ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 11

ராமர் வாலியின் கேள்விக்கு மேலும் பதில் கூறினார். இந்திரன் உனக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் இந்திரனின் வரத்தின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் சத்திரியர்கள் வேட்டையாடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால் மறைந்திருந்து முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்த தவறும் இல்லை. எனது மனைவியை தேடுவதற்கு ஒரு மன்னனின் உதவி தேவைப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றி கொள்வதற்கு மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி சுக்ரீவனை சந்தித்து நட்பு கொண்டேன். சுக்கிரீவன் முதலில் என்னைச் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால் அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். உன்னை அழிக்க உனது முன்னால் வரும் போது நீயும் என்னை சரணடைந்து அடைக்கலம் கொடு என்று கேட்டால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை மீறியவனாவேன். அதைத் தவிர்ப்பதற்காகவும் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காவும் மறைந்திருந்து அம்பு செலுத்த வேண்டி இருந்தது என்று சொல்லி முடித்தார் ராமர்.

ராமரிடம் மேலும் பேசினான் வாலி. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகள். நாங்கள் விலங்குகள் விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்று உரிமை கொண்டாட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுக்கு இங்கே இடம் இல்லை. நாங்கள் விரும்பியவாறு வாழலாம் என்பது எங்களுக்கு உள்ள உரிமை. வல்லவன் எதையும் செய்யலாம். நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவர்கள். மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவு கோல்களை வைத்து எங்களை அளப்பதில் நியாயம் இல்லை என்று வாலி கூறினான். அதற்கு ராமர் மிருகம் மனிதன் என்பது உடலைப் பற்றியது. ஆனால் சத்தியம் அனைவருக்கும் ஒன்றே. தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய். பிறர் மனைவியை விரும்பும் அற்பத்தனம் உன்னிடம் அமைந்துள்ளது நீ உயிர் வாழத்தகுதியானவன் அல்ல. விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார் ராமர்.

ராமரின் பதிலில் திருப்தி அடைந்த வாலி அடுத்த கேள்வியை கேட்டான். உனது மனைவியை தூக்கிச் சென்ற ராவணனைக் கொல்வதற்கு என் நட்பை நீ தேடி இருக்கலாம். ஒரு கனத்தில் ராவணனை கயிற்றால் கட்டி தூக்கி வந்திருப்பேன். சிங்கத்தைத் துணையாக வைத்துக் கொள்வதை விட்டு சிறுமுயலை நம்பி விட்டாய். உன்னிடம் முன் யோசனை இல்லை என்றான் வாலி. அதற்கு ராமர் பற்களைக் குத்தித் துய்மைப்படுத்த சிறு துரும்பு போதும் எனக்கு உலக்கை தேவை இல்லை. அதுபோல் ராவணனை அழிக்க எனக்கு நீ தேவை இல்லை உன் தம்பியே போதும் என்று கூறினார். அதற்குப் பின் ராமர் தவறு செய்திருக்க மாட்டார். தவறு தன்னுடையது தான் என்று உணர்ந்த வாலி மனம் மாறி ராமரிடம் நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

தொடரும்….

குறிப்பு: ராமர் வாலியை தாக்கியதற்கு வேறு சில பின்னணிக் காரணங்களும் உள்ளது. முதலில் வாலி யாராலும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத தன்னை விஷ்ணு அவதாரமெடுத்து அழிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தான். இரண்டாவதாக ராவணால் வாலியை எதிர்க்க முடியாமல் அவனை அழிக்க சில அரக்கர்களை அனுப்பி பல தந்திரங்களையும் செய்திருந்தான் ராவணன். அதன் காரணமாகவே வாலியும் சுக்ரீவனும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரனிடம் வாலி வரம் பெற்றதும் ராகுவிற்கும் வாலிக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் தோற்ற ராகு வாலியிடம் உனது மரணத்திற்கு நானே காரணாமாக இருப்பேன் என்று சாபமிட்டிருந்தான். வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டு பிரிந்த நேரத்தில் ராகு தான் விட்ட சாபத்தின்படி வாலியின் மனதில் சுக்ரீவனின் மனைவி மீது ஆசை ஏற்படும்படி தூண்டி விட்டான் அதன்படியே சுக்ரீவனின் மனைவி மீது ஆசை கொண்டு அறநெறி தவறி வாழத்தொடங்கினான். இந்த நிகழ்வினால் ராகுவின் சாபம் நிறைவேறியது. ராவணனின் தந்திரம் நிறைவேறியது. வாலியின் ஆசைப்படி விஷ்ணுவின் கையாலேயே மரணமடைந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.