ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 3

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். பெண் ஒருத்தியை ராட்சசன் ஆகாய மார்க்கமாக தூக்கி செல்வதை பார்த்தோம். அவள் தன்னுடைய ஆபரணங்களை நாங்கள் இருக்கும் இடம் நோக்கி கீழே எறிந்தாள். அவள் ராமா லட்சுமணா என்று கதறிக்கொண்டே செல்வதை பார்த்தோம். அந்த ஆபரணங்கள் எங்களிடம் இருக்கின்றது. தங்களின் மனைவியுடையதா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். அதனைக் கேட்டதும் பரபரப்படைந்தார் ராமர் சீக்கிரம் கொண்டு வாருங்கள் அந்த நகைகளை என்றார். துணியில் சுற்றி வைத்திருந்த நகைகளை சுக்ரீவன் கொடுத்தார். லட்சுமணனிடம் ராமர் இப்போது இந்த நகைகளை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நீ இந்த துணியை பிரித்து நகைகளை பார் லட்சுமணா என்றார். துணையை பிரித்து அதில் இருந்து சீதையின் கால் சிலம்பை எடுத்து ராமரிடம் காண்பித்த லட்சுமணன் இது சீதையினுடையது தான் என்று கூறினான். நகைகளை பார்த்த ராமருக்கு அடங்க முடியாத கோபமும் துக்கமும் உண்டானது. சீதையை தூக்கிப் போன அந்த ராட்சசனுக்கு யமன் வீட்டு வாசல் காத்திருக்கிறது. அவனை அழிப்பேன். அவனுக்கு ஆதரவாக வந்தால் அவன் குலம் முழுவதும் அழிப்பேன் என்று கர்ஜனை செய்தார்.

ராமர் தனக்கு முதலில் உதவி செய்து ராஜ்யத்தை அடையச் செய்வார் பிறகு நாம் அவருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியிருந்த சுக்ரீவன் ராமரின் கோபத்தை பார்த்து மிகவும் கவலைப்பட்டான். ராமர் முதலில் நமக்கு உதவி செய்து நம்முடைய ராஜ்யத்தை மீட்டுக்கொடுப்பாரா இல்லை சீதையை மீட்க அவருக்கு நாம் முதலில் உதவி செய்வதா? யார் யாருக்கு முதலில் உதவுவது என்று குழப்பமடைந்தான். ராமருக்கு முதலில் உதவி செய்து சீதை இருக்குமிடம் தேடிப்போக வேண்டுமானால் நாம் முதலில் மறைந்திருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டும். நாம் வெளியே வந்தது தெரிந்தால் வாலி நம்மை தாக்குவான். வாலியை எதிர்த்து போராட முடியாது. எனவே ராமரை நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி ராஜ்யத்தை அடைந்து விடுவோம் பிறகு நாம் அவருக்கு உதவி செய்து சீதையை தேடிக்கண்டு பிடிக்க உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தான் சுக்ரீவன். ஆனால் இதனை எப்படி ராமரிடம் சொல்வது அவர் இருக்கும் துக்கத்திலும் கோபத்திலும் நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி சொன்னால் நம்மை தவறாக நினைத்தால் என்ன செய்வது? இப்போது ஆரம்பித்த நட்பு உடனடியாக முடிவுக்கு வந்து விடுமோ என்று பயந்தான். ராமருடைய மன நிலைக்கு ஏற்றார் போல் சமயோசிதத்துடன் பேச ஆரம்பித்தான்.

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். சீதையை தூக்கிச் சென்ற ராட்சசனின் பராக்கிரமம் என்ன? அவன் எங்கிருக்கின்றான்? அவன் சீதையை எங்கு வைத்திருக்கிறான் என்று எதுவும் எனக்கு தெரியாது. உங்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். சீதை எங்கிருந்தாலும் அவர்களை தேடிக்கண்டு பிடித்து எதிர்த்து வரும் அந்த ராட்சசர்களை கொல்லும் வழியை தேடி அவர்களை மீட்க உங்களுக்கு நான் உதவுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். அந்த ராட்சசனை கண்டு பிடித்து அவனது குலத்தையே அழிப்போம். உங்களது வீரமும் எனது படை பலமும் வீண்போகாது. தைரியமாக இருங்கள் துக்கமான நேரத்தில் தைரியமுடன் இருக்க வேண்டும். துக்கத்திற்கு நாம் இரையானால் அது நம்மை இழுத்து கொண்டு போய் தோல்வியின் பள்ளத்தில் விட்டு விடும். உங்களைப் போல் மனைவியை இழந்து ராஜ்யத்திலிருந்து அவமானப் படுத்தப்பட்டு துரத்தப்பட்டவன் நான். என்னுடைய துக்கத்தை அடக்கிக் கொண்டு தைரியத்தை காத்து வருகிறேன். வானரமான என்னால் முடியும் போது ராஜாகுமாரரான உங்களாலும் உங்கள் மனதின் துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கில்லை. நண்பன் என்ற முறையில் எனக்குள் தோன்றுவதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.