நமச்சிவாயக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் வைத்த பக்தியினாலும் பேரன்பினாலும் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையை தொழுது பாடினார். இரவு வரை தொடர்ந்து பாடியவர் கோவில் மூடியதும் அங்கிருந்து கிளம்பினார். இல்லத்திற்குத் திரும்பும் போதும் உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர் வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடிக்கொண்டே வந்தார். மெய் மறந்து பாடியபோது அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து தெறித்த எச்சில் துளிகள் உலகம்மையின் மேல் பட்டது. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர் உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார்.

இறைவழிபாட்டுக்கு அச்சமயம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் உடனே கண்டு பிடியுங்கள் என்று உத்தரவிட்ட அரசன் அரணைமனைக்கு திரும்பி இந்த வேதனையிலேயே இருந்தான். இரவு அரசன் இந்த யோசனையிலேயே தூங்கிய அரசனின் கனவில் வந்த உலகம்மை வருந்தாதே அரசனை என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவன் பின்னே நான் தான் சென்றன். பாடுவதில் தன்னை மறந்த நிலையில் இருந்த நமச்சிவாயக் கவிராயர் வாயிலிருந்த வந்த எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாய் என்று கூறி மறைந்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்த அரசன் அம்பிகையின் உத்தரவின் படி நமச்சிவாயக் கவிராயரை கௌரவிக்க எண்ணி அவரை கோவிலுக்கு வரவழைந்தான். நமச்சிவாயக் கவிராயர் உலகம்மையின் மீது வைத்திருக்கும் அன்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரசன் அவரிடம் சென்று தாங்கள் உலகம்மை மீது வைத்த அன்பு சத்தியமானால் இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார். நமச்சிவாயக் கவிராயர் அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே

எனும் பாடலை பாடி முடித்த சமயம் அனைத்து தங்க நாரும் அறுந்து தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாயக் கவிராயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதல் அனைவரும் நமச்சிவாயக் கவிராயர் பாதத்தில் விழுந்தனர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இந்நூல் சிங்கை பிரபந்தத் திரட்டு என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.