இறைவன் இருக்கும் இடம்

ஓர் ஊரில் வசித்த விவசாயி முருகன் இறைவன் மீது பெரிதும் பக்தி கொண்டவன். நல்லவன் பெரியோர்களை மதிப்பவன். ஏழையான அவன் போதும் என்ற மனதுடன் வாழ்ந்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி நேர்மையாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவியும் ஐந்து வயதில் மகனும் இருந்தார்கள். ஒரு சமயம் அவனுக்கு இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இறைவா நீங்கள் உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்து அருள் புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் முருகனின் பிரார்த்தனை பலித்தது. இறைவன் முருகனின் கனவில் தோன்றி அன்பனே வரும் புதன்கிழமை நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினார். கனவு கலைந்து எழுந்த முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் மகிழ்ச்சியை மனைவியிடமும் மகனிடமும் பகிர்ந்துகொண்டான். அவர்களும், தங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். இறைவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை எப்படி உபசரிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். முடிவில் இறைவனுக்கு வழங்குவதற்கு இனிப்பு தயார் செய்ய வேண்டும். ஒரு ஜோடி புதிய செருப்பு கொடுக்க வேண்டும், ஒரு சால்வை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இறைவன் குறிப்பிட்ட புதன்கிழமை வந்தது. முருகன் குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஆவலோடு வாசல் கதவருகில் காத்திருந்தார்கள்.

காலை மணி பத்தாயிற்று. அப்போது முருகன் வீட்டருகில் 35 வயது மதிக்கத்தக்க ஏழைப்பெண் தன் எட்டு வயது மகளுடன் வந்து கொண்டிருந்தாள்.
அவளது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. முருகன் வீட்டுக்கு அருகில் வந்தபோது மயங்கி விழுந்து விட்டாள். முருகன் அந்தப் பெண் அருகில் சென்று, அவளுக்கு முதலுதவி அளித்தான். சிறிது நேரத்தில் அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். முருகன் அவளுடன் பேசியபோது அவளும் அவள் மகளும் வறுமை காரணமாக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடப்பதும் பசியில் மயங்கி விழுந்தததும் தெரிய வந்தது. காரணம் தெரிந்ததும் அவன் அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். முருகன் குடும்பத்தினர் அவர்களுக்கு இறைவனுக்குத் தருவதற்காக வைத்திருந்த இனிப்புகளை கொடுத்தார்கள். மீதமிருந்த இனிப்பையும் அவர்களிடமே கொடுத்து இவற்றை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். அந்தப் பெண் முருகன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

முருகனின் உள்ளம் இறைவன் பக்கம் திரும்பியது. அவர் எப்போது வரப் போகிறார் என்று பரபரத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்தது. இந்த நிலையில் கடுமையான வெயிலில் ஒரு பிச்சைக்காரன் முருகன் வீட்டுக்கு அருகில் வந்தான். அவன் முருகனிடம் உங்களிடம் ஏதாவது பழைய செருப்பு இருந்தால் அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள் என்று வேண்டினான். முருகன் வீட்டிற்குள் சென்று, தான் இறைவனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு ஜோடி புதிய செருப்பை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான். மாலையில் குளிர் கடுமையாக இருந்தது. குளிரில் நடுங்கியபடியே முதியவர் ஒருவர் தெருவில் நடந்து வந்தார். அவரைப் பார்த்த முருகன் இவர் இப்படி குளிரில் கஷ்டப்படுகிறாரே என்று வீட்டிற்குள் சென்று கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்தான். அவன் மனைவி இறைவனுக்காக இதை மட்டுமாவது வைத்திருங்கள் என்று கூறி தடுத்தாள். முருகன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சால்வையை முதியவருக்குப் போர்த்தினான். அவர் முருகனுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார். அன்று பகல் முடிந்து இரவும் வந்து விட்டது. இறைவன் வரவில்லை. முருகன் மிகவும் மனம் வருந்தினான். அந்த ஏமாற்றம் அவனைப் பெரிதும் பாதித்தது. அவன் இறைவனிடம் இறைவா நீங்கள் ஏன் இன்று என் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தான். அப்போது இறைவனின் குரல் அசரீரீயாக ஒலித்தது:

இன்று நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்து நீ கொடுத்தவற்றைப் பெற்றுக் கொண்டேன். முதலில் ஒரு ஏழைப்பெண் அவள் மகள் வடிவத்தில் உன்னிடம் வந்து நீ கொடுத்த இனிப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவதாக ஒரு பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து செருப்பையும் அடுத்து முதியவர் வடிவத்தில் வந்து சால்வையைப் பெற்றுக்கொண்டேன் என்றார்.

சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவனுக்கு உதவுகிறேன் என்று இல்லாமல் அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம். உதவி என்ற சொல்லை உன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதே தெய்வ நிந்தனையாகும். இறைவனுடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது அந்த நாயை இறைவனாகவே நினைத்து வழிபடு. அந்த நாய்க்குள் இறைவன் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்.

கலியுகம் பற்றி யுதிஷ்டிரர்

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்து ஒரு அழகான குதிரையை பார்த்த உடன் குதிரையின் உரிமையாளரை நெருங்கி குதிரை என்ன விலை என்று கேட்டான். அதற்கு குதிரையின் உரிமையாளர் இந்த குதிரை விற்பனைக்கு அல்ல நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன் என்றார். சகாதேவன் உடனே சரி கேள்வியைச் சொல்லுங்கள் என்றான். ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால் அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால் பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன் என கேட்க சகாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் சகாதேவனை தேடிக்கொண்டு் வந்த நகுலன் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.குதிரையின் உரிமையாளர் நகுலனிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை ஏன் என்று கேட்டார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. சகாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர் அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள் என்று கேட்டான். பதில் சொல்ல முடியாததால் அர்ஜுனனும் அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவர்களைக் காணாமல் யுதிஷ்டிரர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு தம்பி நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய் அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா என்றார். பீமனும் போய் தேடிப்பிடித்து அர்ஜுனன் நகுலன் சகாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். திரௌபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் அவர்களைப் பார்த்ததும் அர்ஜுனா நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள் எனக் கேட்டார். அதற்குப் அர்ஜுனன் நடந்ததை எல்லாம் சொல்லி குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். யுதிஷ்டிரர் நடுங்கிவிட்டு பதில் சொல்லத் தொடங்கினார். எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் என்று விரிவாகக் கூறினார்.

அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள் ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி அவ்வளவு பிள்ளைகளையும் பிரியமாக காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது என்றார். இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில் அதன் வால் போக முடியவில்லை என்று பதில் கூறினார். அடுத்து மூன்றாவது கேள்வி பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான் வேலி அப்படியே இருக்க பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது. கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி முடித்தார் யுதிஷ்டிரர்.

குரு சீடன்

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு சீடனைப்பார்த்து சிறிது கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால் வலிக்குமா குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும் என்று கேட்டார். என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை இதுதான் என்றார் குரு. காலில் விழுந்தான் சீடன்.

கலியுகம் பற்றி கிருஷ்ணர்

பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார் கிருஷ்ணர். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

பீமன் அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதைச் சுற்றி நான்கு கிணறுகள் சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன் அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

சகாதேவன் கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன் கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்து தள்ளி வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன் தெளிவுபெற கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நான்கு பாண்டவர்களும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும் மனதில் உள்ள குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

பீமா கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள். வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

அர்ஜுனா கலியுகத்தில் போலி மதகுருக்கள் ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள். குயிலை போல.

சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள் பசுவை போல்.

நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல் நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் பாறையை தடுத்த சிறுசெடியை போல் என்று பதில் சொல்லி முடித்தார்.

ஜ்வாலமுகி

இமாச்சலிலுள்ள ஜ்வாலமுகி கோவில் இது. சக்திவாய்ந்த சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் 9 வடிவங்களைக் குறிக்கும் ஒன்பது தீப்பிழம்புகள் காலங்காலமாக இங்கு எரிந்து கொண்டிருக்கின்றது. இங்கு சிலைகள் இல்லை.

இந்த எரிபொருளை தொடர்ச்சியாக மாற்றும் இயற்கை எரிவாயு அல்லது எண்ணெயை அதிகாரிகள் சோதிக்க முயன்றனர். எரிவாயு எங்கிருந்து வருகிறது என்ற மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

புன்னைநல்லூர் ராமர்

தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர் சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். வைஷ்ண சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுகிறது. நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர் மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். தங்கமும் வெள்ளியும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக மிகப்பெரிய சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலங்கள் கழிந்தன. மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ் தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.

இந்த சாளக்ராமத்தைக் கொண்டு அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்து அழகிய கோயிலும் எழுப்பி அந்தக் கோயிலுக்கு நிலங்களும் பசுக்களும் தானமாக அளித்தார் மன்னர் பிரதாப்சிங். சௌந்தர்யமாக அழகு ததும்ப காட்சி தருவதினால் அவர் குடிகொண்டிருக்கும் கருவறையின் விமானம் செளந்தர்ய விமானம் என்று பெயர் பெற்றது. கோதண்டராமர் ஐந்தடி உயரம் சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலத்தில் லட்சுமணர் சீதாதேவி ஆகியோருடன் சுக்ரீவன் உடனிருக்க சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கி.பி.1739-1763 ல் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

அர்ஜூனனின் காண்டீபம்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் கர்ணா இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள் என்றான். கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். நீ அல்லவோ சுத்த வீரன் அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர் கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றார். அது என்ன என்று கேட்டான் அர்ஜுனன். நேரம் வரும் போது சொல்கிறேன் என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின் கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். அர்ஜுனா நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு என்று கூறினான் கிருஷ்ணன். கனத்த மனத்துடன் கிருஷ்ணரிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும் யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படும் வில்லுக்கு விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில் இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். அர்ஜுனா நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது என்று கூறினார் வியாசர். கிருஷ்ணரே புறப்பட்ட பின் நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால் என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது. இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே என்ன காரணம் என்று கேட்டான் அர்ஜுனன். அதற்கு வியாசர் உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கிருஷ்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால் இதை உன்னால் தூக்க முடியவில்லை என்றார்.

சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே ஏன் தெரியுமா கிருஷ்ணரின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். கிருஷ்ணரின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான். பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் இறைவன் தான் வழங்குகிறார் என்றார் வியாசர்.

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன்

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் ஏன் அவர் தன் வில்லினால் அம்பைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து கல்லினால் ஏன் பாலம் கட்டினார் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு நதியின் அருகே அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருவம் கொண்டு அமர்ந்து ராமநாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவரிடம் சென்று ஏய் வானரமே உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார் என்றான் கர்வமாக. தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க எண்ணுகிறார்.

வில்லினால் கட்டப்பட்ட சரப்பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும். ஆகையால் கல்லினால் வானரங்களை வைத்து பாலம் கட்டினார் என்றார் அனுமன். அதற்கு அர்ஜூனன் இந்த நதியின் குறுக்கே நான் அம்பினால் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும் என்கிறான் அர்ஜூனன். பாலம் உடைந்துவிட்டால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் என்கிறான். பாலம் உடையவில்லை என்றால் என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன் என்கிறான் அனுமன். அர்ஜூனன் அம்பினால் சரப்பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினார். அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும் அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தார் உடனே பாலம் தகர்ந்து சுக்குநூறானது. பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்ற அனுமன் ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான் தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும் தனது வாக்கிலிருந்து பின்வாங்க அர்ஜூனன் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது என்ன நடக்கிறது இங்கே என்ன பிரச்சனை என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு கிருஷ்ண கிருஷ்ண என்று சொல்லியபடி பாலம் கட்டினான். தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால் கர்வம் சிறிது தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார் நிற்கிறார் ஓடுகிறார் ஆடுகிறார் பாலம் ஒன்றும் ஆகவில்லை. அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அந்தணரை நோக்கி வந்து யார் நீங்கள் என்று கேட்கிறார் அனுமன். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர். நீங்கள் இருவருமே தோற்கவில்லை. வெற்றி பெற்றது கடவுள் பக்தியும் இறைவனின் நாமமும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை அகந்தை அழிந்த அர்ஜூனன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன் தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது இறைவனின் நாமம்தான் தவிர நீங்கள் அல்ல என்றார்.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன. உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது சந்தேகமேயில்லை. ஆனால் தன்னால் முடியும் என்று கர்வத்துடன் எண்ணும் போது இறை நாமத்தையும் அனைதுத்தும் அவர் செயலே என்பதையும் மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா இந்த வானரன் வேறு யாருமல்ல சிரஞ்சீவி அனுமனே என்றார். உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டினார். அர்ஜூனன் அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது என்றார். அப்படியே ஆகட்டும் பிரபோ என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

பயத்தை எதிர்த்து நில்

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் காசியில் துர்க்கை கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன. சில குரங்குகள் அவரைப் பிறாண்டின சில குரங்குகள் அவரைக் கடித்தன சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன. இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர் குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஓடினாலும் குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும் ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து நில் குரங்குகளை எதிர்த்து நில் என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான் அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவர் நம்மைத் தாக்குவார் இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும் இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும் என்று குரங்குகள் நினைத்து அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயத்தை எதிர்த்து நில் தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில் ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால் அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும் பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள் துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள் அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்.