசி பிறவி எனலாம். அவன் ஒரு பசுமாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால் அவன் பனிரெண்டு சிவாலயங்களை எழுப்பி கலச விழா செய்த பலனை அடைவான். பசு கன்றுக்குட்டி ஈன்றவுடன் மனிதனுக்குப் பால் தருவதில்லை. கன்றுக்குதான் பால் தருகிறது. பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான். முதலில் கன்று திருப்தியாக திகட்ட திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தை தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம் கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா? என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான். எனவேதான் பசுக்கள் காப்பகங்களுக்குச் சென்று உதவி செய்வது குறிப்பாக பரசுராம தேசத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா.

கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும் இமாசலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள் பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும். அதிலும் பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை. அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை எவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம். வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம். அதை வளர்ப்பதே போதும். அது இறைவனிடம் அவனை அழைத்துச் செல்லும். ஒரு குழந்தையை தாய் தன் இடுப்பில் தூக்கி வைப்பதன் காரணம் அதன் நன்மையைக் கருதியே. பசுவின் நன்மையைக் கருதி அதை அடைத்து வைத்தால் அது பாவமல்ல. மனிதனின் நன்மையைக் கருதி பசுவை அடைத்து வைத்தால்தான் பாவம். கன்று குடித்த பிறகு மிச்சத்தை அபிஷேகம் செய்தால் அது பாவம் அல்ல. அதனால்தான் முன்காலத்தில் மன்னர்கள் ஒரு ஏற்பாடு செய்து ஆலயத்திற்கு அருகிலேயே ஒரு கோசாலை அமைத்து பாலை அபிஷேகத்திற்கு எடுத்துக் கொள்வார்கள். பசுவிற்கு பால் எதற்காகடா ஊறுகிறது? பெற்ற குழந்தை பாலை வயிறு முட்ட குடிக்க வேண்டும். அப்பொழுது யாராவது தடுத்தால் மனிதன் சும்மா இருப்பானா? ஆனால் இவன் மட்டும் எல்லா உயிர்களிடமும் அசுரன் போல் நடந்து கொள்வான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 7

கேள்வி: மனிதர்கள் கோமாவில் விழ என்ன காரணம்?

ஒரு பாவம் குறிப்பிட்ட வியாதிக்கோ துன்பத்திற்கோ காரணம் அல்ல. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த பாவங்களின் விளைவுதான் அவன் அனுபவிக்கின்ற துன்பங்கள். இருந்தாலும் மயக்க பானங்களை எவன் ஒருவன் அதிகமாக விற்பனை செய்து அந்த தனத்தை எல்லாம் பெற்று அதிலே சுக வாழ்வு வாழ்கிறானோ அவன் மறு பிறவியிலே இவ்வாறு ஆள்துயில்(கோமா) நிலையிலே நீண்டநாள் இருந்து பிறகு மறிக்க (இறக்க) நேரிடும். மருத்துவ துறையிலே இருந்து பிறருக்கு மருத்துவத்தை சரியாக செய்யாமல் தன்னுடைய தவறான அறிவால் பிறருக்கு பங்கம் ஏற்படுத்துபவனுக்கு இவ்வாறு ஏற்படும். அதே போல் விற்கின்ற அன்னத்திலும் உணவிலும் தரத்தை குறைத்து வேறு மாற்றுக் குறைவான பொருளை கலந்து விற்பவனுக்கும் இவ்வாறு ஏற்படும். எனவே பலவகையான பாவங்களின் எதிரொலிதான் ஒவ்வாெரு மனிதனும் அனுபவிக்கின்ற துன்பங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 6

கேள்வி: நவகோள்களின் தாக்கத்தில் இருந்து சராசரி மனிதன் தப்பிக்க என்ன வழி?

இந்த கேள்வி எப்படி இருக்கிறது என்றால் ஐயா நான் கொலை கொள்ளை மானபங்கம் செய்து விட்டேன். சிறு குழந்தைகளை விஷம் வைத்து கொன்று விட்டேன். பசுக்களையும் மனிதனுக்கு பயன் தரும் வேறு சில உயிரினங்களையும் கொன்று விட்டேன். என்னை காப்பாற்றுங்கள் என்று ஒருவன் காவல் துறையினரிடம் சொல்வது போல் இருக்கிறது. செய்த பாவத்தின் பலனை தானப்பா ஜாதகம் காட்டுகிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று எப்படி கேட்க முடியும்? இவற்றை எல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். இவை எல்லாம் கர்மா என்று புரிவதே இறைவனின் கருணையினால் தான். இதற்கே பல பிறவிகள் எடுக்க வேண்டும்.

நீ நல்லவனாக ஒழுக்க சீலனாக நன்மையே செய்பவனாக வாழ்ந்து விடு நவகிரகங்கள் எப்போதும் நன்மைகளையே தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 5

கேள்வி: குழந்தைகள் தீய வழியில் செல்லாமல் இருக்க வழிகாட்டுங்கள்

அமாவாசை தோறும் அன்னை காளிக்கு வழிபாடு செய்தால் இதுபோன்ற தவறான பழக்கங்களுக்கு தம்முடைய பிள்ளைகள் ஆட்படாமல் காத்துக் கொள்ளலாம். இது பக்தி மார்க்க வழி. அடுத்ததாக ஒரு அரசு தவறான ஒரு செயலை செய்வதாக எண்ணுகிறான். அதே அரசு பல நல்ல செயல்களையும் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எத்தனை மனிதர்கள் ஆதரவு காட்டுகிறார்கள். இரத்ததானம் செய்யுங்கள் என்று கூறினால் அதைகண்டு மனிதன் இன்னும் அஞ்சுகிறான். உடலை தானம் தரலாம் என்று நாங்கள் கூறினாலும் சாஸ்திரத்தின் விதியைக் கொண்டு இன்னும் மூடத்தனமாகவே வாழ்கிறான். விழி தானம் செய்யுங்கள் என்றால் எத்தனை பேர் அதற்கு முன் வருகிறார்கள்? நல்ல விஷயங்களை பார்க்க சிந்திக்க பின்பற்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அடுத்தது கடுமையான பித்ருதோஷங்கள் தான் குழந்தைகளுக்கு தீய பழக்கவழக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே மனம் தளராமல் நாங்கள் கூறிய வழிபாடுகளை செய்வதோடு கால பைரவர் வழிபாட்டையும் செய்து வந்தால் நல்லதொரு பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 4

கேள்வி: ஒரு பெண் காதல் திருமணம் செய்வது குற்றமா?

சித்தர்களுக்கு தர்மசங்கடமான விஷயங்கள் எத்தனையோ உண்டு. அவற்றில் ஒன்று தானப்பா இந்த காந்தர்வ மனம் (காதல் திருமணம்). ஏனென்றால் எம் முன்னே அமரும் பிள்ளைகள் எங்கள் காதலை இணைத்து வையுங்கள் என்று எங்களிடம் மன்றாடுகின்றனர். அதே சமயம் அவர்களின் பெற்றாறோரும் எம் முன்னே அமர்ந்து பிள்ளைகளின் காதலை பிரித்துவிடுங்கள் என்று கேட்டு விடுகிறார்கள். நாங்கள் யாருக்கு துணை நிற்பது? ஆனால் திரும்ப திரும்ப அடிப்படையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு நல்ல மைந்தனை ஒரு பெண் நேசிப்பது பாவமல்ல. ஜாதி மதம் என்பதெல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டது. எனவே இதில் யாம் கூறுவது மைந்தன் திருப்பதியான குணாதிசயம் கொண்டவன் என்றால் திருமணம் நடத்தி வைப்பதில் எந்த தவறும் இல்லை என்பது தான் எமது பொதுவான வாக்கு.