ராமரைப் பற்றியும் தம்மைப் பற்றியும் அனுமனிடம் சொல்ல ஆரம்பித்தான் லட்சுமணன். ராமர் எனது அண்ணன் அயோத்தியை ஆண்ட தசரதரின் மூத்த ராஜகுமாரன். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தற்போது வனவாசத்தில் இருக்கிறார். இந்நேரத்தில் அவரது மனைவி சீதையை ராட்சசன் ஒருவன் ஏமாற்றி தூக்கிச் சென்று விட்டான். அவளை தேடிச் செல்லும் போது கபந்தன் என்ற ஒரு ராட்சசன் சாப விமோசனம் பெற்றான். சீதை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்களிடம் சுக்ரீவனின் நட்பை பெற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களுக்கு அவர் உதவியும் செய்வார். சீதையை நீங்கள் மீட்டெடுக்கலாம் என்று சொல்லினார். அதன்படி சுக்ரீவனின் நட்பை பெற்றுக் கொள்வதற்கான சுக்ரீவனை தேடி இங்கை வந்திருக்கின்றோம் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன்.
அனுமன் சூக்ரீவனை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சுக்ரீவன் தனது அண்ணன் வாலியினால் ராஜ்யத்தையும் மனைவியையும் இழந்து தற்போது காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் உதவியால் அவர் தனது ராஜ்யத்தையும் மனைவியையும் அடைவார். அவரது உதவியால் நீங்கள் உங்களது மனைவியை அடைவீர்கள். வாருங்கள் உங்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி தனது உடலை பெரிய உருவமாக மாற்றிக்கொண்டார் அனுமன். ராமர் லட்சுமணர் இருவரையும் தனது தோள்களில் அமர வைத்து ரிச்ய மலையிலிருந்து சுக்ரீவன் இருக்கும் மலய மலைக்கு பறந்து சென்றார் அனுமன். சுக்ரீவனிடம் ராமரை பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி இவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் இழந்த ராஜ்யத்தை அடையலாம் என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அனுமன்.
ராமரைப் பார்த்ததும் சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். ராஜகுமாரனே வானரமான என்னுடைய நட்பை நீங்கள் தேடி வந்ததினால் இப்போதே உங்களை நட்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய நட்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தனது கையை நீட்டினார். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் தனக்கு ஏற்பட்ட தூக்கத்தை பகிர்ந்து கொண்டான். எனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தையும் இழந்து மனைவியையும் இழந்தேன். என்னை தாக்க வருவானே என்று அவனுக்கு பயந்து இக்காட்டில் அங்கும் இங்கும் திரிந்து ஒளிந்து கொண்டு காலத்தை கழித்து வருகிறேன். நீங்கள் வாலியை கொன்று என் துக்கத்தை தீர்த்து எனக்கு ராஜ்யத்தையும் மனைவியையும் திரும்ப பெறும்படி செய்யுங்கள் என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் அறம் தவறி உன்னுடைய மனைவியை தூக்கிச் சென்ற வாலியை கொல்வேன் இது நிச்சயம். என்னுடைய அம்புகள் வீண்போகதவை. என் அம்புக்கு வாலி நிச்சயம் இரையாவான் இதில் சந்தேகம் இல்லை என்று உறுதி கூறினார். ராமர் கூறிய வார்த்தையை கேட்ட சுக்ரீவன் உங்களால் நான் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவேன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.
ராமர் சுக்ரீவனிடத்தில் உறுதி கூறிய அதே நேரத்தில் வாலிக்கும் லங்கையில் இருக்கும் சீதைக்கும் ராவணனுக்கும் இடது கண் துடித்தது. சீதைக்கு மங்கள கரமாக துடித்தது. இதனை அறிந்த சீதை ராமர் தம்மை தேட ஆரம்பித்து விட்டார். நம்மை ராட்சசன் தூக்கி வந்ததை அறிந்திருப்பார். நாம் இங்கிருப்பது அவருக்கு தெரிந்து விட்டது. விரைவில் நம்மை காப்பாற்ற வந்துவிடுவார் என்று ஆறுதலடைந்தாள். ராவணனுக்கும் வாலிக்கும் இடது கண் அபசகுனமாக துடித்தது.


