சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் ராமச்சந்திராபுரத்தில் 1551 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வேங்கடய்யர் பத்மாவதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர். வேத பாராயணங்களை பாலகனாக இருந்த போதே கற்று தேர்ந்தார். பரமக்குடி வேதாந்த மடத்தின் ஆச்சாரியர் இலட்சுமண அய்யரிடம் அதர்வண வேதத்தை முழுமையாக பயின்றார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது. இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப் போற்றி பெருமைப் படுத்தும் விதமாக ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டு காலம் மழை பொழியாததால் கடும் வறட்சியைச் சந்தித்தது தஞ்சை பூமி. தஞ்சையை ஆண்ட அரசர் அச்சுதப்ப நாயக்கர் கவலையுடன் அரசவையைக் கூட்டி மழை வருவதற்கான யாகங்களை நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். மிகப் பெரும் வேத விற்பன்னர்களை எல்லாம் வரவழைத்து யாகங்கள் தொடங்கப் பட்டு ஏழுநாட்கள் ஆன பிறகும் மழை வருவதற்கான அறிகுறிகளே இல்லை.
அப்போது தலைமை வேதவிற்பன்னர் அரசரிடம் சென்று திருவரங்கப் பெருமாளின் சன்னதியில் தத்தாத்ரேயர் என்கின்ற 20 வயது இளைஞர் ஒருவர் தினம்தோறும் தீப தூபங்கள் காட்டி பாடல்களைப் பாடி கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார். இந்த யாக குண்டத்திற்கு முன் அவரை வரவழைத்து பாடச் செய்தால் நம் நோக்கம் நிறைவேறும் என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார் மன்னர். புரோகிதர் குழு தத்தாத்ரேயரை அனுகி விபரத்தைச் சொல்லி யாகம் நடத்தும் இடத்திற்கு அழைத்தார்கள். அதற்கு அவர் மழைதானே வர வேண்டும் வரவைக்கிறேன் என்று சொல்லி யாகத்தில் வைக்கும் கலசம் போல் ஒரு கலசத்தை ஏற்பாடு செய்ய சொல்லி அந்த கும்ப கலசத்தை தலையில் வைத்துக் கொண்டு அரங்கனை நினைத்து காவிரி ஆற்றில் நின்று வருண ஜபம் செய்து காவிரி ஆற்றில் நின்ற நிலையில் மேகராகக் குறிஞ்சி ராகத்தில் அரங்கனை மனதில் நிறுத்தி வருணனை நோக்கி மனம் உருகிப் பாட ஆரம்பித்தார். காலை வேளையில் தொடங்கிய அந்த நிகழ்வை புரோகிதர்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். மாலைப் பொழுது வந்ததும் மேகக் கூட்டம் திரண்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவரித்தார்கள். மழை பெய்யத் தொடங்கியதும் கரைக்கு வந்தார் தத்தாத்ரேயர். மழை மாமழையாக மாறி மூன்று நாட்கள் இடைவிடாது பெய்தது. தஞ்சையைச் சுற்றி உள்ள ஏரி குளம் கிணறு என அனைத்துமே மழை நீரில் நிரம்பியது. இனியும் மழை தொடர்ந்தால் நாட்டிற்கே கேடாக முடியம் என்று எண்ணிய மக்கள் மீண்டும் தத்தாத்ரேயரை வணங்கி மழை போதும் என்று கேட்டுக் கொண்டார்கள். தத்தாத்ரேயர் மீண்டும் பாடலைப் பாடி மழைப் பொழிவினை நிறைவு செய்தார்.

தஞ்சை மன்னர் தத்தாத்ரேயரை அழைத்து அரச மரியாதையைச் செய்து தங்கக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அனைத்தையும் புன்னகையுடன் மறுத்து அங்கிருந்து கிளம்பினார். அப்போது அரசர் தான் அணிந்திருந்த ரத்தின மாலையை அவரது கழுத்தில் போட்டு மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அவரது அன்புக் கட்டளைக்காக அதனை ஏற்றுக் கொண்ட தத்தாத்ரேயர் நேராக திருவரங்கக் கோயிலுக்கு வந்து மன்னர் அணிவித்த ரத்னமாலையை அரங்கனுக்கு அணிவிக்க அர்ச்சகரிடம் வழங்கினார். இதையறிந்த மன்னர் ஒருநாள் திருவரங்கக் கோயிலுக்கு வந்து என்னிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாத தத்தாத்ரேயர் அவர்களுக்கு முதல் மரியாதையாக அதிகாலையில் வழங்கப்படும் பிரம்ம துளசி தீர்த்தத்தை வழங்க வேண்டும் என்றும் தத்தாத்ரேயர் காலத்திற்குப் பிறகு அதிகாலை வேளையில் அரங்கனின் விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் அவருடைய வம்சத்தினர் யாரேனும் இருந்தால் அவர்களுக்குத்தான் முதல் தீர்த்தம் வழங்கப்பட வேண்டும் என்று பட்டயம் எழுதி மன்னர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார்.

தண்டு முனிவர்

தண்டு முனிவர் என்பவர் சிவபெருமானின் பக்தராகவும் நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார். சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்தார். தான் கற்ற நடனத்தை தண்டு முனிவர் பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்கு தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவ லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரத முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் இறுதியான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன. இதனால் பரதரின் பெயரைத் தாங்கி நாட்டியமானது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவன் நாட்டியத்தை தண்டு முனிவருக்கு கற்றுக் கொடுக்கும் இந்த சிற்பம் இருக்கும் இடம் மாமல்லபுரம்.

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகாதேவி நிர்வாணமாக வந்தபோது ​​​​அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.

அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.

அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:

அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.

பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.

தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது

இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.

பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது ​என்னால் வெட்கப்பட முடியாது.

இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:

அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.

வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.

குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.

குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.

குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.

சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்

அம்மாளு என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் கும்பகோணத்தில் 1906ல் அவள் பிறந்தாள். அந்த கால வழக்கப்படி சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் கணவன் மரணம் அடைந்ததால் அவள் சிறு வயதிலேயே விதவையாகி விட்டாள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு உள்ளத்தில் நொறுக்கப்பட்டு சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம் நாராயணனிடம் கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர் வாழச் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகம் எனும் கொடிய உலக நரகத்திலிருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் பகவானே என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும் போது நில் என்று ஒரு குரல் தடுத்தது கண் விழித்தாள்.

உக்கிரமான நரசிம்மர் அவள் எதிரே சாந்த ஸ்வரூபமாக நின்றார். எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிடம் வரை உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க நிழலும் கிடைக்க போகிறதே என்றார் நரசிம்மர். அம்மாளு அவரை போற்றி வாழ்த்தி வணங்கினாள். பகவானே எனக்கு ஒரு வரம் தா என்றாள். என்ன வேண்டும் கேள் அம்மாளு என்றார். எனக்கு பசியே இருக்கக் கூடாது என்றாள். அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது என்று நரசிம்மர் வரமளித்ததார். அன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டம்பளர் மோர் பால் ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். தினந்தோறும் கிருஷ்ண பஜனையில் தன்னை மறந்த நிலையில் ஈடுபட்டாள். அவளுக்கு குருவாக இருந்த ராமச்சந்திர தீர்த்தர் பலவற்றை கற்றுக் கொடுத்தார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். நீ பண்டரிபுரம் வா என்றான் பண்டரிநாதன்.

இந்த குரல் அவளை பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை நீயும் என் கூட வா என்று கூப்பிட்டாள். அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருடங்கள் அங்கேயே தங்கி விட்டாள். கோவிலை அலம்பினாள் பெருக்கினாள் கோலமிட்டாள் மலர்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டினாள் பாடினாள் நிறைய பட்சணங்கள் உணவு வகைகள் சமைத்து பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை. அந்த ஊர் ராணி அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்களை சாதாரணமாக அவள் பாடினாள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலின் பெருமைகளை அப்படியே அவள் பாடலில் பாடினாள். அவள் அந்த கோவில்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை ஒன்றுமே தெரியாது என்றாலும் இந்த அதிசயம் பல கோவில்களில் நடந்திருக்கிறது.

மகா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒருவர் தன் பெண்ணுக்கு திருமணம் பெரியவா ஆசீர்வாதம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்கிறார். என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் என்றார். மகாபெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் பெருமைகளை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மகாபெரியவா ஒரு தடவை அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம் என்று கூறினார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும் போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு அம்மாளு தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில் கீழே தாள சப்தமும் நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்த நேரத்தில் யார் ஆடுவார்? பிரமையோ என்று நினைத்தார்கள். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்த போது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் பாலக் கடல சய்யா எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி சில ஜதிகள் நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல யாராலும் பயிற்றுவிக்க முடியாததும் கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சி வசப்பட்டனர். இவள் புரந்தரதாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்து போற்றி வணங்கினார்கள்.

மதுராபுரி ஆஸ்ரமத்தில் 2002 இல் அம்மாளுக்கு 94 வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே நாக்கு கால மூர்தியு நீனே நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன் காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன் அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் இரவில் ஸ்ரீ வேணுகோபாலன். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி எழுப்பி குளிப்பாட்டி சிங்காரித்து ஆடைகள் அணிவித்து பாடி உணவு சமைத்து நிவேதித்து தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள். ஒரு நாள் தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த அம்மாளு பாடிக் கொண்டிருக்கும் போது அதில் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்து பாடினாள். பங்குனி உத்தரம் நாளில் கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். அதுபோல் அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள்.

மாத்ரு ஸ்ரீ வெங்காமம்பா

ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் 1730 ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதலே திருமலை பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர். இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி மிகச் சிறுவயதிலேயே வேங்கடாசலபதி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் செய்து வைத்த போதும் இல்லற சுகத்தை மறுத்தார். பெருமாளே கதி என பக்தியில் கரைந்து கவிதைகளை பொழிந்தார். சில நாட்களில் அவரது கணவர் இறந்த பின் கணவர் வருவதற்கு முன்பிருந்தே தான் வைத்துக் கொண்டிருக்கும் பூ பொட்டு என்ற மங்கல சின்னங்களை கணவர் இறந்ததற்காக நான் எதற்கு எடுகக வேண்டும் என்று சொல்லி பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்தார். இவரது உறுதியையும் ஆன்மீக பற்றையும் பார்த்துவிட்டு கிராமத்தினர் நாளடைவில் அவரை தேவுடம்மா எனச் சொல்லி வழிபட்டனர். வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்றார். திருவேங்கடவன் மீது கொண்ட காதலால் திருமலைக்கே குடியேறி வாழ ஆரம்பித்தார். இங்கு வந்த பிறகு பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் எழுதி மக்களுக்கு படைத்தார். திருமலையையும் திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றினார்.

வேங்கடவனே கதி என வாழ்ந்த வெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்த சேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார். ஒரு நாள் திருவேங்கடவன் நகை காணாமல் போக அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவரை கோயிலுக்கு எளிதில் வரமுடியாத துாரத்தில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாரும் அறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடை மூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

1730 ம் ஆண்டு பிறந்த வெங்கம்மாம்பா தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார். இவர் நினைவாக இவரது பெயரில் தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. மாத்ரு தரிகொண்ட ஸ்ரீ வெங்காமாம்பா நித்யா அன்னதானக்கூடம் என்று பெயரிடப்பட்ட இம்மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் வளாகத்தை உள்ளடக்கி உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா என்று இவரின் பெயரை வைத்திருக்கிறார்கள். தரிகொண்ட வேங்கமாம்பாவின் பெயரும் உருவமும் பொறித்த அஞ்சல் தலை அரசால் வெளியிடப்பட்டது.

இவர் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றிய நூல்கள்

தரிகொண்ட நரசிம்ம சதகம்
நரசிம்ம விலாச கதா
சிவ நாடகம்
பாலக்கிருஷ்ண நாடகம்
யக்‌ஷ கானம்
ராஜயோகம்ருத சாரம்
த்விபத காவியம்

தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தவுடன் இயற்றிய நூல்கள்

விஷ்ணு பாரிஜாதம்
செஞ்சு நாடகம்
ருக்மிணி நாடகம்
ஜலக்கீரட விலாசம்
முக்திகாந்தி விலாசம்
கோபி நாடகம்
ராம பரிநயம்
ஸ்ரீ பாகவதம்
ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி
தத்வ கீர்த்தனலு
வசிஷ்ட ராமாயணம்
ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம்
அஷ்டாங்க் யோகசாரம்

வியாச தீர்த்தர்

காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக். அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு தெளிவு பெற்ற சிந்தனை நிர்வாகத் திறன் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கியவர் ராமதேவர். ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷமம்மா) என்றும் சொல்வார்கள். இந்தத் தம்பதியருக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை இருந்தது. அந்தத் தம்பதியினர் ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில் வேதவியாசர் தோன்றி காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி மறைந்தார். நாட்கள் கடந்தன அவர்கள் அங்கு செல்லவில்லை. ஒரு நாள் ராமதேவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மயக்கம் அடைந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன் கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் உடன் கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண் யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும். என்பது வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் பிரமண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனையுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடத்தின் தலைவரான பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.

தீர்க்க சுமங்கலி பவ புத்ரவதீ பவ என்று ஆசிர்வாதம் செய்தார் பிரம்மண்ய தீர்த்தர். சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து சுவாமி கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெற வந்தாள் எனக் கூறினார்கள். அவர்களை பார்த்த பிரம்மண்ய தீர்த்தர் சீத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் வைத்திருந்த கமண்டல நீரை ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார். உடனே ராமதேவர் உயிர்த்தெழுந்தார். எழுந்தவர் மனைவியுடன் சேர்ந்து பல முறை ஸ்வாமிகளை வணங்கினார். அவர்களுக்கு ஆசி கூறிய பிரம்மண்ய தீர்த்தர் உங்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். அதன்படி சீதாம்மா கருவுற்றாள். குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த பிரம்மண்ய தீர்த்தர் மடத்தில் இருந்து ஒரு தங்கக் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூமியில் படாமல் பிறக்க ஏற்பாடு செய்தார். பிரபவ வருடம் வைகாசி மாதம் பிறந்த குழந்தை பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள். சுவாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதாகியது. உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில் யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து வியாச தீர்த்தர் என்ற திருநாமம் சூட்டினார் பிரம்மண்ய தீர்த்தர்.

திருவரங்கம் கோவிலுக்கும் திருவானைக் கோயிலுக்கு இடையே ஒருமுறை எல்லைப் பிரச்சனை எழுந்தது. அனைவரின் உள்ளங்களிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தது. பிரச்சனை நாட்டை ஆண்ட சாளுவ நரசிம்மன் என்ற மன்னரிடம் கொண்டு செல்லப்பட்டது. சாளுவ நரசிம்மருடன் அங்கு வந்த வியாச தீர்த்தர் பிரச்சனை தீர ஒரு வழி சொன்னார். கோவிலில் இருந்து ஒருவர் மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு செல்லும் போது மூச்சு விடுகின்றாரோ அதுவே எல்லை என்றார். இதை சாளுவ மன்னன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்றொரு பிரச்சனை எழுந்தது. யார் ஓடுவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில் நானே ஓடுகிறேன் என்றார் வியாச தீர்த்தார். அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். திருவரங்கம் திருக்கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் மூச்சுவிட்டு நின்றார். அதுவே அரங்கநாதனின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு அனுமன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து இரு கோவிலின் எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைத்தார் வியாச தீர்த்தார்.

கிருஷ்ண தேவராயர் கலிங்கப் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பினார். அப்போது அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள் ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும் என்றார்கள். கிருஷ்ண தேவராயர் வியாச தீர்த்தரிடம் நடந்ததைக் கூறி அவரது பாதங்களில் சரணடைந்தார். ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வியாச தீர்த்தர் தானே மன்னராக இருப்பதாக வழி கூறினார். அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர். குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்குப் பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. கிருஷ்ண தேவராயருக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. அதன் பின் தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர் தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய வியாச தீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து அவரையே மன்னராககினார். அன்று முதல் வியாச தீர்த்தர் வியாசராஜர் என்று அழைக்கப்பட்டார்.

வியாச தீர்த்தர் டெல்லியில் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்று தெரிய வந்தது. தோண்டுங்கள் இதை என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்தார் வியாச தீர்த்தர். உடனே சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை ஒட்டகம் ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து வியாச தீர்த்தருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான்.

இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார். இவர் கன்னடத்தில் பல பாடல்களை இயற்றியுள்ளார். நியாயமிர்தம் தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன. சோமநாத கவியின் வியாசயோகி சரிதம் மற்றும் அவரது சீடரான ஸ்ரீனிவாச தீர்த்தரின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களில் வியாச தீர்த்தரின் வரலாறு உள்ளது.

திருமாளிகைதேவர்

நவகோடி சித்தர்புரம் என அழைக்கப்படும் திருவாவடுதுறையில் சித்தஞான யோக சாதனை செய்து வந்த போகரின் சீடர்களில் ஒருவர் திருமாளிகைதேவர். சைவ ராஜதானியாகிய திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் சந்நிதி விசேஷங்கள் இரண்டு. ஒன்று ஆதீன பரமாசாரியர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சந்நிதி. இன்னொன்று சித்தர் திருமாளிகைத்தேவர் சந்நிதி. இவ்விருவர் சமாதிக் கோயில்களும் திருமடத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. திருமாளிகைத் தேவர் மாளிகை மடம் இருந்த இடத்திலேயே அவரது சமாதிக் கோயிலை ஒட்டி நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக் கோயிலுடன் இணைந்த குருமடம் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனமாக வளர்ந்தது என்பது வரலாறு.

திருவிடைமருதூரைப் பூர்வீகமாக உடைய ஐந்து கோத்திரத்தார் மரபில் ஒன்றான சைவராயர் மரபில் அவதரித்தவர் திருமாளிகைதேவர். 9 ம் திருமுறையாக விளங்கிடும் திருவிசைப்பாவில் நான்கு திருப்பதிகங்கள் திருமாளிகைத்தேவர் அருளிச் செய்தவை ஆகும். திருவிசைப்பா அருளிச் செய்த இவரின் காலம் 9 ம் நூற்றாண்டு. திருமாளிகைதேவர் காலையில் எழுந்ததும் தன் குல வழக்குப்படி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கோவிலுக்கு சென்று சிவா பெருமானையும் அம்பிகையையும் வணங்கி விட்டு சுவாமிக்குப் படைத்த நெய்வேத்யம் செய்த பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவது தினசரி வழக்கம். இவர் சோழர்களின் தீட்சா குருவாக விளங்கினார். அரண்மனையில் பணி புரிந்தாலும் எப்பொழுதும் சிவபெருமானையே நினைத்துக் கொண்டிருப்பார். போகர் திருவாவடுதுறைக்கு வந்திருந்ததை அறிந்த திருமாளிகைத்தேவர் அவரிடம் உபதேசம் பெற சென்று போகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். திருமாளிகைத்தேவரின் பக்குவ நிலையை உணர்ந்த போகர் அவருக்கு ஞான நிலையை உபதேசித்தார். போகரின் வழிகாட்டுதல் படியே திருமாளிகைத்தேவர் தன் தவ வாழ்கையை நடத்தியதால் திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து இதனைப் பூசித்துக் கொண்டு திருவாவடுதுறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கு என ஆணை தந்து தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென்றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணிசுவரர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக் கொண்டு தங்கியிருந்தார்.

திருமாளிகைத் தேவருக்கு போகர் நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளை உபதேசித்துள்ளார். குருவிற்கு பணிவிடை செய்திடும் பொருட்டும் சிவபூஜை செய்திடும் பொருட்டும் மேலும் இரண்டு கரங்களைக் தமது தவ வலிமையால் உருவாக்கிக் கொண்டு நான்கு கரங்களுடன் தமது பணிகளை தொடர்ந்தார். சிறந்த சிவஞானியரான இவர் அழகும் பொலிவும் நிறை திருமேனியராய்த் திகழ்ந்தார். திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. அந்த ஊரில் திருமணம் நடந்து பல வருடங்கள் குழந்தைகள் இல்லாத பெண்கள் சிலர் குழந்தை வரம் வேண்டி இவரின் முன்பு நின்றார்கள். அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவரருளால் அப்பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிட்டியது. திருமாளிகைத் தேவரின் அருளால் பிறந்த குழந்தைகள் அவரைப் போன்றே நான்கு கையுடன் இருப்பதைக் கண்டு அப்பெண்களின் கற்பு நெறியில் அவர்களது கணவர்கள் சந்தேகமடைந்தார்கள். அச்சமயம் பல்லவ மன்னன் காடவர்கோன் கழற்சிங்கருக்கு (காடவர்கோன் கழற்சிங்கன் காலம் கிபி 825 – 850) கப்பம் கட்டும் சிற்றசர்களில் ஒருவரான நரசிங்கர் திருவாவடுதுறைக்கு அருகில் இருக்கும் பேட்டையில் தங்கினார். இவ்வழியே போகும் பொழுதெல்லாம் அவர் இங்கு தங்கியதால் இவ்விடம் நரசிங்கன்பேட்டை என்ற பெயர் பெற்றது. இது திருவாவடுதுறைக்கு அருகில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நரசிங்கர் வந்திருந்ததை அறிந்த சிலர் நரசிங்க அரசனிடம் புகார் செய்தார்கள். இதை கேட்டு கோபம் கொண்ட அரசன் திருமாளிகைத்தேவரைப் கட்டி இழுத்து வாருங்கள் என்று தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். அரசனின் ஆணைப்படி சென்ற வீரர்கள் திருமாளிகைத் தேவரை நெருங்கிய பொழுது அவர்களின் நோக்கத்தை அறிந்த திருமாளிகைத் தேவர் ம் ஆகட்டும் கட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். திருமாளிகைத் தேவரின் மந்திரம் போன்று மென்மையாக ஒலித்த அந்த சொற்கள் வீரர்களை மயக்கியதால் வீரர்களே தங்களை தாங்களே கட்டிக் கொண்டு நரசிங்கர் முன்னால் பொய் நின்றார்கள்.

திருமாளிகைத் தேவரின் செயலைக் கேட்ட அரசன் மேலும் கோபமுற்று சிந்தையை மயக்கும் அந்த கொடியவனை நீ போய் சிதைத்து விடு. அவன் இனி உயிருடன் இருக்கக் கூடாது என்று தன் தளபதிக்கு உத்தரவிட்டார். தளபதியும் திருமாளிகைத்தேவரின் தலையை சீவிக் கொண்டுத் தான் வருவேன் என்று நரசிங்கரிடம் வீர வசனம் பேசிவிட்டுச் சென்றார். தளபதியைப் பார்த்தவுடன் திருமாளிகைத் தேவர் என் தலையை வெட்டுவதற்காகத் தானே வந்தீர்கள் சரி வெட்டிக் கொண்டு போங்கள் என்று அமைதியாகக் கூறினார். உடனே வீரர்கள் ஒருவருகொருவர் வெட்டிக் கொண்டு இறந்தார்கள். தப்பிப் பிழைத்த இரண்டொருவர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அரசன் திருமாளிகைத் தேவர் தன்னைப் போல் மந்திரம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு அவன் மந்திரம் என்னிடம் பலிக்காது நானே சென்று அவனை ஒழித்து விடுகிறேன் என்று கிளம்பினார்.

திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் மதிர் சுவற்றின் மேல் நான்குப் புறமும் காவல் இருந்த நந்திகள் உயிர் பெற்று எழுந்து இறைவன் முன்பாக இருக்கும் நந்தி தேவரின் உடலில் புகுந்து பூதகணங்களாக வெளிப்பட்டது. அரசர் திருமாளிகைதேவர் இருக்கும் ஊரின் அருகில் வந்ததும் பூதகணங்கள் வந்த படைகளை அழித்தன. மந்திரியையும் அரசரையும் கட்டி திருமாளிகைத் தேவரின் முன்னால் நிறுத்தின. அரசரின் முன்பாகவே அந்த பூதகணங்கள் இறைவன் முன்பு இருக்கும் நந்தி உருவத்துள் புகுந்து மறைந்தன. ஆனால் திருமாளிகைத் தேவரோ நடந்தவற்றிகும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் சிவனே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த நிலை அரசர் நரசிங்கருக்கு அவரின் ஞான உண்மைகளை உணர்த்தியது. உடனே மன்னர் பெருமானே தங்கள் அருமையை அடியேன் அறியவில்லை. சாதாரண மந்திரவாதி என்று நினைத்து பெரும் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அழுதார். அரசரை அமைதிப் படுத்திய திருமாளிகைத் தேவர் நரசிம்மா இடைவிடாமல் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது நம் நெஞ்சில் பதிந்து நிற்கும் இது உலகின் இயல்பு. பெண்கள் என்னை அன்போடு நினைத்தனர். அதன் விளைவாகவே அவர்களின் குழந்தைகள் என்னைப் போல் இருந்தன. யார் மீதும் தவறு இல்லை. அரசனான நீ புகார் கொடுத்தவர்களின் சொல்லை கேட்டாயே தவிர பிரதிவாதியான என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே. அதனால் தான் உனக்கு இவ்வளவு தொல்லைகளும் நடந்தன என்று கூறி அரசரையும் அமைச்சரையும் விடுவித்தார். இதனால்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ உத்தமர்‌ என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்‌. இவ்வாறு அவரது புகழ்‌ அந்த நாடு முழுவதும்‌ பேசப்பட்டு வெகுவாகப்‌ பரவியது. இந்த வரலாற்றிற்கு சான்றாக இன்றும் திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலில் மதில் மேல் நந்திகள் இல்லாதிருப்பதை நாம் காணலாம். மதில் மேல் இருந்த அனைத்து நந்திகளும் இறைவன் முன் இருக்கும் நந்தியுடன் கலந்ததால் தான் பெரிய நந்தி உருவானதாக திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் தல வரலாறு கூறுகின்றது. நந்தியின் முன்பாக இருக்கும் தூணில் நரசிங்க அரசன் மற்றும் அவரது அமைச்சரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

திருமாளிகைத்தேவர் தமது காலத்தில் பல அற்புதங்கள் செய்திருக்கிறார். ஒரு நாள் போகரும் திருமாளிகைத் தேவரும் கோவிலில் சிவ தரிசனம் முடிந்து பிரசாதமான பயற்றஞ் சுண்டல் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது தீவட்டி பிடிப்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் அவரை எழுப்ப வேண்டாம் என்று திருமாளிகைத் தேவரே குருவிற்கு தீவட்டிப் பிடித்துக் கொண்டு சென்றார். அருள்துறை என்னும் திருமடத்தை நெருங்கியதும் தீவட்டிப் போதும் இங்கேயே நில். என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போகர் திருமடத்துக்குள் சென்றார். குரு வார்த்தையே வேதவாக்கு என்று திருமாளிகைத் தேவர் பொழுது விடியும் வரை ஒரு கையில் பயற்றஞ் சுண்டலும் மறு கையில் தீவட்டியும் வைத்துக் கொண்டிருந்ததால் காலை அனுஷ்டாங்களை செய்ய தூய்மையான வேறு இரண்டுக் கைகளை உண்டாக்கி முடித்துக் கொண்டார். அச் சமயம் போகர் திருமாளிகை எங்கே என கேட்க திருமாளிகைத் தேவர் சுவாமி அடியேன் இங்கே இருக்கிறேன் என்று வீதியில் இருந்து குரல் கொடுத்தார். ஏன் உள்ளே வரலாமே என்று குருநாதர் கூறியவுடன் திருமாளிகைத் தேவர் உள்ளே போனார். இரவெல்லாம் விழித்திருந்த சீடரின் குரு பக்தி போகரை வியக்க வைத்தது. அதன் பிறகே தீவட்டி பிடிப்பவர் வந்தார். குருநாதரின் கட்டளைப்படி தீவட்டியை அவரிடம் ஒப்படைத்தார் திருமாளிகைத் தேவர். திருமாளிகைத் தேவரின் கையில் இருந்த பயற்றஞ் சுண்டல் வேகாத பயிராக மாறியதால் அதை ஆட்கள் மூலம் நிலத்தில் விதைத்தார். சில நாட்களில் அவை முளைத்துச் செழித்தன. இதைப் பார்த்த ஊர்மக்கள் திருமாளிகைத் தேவரை சித்தர் என்று நம்பினர்.

திருமாளிகைத் தேவர் ஒரு நாள் வழக்கம் போல் காவிரியில் குளித்து அனுஷ்டாங்களை முடித்து பூக்களைப் பறித்துக் கூடையில் நிரப்பி அபிஷேகத்துக்கான நீர் குடத்துடன் கோவிலை நோக்கி சென்றார். ஒரு குறுகலான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் சவப் பறை முழங்க பிண ஊர்வலம் வரக்கண்டார். அதைப் பார்த்த திருமாளிகைத் தேவர் மனம் குழம்பி அருகில் இருந்த விநாயகரைத் துதித்து விக்னேசா என் மனம் கொண்ட விக்கினத்தைக் களை என்று வேண்டி இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கொண்டு வந்த திருமஞ்சனக் குடத்தையும் பூக்கூடையையும் மேல் நோக்கி வீசி அந்தரத்தில் நிற்கும்படி செய்து விட்டு பாடையில் இருந்த பிணத்தை நோக்கிப் பார்த்தார். இவ்விநாயகர் கொட்டு தவிர்த்த விநாயகர் என்ற பெயரில் இன்றும் அருள் பாலிக்கிறார். பிணமானது மீண்டும் உயிர் பெற்றெழுந்து நடந்து சென்று இவரைக் கடந்து சிறிது தூரம் சென்று மீண்டும் உயிரை விட்டது. திருமாளிகைத் தேவர் சிவ சிவ என்றபடி அங்கிருந்து நகர்ந்தார். இவர் கோவிலை நோக்கி நடக்க திருமஞ்சனக் குடமும் பூக்கூடையும் ஆகாயத்தில் மிதந்தபடி கோவில் வரை வந்து அவரின் கைகளில் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடி விட்டுத் திரும்பும் பொழுது தீர்த்தக் குடத்தையும் பூக் கூடையையும் ஆகாயத்தில் வீசிவிட்டு வேகமாக நடப்பார். அவையும் ஆகாயத்தில் அவரைத் தொடர்ந்து வரும். பூஜை செய்யும் இடம் வந்ததும் திருமாளிகைத் தேவர் தன் இரண்டு கையையும் நீட்டுவார். அவை அவர் கைகளில் வந்து சேரும். பின்பு பூஜைகளை செய்வார்.

திருமாளிகைத் தேவரிடம் ஒரு நாள் போகர் நான் புகலூருகுக் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். குருநாதர் போகரின் பாதுகைகளை அவரின் ஆணையின்படி பூஜித்து வந்த அவர் மாசிலாமணி ஈசரை வழிப்படுவதும் குரு தேவரின் பாதுகைகளை பூஜை செய்வதும் வலியப் போய் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும் நல்வழிக் காட்டுவதுமாக இருந்தார். ஒருநாள் திருமாளிகைத் தேவர் திருவீழிமிழலைக்குப் சென்று சிவ ஆலயத் தத்துவங்களை விளக்கும் வகையில் ஒரு தேரை உருவாக்கி அதன் மேல் சுவாமியை வைத்தார். மக்கள் எல்லோரும் கூடி தேரை இழுக்க தேர் நகரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். திருமாளிகைத் தேவர் தேரின் வடங்களை அவிழ்த்து விட்டு தனக்கும் தேருக்குமாக ஒரு சதாரணமான கயிற்றை கட்டி மாட வீதிகளை வலம் வந்தார். மேலும் பல அற்புதங்களாக கொங்கணர் சித்தருடைய கமண்டலத்தில் இருக்கும் என்றும் வற்றாத நீரினை வற்றச் செய்திருக்கிறார். மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தின் புகையினை நறுமணம் கமழும் படிச் செய்திருக்கிறார். திருமாளிகைதேவரின் அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பாடல்களாக பாடியுள்ளார்.

திருமாளிகைத் தேவர் சொன்ன உபதேசங்களில் ஒன்று. நமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில் வலது துளை சிவம் இடது துளை சக்தி. சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியாகவும் திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியாகவும் சுவாசம் வெளிப்பட வேண்டும். வியாழக் கிழமைகளில் மட்டும் வளர்பிறையாக இருந்தால் சக்தித்துளை வழியாகவும் தேய்பிறையாக இருந்தால் சிவத்துளையின் வழியாகவும் சுவசாம் வெளிப்பட வேண்டும்.

திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறையில் தனது குருவான போகரின் திருவடிகளுக்கு பின்னால் யோக நிலையில் அமர்ந்து தவம் புரிந்த இடத்திலேயே முக்தி பெற்று அருள்பாலித்து வருகின்றார். இன்றும் கோமுக்தீஸ்வரருக்கு பூஜைகள் பூர்த்தியான பிறகு அச்சிவாசாரியராலேயே மடாலயத்தில் திருமாளிகைத் தேவருக்கு ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுவதும் அதன் பின்னரே நமச்சிவாய மூர்த்திகளுக்கு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுவதும் மாகேஸ்வர பூஜை நடை பெறுவதும் தொன் மரபாக உள்ளது. கோமுக்தீஸ்வரர் ஆலயத்து வருடாந்திர தை ரதசப்தமி உற்சவத்தில் துவஜாரோஹணத்திற்கு முன்தினம் இரவு திருமாளிகைத்தேவர் உற்சவம் நடைபெறும். கோயிலில் சம்பிரதாய பூஜைகளை ஏற்றருளிய பின்னர் திருமடத்திற்கு எழுந்தருளும் திருமாளிகைத் தேவரை திருமடத்து வாயிலில் ஸ்ரீலஸ்ரீகுருமகாசந்நிதானம் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்பார்கள். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க திருமடத்தில் பிரவேசித்து உபச்சாரங்களை அவர் ஏற்றருளி கோயிலுக்கு திரும்ப ஏகும் நிகழ்வுகள் நடத்தப் பெறும்.