ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 24

அனுமன் அமைதியாக அனைவருக்கும் நடுவில் வந்து நின்றார். அனுமனிடம் ஜாம்பவான் பேச ஆரம்பத்தார். எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த வீரனே தனியாக ஏன் பேசாமல் அமர்ந்து இருக்கின்றாய். பேச்சிலும் பலத்திலும் நம் அனைவரையும் விட முதன்மையானவனாக இருக்கும் நீ சுக்ரீவனுக்கு சமமானவன். கருடன் கடலை தாண்டி பறப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அந்த கருடனுடைய சிறகுகளின் பெரும் பலம் உனது தோள்களுக்கும் உண்டு. பராக்கிரமத்திலும் வேகத்திலும் கருடனுக்கு நிகரானவன் நீ. உனது தாயார் அஞ்சனை தேவலோகத்து தேவதை ஆவாள். ரிஷி ஒருவரின் சாபம் காரணமாக வானரமாக பிறந்தாள். அவளுக்கும் வாயுதேவனுக்கும் மானச புத்திரனாக பிறந்தவன் நீ. வாயு தேவனுக்கு சமமான வீரியமும் பலமும் உன்னிடம் இருக்கிறது. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே சூரியனை பார்த்து அது ஒரு பழம் என்று எண்ணி அதை பிடிப்பதற்காக ஆகாயத்திற்கு தாவிச் சென்றாய். நீ பயமின்றி வானத்திற்கு தாவுவதைப் பார்த்த தேவராஜன் இந்திரன் மிகவும் கவலை கொண்டு யார் இவன் இப்படி தாவுகிறான் என்று தன்னுடைய வஜ்ராயுதத்தை உன் மீது வீசினான். வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட நீ ஒரு மலை மீது விழுந்தாய். பலத்த அடிபட்ட உன்னை கண்ட உனது தந்தை வாயு பகவான் கோபப்பட்டு தனது தொழிலான காற்றை வெளியிடுவதை நிறுத்தி விட்டார். இதனால் உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஜீவன்கள் அனைத்தும் பிராண வாயு இன்றி தவித்துப் போனது. தேவர்கள் வாயு பகவானிடம் கோபம் தணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் வாயுபகவானின் கோபம் குறையவில்லை. அதன் பிறகு பிரம்மனும் இந்திரனும் வாயுதேவனிடம் உனது மகனுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் வராது. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழும். அது வரை மரணம் அவனை நெருங்காது என்ற வரத்தை கொடுத்தார்கள். இதனால் நீ சிரஞ்சீவி என்னும் பட்டத்தை பெற்றாய். இந்த பட்டத்தையும் பலத்தையும் பெற்ற நீ மற்றவர்களை போல் துஷ்பிரயோகம் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாய். இந்த கடலை தாண்டுவது உனக்கு பெரிய காரியமில்லை.

ராம காரியத்திற்காக உனது பராக்கிரமத்தை காட்டும் நேரம் வந்து விட்டது. உன்னால் விரும்பிய அளவிற்கு உனது உடலை பெரிதாக்கிக் கொள்ள முடியும். கடலை தாண்டும் சக்தியுடைய நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன்னை நாங்கள் அனைவரும் சரணடைகிறோம் அனுமனே இனியும் தாமதிக்க வேண்டாம். உன்னுடைய உண்மை பலத்தை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்து. ஒரே தாவலில் இந்த கடலை தாண்டி இலங்கையை சென்றடைந்து ராம காரியத்தை செய்து முடித்து வானரங்களின் துயரை தீர்ப்பாய் என்று அனுமனின் பராக்கிரமத்தை ஜாம்பவான் தட்டி எழுப்பினான். ஜாம்பவன் சொல்லி முடித்ததும் அனுமன் தன்னுடைய சக்தியை உணர தொடங்கி அதனை வெளிக்காட்டினார். வானரங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அனுமனின் உடலும் தேஜசும் வளர்ந்து கொண்டே இருந்தது. அதனை கண்ட அங்கதனும் அனைத்து வானரங்களும் வியந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ராம காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுமன் சங்கல்பம் செய்து கொண்டார். நம்பிக்கையுடன் ஆவேசமாக ஜாம்பவானிடம் பேச தொடங்கினார் அனுமன். நீங்கள் சொன்னபடியே இந்த கடலை தாண்டுவேன். ராவணன் தூக்கிச் சென்ற சீதையை தேடிக் கண்டு பிடித்துவிட்டு திரும்பி வருவேன். இது நிச்சயம் சந்தேகம் வேண்டாம் நான் வரும் வரையில் இங்கேயே எனக்காக காத்திருங்கள் நாம் அனைவரும் ஒன்றாக கிஷ்கிந்தைக்கு செல்வோம் என்றார். அதன்பிறகு கடல் தாண்டி இலங்கை செல்வதற்கு தகுந்த இடத்திற்கு சென்று மனதை ஒரு நிலைப்படுத்தினார். சூரியனையும் இந்திரனையும் வாயு தேவனையும் பிரம்மாவையும் தியானித்து வணங்கினார். உடலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு பூமியை தன் காலால் மிதித்து கைகளால் அடித்து இலங்கைக்கு தாவினார் அனுமன்.

கிஷ்கிந்தா காண்டம் முற்றியது அடுத்து சுந்தர காண்டம்

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 23

ராம காரியத்தை செய்த சம்பாதி கழுகிற்கு முனிவர் சொன்னது போல் புதிய சிறகுகள் மீண்டும் முளைக்க ஆரம்பித்தது. வசீகர அழகுடன் பிரகாசித்த கழுகு சிறகுகளை அடித்து பறந்து மகிழ்ச்சி அடைந்து அங்கதனிடம் பேச ஆரம்பித்தது. சூரியனால் எரிக்கப்பட்ட எனது சிறகுகள் ராம காரியத்தை செய்து முடித்ததும் முனிவர் சொன்னபடி மீண்டும் முளைத்து விட்டது. வாலிபப் பருவத்தில் எனக்கிருந்த பராக்கிரமமும் வலிமையும் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. முனிவரின் வாக்கு சத்திய வாக்கு என்று நிருபிக்கப்பட்டு விட்டது. இந்நிகழ்ச்சியே நீங்கள் சீதையை காண்பீர்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கான சான்று. இனி உங்கள் காரியத்தை தொடருங்கள் என்று சொல்லி விட்டு கடற்கரையில் தம்பி ஜடாயு கழுகிற்கு கிரியைகள் செய்து திருப்தி அடைந்தது சம்பாதி கழுகு.

சீதை இருக்கும் இடமும் ராட்சசன் ராவணன் இருக்கும் இடமும் சம்பாதி கழுகின் வழியாக வானரங்களுக்கு தெரிந்து விட்டது. சுக்ரீவனிடம் பொய் சொல்வதற்கு இது போதும் என்று வானரங்கள் எண்ணினார்கள். சம்பாதி கழுகு சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு சீதையை நேரில் பார்க்காமல் சூக்ரீவனிடத்தில் இந்த செய்தியை சொல்ல முடியாது. சீதையை தேடும் காரியத்தை நிறுத்தி கிஷ்கிந்தைக்கு செல்வது சரியல்ல என்று அங்கதன் கூறினான். 100 யோசனை தூரம் கடல் தாண்டி இலங்கை சென்று பார்த்தால் மட்டுமே ராம காரியம் செய்து முடித்தது போல் இருக்கும். 100 யோசனை தூரம் தாண்டிச் சென்று சீதையை நேரில் எப்படி பார்ப்பது என்று தெரியாமல் வானரங்கள் திகைத்தார்கள். வானரங்கள் மறுபடியும் கவலையில் மூழ்கினார்கள். அங்கதன் பேச ஆரம்பித்தான். எந்த காரியம் என்றாலும் எப்படி சாதிக்கலாம் என்று எண்ண வேண்டும். தைரியத்தை இழக்க வேண்டாம். உங்கள் தாவும் சக்திகளைப் பற்றி சுக்ரீவன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். வானர வீரர்களே யார் யாருக்கு அதிகமான தூரம் தாவும் சக்திகள் உள்ளது? உங்களுடைய தாவும் சக்திகளைப் பற்றி ஒவ்வோருவராக சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான் அங்கதன். கஜன் என்ற வானரம் நான் பத்து யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். கவாஷன் என்ற வானரம் நான் இருபது யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். ஒவ்வோரு வானரமாக அதிகமான யோசனை தூரத்தை சொல்லிக் கொண்டே வந்தார்கள். இறுதியில் அனைவரையும் விட மூத்தவரான ஜாம்பவன் பேச ஆரம்பத்தான். இளமையில் நான் 100 யோசனை தூரத்திற்கும் அதிகமான தூரத்தை தாண்டி இருக்கிறேன். இப்போது முதுமை தன்மை காரணமாக என்னால் 90 யோசனை தூரம் மட்டுமே தாண்ட முடியும். ஆனால் இலங்கை 100 யோசனை தூரம் இருக்கிறது. என்னால் அங்கு செல்ல முடியவில்லேயே வயதாகி விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இளமையோடு இருந்தால் நிச்சயமாக இந்நேரம் தாண்டியிருப்பேன் என்று அங்கதனிடம் கூறினான்.

சீதை இருக்கும் இலங்கைக்கு 100 யோசனை தூரம் தாண்டி இலங்கையை என்னால் சென்று சேர முடியும் என்றான் அங்கதன். அனைத்து வானரங்களும் அங்கதனின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். உடனே அங்கதன் சீதையை கண்டபின் உடனடியாக மறுபடியும் அங்கிருந்து திரும்பவும் இவ்வளவு தூரம் தாவும் சக்தி எனக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு ஜாம்பவான் அங்கதா அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. உனது தந்தையான வாலிக்கு இருந்தது போலவே அளவற்ற சக்தி உனக்கும் உண்டு. உன்னால் 100 யோசனை தூரம் மட்டுமல்ல அதனை தாண்டியும் உன்னால் சென்று விட்டு மீண்டும் திரும்ப வரவும் முடியும். அதற்கேற்ற சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால் இந்த காரியத்தை யுவராஜாவாகிய நீ செய்தால் சரியாக இருக்காது. நீ மற்றவர்களுக்கு உத்தரவிட்டு அனைத்து காரியங்களையும் செய்து முடித்தல் வேண்டும். இதுவே ராஜநீதி ஆகும். இச்செயலை செய்ய சரியான நபர் அனுமனே. அதோ ஒரு ஓரத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் அனுமனே இக்காரியத்தை செய்து முடிக்கும் திறமை பெற்றவன் என்று சொல்லி அனுமனை அருகில் அழைத்து வந்தான் ஜாம்பவான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 22

அனுமன் அங்கதனிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தைரியம் கூறினார். கடற்கரையில் கும்பலாக உணவில்லாமல் அமர்ந்திருந்த வானரங்களை அருகில் மலை மீதிருந்த கழுகரசன் சம்பாதி பார்த்துக் கொண்டிருந்தான். சிறகுகள் இழந்து பறக்க முடியாமல் பட்டினியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கழுகரசன் சம்பாதி இத்தனை வானரங்கள் உணவில்லாமல் பட்டினியால் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றார்கள். நமக்கு இன்று உணவு சுலபமாக கிடைத்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வானரங்கள் ஒருவருக்கொருவர் தசரதன் இறந்தது முதல் ராமர் காட்டிற்கு வந்தது சீதையை ராவணன் தூக்கிச் சென்றது ஜடாயு கழுகு இறந்தது என்று அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பேச்சில் ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டது கழுகு. எனது தம்பி ஜடாயு இறந்து விட்டானா என்று அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கழுகரசன் சம்பாதி ஆர்வமடைந்தது. என் அன்புக்குரிய அருமை தம்பி ஜடாயு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் யார் நடந்தது என்ன என்று விவரமாக சொல்லுங்கள் என்று மலை மீதிருந்து கத்தியது.

அனுமன் பறக்க முடியாமல் இருந்த கழுகை கீழே தூக்கிவர ஒரு வானரத்தை கேட்டுக் கொண்டார். கீழே வந்த கழுகரசன் சம்பாதி பேசத் தொடங்கியது. கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அண்ணன் கருடனுக்கு நானும் ஜடாயுவும் இரண்டு குமாரர்கள். நானும் ஜடாயுவும் சிறு வயதிலிருந்தே நாங்கள் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தோம். ஒரு நாள் ஆகாயத்தில் போட்டு போட்டுக் கொண்டு மேலே கிளம்பினோம். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சிறுவனான ஜடாயு மிகவும் சோர்வடைந்தான். வெப்பம் ஜடாயுவை எரித்து விடும் போலிருந்தது. உடனை எனது சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பாற்றினேன். அவன் உயிர் பிழைத்தான். எனது சிறகுகள் எரிந்து பறக்க முடியாமல் இந்த மலை மேல் விழுந்தேன். இந்த மலையின் மீது இருந்த நிசாகர் என்ற முனிவரிடம் எனக்கு விமோசனம் கேட்டேன். முக்காலமும் உணர்ந்த அவர் ராம அவதாரத்தை இறைவன் விரைவில் எடுப்பார். அப்போது ஓர் ராம காரியத்தை நீ செய்வாய். அப்போது உனது சிறகுகள் பழையபடி வந்து உனது இளமை திரும்பும் ராமரை காணும் பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றார். அதன்படி ராமரை பார்க்கவும் ராம காரியம் செய்வதற்காகவும் இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஜடாயு இறந்து விட்டான் என்று தாங்கள் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தம்பி எப்படி இறந்தான் சொல்லுங்கள் என்றான் கழுகரசன் சம்பாதி.

அனுமனும் அங்கதனும் ராமனைப் பற்றியும் ராவணன் சீதையை தூக்கிச் சென்றது பற்றியும் தங்களைப் பற்றியும் அனைத்தையும் விரிவாக கழுகரசன் சம்பாதியிடம் சொல்லி ராமருக்கு எப்படி உதவுவது சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்க தங்களுக்கு ஏதேனும் வழிவகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சம்பாதி கழுகிடம் கேட்டுக் கொண்டார்கள். அனைத்தையும் கேட்ட கழுகரசன் சம்பாதி எனது தம்பி ஜடாயுவை கொன்ற ராவணனை அழிக்க துடிக்கிறேன். சிறகில்லாத வயதான என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. ராவணனை அழிக்க உங்களுக்கு நான் உதவுகின்றேன். எனக்கு ராம காரியம் செய்யும் பாக்கியம் இப்போது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது சம்பாதி கழுகு. எனக்கு ஞானதிருஷ்டி தெரியும் அதன் வழியாக பார்த்து சீதையும் ராவணனும் எங்கிருக்கிறார்கள் என்று சொல்கிறேன் என்று தான் காணும் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தது சம்பாதி கழுகு. இலங்கையை பற்றியும் ரவணனின் படை பலங்கள் அவனுடைய செல்வம் மாட மாளிகைகள் அங்கிருக்கும் தோட்டத்தில் சீதையை சுற்றி ராட்சசிகள் பாதுகாப்பாக நின்று காவல் காப்பது என கடல் தாண்டிய இலங்கையில் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் விவரமாக கூறியது சம்பாதி கழுகு. வானரங்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இனி சுக்ரீவன் நமக்கு தண்டனை கொடுப்பான் என்ற பயம் இல்லை. சீதை இருக்குமிடம் தெரிந்து கொண்டோம் என்று உற்சாகம் அடைந்தனர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 21

அனுமன் கூறிய அனைத்தையும் கேட்ட பெண் தவசி இந்த குகையின் சக்தி உங்களுக்கு தெரியவில்லை. இதில் உள்ளே வந்த அந்நியர்கள் மறுபடியும் உயிருடன் வெளியில் செல்ல முடியாது. இங்கேயே வாழ்ந்து மாண்டு போவார்கள். இந்த குகையை விட்டு உங்களால் வெளியே போக முடியாது. நீங்கள் வந்த காரணம் பெருங்காரியமாக இருப்பதால் இங்கிருந்து வெளியேற உங்களுக்கு உதவி செய்கிறேன். நீங்கள் அனைவரும் கண்களை முடிக்கொள்ளுங்கள். எனது தவ வலிமையால் நீங்கள் சென்று சேர வேண்டிய சரியான இடத்திற்கு உங்களை சென்று சேர்க்கிறேன் என்றார். வானரங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டனர். தவஸ்வி அவர்கள் அனைவரையும் தன் தவ வலிமையால் நாட்டின் எல்லையிலுள்ள ஒரு கடற்கரைக்கு கொண்டு சேர்த்தாள். அனைவரும் ஓர் கடற்கரையில் இருப்பதை உணர்ந்தார்கள்.

அனுமனிடன் அப்போது ஒரு வானரம் பேச ஆரம்பித்தான். சுக்ரீவன் நமக்கு கொடுத்த ஒரு மாத காலம் நிறைவடைந்தது. சீதையை பற்றிய எந்த தகவலும் அறிந்து கொள்ளாமல் இப்போது நாம் கிஷ்கிந்தைக்கு சென்றால் சுக்ரீவன் நமக்கு மரண நண்டனை விதிப்பான். எனவே நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒர் உபாயம் சொல்லுங்கள் என்று கூறினான். வானரம் சொன்னதை ஆமோதித்த அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமருடைய ஆணைக்கு பயந்து தான் சுக்ரீவன் எனக்கு யுவராஜா பட்டத்தை தர ஒப்புக் கொண்டான். சுக்ரீவனுக்கு என் மேல் அன்பு கிடையாது. அங்கே போய் உயிரை விடுவதை விட தவஸ்வி சுயம்பிரபாவினுடைய குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக வாழ்வோம். அங்கு நமக்கு வேண்டியது அனைத்தும் இருக்கிறது. அங்கு சுக்ரீவன் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாது. நாம் சந்தோஷமாக ஆயுள் முழுவதும் காலம் கழிக்கலாம் என்று கூறினான். அங்கதனை சொன்னதே சரி என்று பல வானரங்கள் கூறினார்கள்.

அனுமனுக்கு இந்த யோசனை சரி என்று தோன்றவில்லை. ஏன் இப்படி தகாத வார்த்தைகளை பேசுகிறீர்கள். நம்முடைய குடும்பங்களை விட்டுவிட்டு இந்த குகைக்குள் சாப்பிட்டு தூங்கி உயிர் வைத்துக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சுக்ரீவனுக்கு அங்கதனின் மேல் விரோதம் ஒன்றும் இல்லை. சுக்ரீவன் மிகவும் நல்லவன் அவனை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் சொல்வது போல் நாம் இப்போதிருந்து இந்த குகையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தால் லட்சுமணனுடைய கோபத்தில் வரும் ஓர் அம்பிற்கு இந்த குகை தாங்காது. லட்சுமணன் ஒரு அம்பிலேயே இந்த குகையை பொடிப் பொடியாகி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவான். ஆகையால் இந்த யோசனையை விடுங்கள். சுக்கீரவிடத்தில் நடந்தவற்றைச் சொல்லி நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்றார் அனுமன்.

அனுமன் சொன்னதை கேட்ட அங்கதன் சுக்ரீவனுக்கு என் மீது இரக்கம் கிடையாது. வாலியை எப்படி கொன்றான் யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி என்னை அழிப்பதே அவருடைய எண்ணம். எந்த அரசனும் தனது ராஜ்யத்துக்கு இடையூறாக இருக்கும் ஒருவரை எப்படி அழிப்பது என்று எண்ணுவார்கள். சுக்ரீவன் அது போலவே என்னை கொல்வான். என் தாய் ஏற்கனவே வாலியை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது என்னையும் சுக்ரீவன் கொன்று விட்டால் என் தாய் என்ன ஆவாள் என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்வேன் என்று கதறி அழ ஆரம்பித்தான். கிஷ்கிந்தைக்கு சென்று உயிரை விடுவதை விட நான் இங்கேயே என் உயிரே விடுகிறேன் என்று சொல்லி தர்ப்பைப் புல்லை கடல் மணலில் பரப்பி அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு உயிர் நீக்கும் சங்கல்பம் செய்து கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அங்கதன் அமர்ந்து கொண்டான். யுவராஜன் செய்த காரியத்தை கண்ட பல வானரங்களும் தாங்களும் அப்படியே உயிரை விடுகிறோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அங்கதன் பின்னே அமர்ந்து விட்டார்கள்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 20

அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டார்கள். இந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். குகைக்குள் இருட்டாக இருந்தது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான வனத்தை கண்டார்கள். மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். அங்கே ஓரிடத்தில் மரவுரி தரித்த ஒரு பெண் தவஸ்வியை கண்டார்கள். அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்து வானரங்கள் நடுங்கினார்கள்.

அனுமன் அவரிடம் சென்று வணங்கினான். தாயே நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தகத்தினால் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும் இந்த விசித்திர குகையைப் பற்றியும் தாங்கள் சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த பெண் தவஸ்வி நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு பேசலாம் என்று அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசிக்கப்பட்ட சிற்பக் கலையை சுக்ராச்சாரியாரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன். இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். ஒரு முறை இந்திரன் மேல் ஏற்பட்ட பகையின் காரணமாக இந்திரன் அவனை வதம் செய்து விட்டான். அதன்பின் இந்த பொன்மயமான அரண்மனையை பிரம்மா ஹேமை என்பளுக்கு கொடுத்து விட்டார். இந்த இடத்திற்கு அவளே உரிமையாளர். இப்போது அவள் தேவலோகம் சென்று இருக்கிறாள். எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டிருக்குக்கிறேன். இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார் உங்கள் காரியம் என்ன ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்டாள்.

அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர் தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராட்சசன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள். வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார் தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் சொல்லி முடித்தார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 19

ராமர் சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு திசைகளில் இருக்கும் நாடுகளையும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு விளக்கிச் சொன்னதை பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக்கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன். இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் ஒளிந்திருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது.

ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார்.

ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்தைய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள் எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை கண்டார்கள். அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும் ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள். ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்காக ஒரு அறிகுறியும் அங்கு காணவில்லை. பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் சோர்வடைந்தனர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 18

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவரும் உங்களுடைய சேனைகளை. நீங்கள் இடும் ஆணையை குறைவில்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள். இவர்கள் அனைவரையும் உங்களுடைய சேனைகளாக கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உத்தரவிடுங்கள் அவர்கள் செய்து முடிப்பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். அதைக் கேட்ட ராமர் மகிழ்ச்சியடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார். ராமர் பேச ஆரம்பித்தார். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதே கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்களின் அரசனான நீ தான் சுக்ரீவா. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய தெரிந்தவன் நீ உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.

ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தனது சேனாதிபதிகளுடன் ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணையிட்டான். சுக்ரீவன் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தையும் நீ பெற்றிருக்கிறாய். பலம் அறிவு உபாயம் அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கின்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னைத் நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பியிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன். வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். தெற்கே அனுமன் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டுபிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஆணையிட்டான் சுக்ரீவன். எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். எட்டு திசைகளுக்கும் வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர்.

ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதையும் உணர்ந்தார். அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமிடத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனிடம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 17

ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதே அறிந்த சுக்ரீவன் ராமரே நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிட்டான். அந்தப்புரத்தின் உள்ளே வந்த லட்சுமணன் அங்கு ஆட்டம் பாட்டம் இசையுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்டு கோபம் கொண்டான். தனது வில்லின் நாணை இழுத்து சத்தம் எழுப்பி தனது கோபத்தை வெளிக் காட்டினான். அந்த சத்தம் கிஷ்கிந்தை நகரத்தையே நடுங்கச் செய்தது. நாணின் சத்தத்தை கேட்டதும் சுக்ரீவன் பயந்து எழுந்தான். லட்சுமணன் உண்மையில் மிகவும் கோபமாக வந்திருக்கிறான் என்ற அபாயத்தை உணர்ந்து தாரையிடம் உடனடியாக சென்று லட்சுமணனை சமாதானப்படுத்தும் படி கேட்டுக் கொண்டான். உலக அறிவிலும் சாமர்த்தியமான பேச்சிலும் தாரைக்கு நிகர் யாருமில்லை. அவள் லட்சுமணனிடம் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தாள். வெகு நாட்கள் பகைவன் தொந்தரவுடன் சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் துக்கத்துடனேயே வாழ்ந்து வந்த சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்யத்தை பெற்றதும் அதில் உள்ள சுகங்களில் புத்தி மயங்கி அனுபவித்து வருகின்றான். அவன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். மயக்கத்தில் மூழ்கியிருக்கும் சுக்ரீவனை தெளிவுடன் இருக்கும் தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்களுக்கு கொடுத்த வாக்கை அவர் மறந்து விடவில்லை. பல இடங்களில் உள்ள வீரர்களை எல்லாம் இங்கு வந்து சேர சுக்ரீவன் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றான். அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையையும் ராவணனை எதிர்த்து வெற்றி வரும் வேலையும் நடைபெறும். சுக்ரீவனை சந்தேகப்பட வேண்டாம். இப்போது அரசனை பார்க்க தாங்கள் உள்ளே வரலாம் என்று லட்சுமணனை அழைத்துச் சென்றாள். தாரையின் பேச்சால் கோபம் குறைந்த லட்சுமணன் உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டு பேசத் துவங்கினான்.

ராமருடைய நட்பினாலும் வீரத்தாலும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை அறிந்தவன் நான். என் துணை இல்லாமலேயே பகைவர்களை அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை பின்பற்றி செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன் ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த செய்தியை சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவனும் லட்சுமணனும் ராமர் இருக்குமிடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான்.

ராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என் உள்ளத்தை குளிரச் செய்துவிட்டாய். உன் நட்பை பெற்றது என் பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 16

ராமர் தனது கோபத்தை வார்த்தைகளில் லட்சுமணனுக்கு புரிய வைத்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் அதன் காரணமாகவே விரைவில் அழிந்து போவான். எங்களுக்கு கொடுத்த வாக்கை மறந்து எங்களை ஏமாற்ற நீ விரும்பினால் உனக்கும் அதே கதி தான் உண்டாகும். வாலிக்காக காத்திருந்த மேலுலகம் உனக்காகவும் காத்திருக்கிறது தெரிந்துகொள். நீயும் மேலோகம் செல்ல விரும்புகிறாயா? ராமருடைய வில்லும் அம்பும் உனக்காக தயாராக இருக்கின்றது. நீயும் உன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக போகங்களை அனுபவித்து ராமருடைய கோபத்தை பெற்று விட்டீர்கள் என்ற செய்தியை கூறுவாய் என்று ராமர் லட்சுமணனை அனுப்பி வைத்தார். லட்சுமணன் தன் அண்ணனுடைய துயரத்தையும் கோபத்தையும் அப்படியே கேட்டுக்கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்ப முற்பட்டான். அப்போது ராமர் சில கணங்கள் லட்சுமணனின் பேசும் சுபாவத்தை யோசித்தார். லட்சுமணனை மீண்டும் அழைத்தார். சுக்ரீவனிடம் எனது கோபத்தை தெரியப்படுத்தும் போது கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம். நமது நண்பனாகி விட்டான். எனவே அவனது தவறை மட்டும் சுட்டிக்காட்டு என்று சொல்லி அனுப்பினார் ராமர். லட்சுமணனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி கோபத்துடன் கிளம்பினான்.

லட்சுமணனுடைய கோபத்தையும் அவனது தோற்றத்தையும் அவன் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து வானர காவலாளிகள் பயந்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். எனவே கோட்டையை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டுமென்று ஆயத்தமானார்கள். அவர்களுடைய இந்த நடவடிக்கையை பார்த்த லட்சுமணனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. சில வானரங்கள் ஓட்டமாக ஓடி அந்தப்புரத்தில் இருந்த சுக்ரீவனிடம் லஷ்மணன் கோபத்துடன் வில்லும் அம்புடன் வந்து கொண்டிருக்கிறான் யார் தடுத்தாலும் நிற்கவில்லை. யாராலும் அவனை தடுக்க இயலவில்லை என்றார்கள். சுக்ரீவன் அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்ததால் வானரங்கள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் அரண்மனையை காவலாளிகள் பலமாக நின்று யாரும் உள்ளே நுழையாமல் காவல் காத்தார்கள். இக்காட்சியை கண்ட லட்சுமணனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. தடையை மீறி லட்சுமணன் உள்ளே நுழைந்தான். லட்சுமணன் முதலில் அங்கதனை கண்டான். அவனை கண்டதும் லட்சுமணன் கோபம் ஓரளவு தணிந்தது. அங்கதனிடம் வானர ராஜவாகிய சுக்ரீவனிடம் நான் வந்திருக்கும் செய்தியை முதலில் சொல்வாய் என்று சொல்லி அனுப்பினார். அங்கதன் சுக்ரீவனிடம் விஷயத்தை தெளிவாக எடுத்து கூறினான். ஆனால் போக மயக்கத்தில் இருந்த சுக்ரீவனுக்கு எதுவும் புரியவில்லை. அங்கதன் மிகவும் வருத்தப்பட்டான். மந்திரிகளுடன் என்ன செய்வது என்று ஆலோசித்தான். அனுமன் உட்பட சில மந்திரிகள் உள்ளே சென்று சுக்ரீவனுக்கு விஷயங்களை நன்றாக எடுத்துக் காட்டி அவன் புத்தி தெளிவடையச் செய்தார்கள்

ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் ஒரு தவறும் செய்யவில்லை. என் நண்பர்களாகிய ராம லட்சுமணர்களுக்கு என் மேல் ஏன் கோபம் வந்தது. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்திருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றார் அனுமன்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 15

ராமரும் லட்சுமணனும் மழைக் காலத்தில் பாதுகாப்பாக குகைக்குள்ளே இருந்தார்கள். சீதையை தேடுவதற்கான காலம் விரைவில் வரும் என்று லட்சுமணன் வருத்தத்துடன் இருந்த ராமருக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான். நான்கு மாத மழைக்காலம் முடிவுக்கு வந்தது. பறவைகளும் மிருகங்களும் வெளியில் திரிந்து விளையாட ஆரம்பித்து விட்டன. கிஷ்கிந்தையில் வாலி இறந்த துக்கத்தை மறந்து சுக்ரீவன் தாரை உட்பட வானரங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ராமருடைய காரியத்தை அனுமன் மட்டும் மறக்காமல் மிகவும் கவலைப்பட்டான். ராமருக்கு கொடுத்த வாக்கை பற்றி சுக்ரீவனிடம் மெதுவாக பேசுவதற்கு தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜ காரியங்கள் அனைத்தையும் மந்திரிகளுடன் ஒப்படைத்து விட்டு போகத்தில் மூழ்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அனுமன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.

ராமர் உங்களுடைய எதிரியை அழித்ததை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய அபாயத்தை கருதாமல் தங்களுக்கு வாக்களித்தபடி வாலியை உடனடியாக கொன்று விட்டார் ராமர். இதன் காரணமாக முன்னோர்கள் அனுபவித்த ராஜ்யத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள். பேரும் புகழும் பெற்று விட்டீர்கள். உங்களுடைய அதிகாரம் நிரந்தரமாகி விட்டது. இப்போது ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அவருடைய நட்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். இப்போது அதைச் செய்தால் உங்கள் புகழ் மேலும் பெருகும். ராஜ்யமும் பலப்படும். ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செய்து முடிப்பது சிறப்பானதாகும். கால தாமதம் செய்யாமலாவது செய்து முடிக்க வேண்டும். கால தாமதத்துடன் செய்யும் காரியமானது பயன் தராது. ராமர் நமக்கு செய்த உதவியை நாம் நினைத்து அவருக்கு செய்ய வேண்டியதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மழை காலம் முடிந்து விட்டது. இனி தாமதம் சொல்வதற்கு காரணமில்லை. சீதையை தேட வேண்டிய பெரும் காரியத்தை உடனே துவக்க வேண்டும். இவ்விசயத்தில் ராமர் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறார். அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அவரது கோபத்தை நம்மால் தாங்க இயலாது. இனி சிறிதும் கால தாமதம் வேண்டாம் என்று நீதி முறைகளை சுக்ரீவனுக்கு சொல்லி முடித்தார் அனுமன். அதற்கு சுக்ரீவன் பூமி முழுவதும் சுற்றி தேடிப் பார்த்து சீதையை கண்டுபிடிக்க வேண்டிய திறமை வாய்ந்த ஒற்றர் வானரங்களை உடனே இங்கு வந்து சேர வேண்டும் என்றும் வந்து சேராதவர்களுக்கு விசாரணை இன்றி தண்டனை வழங்கப்படும் இது அரசனுடைய உத்தரவு இவ்வாறு உத்தரவிடுவாய் என்று அனுமனிடம் சொல்லி விட்டு சுக்ரீவன் தன் அந்தப்புரத்திற்கு சென்று விட்டான்.

ராமரும் லட்சுமணனும் மழைக்காலம் முடிந்து விட்டது இனி சுக்ரீவன் விரைந்து வருவான் என்று காத்திருந்தார்கள். சுக்ரீவன் வரவில்லை. ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். இந்த மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் சென்று விட்டது. இந்த நான்கு மாதமும் எனக்கு நான்கு யுகம் போல் இருந்தது. இந்த உலகம் சௌந்தரியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீதை எங்கோ தவித்துக் கொண்டிருக்கிறாள் நான் இங்கே துக்கத்தில் வானர அரசனான சுக்ரீவன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றேன். கிஷ்கிந்தைக்கு அரசனானதும் சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்து அரச சுக போகங்களில் மூழ்கி கிடக்கின்றான். உடனடியாக கிஷ்கிந்தை சென்று சுக்கிரனை சந்தித்து நான் சொல்லும் செய்தியைச் சொல்லி விடு என்று சொல்ல ஆரம்பித்தார்.