மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -19

திருஷ்டத்தும்னனை விட்டு அஸ்வத்தாமன் அர்ஜூனனிடம் போர் புரிய துவங்கினான். இருவரும் அவரவர் திறமையை வெளிப்படுத்தினார். இரு கட்சியிலிருந்த போர்வீரர்களும் இருவரும் போர் செய்ததை கவனித்து பார்த்தார்கள். அர்ஜுனனை அழித்து தள்ள அஸ்வத்தாமன் தீர்மானித்தான். மந்திர சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஒன்றன் பின் ஒன்றாக அர்ஜுனன் மீது பிரயோகித்தான். அதே மந்திர அஸ்திரங்களை கொண்டு சேனைகளையும் எதிர்த்தான். இதனை கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமன் செய்த முறையில்லாத போர் முறையை எதிர்த்தான். தன்னை மந்திர அஸ்திரம் கொண்டு எதிர்ப்பது முறையே. சேனைகளை எதிர்ப்பது முறையல்ல என்று கூறிவிட்டு அனைத்து அஸ்திரங்களையும் அர்ஜுனன் முறியடித்தான். அஸ்வத்தாமனுடைய போர் திறமைகளை அனைத்தும் தோல்வியடைந்தபடி முடிவுக்கு வந்தது. துயரத்துடன் பின்வாங்கினான்.

துயரத்தில் மூழ்கியிருந்த அஸ்வத்தாமனிடம் வியாச பகவான் பிரசன்னமானார். வியாசரிடம் தன்னுடைய நாராயண அஸ்திரம் செயலற்று போனதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு வியாசர் நாராயணனும் நாராயண அஸ்திரமும் ஒன்று தான். நாராயண அஸ்திரம் தனது எதிரியை விடாது. எதிரிகள் அதை எதிர்ப்பதற்க்கு ஏற்ப அதன் வலிமை அதிகரிக்கிறது. கெட்டவர்களை அழிப்பதில் அதற்கு நிகரான ஆயுதம் எதுவும் இல்லை. அதே சமயம் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கீழே விழுந்து வணங்குகிறவர்களுக்கு நாராயண அஸ்திரம் அனுக்கரகம் செய்யும். கிருஷ்ணனும் அர்ஜுனனும் நாராயணனாகவும் நரனாகவும் உலகுக்கு வந்திருக்கிறார்கள். கேட்டவர்களை தண்டிப்பதும் தர்மத்தை காப்பதும் அவ்விருவருடைய செயலாகும். நாராயண அஸ்திரத்தின் சூட்சுமங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிந்திருந்தான். ஆகையால் அந்த அஸ்திரத்தின் முன்னிலையில் அடிபணியும்படி பாண்டவர்களுக்கு அவன் உத்தரவிட்டான். பாண்டவர்களே பாதுகாக்க கிருஷ்ணன் முன்வந்திருக்கிறான். அவர்களை அழிக்க யாராலும் இயலாது. உன் தந்தை துரோணர் மேலான சொர்க்கத்திற்கு சென்றுள்ளார். சொர்க்கத்திற்கு சென்றவரை குறித்து வருந்தாதே. உன்னுடைய பாசறைக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள் என்று வியாசர் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வியாசர் கூறியது அஸ்வத்தாமனுக்கு ஒருவிதத்தில் ஆறுதல் அளித்தது.

சூரியன் மறைய 15 ம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. 15 ஆம் நாளில் துரோணர் இழந்ததை குறித்து கௌரவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. போர் வீரர்கள் பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தார்கள். 15 ஆம் நாளில் தங்களுக்கு அனுகூலமாக அமைந்தது குறித்து பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக ஓய்வெடுக்க தங்கள் பாசறைக்கு திரும்பினார்கள்.

துரோண பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது. அடுத்தது கர்ண பருவம்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -18

பாண்டவர்களை நோக்கி அஸ்வத்தாமன் போர்க்களத்திற்கு வந்ததும் எடுத்த எடுப்பிலேயே ஒப்புயர்வற்ற நாராயண அஸ்திரத்தை பிரயோகித்தான். அஸ்திரம் தனது திறமையை காட்ட துவங்கியது. எதிரிகள் எத்தனை பேர் இருந்தார்களோ அத்தனை அஸ்திரங்களாக அது பிரிந்து கொண்டது. ஒவ்வொரு அஸ்திரமும் அதற்கு இலக்காய் இருந்த எதிரியின் வலிமைக்கு ஏற்றவாறு வலிமை பெற்று தாக்க வந்தது. சிறிது நேரத்தில் பாண்டவர்கள் அனைவரும் அழிவது உறுதி என்ற நிலை இருந்தது. கிருஷ்ணன் ஒருவனே அஸ்திரத்தின் ரகசியத்தை அறிந்தவானக இருந்தான்.

பாண்டவர்கள் பக்கம் இருந்த அனைவரும் அவரவர் ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி கிருஷ்ணன் உத்தரவிட்டான். அத்தனை பேரும் அவன் சொன்னபடியே நடந்துகொண்டனர். அடுத்தபடியாக அத்தனை பேரும் தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான். அந்த உத்தரவுப்படியே அனைவரும் தரையில் வீழ்ந்து பக்திபூர்வமாக வணங்கினர். நாராயண அஸ்திரத்தில் இருந்து வந்த அத்தனை அஸ்திரங்களும் செயலற்று வானத்தில் மிதந்தது. பீமன் ஒருவன் மட்டுமே கிருஷ்ணனுடைய ஆணைக்கு அடிபணியவில்லை. ஆயுதம் தாங்கிய அவன் நிமிர்ந்து நின்றான். நாராயண அஸ்திரத்தை கடைசிவரை ஒரு கை பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான். நாராயண அஸ்திரம் தனது செயலை செய்ய ஆயத்தமாக வந்தது. அஸ்திரத்தின் ஒரு துளியே பீமனை அழிக்க போதுமானதாக இருந்தது. கிருஷ்ணன் பீமன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து ஓடினார். உயிர் பிழைக்கும் எண்ணம் அவனிடமிருந்தால் அக்கணமே ஆயுதங்களைக் கீழே போட்டு விட வேண்டும் என்றும் பீமனுக்கு யுத்த சூழ்ச்சியில் நம்பிக்கை இருந்ததால் அக்கணமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று கிருஷ்ணன் வேண்டினார். கிருஷ்ணன் உத்தரவுப்படியே பீமன் நடந்து கொண்டான் ஒப்புயர்வற்ற நாராயணாஸ்திரம் உடனே பின்வாங்கி மறைந்து.

இந்த அதிசயத்தின் மர்மம் துரியோதனனுக்கு விளங்கவில்லை. பாண்டவர்கள் மொத்தமாக அழிந்து விடுவார்கள் என்று துரியோதனன் எதிர்பார்த்தான். நடந்தது இதற்கு நேர்மாறானது. நாராயண அஸ்திரத்தை மீண்டும் ஒருமுறை பிரயோகிக்க வேண்டுமென்று அஸ்வத்தாமனிடம் துரியோதனன் கேட்டுக்கொண்டான். மீண்டும் ஒருமுறை நாராயண அஸ்திரத்தை வரவழைத்தால் அது என்னையும் என் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரையும் அழித்துவிடும் என்று கவலையுடன் பதில் அளித்தான்.

கோபத்திலும் துயரத்திலும் மூழ்கிக் கிடந்த அஸ்வத்தாமன் இப்பொழுது திருஷ்டத்யும்னன் மீது கோபம் கொண்டு அவனை தன்னுடன் யுத்தத்திற்கு வரும்படி கூறினான். இருவருக்குமிடையில் நெடுநேரம் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் அர்ஜுனன் அஸ்வத்தாமனிடம் உன்னுடைய போர்த்திறமையை காட்ட தீர்மானித்திருக்கின்றாய் என்பது உன்னுடைய செயலில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. நீ எங்கள் மீது கோபம் கொண்டு இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதே விதத்தில் உன் மீது கோபம் கொள்வதற்கு பாண்டவர்களாகிய எங்களிடமும் காரணம் இருக்கிறது என்றான். பாண்டு மன்னனின் மக்களாகிய எங்களை வெறுக்கிறாய். திருதராஷ்டிரன் மக்களிடம் அன்புமிக வைத்திருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியும். நீ வீரியமிக்கவன் என்று உலகத்தினர் நினைக்கின்றனர். அது உண்மையானால் வலிமை வாய்ந்த உன்னோடு போர் புரிய நான் விரும்புகிறேன் என்றான் அர்ஜுனன்.

தொடரும்……

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -17

துரோணர் வருவதை அறிந்த கிருஷ்ணர் துரோணர் கேட்கும் கேள்விக்கு அஸ்வத்தாமன் என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது என்று கூறுமாறு யுதிஸ்டிரனை கிருஷ்ணன் ஆயத்தப்படுத்தினார். பீமனிடம் யானை என்ற வார்த்தையே யுதிஷ்டிரன் கூறும் போது கர்ஜிக்க வேண்டும் என்று பீமனை ஆயத்தப்படுத்தினார். அஸ்வத்தாமன் இறந்தது உண்மையா என்று யுதிஷ்டிரனிடம் கேட்டார் துரோணர். யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் அறிவுரை படி அஸ்வத்தாமன் என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது என்றார். பீமன் அந்த நேரத்தில் கிருஷ்ணர் அறிவுறைப்படி கர்ஜித்தான்

புத்திர பாசத்தில் மனக்கலக்கத்தில் யுதிஷ்டிரன் கூறியதை சரியாக கேட்காத துரோணர் மனம் உடைந்து சரிந்தார். என் மகன் கொல்லப்பட்டான் இனி நிலவுலக வாழ்வில் தனக்கு நாட்டம் எதுவுமில்லை என்று கூறிக்கொண்டு அம்பையும் வில்லையும் தூர எறிந்தார். தன்னுடைய தேரின் மீது தியானத்தில் அமர்ந்தார். அப்பொழுது திருட்டத்துயும்ணன் தன் வாளால் துரோணரின் தலையை கொய்து தனது பிறப்பின் காரணத்தை முடித்தான். துரோணரின் தலை தரையில் உருண்டு போனது. அவருடைய நிஜ சொரூபம் விண்ணுலகை நோக்கி மேல் சென்றது

துரோணாச்சாரியாரின் முடிவு கௌரவர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாக இருந்தது. கௌரவ படைகள் உற்சாகத்தை இழந்து யுத்தத்தில் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கியது. துரியோதனன் கவலை மிகவும் அடைந்தான். பாண்டவர்களை கொல்வது சாத்தியப்படாது என்று அவன் எண்ணினான். துரோணரின் முடிவு அஸ்வத்தாமன் காதிற்கு எட்டியது. கோபமடைந்த அஸ்வத்தாமன் துரோணாச்சாரியாரின் மனதில் குழப்பத்தை உண்டுபண்ணிய யுதிஷ்டிரனை நிந்தித்தான். தந்தையை கொன்ற திருஷ்டத்யும்னனை அழிக்க தீர்மானம் பண்ணினான். நாராயண அஸ்திரத்தை கையாண்டு பாண்டவர்களையும் அவர்களுக்கு துணை புரியும் கிருஷ்ணரையும் அழிப்பதாக சத்தியம் பண்ணினான்.

நிலவுலகிலோ சொர்க்கத்திலோ நாராயண அஸ்திரத்துக்கு நிகரான அஸ்திரம் எதுவும் இல்லை. துரியோதனனிடம் அஸ்வத்தாமன் இன்று நீ ஊழிக்காலத்தை காண்பாய். மரணத்திலிருந்து பாண்டவர்கள் தப்பித்துக் கொள்ளமாட்டார்கள் இன்னும் சில மணி நேரத்தில் நீ ஒப்புயர்வற்ற உலக சக்கரவர்த்தியாக இருப்பாய் என்று கூறினான். அஸ்வத்தாமன் அவ்வாறு சொன்னதும் கௌரவ படையில் இருந்த போர் வீரர்களுக்கும் காலாட்படை வீரர்களும் புத்துயிர் ஊட்டியது. அதன் அறிகுறியாக யுத்தகளத்தில் அவர்கள் சங்குகளையும் கொம்புகளையும் துத்தாரிகளையும் ஊதிக்கொண்டே முன்னேறி சென்றனர். கௌரவபடைகளிடம் திடீரென்று மாறி அமைந்த சூழ்நிலையை பார்த்த பாண்டவர்களுக்கு வியப்பு உண்டாயிற்று. துரோணரின் மைந்தன் அஸ்வத்தாமன் வீரியம் மிக்கவன். துரோணருக்கேற்ற மைந்தன் ஆகையால் பாண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -16

ரிஷிபுங்கவர்கள் கும்பலாக நிலவுலகிற்கு இறங்கி வந்து துரோணரிடம் ஆச்சாரியாரே உங்களுடைய நில உலக வாழ்வு ஏற்கனவே பூர்த்தியாயிற்று. நீங்கள் யுத்தத்தில் மூழ்கி இருப்பதால் இங்கேயே தொடர்ந்து தங்கி இருக்கிறீர்கள். இப்போராட்டத்தை ஏதேனும் ஒரு போக்கில் முடித்துவிட்டு விண்ணுலகிற்கு திரும்பி வாருங்கள் என்று அழைத்தார்கள். துரோணருக்கு உடனே திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இன்னும் சிறிது தங்கியிருந்து பாண்டவ படைகள் அனைத்தையும் அழிக்க நினைத்தார். அப்பொழுது துரோணரின் முன்னிலையில் பீமன் வந்து துரோணரை சரமாரியாக திட்ட ஆரம்பித்தான். மண்ணுலகில் இருக்கும் பிராமணர்களில் நீங்கள் மோசமானவர். பிரம்மத்தையே நாடி இருப்பது பிராமண தர்மம். ஆனால் நீங்களோ க்ஷீத்திரிய போராட்டத்தில் புகுந்து இருக்கின்றீர்கள். பொருளாசையினால் தூண்டப் பெற்றவகளுடன் சேர்ந்து கொண்டு கசாப்புக் கடைக்காரன் போன்று நீங்கள் உயிரை அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று திட்டினான். ஒரு பக்கம் ரிஷிபுங்கவர்கள் விண்ணுலகிற்கு அழைக்க பீமனோ அவரை ஒரு பக்கம் அவமானப்படுத்தினான். ஆனால் அவர் இரண்டு வித கூற்றுக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் படைகளை அழித்து தள்ளுவதில் தீவிரமாக இருந்தார்.

துரோணர் தன் அஸ்திரங்களால் பல போர் வீரர்களை கொன்று குவித்து கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான குதிரைகளையும் வீரர்களையும் யானைகளையும் கொன்று குவித்தார். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. இறுதியில் பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்த திட்டமிட்டிருந்தார் துரோணர். இத்திட்டத்தின்படி பிரம்மாஸ்திரம் பாண்டவர்கள் படைகள் அனைத்தையும் அழிந்துவிடும். இதனை அறிந்த கிருஷ்ணன் அன்று மதியமே துரோணர் போரை முடித்து விடுவார் என்று எண்ணினார். துரோணரின் போர் உக்கிரத்தைக் கண்டு கிருஷ்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். ஏதேனும் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார்.

யுத்தகளத்தில் பீமன் கௌரவர்களின் படையில் இருந்த அஸ்வத்தாமன் என்ற புகழ் பெற்ற யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போனது. அஸ்வத்தாமனை கொன்று விட்டேன் என்று பீமன் கத்தினான். இச்செய்தி துரோணரின் காதுகளில் விழுந்தது. தன் மகன் அஸ்வத்தாமனை பீமன் கொன்று விட்டான் என்று எண்ணி உடனே ஸ்தப்பித்து நின்றார். அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்பதை மறந்தார். புத்திர சோகத்தால் தன் நிலை இழந்தார். தன்னுள் இருந்த போர் வெறி இறங்கியது. சகஜமான மன நிலைக்கு வந்தார். மனம் கனத்தது. கண்கள் இருண்டன. கையில் இருந்த வில்லை கீழே எறிந்தார். போர்களத்தை சுற்றி பார்வை இட்டார். தான் செய்த கொலைகளையும் அதனால் பெருக்கெடுத்த ரத்த வெள்ளத்தையும் பார்த்தார். போர் வெறியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்ததை எண்ணி அதிர்ந்தார். தூரத்தில் இவரை கொல்வதற்காகவே பிறப்பெடுத்த திருட்டத்துயும்ணன் தன்னை நோக்கி வருவதை கண்டார். மீண்டும் ஆயுதங்களை எடுக்க அவரால் முடியவில்லை. இனி போரிட்டு என்ன செய்ய போகிறோம் என்று எண்ணினார். எக்காரணத்தை முன்னிட்டும் யுதிஷ்டிரனுடைய நாவிலிருந்து பொய்மொழி வராது. கடைசியாக ஒரு முறை யுதிஷ்டிரரிடம் சென்று அஸ்வத்தாமனின் மரணம் உண்மையா என்று கேட்டு ஊர்ஜிதம் செய்யலாம் என்று யுதிஷ்டிரரை நோக்கி சென்றார்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -15

பதினைந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தம் பார்ப்பதற்கு பயங்கரமாக காட்சி அளித்தது. அர்ஜுனன் தான் பெற்றிருந்த திறமைகள் அனைத்தையும் துரோணரிடம் பயன்படுத்தினான். நெடுநேரம் இருவரும் தீவிரமாக போர் புரிந்தனர் பிறகு ஏனைய போர் வீரர்களைத் தாக்கும் பொருட்டு குருவும் சிஷ்யனும் பிரிந்து போனார்கள்

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் துரோணர் மீதும் கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். எப்படியும் துரியோதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை தீர்கமாக முடிவெடுத்திருந்தார் துரோணர். அசாத்தியமான தன் ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். பாண்டவ சகோதரர்கள் மற்றும் அவர்களது படை தளபதி திருஷ்டத்யும்னன் தவிர மற்ற அனைவரும் அவரின் தாக்குதலை கண்டு கலங்கினர். அவர் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தடைகள் இல்லாமல் காற்றை கிழித்துக்கொண்டு இலக்குகளை தாக்கின. ஒரே விசையில் ஏழு அம்புகளை செலுத்தும் தன் ஆற்றலால் பண்டவ படைகளை மிரள வைத்தார். அனைவரும் துரோணரிடம் கடுமையாய் போராடி கொண்டிருந்தனர்.

மற்றொரு திசையில் கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரை துரியோதனனின் பக்கம் கொண்டு சென்றார். துரியோதனனுக்கு துணையாக கர்ணன் சகுனி மற்றும் தம்பி துஷாசணன் இருந்தனர். நான்கு பெயரையும் எதிர்த்தான் அர்ஜுனன். அம்பு மழை பொழிந்தான். அம்புகள் விண்ணை மறைத்தது அர்ஜுனனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் நகர்ந்தனர். கர்ணன் மட்டும் அர்ஜுனா நீயும் நானும் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது. தயாராக இரு என்று எச்சரித்து விட்டு சென்றான். அர்ஜூனன் சென்று வா கர்ணா என்று மறுமொழி கூறினான்.

மறுமுனையில் துரோணர் தன் அக்னி அஸ்திரங்களை கொண்டு அனைவரையும் எரித்து சாம்பலாக்கி கொண்டிருந்தார். கோபமுற்று அவரை தடுக்கும் முயற்சியில் இறங்கினார் துருபர். கடும் போருக்கு பின் துரோணரை தாக்கு பிடிக்க முடியாமல் அவரின் அம்பை மார்பில் தாங்கி தன் தேரில் சரிந்தார் துருபர். திரௌபதியின் தந்தையும் பாண்ட படைகளின் தளபதியான திருட்டத்துயும்னனின் தந்தையுமான துருபதன் குருக்ஷேத்ரத்தில் தனது பங்கை முடித்து கொண்டு மடிந்தார். பாண்டவ படைகளை சிதறடித்து கொண்டிருந்த துரோணரை நோக்கி தன் தேரை செலுத்தினான் அர்ஜுனன். துரோணரை மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்தான் அர்ஜுனன். அம்புகள் பாய்ந்தன. அஸ்திரங்கள் சீறியது. வில்லின் நாணொளி போர் முழக்கத்தை விட பெரியதாக இருந்தது. இருவரும் சமமாக போர் செய்தனர். நீண்ட நேர போருக்கு பின் துரோணர் அர்ஜூனனிடம் இருந்து பின் வாங்கினார். துரோணரின் போர் உக்கிரம் தற்காலிகமாக சற்று குறைந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -14

பீமனுடைய மைந்தன் கடோத்கஜன் கௌரவ படைகளை அழிப்பதில் தனது கவனம் முழுவதையும் செலுத்தினான். பொழுது புலர்வதற்கு முன்பாக கௌரவ படைகள் அனைத்தையும் அவன் ஒருவனே அழித்து விடுவான் போலிருந்தது. கடோத்கஜனை எதிர்த்து கர்ணன் சீற்றத்தோடு போர் புரிந்தான். கடோத்கஜன் கையாண்ட மாய விசித்திரமான போர் முறைகளை சமாளிக்க கர்ணனால் இயலவில்லை. விதவிதமான ஆயுதங்களை கடோத்கஜன் மீது பிரயோகித்தான் கர்ணன். கடோத்கஜன் விதவிதமான வடிவங்களை எடுத்து அந்த ஆயுதங்களை பயனற்றவைகள் ஆக்கினான். கடோத்கஜன் ஒரு வேளை தரையில் தென்பட்டான். அடுத்த நொடி பொழுதில் அவன் வானத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு வேளை கண்ணுக்கு தென்பட்டான். அடுத்த வேளை அவன் இருக்குமிடம் தெரியாது தன்னை மறைத்துக் கொண்டான். இந்த மாய வேலைகளுக்கிடையில் அவனது ஆயுதங்கள் கௌரவர்களை அழித்து கொண்டிருந்தது. கடோத்கஜனை கொல்லாவிட்டால் தங்கள் படைகள் அனைத்தும் அது விரைவில் அழிந்து போகும் என்ற குரல் சேனை தலைவரிடம் இருந்து கிளம்பியது.

கடோத்கஜனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். படை வீரர்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்த துரியோதனன் கர்ணனிடம் இந்திரனிடம் இருந்து பெற்றிருந்த சக்தி அஸ்திரத்தை பயன்படுத்துமாறு வேண்டினான். கர்ணன் அதை தான் அர்ஜூனனுக்காக வைத்துள்ளதாகவும் அந்த அஸ்திரம் இல்லாமலே கடோத்கஜனை தன்னால் கொல்ல முடியும் என்று கூறினான். துரியோதனனுக்கு பயம் மேலிட்டதால் அவன் மீண்டும் கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன்படுத்துமாறு வற்புறுத்தினான். தன் நண்பனால் கட்டாயபடுத்தப்பட்ட கர்ணன் வேறு வழியின்றி தன் சக்தி அஸ்திரத்தை எடுக்க முடிவு செய்தான். சக்தி அஸ்திரம் மிகவும் வலிமையானது. அந்த சக்தி அஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த முடியும். பயன் முடிந்தவுடன் அது மீண்டும் இந்திரனிடமே சென்று விடும். அதை அர்ஜூனனைக் கொல்ல கர்ணன் இந்த அஸ்திரத்தையே முழுமையாக நம்பியிருந்தான்

சக்தி அஸ்திரத்தை தன் வில்லில் பூட்டி கடோத்கஜனை இலக்காக குறிவைத்து அஸ்திரத்தை விடுத்தான் கர்ணன். காற்றை கிழித்து கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது சக்தி அஸ்திரம். தனக்கு வரப்போகும் ஆபத்தை கடோத்கஜன் அறிந்து கொண்டான். ஆகவே ஒரு பெரிய மலையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு வானத்தில் மேல்நோக்கி போய் நின்றான். சக்தி அஸ்திரம் இலக்கு தவறாமல் கடோத்கஜனின் நெஞ்சை பிளந்து தான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்துவிட்டு இந்திரனிடம் திரும்பி சென்றது. சக்தி அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட கடோத்கஜன் கௌரவப்படைகள் மீது விழுந்தான். கடோத்கஜன் எடுத்திருந்த மிகப்பெரிய மலையின் வடிவம் கௌரவர்களுடைய ஒரு அக்ஷௌஹினி படையை நசுக்கி விட்டது. ஒரு அக்ஷௌஹினி படை அழிந்ததுடன் தங்கள் கூட்டம் தப்பித்துக்கொண்டது என்று கௌரவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இனி எப்படி அர்ஜூனனைக் கொல்வது என்ற கவலையில் மூழ்கினான் கர்ணன். பாண்டவர்களோ பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும் பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர். அர்ஜுனன் காப்பாற்றப் பட்டான் என்று கிருஷ்ணர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சி அடைந்தார். இந்த அளவில் இழப்புகள் போதும் என்று உணர்ந்த கிருஷ்ணர் சங்கை முழங்கினார். சங்கு முழங்க பதினான்காம் நாள் இரவு போர் முடிந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -13

அர்ஜுனனின் குரு என்பதை துரோணர் போர்களத்தில் நிரூபித்து கொண்டிருந்தார். எதிர்த்து வரும் அனைவரையும் மண்ணோடு சாய்த்தார். பாண்டவ படைகள் தடுமாறியது. அஸ்திரங்கள் அவர் வில்லில் இருந்து புறப்படும் சத்தம் அனைவரையும் நடுங்க செய்தது. துரியோதனா அர்ஜுனனை என்னை நெருங்க விடாமல் பார்த்துக்கொள். என் ஆற்றலை தடுக்கும் சக்தி அவனிடம் மட்டுமே உள்ளது என்றார் துரோணர். துரியோதனனும் அர்ஜுனன் மீது பல படைகளை ஏவி அவனை தடுத்து கொண்டே இருந்தான். துரோணர் தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தர்களான தேறேஷ்டகா மற்றும் தேரேஷ்டாரா ஆகியோரை கொன்றார். அர்ஜுனனை தொடர்ந்து பாண்டவர்கள் தளபதி திருஷ்டத்துய்ம்னனும் புத்திர சோகத்தை சந்தித்தான்.

போர்களத்தின் மற்றொரு திசையில் பீமன் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும், துஷ்கர்ணனையும் கொன்றான். இரு தரப்புகளுக்கும் அதிகமான இழப்பு என்ற நிலையில் போர் சென்று கொண்டிருந்தது. பீமனின் மகன் கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். பல ஆயிரம் வீரர்களை ஒருவனாக நின்று கொன்று குவித்தான். ஒரு கட்டத்தில் இவனின் ஆற்றலை கண்டு கௌரவர்களின் படை பின் வாங்கியது. கடோத்கஜன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். அஸ்வதாமனின் தாக்குதல்களை நேர்த்தியாக சமாளித்தான் அஞ்சனபர்வா. நீண்ட நேரம் நடந்த போருக்கு பின் அஞ்சனபர்வா அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில் அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. இறுதியில் அஸ்வத்தாமன் நிலை தடுமாறி விழுந்தான். மயங்கினான். மயக்கத்தில் இருந்த அஸ்வதாமனை விட்டு விட்டு அங்கிருந்து சென்றான் கடோத்கஜன்.

நள்ளிரவு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கர்ணனும் கிருபாச்சாரியார் இருவருக்குள்ளும் ஒரு வாய்ச் சண்டை ஏற்பட்டது. கர்ணன் அர்ஜுனனை கொல்ல தீர்மானம் செய்து இருக்கிறேன் என்றான். அதற்கு கிருபாச்சாரியார் நீ வெறும் வாய்ப்பேச்சு வீரன் செயலில் ஒன்றும் இல்லை அர்ஜுனனை கிருஷ்ணன் பாதுகாத்து வருகின்றான் ஆகையால் நீ அவனை கொல்ல இயலாது என்றார். உடனே கர்ணன் கோபமடைந்தான் நீங்கள் கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் நாவை துண்டித்து விடுவேன் என்றான். அசுவத்தாமன் இடையில் நுழைந்து கிருபாச்சாரியார் கூறியது முற்றிலும் உண்மை நீ வெறும் வீராப்புகாரன் மட்டுமே கிருபாச்சாரியாரிடம் மரியாதையாக நடந்து கொள் என்று கூறினான். அனைத்தையும் கவனித்த துரியோதனன் தன்னோடு கூடியிருந்த அனைவரும் முழுமனதுடன் தமக்காக போர் புரியவில்லை என்று கருதினான். மூவரிடமும் சென்று தங்களுக்குள் வாக்குவாதம் வேண்டாம் என்றும் இதனால் சேனைக்குள் குழப்பம் ஏற்படும் என்றும் எதிரியை தோற்கடிப்பதில் கவனம் முழுவதும் செலுத்துங்கள் என்றும் அவர்களை வேண்டிக்கொண்டான்.

கர்ணனை எதிர்த்து போர் புரியலாம் என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் கிருஷ்ணர் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. அவர்களுக்கிடையில் இரவு நேரத்தில் யுத்தம் வேண்டாம் என்றும் பகல் நேரத்தில் கர்ணனிடம் யுத்தம் வைத்துக்கொள்ளலாம் என்றும் கிருஷ்ணர் தெரிவித்தார். எனவே அர்ஜுனனுக்கு பதிலாக போரை நிகழ்த்த கடோத்கஜன் கர்ணனிடம் அனுப்பப்பட்டான்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -12

துரோணாச்சாரியர் கூடாரத்திற்கு மிகவும் சோர்வுடன் துரியோதனன் நடந்து சென்றான். துரோணரிடம் இன்று என் தம்பியர் பலர் மாண்டனர். பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர்கள் பலர் இறந்தனர். ஜயத்ரதனும் மாண்டான். அர்ஜுனன் நம் பக்கத்தில் உள்ள படைகளுக்கு செய்து உள்ளபடி நாசத்தை எண்ணிப்பாருங்கள் 7 அஸ்வினி படையை அவன் அழித்திருக்கின்றான். எனக்காக யுத்தம் செய்ய வந்த பல வேந்தர்களையும் அவன் அழித்துவிட்டான். ஜயத்ரதனுக்கு நான் கொடுத்திருந்த உத்தரவாதம் பொய்யாக போயிற்று. எனக்கென்று உயிரை கொடுத்த வீரர்கள் பலருக்கு நான் கடமைப்பட்டவக இருக்கின்றேன். பாண்டவர்களைக் கொன்று நஷ்டத்தை ஈடு செய்வேன். இது சாத்தியப்பட விட்டால் பாண்டவர்களால் கொல்லப்படும் நான் சொர்க்கத்திற்குச் சென்று என் தோழர்களோடு சேர்ந்து கொள்வேன். இந்த இரண்டில் ஒன்று இப்பொழுதே நிகழ்ந்தாக வேண்டும் என்று கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

துரோணர் துரியோதனன் பேசியதை கேட்டு மிகவும் வருத்தமடைந்தார். துரியோதனனை பார்த்து வருத்தப்படாதே துரியோதனா என்னுடைய வல்லமை முழுவதையும் நான் இப்பொழுதே பயன்படுத்தப் போகிறேன். உன்னுடைய விரோதிகள் அனைவரும் கொல்லப்படும் வரை நான் அணிந்திருக்கும் இந்த கவசத்தை நீக்க மாட்டேன் எதிரிகளை அழிப்பேன் அல்லது அந்த முயற்சியில் நான் அழிந்து போவேன் என்று கூறிவிட்டு போர்க்களத்திற்கு கிளம்பினார். சூரியன் மறைந்ததும் இரவுப் போரை தொடங்கினார். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் அன்றைய பதினான்காம் நாள் போர் தொடர்ந்தது.

துரோணர் வில்லுடனும் வேலுடனும் தன் ரதத்தில் ஏறி போர்க்களம் நோக்கி பயணித்தார். அவரின் தேர் சத்தத்தை வைத்தே துரோணர் வருவதை அறிந்தான் அர்ஜுனன். பாண்டவர்களின் படை தளபதி திருஷ்டத்துய்மன் இரவு போர் என்பதால் திட்டம் ஒன்றை தீட்டினான். மனிதர்களை விட அரக்கர்களுக்கு பலம் அதிகம் என்பதை மனதில் கொண்டு பீமனின் மகன் கடோத்கஜன் அவனின் மகன் அஞ்சனபர்வா ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்தான். மேலும் கடோத்கஜன் அரக்கிக்கு பிறந்ததால் அவனுக்கு மாய விளையாட்டும் சித்து விளையாட்டும் தெரிந்தவன். பீமன் பலத்தில் பாதியும் தன் தாய் இடும்பியிடம் இருந்து பாதி பலமும் கொண்ட அசாத்திய வீரன் கடோத்கஜன். அபிமன்யூவை கொன்ற கௌரவ படைகளை பழி வாங்க காத்து கொண்டிருந்தான் கடோத்கஜன். கொடுத்த பொறுப்பை ஏற்ற கடோத்கஜன் தந்தை பீமனின் காலில் விழுந்து ஆசிபெற்றான். பின்னர் யுதிஷ்டிரர் அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களிடம் ஆசி பெற்று கிருஷ்ணரிடம் சென்றான். என்றும் இல்லாமல் அன்று கிருஷ்ணர் அவனை நெஞ்சோடு தழுவி கொண்டார். சற்று நேரம் அவனை உற்று நோக்கிய கிருஷ்ணர் உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் என்று வாழ்த்தினார். புது தெம்போடும் அபிமன்யூவின் நினைவுகளோடும் போர்க்களம் நோக்கி தன் வீர பயணத்தை தொடங்கினான்.

பகலில் நிகழ்ந்ததை விட பன்மடங்கு வேகமாக இரவில் யுத்தம் நடைபெற்றது. இருளில் இரண்டு பக்க படைகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டனர். துரியோதனனும் துரோணாச்சாரியாரும் வீராவேசத்துடன் போர் புரிந்தனர்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -11

அர்ஜுனன் கண்களில் தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா அதோ ஜயத்ரதன் நாணேற்றிய அஸ்திரத்தை விடுத்து அவன் தலையைக் கொய்து வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய் என்று ஆணையிட்டார் கிருஷ்ணர். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து விண்ணிலே தூக்கிச் சென்று வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

ஜயத்ரதனுடைய தந்தை விருத்தக்ஷத்ரன் சிந்து ராஜ்யத்தின் அரசன். தன் மைந்தன் ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். தன்னுடைய தவப்புதல்வன் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர்வீரன் ஒருவன் ஜயத்ரதனை கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் பெற்ற வரமே அவனை அழித்துவிட்டது.

விருத்தக்ஷத்ரன் பெற்ற வரத்தை பற்றிய ரகசியத்தை கிருஷ்ணன் ஒருவரே அறிந்திருந்தார். அர்ஜுனனை காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றிருக்கின்றார். ஆகையால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கிருஷ்ணரை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். சபதத்தை முடித்தான் அர்ஜுனன். சூரியன் மறைய பதினான்காம் நாள் பகல் பொழுது யுத்தம் முடிவுக்கு வந்தது. பதினான்காம் நாள் இரவும் யுத்தம் தொடர்ந்தது.

துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். இதுவரை அர்ஜுனனை ஒரு சாமானிய வில்லாளி என்றே எண்ணி வந்தான் துரியோதனன். இப்பொழுது அவனுடைய பராக்கிரமத்தை பார்த்த பிறகு தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு துரியோதனன் வந்தான். அன்று நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனையும் இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. போர்களத்தின் காட்சிகள் அவன் கண் முன் ஓடியது. தம்பியர்களின் மரண ஓலங்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இருப்பினும் ராஜ்ஜியத்தை விட்டு கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -10

அர்ஜுனனை பார்த்து சத்யாகி சிறிது நேரத்திற்கு முன்பு இவன் தன் பாதத்தை என் நெஞ்சின் மீது வைத்து என்னை அவமானப்படுத்தினார் நான் உயிர் பிழைத்தால் இவனை கொல்ல தீர்மானித்தேன். அத்தீர்மானத்தை இப்பொழுது நிறைவேற்றினேன் நான் செய்த செயல் சரி என்று எண்ணுகிறேன். உலகத்தவர் என் செயலை எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளட்டும் என்று கூறினான். இச்செயலில் அதிக நேரம் விவாதிக்க அர்ஜுனனுக்கு அவகாசம் இல்லை. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஜயத்ரதன் கொல்லப்படவேண்டும் அச்செயலை முன்னிட்டு தீவிரமாக முன்னேறினான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பலரையும் வென்றவாறு அர்ஜூனன் போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். ஜயத்ரதனை கிடைக்கவில்லை. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். சூரியன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரித்தனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
கிருஷ்ணர் தன்னுடைய யோக சக்தியின் மூலம் சுதர்சன சக்கரத்தை கொண்டு சூரியனை மறைத்தார்

சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது. பாண்டவர்கள் பதறினர். கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து கதறினர். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யுவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கண்ணன் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். மௌனம் சாதித்தார் கிருஷ்ணர். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண ஜயத்ரதனும் ஆவலோடு மலை முகட்டின் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாது கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். பாண்டவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணரோ தன் லீலையை நிகழ்த்த காத்துகொண்டிருந்தார். அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கிருஷ்ணரின் பாதங்களை வணங்கினான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா காண்டீபத்தை உன் கையில் ஏந்தி தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றை நாணேற்றிய வண்ணம் அக்னியை வலம் வா என்றார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிருஷ்ணர் தன் லீலையை ஆரம்பித்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை விட்டு நகர்ந்தது இருளெனும் மாயை மறைந்து மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசியது. கண்ணன் தன் சுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.