ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 271

கேள்வி: தவம் பயின்றால் வினை அகலும் நோய் அகலும் என்று எல்லா மகான்களும் சொல்கிறார்கள். ஆனால் ரமண மகரிஷி இறுதிக் காலத்தில் நோய் வாய்ப்பட்டது ஒரு கேள்விக்குறியாக உள்ளது:

தவம் என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்? (மனம் உயிரை நோக்கி உற்று கவனித்து அது என்ன நிலைக்கு செல்கிறது என்பதை கவனிப்பது தவம்). தவம் என்பதில் ஒரு பகுதியை நீ கூறுகிறாய். வள்ளுவன் என்ன கூறியிருக்கிறான்?. உற்ற நோய் நோன்றல் பிற உயிருக்கு தீங்கு செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்று கூறியிருக்கிறான். ஒரு மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொள்ளவும் பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ முயற்சி செய்வதும் தானப்பா மெய்யான தவம். கானகத்தில் (காட்டில்) சென்று பத்மாசனம் இட்டு புருவ மத்தியை நோக்குவது மட்டும் தவம் அல்ல. முதலில் இந்த இக உலகிலே வாழ்க்கையை நேர்மையாக வாழ வேண்டும். நேர்மையாக வாழ்ந்து தனக்கு எதிர்படும் இன்னல்களையெல்லாம் சகித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு ஒருவன் புன்னகையோடு பிறரை எதிர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உன்னதமான தவம் என்பதே அதுதானப்பா. எங்கோ சென்று செய்வது மட்டும் தவம் அல்ல. இந்த தவத்தை முதலில் நன்றாக செய்தால் அந்த தவம் தானாகவே கைவரப் பெறும்.

கேள்வி: தாங்கள் இங்கேயே இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்க வேண்டும். இங்கு மீண்டும் மீண்டும் இதே போல் சத்சங்கம் அருள்வாக்கு நடக்க வேண்டும்:

இறைவன் கருணையால் இறைவன் அருளாணைக்கு ஏற்ப யாம் இது போல தொடர்ந்து நல்விதமாய் சேய்களுக்கு வழிகாட்ட சித்தமாய் இருக்கிறோம். இறைவன் கருணையாலே பலருக்கு ஒருவிதமான குழப்பம் உண்டு. சில சமயம் ஒரு சாதாரண வினாவிற்கு கூட பின்னர் உரைக்கிறோம் என்று கூறுகிறார்களே? என்று. கிரக நிலையும் கேட்கின்ற அல்லது குழுமியுள்ளவர்களின் விதி அம்சமும் எதற்கெல்லாம் சாதகமாக இருக்கிறதோ அதற்கு மட்டுமே ஜீவ அருள் ஓலையிலே வாக்கை உரைக்க வேண்டும் என்பது எத்தனையோ விதிகளில் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் கேள்வி கேட்கின்ற மனிதனோ அல்லது மற்றவர்களுக்கோ அதனை புரிந்து கொள்ளக்கூடிய மனோ நிலை இல்லாத நிலையில் யாம் மெளனத்தையே கடைபிடிப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 269

கேள்வி: முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை பிரிக்க முடியாமல் சிலர் தடுமாறுகிறார்களே?

இறைவன் அருளால் இது குறித்து லோகாய மனிதனிடம் கேட்டால் நல்ல விதமான பதில் கூறுவானப்பா. எம்மிடம் கேட்டால் நாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற பதில் மனிதர்களுக்கு எரிச்சலூட்டும் விதமாகத்தான் அமையும். முதலில் தன் வாரிசுகளுக்கு லோகாய ரீதியாக ஆஸ்தியை சேர்த்து வைப்பதையே நாங்கள் (சித்தர்கள்) தவறு என்று கூறுகிறோம். அப்படி அதை மீறி அதிக அளவு ஆஸ்தியோ பொருளோ பிள்ளைகளுக்கு வந்துவிட்டால் அவர்கள் அதனையெல்லாம் இயன்ற ஏழைகளுக்கு தாராளமாக ஈந்து (கொடுத்து) விடுவதே சிறப்பு. வேறு வழியில்லை. எந்த விதமான தொழிலும் இல்லை. எந்தவிதமான பணியும் இல்லை. எதையும் செய்வதற்கு என் உடலும் மனமும் ஏற்றதாக இல்லை என்பவர்கள் மட்டும்தான் பூர்வீக ஆஸ்தியிலிருந்து ஜீவனம் நடத்தலாம். இல்லையென்றால் அவ்வாறு செய்வதை யாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் கூறப் போனால் பூர்வீக ஆஸ்தி வராமல் ஏதாவது பிரச்சனைகள் இல்லத்தில் ஏற்பட்டால் மிகவும் நல்லது என்று எவன் ஒதுக்குகிறானோ அவனுக்கு இறையருள் என்பது விரைவில் கிட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவனவனும் நேர்மையாக ஈட்டுவதே மெய்யான பொருளாகும். அப்படி குழந்தைகளுக்கு எதையாவது விட்டுச் செல்ல வேண்டுமென்றால் முடிந்தவரை குழந்தைகளுக்கு புண்ணியத்தை விட்டுச் செல்வதே ஈன்றோர்களின் கடமையாகும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளைப் பார்த்து நீ நன்றாகக் கல்வி கற்று நன்றாக தனத்தை ஈட்டி என்னிடம் தா. அல்லது இவ்வாறு சேர்த்து வைத்துக் கொள் என்று ஏதோ அறிவுரை கூறுவதாக நினைத்துக் கொண்டு கூறுகிறார்கள். உண்மையில் மெய்யான செல்வம் என்பது புண்ணியம் ஒன்றுதான். எனவே செல்வத்தை எப்படி நேரிய வழியில் ஈட்ட வேண்டுமோ அப்படி ஈட்டி அதை தக்க மனிதர்களுக்கு அது போன்ற தெய்வீக காரியங்களுக்கு அள்ளித் தருவதுதான் நாங்கள்(சித்தர்கள்) காட்டுகின்ற வழியாகும்.

இவையெல்லாம் எங்களால் ஏற்க இயலாது. ககரம் (கோடி) லகரம் (லட்சம்) பூர்வீக ஆஸ்தி இருக்கிறது என்றால் அதை மனித ரீதியாக தீர்த்துக் கொள்ள மனிதர்கள் முயற்சி செய்ய வேண்டியதுதான். இதையும்மீறி வேறு வழியில்லை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று வேறு வழியில்லாமல் எம்மிடம் வருபவர்களுக்கு நாங்கள் (சித்தர்கள்) கூறுவது பைரவர் வழிபாடு ஒன்றுதான். முடிந்தவரை அன்றாடம் பைரவர் வழிபாடு செய்து பைரவர் மந்திரத்தை உருவேற்றி வந்தால் நியாயமான முறையிலே கிடைக்க வேண்டிய பங்கு கிட்டுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 270

கேள்வி: தியானத்தின் போது இந்த உடல் நானல்ல மனம் நானல்ல என்று உணர்ந்த பின்பு எண்ணங்கள் எழா உணர்வில் வெற்றிடம் கிடைக்கிறது. ஆனால் சிலர் அந்த வெற்றிடம் என்பது வெறும் மனோலயம் மட்டுமே. அதுவே முடிவல்ல. அதற்கு மேற்கொண்டு சாக்ஷி என்ற ஒன்று உள்ளது என்று சொல்லப்படுவது பற்றி:

எண்ணங்களற்ற நிலையை நோக்கி செல்வதே ஒரு தனி மனிதனுக்கு மிகப்பெரிய சாதனைதான். அந்த நிலைக்கு சென்ற பிறகு அடுத்த நிலை என்ன? என்பதை இறைவனே உணர்த்துவார். எனவே எண்ணங்களற்ற நிலை என்பது மிக மிக உயர்ந்த உன்னத நிலையாகும். அதுதான் மனிதனுக்கு அமைதியைத் தருகின்ற மெய்யான சுகத்தைத் தருகின்ற ஒரு நிலையாகும். மனதை உள் நோக்கி ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்த்தால் அந்த மனதிலே என்ன இருக்கிறது? முழுக்க முழுக்க லோகாயம் மட்டும்தான் இருக்கும். அந்த லோகாயத்தை அவன் விட்டுவிட்டால் மனதிலே பெரும்பாலும் வெற்றிடம் இருக்கும். எனவே அதை மேலெழுந்தவாரியாக விடாமல் அழுத்தந்திருத்தமாக விடுவதற்குண்டான முயற்சியிலே மனிதன் இறங்கினால் கட்டாயம் அவன் ஒரு நல்ல மேல் நிலையை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நிலை தாண்டி இறை இருந்தாலும் இந்த எண்ணங்களற்ற நிலையை நோக்கி முதலில் செல்லத்தான் வேண்டும்.

கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?

எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.

சுலோகம் -153

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-34

ஒவ்வோரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருட்களிலும் விருப்பு வெறுப்புகள் மறைந்து இருக்கிறது. மனிதன் அவ்விரண்டு பிடியிலும் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

1.கண் – பார்த்தல் 2.காது- கேட்டல் 3.மூக்கு- நுகர்தல் 4.வாய் – பேசுதல் 5.மெய் – உணர்தல் ஆகிய ஐந்து புலன்களின் வழியே ஆசையும் விருப்பமும் ஏற்படுகின்றன. இவற்றை அனுபவிக்கும் போது அவற்றின் நுகர்ச்சிப் பொருளில் விருப்பங்களும் வெறுப்புக்களும் மறைந்து இருக்கிறது. மனிதன் அவற்றை அனுபவிக்கும் போது சில நேரங்களில் விருப்பங்கள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்புக்கள் ஏற்படும். இந்த இரண்டிலும் மனிதன் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் இறைவனை நோக்கி மேன்மை நிலைக்கு செல்ல விரும்பும் மனிதனுக்கு இவை இரண்டும் மிகப்பெரிய எதிரிகளாக இருக்கின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 268

கேள்வி: சில சமயங்களில் (நாம் செய்யும்) மருத்துவம் (முக்கியமாக குழந்தைகளுக்கு) பலனளிக்காது என்ற போதிலும் ஆலோசனைக் கட்டணம் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

இறைவனின் கருணையாலே எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் அந்த மருத்துவ முறையை கூடுமானவரை பிழையற ஒரு மனிதன் கற்றுக் கொண்டாக வேண்டும். மருத்துவ முறையைக் கற்றுக் கொண்டு அந்த முறையைக் கையாள்வதற்கு முன்னால் கூடுமானவரை மனித தேகத்தைக் குறித்தும் ஒரு மனிதன் அறிந்து கொள்ள வேண்டும். மனித தேக இயக்கத்தை ஓரளவு அறிந்து கொள்ளாமல் மருத்துவம் பார்ப்பது எம்மைப் பொறுத்தவரை ஏற்புடையது அல்ல. இன்னொன்று எந்த மருத்துவமாக இருந்தாலும் அந்த மருத்துவன் நல்ல மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாலும் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலும் கூட அந்த நோயாளிகளில் யாருக்கு அந்த மருத்துவம் மூலம் பிணி நீங்க வேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிறதோ அவனுக்கு நீங்கும். மருத்துவர்கள் சார்பாக செய்ய வேண்டியது கூடுமானவரை நேர்மையான முறையிலே மருத்துவத்தை செயல்படுத்துவது. அடுத்ததாக இதுபோல் மருத்துவத்திலே தலை சிறந்தவனாக எம் சிஷ்யன் போகன் (போகர் சித்தர்) இருந்து கொண்டு இருக்கிறான். அந்த போகனை அன்றாடம் ஒரு நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) எண்ணி வழிபாடு செய்து அந்த மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதும் ஏற்புடையது. மருந்தினை அல்லது மருத்துவ முறையை ஏற்க வரும் பிணியாளர்களும் இறைவனை வணங்கி போகனை வணங்கி அல்லது அவரவர்கள் மார்க்கத்தில் எது இறை என்று கூறப்பட்டிருக்கிறதோ அந்த இறையை வணங்கி அந்த மருந்தினையோ அந்த மருத்துவ முறையையோ பின்பற்ற வேண்டியது அவசியம். இரை (உணவு) சரியில்லாத பொழுது மாற்று இரை (உணவு) என்பதே மாத்திரை ஆகியதப்பா. ஒரு மனிதனுக்கு விதவிதமான பிணிகள் வருவதின் காரணமே அவனிடம் இன்னமும் பாவங்கள் இருக்கிறது என்று பொருளாகும். எனவே தடைபடாத தர்மத்தாலும் தளராத பக்தியாலும் பாவங்களைக் குறைத்துக் கொண்டு மருத்துவத்தை நாடினால் மருத்துவம் பலிதமாகும்.

கேள்வி: ஒரே பிறவியில் அனைத்து பாவங்களையும் நுகர்ந்து முக்தி பெற சித்தர் வழி யுக்தி கூறி ஆசி:

இறைவன் கருணையால் அப்படியொரு யுக்தி இல்லை என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. தாராளமாக இருக்கிறது. ஆனால் அது யாருக்கு எந்த ஜாதகனுக்கு ஏற்புடையதோ அந்த ஜாதகனுக்கு இறைவனே தந்தருள்வார். எல்லோருக்கும் அது ஏற்புடையது அல்ல. இருந்தாலும் பாவங்கள் குறைய வேண்டும் என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு வருவதே இறைவனின் கருணை இருப்பதால்தான். எனவே தொடர்ந்து நாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறைகளை குறிப்பாக தர்ம காரியங்களை செய்து கொண்டே வந்தாலே போதுமப்பா. மிக எளிதாக மிக மிக சுகமாக பாவங்களைக் கழிப்பதற்கு ஒரு வழி கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 267

கேள்வ : வாஸ்து என்பது உண்மையா? வாஸ்து பிரச்சனைகள் தீர்க்க என்ன வழி?

மனைக்கும் மனையிலே அமையும் மனைக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதே சமயம் ஒருவரின் ஜாதகப் பலனை ஒட்டிதான் இந்த மனை அமையும். ஜாதகத்திலே யோகமான மனை அமைய வேண்டும் என்றால் அவன் முயற்சி செய்யாமலேயே குறைந்த வாஸ்து குற்றங்கள் கொண்ட மனை அமையும். இல்லையென்றால் ஒரு தவறான விதி முறைப்படி கட்டப்பட்ட மனைதான் அமையும். மனிதன் எத்தனைதான் திட்டமிட்டு இந்த வாஸ்து விதிமுறைகளை பின்பற்றி இல்லம் கட்டினாலும் கூட 100 க்கு 100 இந்த புவியிலே வாஸ்து என்பதை மனிதர்களால் கடைபிடிக்க இயலாது. இந்த நிலையிலே வேடிக்கையாக யாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஒட்டு மொத்த பாரதத்தை ஒரு மனை என்று பார்த்தால் மனையின் வடக்கு எவ்வாறு இருக்க வேண்டுமென்று ஓரளவு மனையடி சாஸ்திரம் அறிந்தவருக்குத் தெரியும். வடக்கு அங்கே பரந்த வெளியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே வடக்கே இமயமலை அல்லவா இருக்கிறது? அதே தமிழ் மண்ணிலே எடுத்துப் பார்த்தால் அங்கே கடல் இருக்கக் கூடாத இடத்திலே இருக்கிறது. வேறு வகையில் பார்த்தால் மதுரையம்பதியில் (மதுரை) ஆளுகின்ற எம் அன்னை மீனாளின் ஆலயத்திலே எங்கே இருக்கிறது தீர்த்தம்? வட கிழக்கிலா இருக்கிறது? எனவே மனிதர்கள் இதை அதிகமாக (மனதிலே) போட்டு சிந்தை தடுமாற்றம் கொள்ள வேண்டாம் என்றே நாங்கள் கூறுகிறோம். இதில் உண்மை இருக்கிறது. அதற்காக இதை நோக்கிய எப்பொழுதும் சென்று கொண்டிருக்க வேண்டாம். அதை விடுத்து புண்ணிய செயலை செய்வதும் பக்தி வழி செல்வதும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஜோதிடத்தில் குருபகவான் ஸ்தானத்தில் இருந்தால் பலமா? அல்லது அவர் பார்வையினால் பலமா?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஸ்தான பலமும் உண்டு. திக்பலமும் உண்டு. திருஷ்டி(பார்வை) பலனும் உண்டப்பா. அது ஜாகத்திற்கு ஜாதகம் மாறுபடும். என்றாலும் பொதுவான விதியென்றால் குருபகவானின் பார்வை விழுகின்ற அந்த ராசிக்கே முழு பலன் சேரும்.

சுலோகம் -152

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-33

ஆத்ம ஞானம் உடையவன் கூட தனது இயல்புக்கு ஏற்றபடியே பழகுகிறான். அனைத்து உயிரினங்களும் தங்களின் இயற்கையான இயல்பின்படியே நடக்கின்றன. இவற்றை சாஸ்திரங்கள் என்ன செய்ய இயலும்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனது ஆத்மாவை அறிந்து கொண்டவன் ஆத்மாவின் இயல்புக்கு ஏற்றபடியே செயல்படுகிறான். ஆத்மாவை அறிந்து கொள்ளாத மற்ற உயிரினங்களும் தங்களின் உடலுக்கும் ஆசைக்கும் ஏற்றபடியே செயல்படுகின்றன. இந்த இரண்டு செயல்பாடுகளையும் சாஸ்திரங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் ஆத்மாவை அறிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை. ஆத்மாவை அறியாதவர்கள் தன் கர்மாக்களின் வழியாகவும் ஆசையின் வழியாகவும் செல்வதினால் இவர்கள் சாஸ்திரங்களை கடைபிடிப்பதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 266

கேள்வி: பிரம்மச்சர்யம் க்ருஹஸ்தம் வானப்ரஸ்தம் சன்யாசம் இவற்றை விளக்க வேண்டும்:

எந்தவொரு மனிதனாக இருந்தாலும் இது போன்ற நிலைகளை பருவ காலங்களால் அவன் தாண்டித்தான் வர வேண்டியிருக்கிறது. எனவே ஒருவன் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக இருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற சுப நிகழ்வு நடக்கும்வரை பிரம்மச்சர்யத்தை கடைபிடித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. பிறகு அவன் இல்லற தர்மத்தை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் இல்லற கடமைகள் பூர்த்திக்குப் பிறகு அவன் அடுத்தடுத்த நிலைக்கு சென்று இறுதியாக அந்த சன்யாச நிலையை எய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் பாவங்களால் மட்டுமே ஆகுவதல்ல. மனோ நிலையில் இதுபோல் ஒரு சூழல் நன்றாக பதியாதவரை இவை வெறும் அலங்கார வார்த்தையாகத்தான் இருக்கும். எனவே இந்த ஒரு ஒழுங்கு முறையை முறையாக தாண்டுவது என்பது மனிதனுக்கு என்றுமே கடினமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த நிலை கூட எல்லோருக்கும் பொருந்தி வருமா? என்று பார்த்தால் அதுவும் வினைகளின் குறுக்கீடால் தாறுமறாகத்தான் மனித வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் நாங்கள் கூறுவது போல பாவ கர்மாவை கழிப்பதற்கு பிறவி எடுத்திருக்கிறோம் என்ற ஒரு விழிப்பு நிலையோடு வாழக் கற்றுக் கொண்டு விட்டால் பிறகு அவன் தொடர்ந்து பாவங்களை செய்யாமல் கூடுமானவரை புண்ணியங்கள் செய்கின்ற ஒரு நிலை வந்துவிடும். இப்படியொரு நிலையை எய்திய பிறகு அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் தாயுமானவன் கூறியது போல் இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே. எப்பொழுது? நாட்டமனைத்தும் நடுவே வைத்தால் இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே என்று கூறியது போல் ஆகிவிடும். எனவே ஒருவன் எந்த நிலையில் இருக்கிறான்? என்பதை விட எந்த சூழலில் இருக்கிறான்? என்பதை விட எந்த மனோ பாவத்தில் இருக்கிறான்? என்பதே சாலச் சிறந்தது.

கேள்வி: ஆத்திசூடியில் வரும் வீடுபேறு கூற்றை விளக்கிக் கூற வேண்டும்:

முன்னர் கூறிய வாக்குதானப்பா. விடுதல் இந்த மாய உலகின் வாழ்விலிருந்து விடுதல். அந்த விடுதல்தான் பிறகு வீடுபேற்றிற்கு வழிவகுக்கிறது. அதாவது முக்திக்கு வழி வகுக்கிறது. அதைப் பெறுவதற்கு உண்டான வழியில் செல் என்பதுதான் இதற்கு பொருள்.

சுலோகம் -151

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-32

எந்த மனிதர்கள் இந்த கொள்கைகளில் குறை காண்பவர்களாக இந்தக் கருத்துக்களை ஏற்று நடப்பதில்லையோ அவர்கள் தங்களின் அறிவை இழந்து சீரழிந்து போவார்கள் என்பதை அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குறைகளைச் சொல்லி இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிர் மறையாக நடந்து கொள்பவர்கள் தங்களின் அறிவையும் இழந்து தங்கள் பிறவிக் கர்மங்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் மேலும் பல பிறவிகளை சேர்த்துக் கொண்டு சீரழிந்து போவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 265

கேள்வி: துறவறத்தில் காவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியருள வேண்டும்:

மீண்டும் மீண்டும் நாங்கள் கூற வருவது எப்படியாவது ஒரு மனிதன் புற அடையாளங்கள் மூலம் தன் அகத்தை தூய்மைப்படுத்த முயற்சி செய்கின்ற முறைகளில் ஒன்றுதான் இன்னவன் கூறிய காவி ஆடை. ஆனால் காலப் போக்கில் புற அடையாளங்கள் வெறும் கெளரவத்திற்காகவும் மதிப்பிற்காகவும் ஆகிவிட்ட நிலையிலே நாங்கள் கூறுவது போல உள்ளம் பண்படாத நிலையிலே உள்ளம் பண்படாத நிலையிலே உள்ளம் பக்குவப்படாத நிலையிலே உள்ளம் பற்றற்ற தன்மையை அடையாத நிலையிலே ஒருவர் காவி அணிந்தால் என்ன? அணியா விட்டால் என்ன?. அல்லது வேறு சில மனிதர்கள் எண்ணலாம். எப்படியாவது இது போன்ற அடையாளங்களை அணிந்து கொண்டு இந்த அடையாளங்கள் இருக்கிறதே என்பதற்காகவாவது தவறு செய்யாமல் நாங்கள் இருக்கலாம் அல்லவா? என்று கூறலாம். அந்த ஒரு நல்ல எண்ணத்தில் ஒருவன் முயற்சி செய்தால் இது போன்ற புற அடையாளங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். மற்றபடி புற அடையாளங்கள் குறித்து சித்தர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் ஏதும் இல்லையப்பா.

கேள்வி: மறதி சோம்பல் தூக்கமின்மை – இவை நீங்க என்ன செய்ய வேண்டும்?

எதில் மனிதனுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை மறப்பதில்லை. எதில் ஆர்வமில்லையோ அது மறந்து போகிறது. எனவே மனிதன் தவிர்க்க முடியாத செயலை செய்யும் பொழுது பிடிக்காத சூழ்நிலையை கூட எதிர் கொள்ளப் பழகுகிறான். ஆனால் அவனுக்குப் பிடித்தமான விஷயமென்றால் எதையும் தாங்கிக் கொள்ளப் பழகுகிறான். எனவே மனிதர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்தி செய்துதான் ஆக வேண்டிய சூழல் என்றால் அதற்கு ஏற்றாற் போலும் வேறு வழியில்லாமல் செய்கின்ற அந்த தன்மையையும் ஆய்ந்து பார்த்து எது எப்பொழுது முக்கியம்? எது சாத்தியம்? எது அசாத்தியம்? என்றெல்லாம்? என்றெல்லாம் ஆய்வு செய்து தன்னை தெளிவாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பலவிதமான சிந்தனை தடுமாற்றங்கள் ஒரு கணம் ஒரு செயல் செய்யும் பொழுது சிந்தனை அங்கில்லாமல் போவதுதான் மறதிக்கு அடிப்படை காரணம். எனவே தாறுமாறான ஒழுங்கற்ற பொருள்கள் இல்லமெங்கும் சிதறியிருந்தால் அந்த இல்லம் பார்ப்பதற்கு அழகாய் இராது. பொருள்கள் அழகாக வரிசையாக அடுக்கப்பட்டிருந்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். அந்தப் பொருள் தேவைப்படும் சமயம் எங்கு இருக்கிறது? என்று தேடுவதற்கும் எளிமையாக இருக்கும். அதைப் போல தொடர்ந்த எண்ண ஓட்டமான மனதிலே தாறுமாறான எண்ணங்கள் இருப்பதுதான் ஒருவனின் குழப்பத்திற்கும் மறதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். தேவையற்ற எண்ணங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தேவையான எண்ணங்களையெல்லாம் அழகாக அடுக்கி வைத்திருந்தால் மறதி என்பது ஒரு பொழுதும் வராது.