பொக்கிஷம்

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.

ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 174

கேள்வி: கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?

கலி என்றால் துன்பம் என்று ஒரு பொருள். அலுப்பிலும் சலிப்பிலும் விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது கலி முற்றிவிட்டது என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. துவாபர யுகத்திலும் திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில் (ஆடை) உரியவில்லையா? எனவே எல்லா காலத்திலும் மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு கொண்டு தானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன. நாங்கள் (சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம் ஆதாயம் பெற தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். எனவே இந்த நல்ல எண்ணங்களும் நல்ல செய்கைகளும் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான் அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும். இல்லை என்றால் கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும் என்று இவனாகவே வேதாந்தம் பேசி தவறு மேல் தவறு செய்து கொண்டே போனால் முதலில் அது இன்பத்தை காட்டி முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்.

கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி:

பிற ஜீவனுக்கு இம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து கொண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் போதனைகளை எல்லாம் பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு. நீ எந்த பிரிவில் இருந்தாலும் இருந்து கொள். மனித நேயம் மனித அன்பை போதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்போக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும் தீயவைக்கும் பொருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும் போதுதான் அந்த பிரிவிலே தொடர்ந்து வாய்ப்புகள் இருக்கும். அதே போல் பொருளாதார தேவைக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் போக்கிலே ஏற்றமும் இரக்கமும் கருத்து மாற்றத்தோடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பொறுத்துதான். எனவே அதனால் அதிலுள்ள கோட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.

நம்பிக்கையான பக்தி

சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான். ஆனால் மனைவியோ நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும் நானே தீயில் குதிக்கின்றேன் என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த சிவபெருமான் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியைஉயிர்ப்பித்து இருவருக்கும் முக்தி கொடுத்து அருளினார். இந்த தகவலை அறிந்த அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர் பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன் சுடுகாட்டுச்சாம்பலையும் பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.

பக்தர்களிடம் சிவபெருமான் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் தூய்மையான திடமான நம்பிக்கையான பக்தி மட்டுமே தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 173

கேள்வி: ஐந்து தலை நாகம் பற்றி:

ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு தஞ்சையிலே எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யோசித்த ஒரு அரசனுக்கு குறிப்பு காட்டுவதற்காக ஐந்து தலை நாகம் வந்து ஒரு இடத்தை காட்டியது. மனிதனுக்கு புலப்படாததால் இவையெல்லாம் கற்பனை என்கிறான். பொதுவாகவே தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவிய எதையுமே ஐயன் (சிவன்) தனக்குள்ளே வைத்துக் கொண்டார். எதிரும் புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான் ஐயன் (சிவன்) அனலையும் புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார். எனவே ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று ஐயனுக்கு (சிவனுக்கு) நாகலிங்க பூவைக் கொண்டு வழிபாடு செய்தால் நாக தோஷம் விலகும்.

கேள்வி: இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி:

இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் கொண்டு சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தால் மட்டுமே இறந்த உடலை (அதாவது உடலில் உயிர் இருக்கும் பொழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள் உடலை விட்டு ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கண்ணுக்கு தெரியாத நூலிழை போன்ற ஒன்று உடலையும் ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் போது அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான் சஞ்சீவினி மந்திரத்தின் வேலை உயிர்ப்பிக்க முடியும். இறையின் கருணையைக் கொண்டு எத்தனையோ முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர் பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர் அரவு (பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால் இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க ஆழ் துயில் (தூக்கம்) நிலையில் இருந்தால் தான் அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணம் அது புகை போல் கரைந்து விடும் என்பதால் அதை மீண்டும் உடலோடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி (இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட அந்த உடல் சரிவர இயங்காது.

சமாதிஷ்வர் கோவில்

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கர் என்னும் ஊரில் இக்கோவில் உள்ளது. சமாதீஷ்வரர் என்று அழைக்கப்படும் இந்த திரிமூர்த்தி சிவன் சமாதி பகவான் என்றும் அழைக்கப்படுகிறார். பரமரா மன்னர் போஜாவால் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 172

கேள்வி: ரமணர் சேஷாத்ரி சுவாமிகள் க்ரியா பாபாஜி பற்றி:

ஞானிகளின் சரித்திரம் ஒரு மனிதனுக்கு வெறும் கதை ஓட்டமாக இருந்து விடக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துக்களில் பத்தில் ஒன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அதற்காக ஒரு ஞானியையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. ஏனென்றால் எத்தனையோ நாயன்மார்கள் இறைவனை அடைந்தார்கள். ஆனால் ஒருவர் பாதை மற்றொருவருக்கு ஒத்து வரவில்லை. ஒரு நாயன்மார் பிள்ளையை கறி சமைத்தான் என்பதற்காக அதுதான் சிறந்த வழி என்று நாங்கள் உங்களுக்கு போதிக்க முடியுமா? எனவே துன்பங்களை ஞானிகள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அப்படியே பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது. ராமகிருஷ்ணரிடமிருந்து ஒரே நரேந்திரன் (விவேகானந்தர்) ஆதிசங்கரரிடம் இருந்து ஒரு பத்மபாதன் (ஆதிசங்கரரின் முதன்மை சீடர்) தானே தோன்றினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?. எனவே குருவானவர் அனைவரும் மேலேறி வரத்தான் போதனை செய்வார். உத்வேகம் மாணவனுக்குத்தான் இருக்க வேண்டும். அனைத்து ஞானியர்களுமே அற்புதங்களை செய்தார்கள். எதற்காக? மனிதர்கள் துன்பங்களில் சுழுலும் போது அதிலிருந்து விடுபட அவர்களுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தத்துவத்தாலும் வெறும் உதாரணத்தாலும் எளிய மக்களை திருப்திப்படுத்த முடியாது என்பதால் சில அற்புதங்களை நடத்தி அதன் மூலம் பக்தர்களை தன் பக்கம் இழுத்து பிறகு உபதேசம் செய்தார்கள். அந்த வகையிலே நீ குறிப்பிட்ட மூவருமே இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்கள்.

பலரின் கடுமையான பிணிகளை களைந்த ரமணர் தனக்கு ஏற்பட்ட அந்த கடுமையான பிணியை ஏன் களைந்து கொள்ளவில்லை? இத்தனை அதிசயங்களை நடத்திக் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள் அவருடைய வாழ்க்கையில் எத்தனை இடர்பட்டார் என்று உனக்கு தெரியுமா? காலம் காலமாக மகான்கள் பிறப்பதும் இறுதியில் இறையோடு கலப்பதும் இயல்பு. பெயர்தான் மாறுகிறதே தவிர ஒரு நிலையை அடைந்த பிறகு இவர்களில் இருந்து செயல்படுவது அந்த மூலப் பரம்பொருள் மட்டும்தான். இந்த மூவரும் இன்னும் கூட அவர்களது பக்தர்களுக்கு ஏதாவது ஒரு வடிவில் வந்து அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுலோகம் -98

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-51

ஞானம் உள்ளவர்கள் தங்களது சமநிலையான புத்தியின் காரணமாக கர்மத்தின் பலனை துறந்து விடுகிறார்கள். இதன் மூலம் பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஞானம் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் சரிசமமான மனநிலையில் இருந்து செய்கிறார்கள். இந்த ஞானம் பெற்ற மனநிலையில் செயல்களை செய்வதினால் செயல்களின் பலனான நன்மை தீமை மற்றும் மகிழ்ச்சி துன்பம் போன்ற அனைத்து விதமான பலன்களும் அவர்களை சென்று சேர்வதில்லை. பலன்கள் கன்மங்கள் ஏதும் இல்லாததினால் இந்த பிறவியில் தங்களுக்கான கடமைகள் முடிந்ததம் அவர்கள் உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கண்ணனை கட்டி வைத்த உரல்

மணிகிரீவன் மற்றும் நலகுபேரன் ஆகியோர் குபேரனின் மகன்கள். யமுனா நதிக்கரையில் இரட்டை அர்ஜுனா மரங்களாக மாற அவர்கள் மோசமான நடத்தைக்காக நாரத முனியால் சபிக்கப்பட்டனர். அவர்கள் இரட்டை மரங்களாக 100 ஆண்டுகள் கோகுலத்தில் நின்றனர். கண்ணனின் தாய் யசோதா கண்ணனை அரைக்கும் உரலில் கட்டி வைத்தார். கல்லால் ஆன அரைக்கும் உரலில் கட்டப்பட்டிருந்த கண்ணன் மரங்களுக்கு இடையில் தன்னை அழுத்தி மரத்தை பிடுங்கி இருவரையும் விடுவித்தார். அந்த உரல் இதுதான். மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம் (ஆயர்பாடி) பிருந்தாவனம் கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களுக்கும் சேர்ந்து கிருஷ்ண ஜென்மபூமி அல்லது விரஜபூமி என்று பெயர். விரஜ பூமி பிருந்தாவனத்தில் தற்போது உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 171

கேள்வி: மறுபிறவி எடுக்காமல் மோட்சத்துக்கும் செல்லாமல் இடையிலே பரிதவிக்கும் ஆன்மாக்கள் கடைத்தேற என்ன வழி?

மீண்டும் பிறந்து அவர்கள் அதற்கான விழிப்பை செய்ய வேண்டும். நூறு ஆயிரம் தேவ ஆண்டுகள் கூட பேய்களாக சுற்றும் ஆன்மாக்கள் உண்டு. இதற்கெல்லாம் கூட பூஜைகள் உண்டு. நல்ல அமைதியான கடற்கரை ஓரத்திலே அல்லது நதிக்கரை ஓரத்திலே ஒத்த கருத்துடைய மாந்தர்கள் ஒன்று கூடி பூரணமான தில யாகத்தை செய்து ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் வயிறார உணவும் ஆடையும் தந்து ஐயனுக்கு பரிபூரண வழிபாட்டை செய்து நாள் முழுவதும் செய்த இந்த வழிபாட்டின் பலன் அனைத்தும் அந்த அலையும் ஆன்மாக்களுக்கு போகட்டும் என்று அர்ப்பணம் செய்தால் அவர்கள் மீண்டும் பிறவி எடுத்து எம்மை போன்ற மகான்களின் வாக்கை கேட்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்து அதன் பிறகு அவர்கள் மோட்சம் அடைவதற்கான வழி உண்டாகும். சிலருக்கு நேரடியாகவே அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கும் இறை வாய்ப்பைத் தரும்.

கேள்வி: இறந்தவர் காதில் பஞ்சாக்ஷரம் (நமசிவய) ஓதலாமா?

சிறப்பு தானப்பா. பஞ்சமா பாதகங்களை ஆயிரமாயிரம் செய்துவிட்டு ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் உடல் அருகே நீ நடராஜப் பெருமானையே கூட்டி வந்து அமர வைத்தாலும் என்ன பலன்? வாழும் போது ஒரு மனிதன் புண்ணியத்தை சேர்த்து வாழ வேண்டும். வேண்டுமானால் அவர்களுக்காக (இறந்தவர்களுக்காக) செய்யப்படும் தில தர்ப்பணம் மோட்ச தீபம் போன்றவை பலன் அளிக்கலாமே ஒழிய வாழும் போது புண்ணியத்தை சேர்த்து கொள்ளாததன் விளைவு அவன் இறந்த பிறகு அந்த ஆன்மா அலரும் பொழுது புரியும்.

கேள்வி: சுப சகுனம் பற்றி:

சில விலங்குகளை நேரில் பார்ப்பது நல்லது. பசு மயில் கருடன் போன்றவற்றை பார்ப்பது சுப சகுனம் நன்மை. ஆனால் மனிதனை இதில் சேர்த்து கொள்ளாதே. மனிதர்களை பார்த்தால் அவைகளுக்குத் தான் (பசு மயில் கருடன் போன்றவை) பாவம்.

அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்

ராமாயண யுத்தத்தில் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரர் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில் முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார்.

அனுமன் ஏரியில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். உங்களால் கொல்லப்பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன் முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் திட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேசராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.