புரந்தரதாசர்

கர்நாடக மாநிலத்தில் 1484 ஆம் ஆண்டு புரந்தரகட எனும் ஊரில் செல்வந்தர் வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் திம்மப்பா திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் வளமான குடும்பத்தில் பிறந்ததால் நல்ல கன்னடக் கல்வியுடன் சமிஸ்க்ருத மொழியும் கற்பிக்கப்பட்டது. அத்துடன் இவருக்கு சங்கீதத்திலும் நல்ல புலமை கூடவே தொற்றிக் கொண்டது. தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். இயல்பாகவே இவருக்கு ஒருவருக்கும் உதவும் சிந்தனை கிடையாது. இவரை நாடி யாராவது உதவி கேட்க வந்தால் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் முடியாது என்பர். எதிலும் கணக்கு பார்ப்பார். எப்போதும் வியாபாரம் அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஒன்றே குறியாக இருப்பார். ஆரம்பத்தில் பணத்தின் மீது மட்டுமே அதீத ஆசை வைத்திருந்த அவரை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். நாராயணாவின் மனைவி சரஸ்வதிபாய் இவருக்கு நேர் எதிராக தயாள கொடையுள்ளம் கொண்டவர்.

ஓர் ஏழை பிராமணன் அடிக்கடி இவரது வியாபார தலத்திற்கு வந்து ஏதேனும் உதவுங்கள் என உதவி கேட்பார். ஒரு நாள் அவரிடம் இனி இங்கு வராதீர்கள் எனக்கூறி செல்லாத சில நாணயங்களைத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஏழை நேராக இவரது மனைவியிடம் சென்று இதனை காண்பித்து இப்படி உங்கள் கணவர் என்னை ஏமாற்றுகிறார் நீங்கள் எனக்கு ஏதாவது உதவுங்கள் என வேண்டினார். நாராயணாவின் மனைவி தன் பிறந்த வீட்டில் சீதனமாகத் தந்த தனது வைர மூக்குத்தியை அந்த பிராமணனிடம் தந்தார். அவரோ அதை விற்பதற்காக நேராக நவகோடி நாராயணாவின் கடைக்குச் சென்றார். ஆனால் நாராயணாவோ மிக கோபம் கொண்டு நான் தான் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்பினேனே பின் எதற்கு இங்கு வருகிறாய் என கடிந்து கொண்டார். அந்த ஏழை பிராமணன் நான் இங்கு வந்தது ஒரு நகையை விற்பதற்காகவே அன்றி உன்னிடம் யாசகம் கேட்க அல்ல என்று நகையை கொடுத்தான். அதை வாங்கி பார்த்த நாராயணா தன் வைர வியாபார அனுபவத்தினால் பிராமணன் கொடுத்தது தன் மனைவியின் மூக்குத்தி தான் என்று கண்டு பிடித்தார். இது எப்படி தன் மனைவி இவனுக்குக் கொடுக்கலாம் என கோபமடைந்தார். பிராமணரே இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் இதற்கான பணம் இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். அதை ஒப்புக்கொண்ட பிராமணர் போய்விட்டார். ஒரு பெட்டியில் அந்த மூக்குத்தியை வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற நாராயணா தன் மனைவியை அழைத்து உடனே உன் வைர மூக்குத்தியை கொண்டுவா என்றார்.

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே என்று இறுதியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல் என்ற முடிவோடு ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். தாயே துளசி நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில் விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும் வியப்பும் அணைத்துக் கொண்டது. என்னைக் காப்பாற்றி விட்டாய் தாயே என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள். கணவனிடம் ஓடோடிச் சென்று இந்தாருங்கள் மூக்குத்தி என்று கொடுத்தாள். ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது கடைக்குச் சென்று பூட்டி வைத்த பெட்டியை தேடினார் மூக்குத்தி இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து எனக்கு பணம் வேண்டாம் என்னுடைய நகையைக் கொடுங்கள் என்று கேட்டால் என்ன செய்வது?மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது போல் இருந்தது அவருக்கு கூடவே பயமும் வந்தது.

அதிகாலை ஏழை பிராமணன் திரும்ப வந்தான். நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்று பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் விற்றுக் வைத்துக் கொள்கிறேன் என்றான். நாராயணனின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார். ஐயா மன்னித்து விடுங்கள் வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது வந்தவுடன் தருகிறேன் மாலை வாருங்கள் கண்டிப்பாக பணம் தருகிறேன் என்று கூறினார். சரி மாலை வருவேன் என்னை ஏமாற்றி விடாதே நான் வருகிறேன் என்று பிராமணன் சென்றார். பிராமணன் போனபின்பு தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி அவர் எங்கே போகிறான் என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்பினார். பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான். ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? அந்த பிராமணன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா என்று கேட்டார். அதற்கு வேலையாள் அந்த பிராமணர்இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார். நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார். பின்னர் மறைந்து விட்டார் என்றான். நாராயணன் திடுக்கிட்டார். என்ன இது அதிசயம் என்று வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்த பிராமணருக்கு தானம் தந்ததையும் பின்பு விஷ பாத்திரத்தில் மூக்குத்தி தானாக வந்ததையும் சொன்னாள்.

நாராயணனுக்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை சோதிப்பதை உணர்ந்தார். அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன் என்று அழைக்கப்படுவாய். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார் என்று அசீரீரி கூறியது. நம்மிடம் வந்து விளையாடியது அந்த இறைவனே என்று மகிழ்ந்து இவ்வுலக வாழ்க்கை அனைத்தும் மாயை என்று உணர்ந்து ஸ்ரீகிருஷ்ண தாஸராக உருவெடுத்தார்.

நாராயணன் தன் அனைத்து சொத்துக்களையும் தன் குடும்பதரின் சம்மதத்தோடு தானம் செய்தார். பின் மத்வகுரு வியாசராஜரின் சீடரானார். தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றார். 1525 ம் ஆண்டு குருவுடன் பண்டரிபுரம் சென்ற அவருக்கு குரு வியாசராஜர் புரந்தர விட்டலன் என்ற பெயரை சூட்டினார். அன்றிலிருந்து புரந்தரதாஸராக அழைக்கப்பட்டார். திருப்பதிக்கு ஒருமுறை புரந்தரதாசர் வந்தார். அவரை புரந்தரி என்பவள் வரவேற்று உபசரித்தாள். அவள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தெய்வ பக்தி மிகுந்தவள். மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அதன் காரணமாக புரந்தரதாசரும் அவளது வீட்டில் தங்க சம்மதித்தார். இரவு நேரமாயிற்று. தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு ரகசியமாக வெளியே கிளம்பினாள் புரந்தரி. அதைக்கண்ட புரந்தரதாசரின் மனம் கசந்தது. தனது குலத்தொழிலை அவள் இன்னும் விடவில்லையே? என்று எண்ணி மனம் நொந்தவராய் அவளைப் பின் தொடர்ந்தார். நேராகக் கோயிலுக்குச் சென்றாள் புரந்தரி. அந்த அர்த்தஜாம வேளையிலும் மூலஸ்தானத்தின் கதவு மட்டும் திறந்திருந்தது. புரந்தரி உள்ளே சென்றதும் கதவு மூடிக்கொண்டது. கதவின் துவாரம் வழியே பார்த்தார் புரந்தரதாசர்.

மூலஸ்தானத்தில் அழகான இளைஞன் ஒருவன் வீணை இசைக்க புரந்தரி நடனமாடினாள். பிறகு புரந்தரி வீணை வாசிக்க அவன் நடனமாடினான். இதைக் கண்ட புரந்தரதாசரின் மனம் கொதித்தது. மறுநாள் காலை வீடு திரும்பிய புரந்தரியிடம் பார்த்தவற்றை கூறி யார் அது என்று கேட்டார். இன்று தெரிந்து கொள்வீர் புரந்தரதாசரே என்று கூறிச்சென்று விட்டாள். அன்று இரவும் அதே போலக் கிளம்பிய போது புரந்தரதாசரையும் அழைத்துச் சென்று கதவிற்கு வெளியே அமர வைத்தாள் புரந்தரி. அன்றும் அதேபோல நடந்தது. ஆனால் வீணை வாசிக்கும் போது அந்த இளைஞன் அபஸ்வரமாக வாசிக்க ஆரம்பித்தான். அபஸ்வரம் புரந்தரதாசரால் தாங்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தார் ரகுநாததாசர். அந்த திவ்யரூப சுந்தரன் எழுந்து ஓடினான். அவன் பின்னாலேயே ஓடினார் புரந்தரதாசர். அந்த இளைஞன் கருவறைக்குள் சென்றதும் அந்த சுந்தர ரூபம் மறைந்துவிட்டது. புரந்தரிக்கு அருள் புரிந்து ஆடவும் பாடவும் வந்தது இறைவனே என்பது புரந்தரதாசருக்குப் புரிந்தது. அம்மா உனக்காக இறைவனே வீணை இசைக்க நீ ஆடினாய். நீ இசைக்க அவர் ஆடினார். என்னே உன் பெருமை என்று கூறிக் கண்களில் நீர் பெருக அந்த பக்தையின் காலில் விழுந்தார் புரந்தரதாசர்.

பக்தை புரந்தரியின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இசை உலகில் பெரும்புகழ் பெற்ற புரந்தரதாசராக மாறினார். இசை ஞானம் கொண்டுள்ள இவரை இவரது குரு வியாசதீர்த்தர் தென்னிந்திய கர்நாடக இசையை சொந்தமாக கீர்த்தனைகளை இயற்றி பரப்புவதற்கும் பாடல்கள் கடைக்கோடி மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக இயற்றும்படி கட்டளையிட்டார். இதனை மேற்கொண்ட புரந்தரதாஸர் 4,75,000 கீர்த்தனங்கள் எழுதினார். இது வாசுதேவ நாமாவளிய என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 8000 பாடல்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது. இவரின் கீர்த்தனங்கள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் பாடல்களை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள் உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சங்கள் உள்ளது.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற ச, ரி, க, ம, ப, த, நீ என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்தவர் புரந்தரதாசரே. மிக முக்கியமாக முதன்முதலில் பாடல் கற்க ஆரம்பிப்போர்க்கு அரிச்சுவடியாய் திகழும் மாயா மாளகௌட என்ற ராகம் இவரால் இயற்றப்பட்டது. கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். மாயாமாளவகௌளை என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. இவர் பக்திப் பாடல்களை இயற்றி பாடுவதில் வல்லவரானார். விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும் திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும் மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர் புரந்தரதாசரின் குருவாவார். இவர் தனது சீடரான புரந்தரதாசரை பாராட்டி ஒரு பாடல் பாடி புரந்தரதாசரை பெருமைப்படுத்தி இருக்கிறார். மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு புரந்தரோபநிஷத் என்று பெயரிட்டார் ஸ்ரீவியாசராஜர்.

கர்நாடகாவிலுள்ள ஹம்பி என்ற சரித்திர புகழ் மிக்க ஊரில் குடிபெயர்ந்தார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய தம்பூராவுடன் துளசிமணிமாலை அணிந்து கொண்டு தெருவில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருப்பார். அப்போது அப்பண்ணா என்ற ஒரு ஏழை குயவன் தினமும் பாண்டுரங்கனுடம் பேசுவதாக அறிந்தார். இதை காண விரும்பிய புரந்தரதாஸர் துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள அவரது குடிசைக்குச் சென்றார். குடிசை சாத்தப்பட்டு ஒரே இருளாக இருந்தது. ஆனால் யாரோ பேசிக்கொண்டிருப்பது மட்டும் இவரால் கேட்க முடிந்தது. ஆர்வத்தில் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அப்பண்ணா கண்ணை மூடிக்கொண்டு தானே பேசிக்கொண்டிருப்பதை கண்டார். கடுமையான கோபம் கொண்டு தானே பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறாயா என்று அவரது தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு வந்துவிட்டார். அன்று இரவு மற்றவர்கள் செயலில் நான் யார் தவறு கண்டு பிடிக்க என்று மனம் வருந்தினார். அவரவருக்கு அவரவர் சித்தாந்தம் என்று எண்ணி தூங்கிவிட்டார். மறுநாள் காலை விட்டலன் கோயிலுக்குச் சென்று தரிசித்தபோது விட்டலனின் தலையில் வீக்கம் இருப்பதும் விட்டலன் விக்ரஹத்திலிருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்பதையும் பார்த்து பதைபதைத்தார். நேராக அப்பண்ணாவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி அவரது காலில் விழுந்தார். அப்பாண்ணாவோ ஒன்றும் புரியாதவராய் நீங்கள் எவ்வளவு பெரிய மஹான் நீங்கள் ஏழையான என் காலில் விழுவதோ மன்னிப்பு கேட்பதோ மாபாதகச் செயல் எழுந்திருங்கள் என்றார். அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத புரந்தரர் இவர் பெருமை ஊராருக்கும் தெரிய வேண்டுமென நினைந்து அவரை ஊரரிய கோயிலுக்கு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டார். உடனே விட்டலனின் தலை வீக்கமும் விசும்பல் சத்தமும் நின்றது.

புரந்தரதாசரின் பரம பக்தை ஒரு அழகான இளம் பெண். அவளது பெயர் லீலாவதி தாசியாக இருந்தாலும் எப்போதும் அவளது உதடுகள் புரந்தரதாசரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். சுழன்றடிக்கும் மழை இடிமின்னல் அடித்தது. அப்போது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள். எதிரே வாட்ட சாட்டமான மனிதர் ஒருவர் புன்னகையுடன் நின்றிருந்தார். மழை உடலை நனைத்திருந்ததால் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். அவள் உள்ளே வாருங்கள் சுவாமி என்று அவரை அழைத்துச் சென்று ஆசனம் ஒன்றில் அமர வைத்து மாற்றுடை ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். பின்பு சுவாமி அந்த அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு ஓய்வெடுங்கள். நான் சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன் என்றாள். மாற்றுடையை வாங்கிக் கொண்ட அதனை மாற்றிக்கொண்டார். புரந்தரதாஸரின் பாடலை முணுமுணுத்தவாறே அவரிடம் பழத்தட்டை நீட்டினாள் லீலாவதி.

தட்டை வாங்கிய அவர் அம்மணீ அருமையாகப் பாடுகிறீர்கள். இந்தப் பாடலை இயற்றியது யார் என்று தெரியுமா என்று கேட்டார். மகான் புரந்தரதாசரை அறியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அவரின் பக்தை நான். அவரது இசைக்கு நான் அடிமை என்றாள் லீலாவதி. அம்மணீ! தங்கள் அழகில் மயங்கி கொட்டும் மழையில் இச்சையுடன் தங்களது இல்லம் நாடி வந்திருக்கும் நான் தான் அந்த புரந்தரதாசன் என்றார். என்ன தாங்கள் தான் புரந்தர தாசரா தங்களை என் தெய்வமாக பூஜித்து வருபவள் நான். தங்கள் திருப்பாதங்களால் இந்த ஏழையின் குடிசை புனிதம் பெற்றது. எனினும் தாங்கள் கூறிய வார்த்தைகள் என்னைத் தீயாகச் சுடுகிறது. தயை கூர்ந்து அந்த எண்ணத்தை விடுத்து, எனக்கு ஆசி புரியுங்கள் கண்களில் நீர் பெருக அவர் பாதங்களில் வீழ்ந்தாள் லீலாவதி. அவளின் பதற்றத்தை ரசித்த அவர் அம்மணீ! தங்களது பக்திக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களைக் கண்டதே என் பாக்கியம். இதோ இதை என் அன்புக்கு அடையாளமாகப் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தன் வலக் கரத்திலிருந்த பொற்காப்பைக் கழற்றி அவளிடம் கொடுத்தார். அவள் அதை வாங்க மறுத்தாள். பலவந்தமாக அவள் கையில் திணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார் புரந்தர தாசர். பொற்காப்பை தனது பூஜை அறையில் வைத்தாள் லீலாவதி.

அதிகாலை அரண்மனை காவலாளி ஒருவன் முச்சந்தியில் முரசு கொட்டி செய்தி ஒன்று தெரிவித்தான். நம் பாண்டுரங்கப் பெருமானின் சிலையில் இருந்த பொற்காப்பைக் காணவில்லை. அது தொடர்பான தகவல் அறிந்தால் உடனே மன்னரிடம் தெரிவிக்குமாறு பக்த ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அரசின் சிப்பந்தி கூறிய செய்தியை கேட்டதும் அதிர்ந்த லீலாவதி சட்டென்று எழுந்து அருகில் இருந்த தனது இல்லத்தின் பூஜை அறையை நோக்கி விரைந்தாள். அங்கு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட புரந்தரதாஸர் கொடுத்த பொற்காப்பு இருந்தது. புரந்தரதாசர் மீது அவளுக்கு ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பொற்காப்புடன் அரண்மனையை நோக்கி விரைந்தாள். நடந்தவற்றை மன்னரிடம் எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட மன்னர் வியப்புற்றார். பண்டரிநாதனின் பக்தரான புரந்தரதாசரின் இந்தச் செயல் புதிராக இருந்தாலும் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் அவர். தர்பாரில் லீலாவதியின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் குழம்பினார் புரந்தரதாசர். மன்னா நான் பகவானது பொற்காப்பைத் திருடவில்லை. அதை இந்த அம்மணியிடம் கொடுக்கவும் இல்லை. முதலில் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று நான் பண்டரிபுரம் செல்லவே இல்லை என்றார்.

லீலாவதியின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. மன்னா இவர் நேற்று எனது இல்லத்துக்கு வந்து என்னை நேசிப்பதாகக் கூறினார். இவரது இச்சைக்கு இணங்காமல் இவரை நான் தெய்வமாக வழிபடுவதைக் கூறினேன். இறுதியில் இந்தப் பொற்காப்பை என் கையில் திணித்து விட்டுச் சென்றார். பண்டரிநாதன் மேல் ஆணையாக நான் கூறியவை அனைத்தும் சத்தியம் என்றாள். புரந்தரதாசர் பிரமை பிடித்தவராகத் தலை குனிந்து நின்றார். கோபம் கொண்ட மன்னன் பாண்டுரங்கனது பொற்காப்பைத் திருடியது பெருங்குற்றம். அதற்கு தண்டனையாக இவருக்கு முப்பது கசையடி கொடுக்க உத்தர விடுகிறேன் என்று தீர்ப்பளித்தான். இதைக் கேட்டு புரந்தரதாசர் மனம் உடைந்தார். அப்போது அங்கு ஓர் அசரீரி கேட்டது மன்னா கோயில் கதவு பூட்டியது பூட்டியபடி இருந் தது என்று அர்ச்சகர் கூறியது ஞாபகம் இல்லையோ? கதவு பூட்டி இருக்கும்போது பொற்காப்பை புரந்தரதாசர் எப்படி எடுத்திருக்க முடியும்? என் பரம பக்தன் புரந்தரதாசனிடம் கொஞ்சம் அகம்பாவமும் இருந்தது. அதைப் போக்கவும் அவன் புகழை உலகறியச் செய்யவுமே யாம் லீலாவதியின் இல்லத்துக்குச் சென்றோம் என்று அசீரீரி கூறியது. புரந்தரதாசர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மன்னரும் மற்றவர்களும் அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.

பல்வேறு சந்தர்பங்களில் புரந்தரதாஸருடைய பக்தியை தனது லீலா விநோதங்கள் மூலம் பாண்டுரங்கன் வெளிப்படுத்தியுள்ளார். திருமலை வேங்கடேசனின் தரிசனமும் சரஸ்வதி தேவியின் தரிசனமும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற புரந்தரதாஸர் திருமலையில் தங்கி பாடல்களை எழுதியுள்ளார். கர்நாடக சங்கீத உலகில் நாரத மஹரிஷியின் அவதாரமாகப் பார்க்கப்படும் இவரை சங்கீத பிதாமகர் என்று அழைப்பார்கள். இவருக்கு பல சீடர்கள் உண்டென்றாலும் இவரது பாடல்களை பரப்பியவர்களில் முக்கியமானவர் கனகதாஸர் ஆவார். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனை மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர். திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீத்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.