மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -3

கிருஷ்ணர் பீஷ்ரிடம் தர்மத்திற்கு உரிய பாங்குகள் அனைத்தையும் தாங்கள் யுதிஷ்டிரனுக்கு எடுத்து புகட்ட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகிறேன் என்றார். அதற்கு பீஷ்மர் தர்மத்தை எடுத்து புகட்டுவதற்கு உங்களைவிட மிக்கவர் யாரும் இல்லை. தாங்கள் முன்னிலையில் வைத்து இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து விளக்குவது? மேலும் என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. உடலில் வேதனையும் அதிகரித்து வருகிறது. இந்த உடலை நான் ஒதுக்கித்தள்ள நான் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார். அதற்கு கிருஷ்ணர் உங்கள் ஞாபக சக்தியை நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். உங்கள் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நீங்கள் எப்பொழுதும் இருந்து வருகின்றீர்கள். உங்கள் உடல் வலிமையான ஆற்றலை நெறி பிறழ்ந்து போன ஒரு பேரனுக்கு கொடுத்தீர்கள். உடல் வலிமை ஆற்றலை விட மிகவும் பெரியது அறிவு. தங்களிடம் உள்ள அறிவு தங்களோடு மறைந்து போக கூடாது. அப்படி போனால் நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ள நோக்கமும் நிறைவேறாமல் போகும். ஆகையால் அந்த அறிவை இந்த தகுதி வாய்ந்த மற்றொரு பேரன் யுதிஷ்டிரனுக்கு கொடுத்து உதவுங்கள். அதன் மூலம் இந்த அறிவு இந்த உலகிற்கு சொந்தமாகும். இந்த அறிவு ஞானத்தை கொடுப்பதின் வாயிலாக தாங்களின் பெயர் நிலவுலகில் எப்பொழுதும் நிலைத்திருக்கும். தாங்கள் வழங்குகின்ற ஞானம் நான்கு வேதங்களுக்கு நிகராகும் என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு தர்மத்தை கூற சம்மதம் தெரிவித்தார். யுதிஷ்டிரன் கேட்ட கேள்விகளும் அதற்கு பீஷ்மர் கொடுத்த பதில்களும் சாந்தி பருவம் என்று பெயர் பெறுகின்றது. இவை அனைத்தையும் கற்று உணர்வதற்கு மனிதனுக்கு ஒரு ஆயுள் போதாது அவற்றுள் சில மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது

  1. ஊழ்வினை மிகவும் வலியது முயற்சியால் அதை ஓரளவு மாற்றலாம்.
  2. பரம்பொருளுக்கு நிகரானது சத்தியம். சத்தியத்தை கடைபிடிப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைய மாட்டான்.
  3. வாழ்வில் வெற்றியடைய விரும்புகின்றவன் தன்னடக்கம், பணிவு, தர்மம், ஆகியவற்றை கடைபிடித்தல் வேண்டும்.
  4. மானுடன் ஒருவன் மிகவும் கோழை மனம் படைத்தவனாகவோ கல் நெஞ்சம் படைத்தவனாகவோ இருக்க கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  5. தளர்வுற்று சோம்பலுடன் இருப்பது ஒழுக்கமாகது. அதிலிருந்து கேடுகள் பல உருவாகின்றன.
  6. சோம்பலுடன் இருப்பது துருப்பிடித்து போவதற்கே நிகராகும். உழைப்பின் வாயிலாக உலக வாழ்வு ஓங்குகிறது.
  7. இரக்கமும் கண்டிப்பும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் வேண்டும்.
  8. ஒழுக்கமின்மைக்கு இடம் கொடுப்பது மனிதனை வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும்.
  9. மனிதனுக்குள் உண்டாகும் வெறுப்பு விஷமாக மாறிவிடுகின்றது.
  10. அன்பு வல்லமை மிகவாய்க்கப் பெற்றது. அன்பு மனிதனை அக்கத்துறையில் எடுத்துச் செல்கின்றது. வீழ்ந்து கிடப்பவனை மீட்டெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்பு

யுதிஷ்டிரனுக்கு புகட்டப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இவைகளை மக்கள் கடைபிடிப்பதற்கு ஏற்ப மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் புகட்டிய தர்ம சாஸ்திரத்தில் பெரும்பகுதி மோட்ச தர்மத்தை பற்றியதாகும்.

சாந்தி பருவம் முற்றியது. அடுத்து அனுசாஸன பருவம்.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -2

யுதிஷ்டிரன் இப்போது மனத்தெளிவு அடைந்திருந்தான். உலக சம்பந்தமான இன்ப துன்பங்களை பொருட்படுத்தாத நடுநிலையான மனநிலைக்கு இப்பொது அவன் வந்துவிட்டான். பொது நல சேவையில் அமைதியுடன் ஈடுபட ஆயத்தமானான். சிரார்த்தம் செய்யும் ஒரு மாத காலம் முடிவற்றது. நதிக்கரையிலிருந்து நகரத்தை நோக்கி அரச குடும்பம் அமைதியாக நகர்ந்தது. திருதராஷ்டிரரின் ரதம் முதலில் சென்றது. அதனை தொடர்ந்து யுதிஷ்டிரன் ரதமும் மற்றவர்களெல்லாம் முறையாக பின் தொடர்ந்து வந்தனர்.

முடிசூட்டும் மண்டபத்திற்கு கிருஷ்ணன் யுதிஷ்டிரனை அழைத்து வந்து குருகுலத்தின் அரச சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தான். அந்த முடிசூட்டு விழா ஆடம்பரமில்லாமல் மிகவும் சுருக்கமாக முடிந்தது. அரச பதவியை ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் பெரியப்பா திருதராஷ்டிரரின் பிரதிநிதியாக இருந்து பொதுமக்களுக்கு உள்ளன்போடு பணிவிடை செய்வதாக உறுதி கூறினான்.

பீஷ்மர் தன் தேகத்தை விட்டுவிட உத்ராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்தார். அதிவிரைவில் அவரிடம் சென்று தங்கள் நிலைமையை அவருக்கு தெரிவிப்பது என்று பாண்டவர்கள் முடிவு செய்தனர். கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். பீஷ்மர் போர்க்களத்தில் கூரிய அம்பு படுக்கையில் படுத்திருந்தார். முதலில் கிருஷ்ணன் பீஷ்மரிடம் தான் வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரிடமும் பரஸ்பரம் பாராட்டுதலும் விசாரிப்பதும் அமைதியாக நடந்தது. அதன்பிறகு கிருஷ்ணன் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் தங்களைப் பார்க்க அஞ்சுகிறான். ஏனென்றால் மானுடர்ளை பெருவாரியாக அழித்த யுத்தத்திற்கு காரணமாக இருந்தவன் என்று எண்ணி தங்கள் முன்னிலையில் வர அஞ்சுகின்றான் என்றார். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்திற்கு யுதிஷ்டிரன் மட்டும் காரணம் இல்லை. இந்த பழி பாவத்துக்கு நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். என் முன்பு யுதிஷ்டிரன் வரலாம் என்றார் பீஷ்மர்.

பீஷ்மர் முன்னிலையில் வந்த யுதிஷ்டிரன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். சிம்மாசனத்தில் அரசனாக வீற்றிருக்க தான் விரும்பவில்லை என்றும் செய்த பாவத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள வனத்திற்கு சென்று தவம் புரிய விரும்புகிறேன் என்றான். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்தை தூக்கியவன் நீ அல்ல. அது உன் மீது சுமத்தப்பட்டது. கொடியவர்களை நீ அழித்துள்ளாய். நீ செய்தது பாவம் அல்ல. அது க்ஷத்திரிய தர்மம். ஆள்பலமும் படைபலமும் அதிகம் இருந்த கௌரவர்களுக்காக அதர்மத்தின் பக்கம் நின்று போர் புரிந்த நான் வெற்றியடையவில்லை. தீயவர்களுக்காக நான் போர் புரிந்தும் அந்தப் பாவம் என்னை வந்து சேரவில்லை. ஏனென்றால் என்னிடத்தில் சுயநலம் எதுவும் இல்லை. அது போல் சுயநலம் இல்லாமல் நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுநல கடமையை நிறைவேற்றுவயாக. வனத்திற்குச் சென்று தவம் பிரிவதை விட மேலானது பொது நல சேவையில் தன்னை ஒப்படைப்பது ஆகும். அந்த நலனுக்காக அரசனாக நீ இருப்பாயாக. இது நான் உனக்கு இடும் ஆணையாகும் என்று பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் கூறினார். தங்களின் அணைக்கு அடிபணிந்து வணங்கி தங்கள் கட்டளையை ஏற்கின்றேன் என்று யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கூறினான்.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -1

கங்கை கரை ஓரம் கூடியிருந்த கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. கூட்டம் ஒரு மாதகாலம் தங்கியிருந்து ஈமக் கடமைகளை பக்தியுடன் சிரத்தையுடன் செய்தனர். சடங்குகள் செய்து கொண்டிருந்த பொழுது யுதிஷ்டிரனுக்கு மனவருத்தம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் சிறிதும் இரக்கமின்றி மானிட வர்க்கம் அழிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் நாடு ஒன்றை கைப்பற்றுவதற்கும் வெறும் பகட்டுக்கும் பெருமைக்கும் என எண்ணி யுதிஷ்டிரன் மிக வருத்தப்பட்டான். மேலும் கர்ணனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. தன்னுடைய நண்பனாகிய துரியோதனனுக்கு பணி விடை செய்தல் பொருட்டு இறுதிவரை தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாது தன்னை மறைத்து வைத்தான். தன்னை இது ஒரு தேரோட்டி மகன் என்று எண்ணி ஏளானம் செய்துவந்த தன்னுடைய சொந்த சகோதரர்களோடு அவன் மிகப்பெருந் தன்மையோடு நடந்து கொண்டான். இத்தகைய பரிதாபகரமான சம்பவங்களைக் குறித்து மன வேதனை அடைந்த யுதிஷ்டிரன் நாடு ஆள்வதைக் காட்டிலும் காட்டிற்குச் சென்று கடும் தவம் புரிவது சிறந்தது என்று அவன் எண்ணி காட்டிற்கு செல்வதாக தனது சகோதரர்களிடம் கூறினான். அதற்கு சகோதரர்கள் அனைவரும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாரதரும் வியாசரும் இன்னும் சில ரிஷிகளும் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூற அங்கு வந்தார்கள். அவர்களுக்கு யுதிஷ்டிரன் பரிதாபத்துக்கு உரியவனாக காட்சி கொடுத்தான். யுதிஷ்டிரனின் வருத்தத்தை கண்ட அனைவரும் அவனுக்கு புத்திமதி கூறினார்கள். உலகிலேயே தீமைகள் பல அதிகரிக்கும் போது சண்டைகளை தவிர்க்க முடியாது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். தர்மத்திற்காக சண்டை சச்சரவுகளை கண்டு அஞ்சுகின்றவன் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் ஆகின்றான். வேந்தன் ஒருவன் தனக்கு உரியவன் அல்ல. அவன் மக்களுக்கு கடமைப்பட்டவன் ஆகின்றான். அரசன் தனக்கு உரியவன் எனக்கு என கருதுவது சுயநலத்தோடு கூடிய அகங்காரமாகும். அரசனுக்கு அத்தகைய மனநிலை அவனைக் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும். ஆகையால் சொந்த துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சமுதாய பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும் என்று அவர்கள் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூறினர். யுதிஷ்டிரன் மனத் தெளிவை அடைந்தான். தன்னுடைய துயரத்தை சிறிது சிறிதாக ஒதுக்கித் தள்ளினான்.

தனக்கு ஆட்சிமுறையில் அனுபவம் போதாது என்றும் தனக்கு ஆட்சிமுறை பற்றி விளக்க வேண்டும் என்று வியாசரிடம் யுதிஷ்டிரன் விண்ணப்பித்தார். அதற்கு வியாசர் சர்வகாலமும் தத்துவ ஆராய்ச்சியில் தாம் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை அனைத்திலும் சரியாக அறிந்து கொண்டவன் இல்லை என்றும் இத்துறையில் உள்ள நுட்பங்கள் அனைத்தையும் முற்றிலும் முறையாக அறிந்த பீஷ்மர் ஒருவரே என்று அவர் கூறினார். பீஷ்மர் உலகத்தைப் பற்றிய தத்துவங்களுக்கு ஞான கடலாக விளங்கினார். அத்தகைய ஞானத்தை அவர் பலரிடமிருந்து பெற்று பாதுகாத்து வைத்திருக்கிறார். சந்தர்ப்பம் மீறி போவதற்கு முன்பே பீஷ்மரை அணுகி அந்த ஞான பொக்கிஷத்தை அவரிடம் பெற்றுக்கொள்வது சரியானதாக இருக்கும் என்று வியாசர் கூறினார். கிருஷ்ணன் இந்த கருத்தை முற்றிலும் ஆமோதித்தார். இன்னும் தனது உயிர் தாக்குப் பிடித்து வைத்திருக்கும் பீஷ்மரை விரைவில் அணுக வேண்டும் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆலோசனை கூறினான்.