பாஞ்சசன்ய சங்கு

பாகல்பூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பங்க மாவட்டத்தில் மாந்தர் பர்பத் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலை 700 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளது. மலையின் நடுவில் நரசிம்மர் குகைக்கு அருகில் ஒரு சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் எப்போதும் வறண்டு போகாது. சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்பு நீர் வற்றி விடும். அப்போது இந்த குளத்தில் உள்ள சங்கை பார்க்கலாம். மீதி 364 நாட்கள் 70 லிருந்து 80 அடி தண்ணீருக்குள் இந்த சங்கு இருக்கும்.  இந்த ஒரு நாள் மட்டும் தண்ணீர் குறைந்து சங்கு வெளியே தெரியும் அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து குளம் நிரம்பி சங்கு மறைந்து விடும். இந்த பாஞ்சசன்ய சங்கு கடலை கடையும் போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்தாக கூறப்படுகிறது. கி.பி 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் காமதேனு மற்றும் வராகி ஆகியோரின் பல அரிய சிற்பங்கள் இந்த கோவில் இருக்கும் மலையைச் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

பழமையான நவகிரகங்கள்

சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.

லலிதா சஹஸ்ரநாமம்

ஆதிசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி? என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர் தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும் அதனைச் சரி பார்க்காமல் தான் கொண்டு வந்து தந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்து கொண்ட சங்கரர் அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தார். சௌந்தர்ய லஹரி பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால் லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் செய்ய இயலவில்லை.

பிற்காலத்தில் ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்ற வரும் சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக் கொண்டாள் அம்பிகை.

வஜ்ராயுதம்

ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர் அதர்வண முனிவர் சிட்டி தேவி ஆவர். இவருடைய தந்தையே அதர்வண வேதத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். ததீசி முனிவரின் மனைவி சுவர்ச்சா ஆவார். இவர் ஒரு சமயம் அரசன் ஒருவனுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இதனால் முனிவருக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. சண்டையின் முடிவில் ஏராளமான காயங்கள் முனிவருக்கு உண்டானது. ததீசி முனிவரும் சுக்ராச்சாரியாரின் உதவியால் காயங்கள் நீங்கப் பெற்றார். பின் சுக்ராசாரியார் ததீசி முனிவருக்கு ம்ருத்யுஞ்ச சஞ்சீனி மந்திரத்தை போதித்தார். மந்திர உபதேசத்தின் பலனாக முனிவரின் உடல் மின்னல் போன்று வலிமை மிக்கதாக மாறியது. பின் முனிவர் அரசனுடன் ஏற்பட்ட சண்டைக்காக மனம் வருந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். இறுதியில் சிவபெருமான் முனிவருக்கு காட்சி தந்தார். பின் முனிவரை எவரும் துன்புறுத்த முடியாது. எவரும் முனிவரைக் கொல்ல முடியாது. முனிவரின் உடல் மற்றும் எலும்புகள் வஜ்ரம் (மின்னல்) போன்று உறுதியானவையாக இருக்கும் என வரங்களை வழங்கினார். பின் ததீசி முனிவரும் காட்டில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

அப்பொழுது பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் முடிவு மேற்கொண்டனர். தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது என்று கூறினார். தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள் என்று கூறினர். முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார். பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர். ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார் நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை. ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

சிலகாலம் சென்ற பின்பு விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார். அவரிடம் இருந்து அசுரன் எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ பஞ்சபூதத்தாலும் எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரம் வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார். வரத்தின் காரணமாக ஆவணம் தலைக்கேற உலக உயிர்களை விருத்தாசுரன் துன்புறுத்தினான். எந்த ஆயுதத்தாலும் அசுரனை கொல்ல இயலாது என்பதை அறிந்த இந்திராதி தேவர்கள் மிகவும் கவலையுற்றனர். அவர்கள் சிவபெருமானிடம் விருத்தாசுரனின் அழிவிற்கு வழிகூறுமாறு வேண்டினர். சிவபெருமானும் உங்களின் பிரச்சினைக்கு ததீசி முனிவர் தீர்வு சொல்வார். நீங்கள் அவரைச் சந்தியுங்கள் என்றார். அதன்படி இந்திராதி தேவர்கள் முனிவரை சந்தித்து விருத்தாசுரன் பற்றியும் அவனுடைய வரத்தினைப் பற்றியும் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட முனிவர் தியானத்தில் நடக்கப் போவதை அறிந்து பின் தனது உடலில் உள்ள சக்தி ஊட்டம் பெற்ற முது கெழும்பை இந்திரனிடம் ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கூறி தன் உடலை விட்டார். முனிவரின் முதுகெலும்பு இந்திரனின் வலிமை மிக்க வஜ்ராயுதம் ஆயுதமாகவும் விளங்கியது.

பலசாலிகளான கருட பகவானும் அனுமனும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் ஒரு முறை தாக்கப்பட்டனர். இந்த ஆயுதத்தை பெருமைப்படுத்த எண்ணி ஆயுதத்தை எதிர்க்காமல் பணிந்து நின்றார்கள். இதன் விளைவாக கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும் அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநீறு

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:

 1. கல்பம்
 2. அணுகல்பம்
 3. உபகல்பம்
 4. அகல்பம்

கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி மந்திரங்களைச் சொல்லி சிவாக்கினியில் இட்டு எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத் தீயில் எரித்து பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

நம்பிக்கை

பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.

சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.

மனம்

மனம் என்பது உழாத நிலம் போன்றது ஆகும். நிலத்தில் கலைகள் தேவையில்லாத முட்கள் முளைத்து இருக்கும். மண் முரடாக இருக்கும். கல் பாறைகள் இருக்கும். அதில் தெய்வீக செடியை நட இயலாது. மண்ணில் உள்ள தேவையில்லாத குப்பைகளை நீக்கி மண்ணை முதலில் ஏர் உழுது பன்படுத்திய பிறகுதான் செடியை நட வேண்டும். அப்போது செடியானது நன்கு வளரும். நிலத்தை உழுது பன்படுத்துவது போல நம் மனதையும் இயமத்தால் தீயவற்றை நீக்கி மனதால் நன்மை தரக்கூடிய நியம வழியை கடைபிடித்து தெய்வீக செடியை நட்டு வைத்தால் இறைவன் அங்கு வந்து அமர்வான்.

இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

 1. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
 2. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
 3. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
 4. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
 5. பிறர் கொடுக்கும் பரிசுகளை ஆசையினால் பெற்றுக் கொள்ளாமை.
  இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.

நியமம்: நன்மைகளைப் பெறுவது

தவம் ஜபம் சந்தோஷம் தெய்வ நம்பிக்கை தானம் சிவவிரதம் சித்தாந்தக் கேள்வி சிவபூசை ஞான அறிவு நாணம் ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும் போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.

இதனை தொடர்ந்து செய்பவர்களுக்குள் இறைவன் வந்து அமர்வான். இதனை திருமந்திரம் அட்டாங்க யோகம் தலைப்பில் வரும் பாடல்களில் தெரிந்து கொள்ளலாம்.

தச வாயுக்கள்

 1. உயிர் காற்று (பிராணன்) – மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
 2. மலக் காற்று (அபானன்) – கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.
 3. தொழிற் காற்று (வியானன்) – நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டுசெல்லும்
 4. ஒலிக் காற்று (உதானன்) – இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும்
 5. நிரவுக் காற்று (சமானன்) – சத்துக்களை உடல் முழுதும் சம அளவில் கொண்டு சேர்ப்பது.
 6. விழிக் காற்று (நாகன்) – பார்வைத் திறன் அளிப்பது உணர்ச்சிகளை தூண்டக் கூடியது
 7. இமைக் காற்று (கூர்மன்) – கண்ணீரை வரவழைத்தல் சிரித்தல் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது.
 8. தும்மல் காற்று (கிருகன்) – நாவில் சுரப்பையும் பசி தும்மலுக்கு காரணம்
 9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) – கொட்டாவி விடுதல் விக்கலுக்குக் காரணம்
 10. வீங்கக் காற்று (தனஞ்செயன்) – நினைவற்ற நிலையில் உடலை வீங்கச் செய்தல் (பெருக்க குறைக்க) போன்றவைகளுக்குக் காரணம்

உடலில் இந்த தச வாயுக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. இந்த பத்து வாயுக்களுடன் சில துணை வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவை

முக்கியன் – உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வைரவன் – கபத்தை உருவாக்கும்.
அந்திரியாமி – பிராணனை உருவாக்குதல்.
பிரவஞ்சனை – பிராண வாயுவின் நண்பன் இக்காற்றின் துணையுடன் தான் சுவாசம் நடக்கிறது.

இந்த பத்து காற்றுகளும் ஒரு மனிதன் இறக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கும்? முதலில் இவ்வுடலை விட்டு பிரிவது உயிர்க் காற்றும் நிரவுக் காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்து விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. மற்ற காற்றுகள் உயிரில்லாத அந்த சவ உடலில் இருந்து கொண்டிருக்கும். ஒருவர் இறந்து விட்டால் உயிர் சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்து விடுவதில்லை. இரண்டு வாயுக்கள் தவிர மற்ற 8 வாயுக்களும் இறந்த உடலில் 11 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை இருக்கும். அது வரை நமது சவ உடலில் முடியும் நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல் பட்டுக் கொண்டிருப்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலை விட்டு 8 காற்றுகளும் ஒவ்வொன்றாக மெதுவாகவே வெளியேறும். சவ உடலை விட்டு வெளியேறும் வரையில் சவ உடலை வீங்க வைப்பதும் கெட்டுக் போக வைப்பதும் நவ துவாரங்களில் நுரை நீர் வரச் செய்தல் உடம்பை துர் நாற்றம் எடுக்கச் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்கிறது. எப்போது இந்த வேலை முடிகிறதோ அது வரை சவ உடலில் இக்காற்றுகள் இருக்கும். இறுதியாக தனஞ்செயன் என்ற காற்று வெளியேறும். தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

வள்ளலார் இப்படி நடக்கக்கூடாது என்றுதான் இறந்த உடலை புதைக்க சொல்கிறார். புதைக்காமல் எரித்து விட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போலாகும். எரித்தல் நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக் கூடிய தனஞ்செயன் வாயு இடுகாட்டில் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் டப் என்று சப்தத்துடன் வெடித்து வெளியேறும். இந்த தனஜய வாயுவின் உதவியுடன் பல ஞானிகள் யோகிகள் இறந்த நபரை மீண்டும் உயிருடன் வரச் செய்திருக்கிறார்கள்.

பல யோகிகள் ஞானிகள் உடலை விட்டு விட நினைக்கும் போது தங்களது யோக சாதனைகளால் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் முழுமையாக எடுத்துக் கொண்டு உடலை விட்டு விலகுவார்கள். தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இதன் காரணமாகவே இவர்களது உடல் எத்தனை வருடங்களானாலும் கேட்டுப் போகாமல் இருக்கும்.

ஜீவ சமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்து வித வாயுக்களுமே வெளி வருவது இல்லை. காரணம் இவர்கள் விரும்பும் போது அல்லது உலக நன்மைக்காக இவர்கள் மீண்டும் இவ்வுலகில் அந்த உடலுடன் வெளி வருவார்கள். காற்றுடன் ஜீவ சமாதியில் இருப்பவர் யார் காற்றை எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்ற ஞானிகள் யார் என்பதை சராசரி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அமைதி

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம்.
செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம்.
ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை.
பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாக்ஷம்.
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா.
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்.
சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம்.
சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி.
இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில்.
உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம்.
தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு.
இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.

 1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

 1. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

 1. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

 1. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

 1. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

 1. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

 1. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

 1. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.